Published:Updated:

நம்பிக்கை நடிகை!

நம்பிக்கை நடிகை!

நம்பிக்கை நடிகை!

நம்பிக்கை நடிகை!

Published:Updated:

சோர்ந்து போகும்போது நம்பிக்கையும், உற்சாகமும் கொடுக்கிற மனுஷங்க மேல தனி மரியாதை வந்துடும். கீத் என்ற இந்தப் பெண்ணின், ஸாரி... நடிகையின் கதையைக் கேட்டால், ஆஸம்! அப்படி என்ன சாதித்திருக்கிறார் கீத்? இந்தியாவின் முதல் ‘வீல்சேர் நடிகை’ இவர்! சமூக வலைதளங்களில், வீல்சேரில் அமர்ந்தபடியே நடிப்பு, பாட்டு, டான்ஸ் என இவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோக்களுக்கும் நெட்டிசன்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். தன்னுடைய பெர்ஃபார்மென்ஸுக்காகவே ட்விட்டர், யூ டியூப், ஃபேஸ்புக் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கும் கீத் உடன் சாட்டிங்...

நம்பிக்கை நடிகை!

‘‘பஞ்சாப் என்னுடைய சொந்த ஊர். சின்ன வயசுலேயே நான் படு சுட்டியான பொண்ணுனு அம்மா சொல்வாங்க. ரெண்டு அக்கா, நான் கடைக்குட்டி. குழந்தையா இருக்கும்போதே, பாலிவுட்ல பெரிய நடிகை ஆகணும்னு ஆசை. ஆனா, ‘நல்லாப் படி, அதுக்கப்புறம் உன் இஷ்டப்படி நடிக்கலாம்’னு வீட்டுல சொல்லிட்டாங்க. நல்லா படிச்சேன். ஸ்கூல், காலேஜுல நான்தான் டாப்பர். ஆனா, நான் பத்தாம் வகுப்பு படிக்கிறப்பவே கார் விபத்துல என்னுடைய ரெண்டு கால்களும் பறிபோயிடுச்சு. நடக்கவே முடியாதுனு சொல்லிட்டாங்க. ஆனா, எழுந்தே நிற்கிறேன். ஏன்னா, கால்கள் மட்டும்தானே இல்லை?’’ அவ்வளவு எனர்ஜியாக ஆரம்பிக்கிறார் கீத்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்பிக்கை நடிகை!

‘‘எதிர்காலத்துல நடிகை ஆகப்போறோம்ங்கிற நம்பிக்கை இருந்ததனால, ஸ்கூல் படிக்கும்போதே நாடகம், கவிதை, கதைனு பல போட்டிகள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கியிருக்கேன். விபத்துக்கு அப்புறம், என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்களுக்காக தன்னம்பிக்கை பேச்சாளரா பல மேடைகள்ல பேசினேன். ஆனா, இந்த விபத்து என்னைக் கொஞ்சம் உலுக்கிப் பார்த்தது உண்மைதான். டாக்டர்கள் எல்லோரும், வீல்சேர்தான் உன் வாழ்க்கைனு கை விரிச்சுட்டாங்க. ‘ரெண்டு காலும் போச்சு. இனிமே எப்படி சினிமாவுல நடிக்க முடியும்’னு சில பேர் தயக்கத்தோட சொன்னாலும், வீட்டுல அம்மா, அப்பா, சகோதரிகள் எல்லோருமே என்னை உற்சாகப்படுத்தினாங்க. டெல்லி, மும்பை, கொல்கத்தானு பல ஊர்கள்ல நடக்கிற சினிமா தேர்வுகளில் கலந்துக்கிட்டேன். பல இடங்கள்ல நிராகரிச்சாங்க. பிரபலமான பாலிவுட் படங்கள்ல நடிகைகள் பேசின எமோஷனல் வசனங்களை நானே பேசி, நடிச்சு யூ டியூபில் வெளியிட்டேன். சில ஆடிஷன்ல இறுதிவரை வந்து, டான்ஸ் ஆட முடியாதுங்கிற காரணத்துக்காக நிராகரிச்சாங்க. வீல்சேர்ல இருந்தபடியே டான்ஸும் கத்துக்கிட்டு, பாலிவுட்டின் ஹிட் பாடல்களுக்கு வீல்சேர்ல இருந்தபடியே ஆடிப்பாடி யூ டியூபில் வெளியிட்டேன். பல பேர் நெகிழ்ந்தாங்க, பாராட்டினாங்க. சினிமாவில் சான்ஸ் கிடைக்கலைனா என்ன? குறும்படங்கள், டிவி நிகழ்ச்சிகள்ல என்னுடைய பெர்ஃபார்மென்ஸைக் காட்டினேன். ரசிகர்கள் ரொம்பவே ரசிச்சாங்க!’’ என்றவர்,

நம்பிக்கை நடிகை!

‘‘எனக்காக ஒரு ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிச்ச சில மாசத்துல 12 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் லைக் பண்ணியிருக்காங்க. இதுதான் வாழ்க்கை! நாம ஒரு இலக்கை நோக்கிப் போக ஆரம்பிச்சுட்டா, அதுல இருந்து கொஞ்சமும் பின் வாங்காம இருந்தாலே போதும். எல்லாம் நல்லபடியா நடக்கும். எட்டு வயசுல நடிகை ஆகணும்னு ஆசைப்பட்டேன். பத்தாவது வயசுலேயே கால்கள் போச்சு. கஷ்டம்னு தெரிஞ்சாலும், பாலிவுட் சினிமா என்னைக் கவனிக்கனும்னு முடிவோட இருந்ததனாலதான், பாலிவுட் வாசலுக்குப் பக்கத்துல வந்திருக்கேன். நிச்சயம் யாராவது கதவைத் திறப்பாங்க! இப்போ, பெண்களுக்கான இசை ஆல்பம் ஒன்றில் நடிக்கிறேன். தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. தவிர, விளம்பரப் படங்கள், குறும்படங்கள், மேடை நாடகம்னு ஏராளமான வாய்ப்புகள் வருது’’ நம்பிக்கையுடன் ‘தம்ஸ் அப்’ சொல்கிறார் கீத்.

- கே.ஜி.மணிகண்டன்