Published:Updated:

இரும்பு பொருள்களைத் தின்னும் உலோக மனிதனும் ‘துறுதுறு’ சிறுவனும்! #TheIronGiant

சுரேஷ் கண்ணன்
இரும்பு பொருள்களைத் தின்னும் உலோக மனிதனும் ‘துறுதுறு’ சிறுவனும்! #TheIronGiant
இரும்பு பொருள்களைத் தின்னும் உலோக மனிதனும் ‘துறுதுறு’ சிறுவனும்! #TheIronGiant

ஒரு பிரம்மாண்டமான உலோக மனிதனுக்கும் ஒரு ‘துறுதுறு’ சிறுவனுக்கும் இடையில் உருவாகும் அன்பையும் நட்பையும் நகைச்சுவை மற்றும் பரபரப்பான சாகச காட்சிகளுடன் விவரிக்கும் திரைப்படம் The Iron Giant. ‘உயிர்களைக் கொல்வது தீமையானது’ என்பதை உலோக மனிதனே உணரும் போது ரத்தமும் சதையுமான மனித குலம் உணராமல் இருப்பது அவலமானது. 

வருடம் 1957. ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான மேய்ன் என்கிற பிரதேசம். கடலில் வழிதவறிய ஒரு மாலுமி ரேடியோ மூலமாக உதவி கேட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு வெளிச்சத்தைப் பார்க்கிறான். கலங்கரை விளக்கம் என அவன் நினைக்கும்போது ஒரு பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்து அலறுகிறான். பூமிப்பந்தைத் துளைத்துக்கொண்டு ஏதோவொன்று உள்ளே பாய்கிறது. உயிர்தப்பிய அந்த மாலுமி மறுநாள் மதுக்கடையில் தன் அனுபவத்தை, கண்விரிய விவரிக்கும் போது ‘குடித்து விட்டு உளறுகிறான்’ என்று அவனுடைய நண்பர்கள் சிரிக்கிறார்கள். 

'ஹோகர்த்' எனும் ஒன்பது வயது சிறுவன் அந்தப் பிரதேசத்தில் வசிக்கிறான். ‘இரவு பணியிருப்பதால் சமர்த்தாக இரு” என்கிறாள் அவனின் தாய். அம்மா எதையெல்லாம் செய்யக்கூடாது என்கிறாளோ, அதையெல்லாம் தவறாமல் செய்யும் அவன், விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி தொடரில் இடையூறு ஏற்படுவதைக் கண்டு வீட்டின் மேலே சென்று பார்க்கிறான். ஆன்ட்டென்னா துண்டாக உடைந்து கிடைக்கிறது. 

ஏதோவொரு பெரிய உருவம் கடந்து போயிருப்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன. அதைத் தொடர்ந்து செல்கிறவன், அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோகிறான். உலோகத்தினாலான ஒரு பிரம்மாண்டமான உருவம், வழியிலுள்ள இரும்புப் பொருள்களை எல்லாம் பிடுங்கி தின்று கொண்டே போகிறது. மின்விநியோகிப்பு நிலையத்தின் தூண்களைப் பிடுங்குகிறது. மின்சாரம் அதன்மீது பாய நிலைகுலைந்து துடித்துக் கொண்டிருக்கிறது. 

சுதாரித்துக் கொள்ளும் ஹோகர்த் சிரமப்பட்டு மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்கிறான். அந்த உருவம் மயங்கிச் சரிகிறது. அதன் மீது ஏறி ஆராய்கிறான். அது உயிர் மீளத் துவங்குகிறது. அவனைத் தேடி வரும் அம்மாவுடன் வீட்டுக்குச் சென்று விட்டாலும் உலோக மனிதனின் நினைவு சிறுவனுக்கு அகல்வதில்லை. மின்நிலையம் சிதைக்கப்பட்டதால் அரசாங்க அதிகாரிகள் பரபரப்படைகிறார்கள். அது, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பனிப்போர் காலம் என்பதால், அப்போது ரஷ்யா ஏவியிருந்த ஸ்புட்னிக் என்கிற விண்கலம் ஊடுருவி விட்டதோ என அஞ்சுகிறார்கள். 
 

உலோக உருவத்தைப் புகைப்படம் எடுப்பதற்காக மறுநாளும் செல்கிறான் ஹோகர்த். அதற்கான உணவாக இரும்புத் தகட்டை எடுத்துச் செல்கிறான். நீண்ட நேரம் காத்திருந்து தன்னையும் அறியாமல் அவன் உறங்கி விழிக்கும் போது அவனுக்குப் பின்னாலேயே அந்தப் பிரம்மாண்ட உருவம் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். அது தன்னைக் தாக்க முயலவில்லை என்பதைக் கண்டுகொள்ளும் அவன், மெல்ல அதனுடன் பேச முயல்கிறான். சில வார்த்தைகளை அதற்குக் கற்றுத் தருகிறான். இருவரும் நண்பர்களாகிறார்கள். 

எவரும் பார்த்திராத விநோத உருவத்தைப் பற்றிய பீதி ஊருக்குள் கிளம்புகிறது. இதைப் பற்றி விசாரிக்க மேன்ஸ்லே என்கிற அரசு அதிகாரி வருகிறார். சிறுவனின் விளையாட்டுத் துப்பாக்கி சம்பவ இடத்தில் இருப்பதால் இவனிடம் வந்து விசாரிக்கிறார். ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று மழுப்பி விடுகிறான் ஹோகர்த். ஆனால் சந்தேகம் நீங்காமல் விசாரிக்கிறார் அவர். 

ஒருமுறை, சிறுவன் தன்னுடைய துப்பாக்கியை உலோக மனிதனிடம் விளையாட்டாகக் காட்டும்போது, அதனுள் இருக்கும் தற்காப்பு இயக்கம் விழித்துக் கொள்கிறது. ஆபத்தற்ற உலோக மனிதனைத் தவறாகக் கணிக்கும் அரசாங்கம், அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று அதிகாரி தருகிற ரிப்போர்ட்டை வைத்து ராணுவத்தை வரவழைக்கிறது. அதைக் காப்பாற்ற ஹோகர்த் முயல்கிறான். 

உலோக மனிதன் உயிர் பிழைத்ததா, அதை எவ்வாறு கண்டுபிடித்தார்கள், ஹோகர்த் என்ன ஆனான் என்பதையெல்லாம் பரபரப்பான இறுதிக் காட்சிகளின் மூலம் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். 

டெட் ஹ்யூக்ஸ் 1968ல் எழுதிய ‘The Iron Man’ என்கிற நாவலையொட்டி உருவாக்கப்பட்ட இந்த அனிமேஷன் திரைப்படம், பாரம்பரிய முறை மற்றும் கணினி நுட்பம் கலந்து தயாரிக்கப்பட்டது. சந்தைப்படுத்துதலின் போதாமையால் வணிக வெற்றியை அடையாவிட்டாலும் இதன் உருவாக்கம், கதை மையம், திரைக்கதை போன்றவைகளுக்காக விமர்சகர்கள் மற்றும் குறிப்பிட்ட பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

ஹோகர்த்தின் பாத்திரம் துறுதுறு சிறுவனாக வடிவமைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களை ஈர்த்தது. உலோக மனிதனை எவருக்கும் தெரியாமல் இவன் பாதுகாக்க முயலும் காட்சிகள் நகைச்சுவையாக அமைந்திருக்கின்றன. சிறுவனுக்கும் உலோக மனிதனுக்குமான நட்பு நெகிழ்ச்சியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சிறுவன் சொல்லித் தரும் வார்த்தைகளை, சரியாகக் கற்றுக் கொள்ளும் ரோபோ, இறுதிக் காட்சியில் ஒரு சரியான தருணத்தில் திரும்பச் சொல்வது கலங்க வைக்கிறது. வேட்டைக்காரர்களால் கொல்லப்படும் மானைக் குறித்து இயந்திரன் கலங்குவது நெகிழ்வடைய வைக்கிறது. 

‘சூப்பர்மேன்’ என்கிற கார்ட்டூன் பாத்திரத்தைக் காட்டி ‘அவன் நல்லவன், உலகத்தைக் காப்பவன்’ என்று சிறுவன் சொல்வதை சரியான சமயத்தில் ரோபோ பின்பற்றுவது புத்திசாலித்தனமான திருப்பம். தற்காப்பிற்காக மட்டுமே அது திரும்பத் தாக்கும், மற்ற சமயங்களில் மனிதர்களிடம் நட்பாக பழகும் என்கிற உண்மையை உணராத அரசு அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் அதை அழிக்க முயல்கிற காட்சி நம்முள் பரபரப்பையும் பரிதாபத்தையும் ஒருசேர உண்டாக்குகிறது. 

உலோக மனிதனை எப்படியாவது அழித்து விடும் நோக்கில் அவசரக் குடுக்கையாகச் செயல்படும் அரசு அதிகாரி ஏவும் ராக்கெட் அந்தப் பிரதேசத்தை அழித்து விடும் ஆபத்து ஏற்படும் போது, தானே அந்த ஆபத்தை நோக்கி விரையும் ரோபோவின் தியாகம் சிலிர்க்க வைக்கிறது. என்றாலும் இறுதிக்காட்சியில் அது அழியவில்லை என்கிற சூசகமான தகவல் நம்மை மகிழ்ச்சியடைய வைக்கிறது. ‘நீ என்னவாக வேண்டும் என்பதை நீதான் தீர்மானிக்கிறாய்’ என்று ரோபோவிற்குச் சிறுவன் சொல்லும் வசனம் ஒருவகையில் நமக்கும் படிப்பினையாக அமைகிறது. 

பிராட் பேர்ட் என்கிற அறிமுக இயக்குநர் உருவாக்கியிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரையில் ஒருகணமும் அலுப்படையாமல் சுவாரஸ்யமாகப் பார்க்க வைக்கும் அனுபவத்தைத் தருகிறது. குழந்தைகளுடன் இணைந்து கட்டாயமாக பார்க்க வேண்டிய படைப்பு இது.