Published:Updated:

“எனக்கு சேது... விஜய்க்கு ஸ்கெட்ச்..!’’ - விக்ரம்

“எனக்கு சேது... விஜய்க்கு ஸ்கெட்ச்..!’’ - விக்ரம்
“எனக்கு சேது... விஜய்க்கு ஸ்கெட்ச்..!’’ - விக்ரம்

இந்த வருடம் பொங்கலுக்கு சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், விக்ரம் நடித்த ஸ்கெட்ச், பிரபு தேவா நடித்த குலேபகாவலி என டாப் ஸ்டார்களின் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்தன. மூன்று படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், ஸ்கெட்ச் படத்தின் சக்சஸ் மீட்  அடையார் லீலா பாலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. படத்தின் இயக்குநர் விஜய் சந்தர், கலைப்புலி தாணு, விக்ரம், ஸ்ரீமன் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர். 

தயாரிப்பாளர் தாணு பேசுகையில், "இந்தப் படத்துக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைச்சுட்டு இருக்கு. மலேசியாவில் கபாலி 72 சென்டர்கள்லயும், ஸ்கெட்ச் 71 சென்டர்கள்லயும் திரையிடப்பட்டிருக்கு. இந்தப் படம் பெரிய லெவல்ல வெற்றியடைந்ததற்கு இதுதான் சாட்சி" என்றார். 

விக்ரம் பேசுகையில், "வித்தியாசமான வணிக நோக்கம் உடைய ஒரு படத்துல நடிக்கணும்னு பல்வேறு வகையான கதைகளை கேட்டுட்டு இருந்தேன். அப்போ ஒளிப்பதிவாளர் சுகுமார்தான் இந்தக் கதையா எனக்கு அறிமுகப்படுத்தி வச்சார். கேட்ட உடனேயே ரொம்ப பிடிச்சிருந்தது. அருமையான கதை. இந்தப் படத்துக்கு பெரும் உறுதுணையா இருந்ததே கேமராதான். விஜய் சந்தர் எப்போதுமே அவரை பத்தி யோசிச்சதே இல்லை. பேட்டி கொடுக்கும்போது கூட அவரை பத்தி விளம்பரப்படுத்திகிட்டதே கிடையாது. படத்தை பத்தி மட்டும்தான் பேசுவார். சேது படத்துல என்னோட கதாபாத்திரத்துக்கு எந்தமாதிரியான பாராட்டுகளும், கைதட்டல்களும் கிடைத்ததோ, அதேமாதிரியான அங்கீகாரம் விஜய்க்கு ஸ்கெட்ச் மூலமா கிடைக்கும்னு நெனக்கிறேன். இந்தப்படத்துல சூரிக்கு நிறைய காட்சிகள் இருந்துச்சு. சில இடங்கள்ல காமெடி காட்சிகள் ஓட்டலை. அதனால சீன்களை கட் பண்ண வேண்டியதா போச்சு. அதுக்கான முழு பொறுப்பையும் நான் ஏத்துக்கிறேன். அடுத்த படைத்துல சூரி, 'நீங்க ஹீரோவா நடிங்க நான் காமெடியான நடிக்கிறேன்'. 

இந்த படத்தோட ரிலீஸ் தாணு சார் கையில் போனவுடனே ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவருக்கு மார்க்கெட்டிங் யுக்திகள் அத்துப்படி. இந்த படத்தோட தயாரிப்பாளர்கள் பார்த்தி மற்றும் சீனு, ரெண்டு பேருமே டைரக்டருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. எல்லாரும் ஏன் இப்படி ஒரு படம் பண்ணீங்க?னு கேட்டாங்க. ஆனா, இந்தப் படம் எப்படி கமர்சியலா வெற்றியடையும்னு எனக்கு மட்டும்தான் தெரியும். நான் சத்யம்ல மேட்னி ஷோவுக்கு போனேன். பயங்கர கூட்டம். சத்யம்னாலே ரசிகர்கள் அமைதியா படத்தை ரசிப்பாங்கனு சொல்வாங்க. ஆனா, என் படத்துக்கு கலாட்டாவான ஆடியன்ஸ் கிடைச்சுருக்காங்க.

இந்தப்படத்துக்கு என்னோட ரசிகர்கள் கொடுத்த ஆதரவு மறக்கவே முடியாதது. ஒவ்வொரு வீடியோவையும் சமூக வலைத்தளங்கள்ல அப்லோட் பண்ணும்போது சப்போர்ட் பண்ணது, ஸ்கெட்ச் டீ-ஷர்ட் போட்டுட்டு டான்ஸ் ஆடி என்ஜாய் பண்ணது எல்லாத்தையும் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவங்க வீட்ல ஒருத்தர் மாதிரி என்னை கொண்டாடுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கடந்த ஆண்டு என்னோட பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சு. என்னோட அப்பா தவறிட்டாங்க. இப்போ இந்த மீடியா சப்போர்ட் இல்லைன்னா என்னால எதுவுமே பண்ணியிருக்க முடியாது. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது சாதாரணமாத்தான் இருக்கும்" என்றார். 

இயக்குநர் விஜய் சந்தர் பேசுகையில், "இந்தப்படத்தில் நான் ஒரு பாடலை எழுதுனத்துக்கு விக்ரம் சாரோட தூண்டுதல்தான் காரணம். ஒருவர்கிட்ட இருக்குற திறமையை வெளிகொண்டுவருவதில் விக்ரம் சாருக்கு இணை அவரேதான். இந்தப்படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி" என்றார்.