Published:Updated:

ஃபேஸ்புக் சாட்... ‘காஞ்சமுகி’ கான்செப்ட்... சிவகார்த்திகேயனின் லைக்ஸ்..! இது தீனா ஸ்டோரி - அத்தியாயம் 7

மா.பாண்டியராஜன்
ஃபேஸ்புக் சாட்... ‘காஞ்சமுகி’ கான்செப்ட்... சிவகார்த்திகேயனின் லைக்ஸ்..! இது தீனா ஸ்டோரி - அத்தியாயம் 7
ஃபேஸ்புக் சாட்... ‘காஞ்சமுகி’ கான்செப்ட்... சிவகார்த்திகேயனின் லைக்ஸ்..! இது தீனா ஸ்டோரி - அத்தியாயம் 7

இந்தத் தொடரில் இதுவரை நான் சொன்ன ரியாலிட்டி ஷோ ஹீரோக்கள் எல்லாருமே எனக்கு ஒரு போட்டியாளராக அறிமுகமானவர்கள். ஆனால், தீனா அப்படியில்லை. முதலில் ஒரு ரசிகனாக அறிமுகமாகி அடுத்து உதவி இயக்குநராக, அப்பறம் போட்டியாளராக இப்போ ஒரு நடிகனாக இருக்கான். இப்போ நான் இருக்கிற பிஸியில என்னால ஃபேஸ்புக் பக்கமே போக முடியலை. ‘அது இது எது’ ஷோ மட்டும் பண்ணிட்டு இருந்தப்போ ஃப்ரீ டைம்ல ஃபேஸ்புக் போவேன். அப்போ நிறைய பேர் மெசேஜ் பண்ணியிருப்பாங்க. அதில் தீனாவும் ஒரு ஆளா இருப்பான். மத்தவங்க எல்லாரும் அப்போ அப்போ மெசேஜ் பண்ணிட்டு போயிடுவாங்க. ஆனா, தீனா ஒரு வருஷமா தொடர்ந்து எனக்கு மெசேஜ் பண்ணி பேசிட்டே இருந்தான். ‘அது இது எது’ ஷோ பத்தி அதிகமா டிஸ்கஷ் பண்ணுவான். மெசேஜ்லயே ஒரு வருஷம் பேசிட்டு, ஒரு நாள் என்னைப் பார்க்க விஜய் டிவி ஆஃபிஸுக்கு வந்தான். ஒரு போட்டோ மட்டும் எடுத்துட்டு போயிட்டான். 

அப்பறம் அடிக்கடி வர ஆரம்பிச்சான். நான் என்னோட உதவி இயக்குநர்களோடு ஸ்கிரிப்ட் டிஸ்கஷனில் இருக்கும் போதெல்லாம் கூடவே இருப்பான். எதுவுமே பேசமாட்டான். எதாவது கேட்டா மட்டும் பதில் சொல்லுவான். கொஞ்ச நாள்ல அவனும் என்கிட்ட உதவி இயக்குநராகிட்டான். ஐடியா சொல்றது, கவுன்ட்டர்ஸ் சொல்றது, ஸ்கிரிப்ட்ஸ் டைப் பண்றதுனு எல்லா வேலையும் பார்ப்பான். அப்படி ‘அது இது எது’ல உதவி இயக்குநரா வேலை பார்த்திட்டு இருக்கும் போது ஒரு நாள் ‘சிரிச்சா போச்சு’ல சின்ன கேரக்டர் கொடுத்தேன். 

தீனா அந்த எபிசோடுல பண்ணுன கேரக்டர் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கு. தீனா இப்போவே ஒல்லியாகத்தான் இருக்கான். அப்போ ரொம்ப ஒல்லியா இருப்பான். அவனுக்கு போலீஸ் கேரக்டர் கொடுத்தேன். அவன் போலீஸ் கெட்டப் போட்டு வந்து நின்னப்போ எனக்கே செம காமெடியா இருந்தது. அந்த எபிசோடுல வடிவேல் பாலாஜி வந்திருந்த மூணு கெஸ்ட்ல ரெண்டு கெட்ஸ்ட்டை சிரிக்க வெச்சுட்டார். மூணாவது கெஸ்ட்டை சிரிக்க வைக்க பாலாஜி போராடிட்டு இருந்தார்.

அப்போ லிப்ட்ல இருந்து தீனா டான்ஸ் ஆடிட்டே என்ட்ரி கொடுத்தான். உடனே வந்திருந்த கெஸ்ட் ஒருத்தர், ‘இன்னும் ரெண்டு ஸ்டெப் போட்டு காமி’னு சொன்னார். அதுக்கு தீனா லிப்ட்ல இருந்து இறங்கி வர ஸ்டெப்பை காட்டி, ‘ஸ்டெப் 1, ஸ்டெப் 2, ஸ்டெப் 3’னு சொன்னான். ‘இதுவும் ஒரு காமெடினு இந்த பச்சப்புள்ள பண்ணிட்டு இருக்கு, அதுக்குக்கூட சிரிக்காம இப்படி கல்லு மாதிரி இருக்கீங்களே’னு வடிவேல் பாலாஜி சொன்னதும், சிரிக்காம இருந்த கெஸ்ட்டும் சிரிச்சிட்டார். இதுதான் தீனா பண்ணுன முதல் எபிசோடு. அடுத்து அப்போ, அப்போ ‘சிரிச்சா போச்சு’ல வருவான். 

‘அது இது எது’ போயிட்டு இருக்கும் போது ‘கலக்கப்போவது யாரு’ சீசன் 5 ஆரம்பிச்சாங்க. அதுல கலந்துக்கிறதுக்காக திருச்சி ஆடிஷனுக்கு தீனா போயிருக்கார். நானும் அங்கதான் வரேன்னு தெரியாம, ‘சார் நான் திருச்சி ஆடிஷனில் கலந்துக்கப்போறேன் சார். bless me'னு மெசேஜ் அனுப்புனான். நானும்,’ஆல் த பெஸ்ட்டா தம்பி. நல்லா பண்ணு. god bless you'னு சொன்னேன். என் கார் ஆடிஷன் நடக்குற இடத்துக்குள்ள வந்ததும் பையனுக்கு செம ஷாக். அப்பறம் ஆடிஷனில் ஒரு கான்செப்ட் பண்ணினான். அது சிறப்பா இல்லாதனால அவனை வெயிட்டிங் லிஸ்ட்ல வெச்சாங்க. அப்பறம் சென்னை ஆடிஷனுக்கு வந்தான். அங்கேயும் பெரிசா எதுவும் பண்ணலை. ஆனால் அவன் மேல எனக்கு நம்பிக்கை இருந்தனால இவன் நல்லா பண்ணுவான்னு சொல்லி மெயின் ஆடிஷனுக்கு வரவச்சேன். அதுல செலக்ட் ஆகியிட்டான்.

இரண்டாவது ரவுண்ட்ல சரியா பண்ணலை. அப்போ தீனாவை எலிமினேட் பண்ணிடலாம்னு சொன்னாங்க. இல்லை, அவனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம்னு சரத், கேப்ரியாளாவோட சேர்ந்து பண்ண வச்சேன். ’காஞ்சனா’வையும் ’சந்திரமுகி’யையும்  சேர்ந்து ’காஞ்சமுகி’னு ஒண்ணு பண்ணுனாங்க. சீசன் 5ல் 20 மார்க் வாங்குன முதல் பெர்ஃபார்மென்ஸ் அதுதான். இந்த எபிசோடைப் பார்த்துட்டு சிவகார்த்திகேயன் கால் பன்ணி, ‘ரொம்ப நல்லா இருந்தது’னு சொன்னார். இந்த எபிசோடை அதிக முறை பார்த்ததாகவும் சொன்னார். அதே சமயம் தீனாவை எலிமினேட் பண்ணச்சொன்ன நடுவர்கள் அவனோட வளர்ச்சியைப் பார்த்துட்டு, ‘நாங்க வேணானு சொன்ன தீனாவா இது’னு ரொம்ப எமோஷனலாய் சொன்னாங்க. அதுதான் தீனாவோட வெற்றி.

அதுக்கப்பறம் தீனாவும் சரத்தும் சேர்ந்து நிறைய நல்ல பெர்ஃபார்மென்ஸ் பண்ணிட்டு வந்தாங்க. கவுண்டமணி - செந்தில் காம்போ மாதிரி இவங்க காம்போ ஹிட்டாச்சு. சரத் என்ன பண்ணுனாலும் தீனா அதை கலாய்ச்சு காமெடி பண்ணது மக்கள்கிட்ட நல்லா ரீச்சாச்சு. இடையில சில எபிசோடுகள் சரியா பண்ணாததுனால ரெண்டு பேரும் எலிமினேட் ஆகி, wild card மூலம் தீனா ஃபைனலுக்கு வந்தான். ஆனால் நேரம் கம்மியா இருந்தனால அவனால சீசன் 5 டைட்டிலை வின் பண்ண முடியலை. ஆனால் வின்னருக்கான எல்லா தகுதியும் தீனாக்கிட்டையும் இருக்கு. ஏன்னா, அவன் சீசன் 5ல உதவி இயக்குநராகவும் இருந்துட்டு போட்டியாளராகவும் இருப்பான். உதவி இயக்குநரா மத்த போட்டியாளர்களின் ஸ்கிரிப்ட்லையும் வொர்க் பண்ணுவான். அப்புறம் இவனோட ஸ்கிரிப்ட்டுக்கும் தனியா வொர்க் பண்ணுவான். ரொம்ப நல்ல ஹார்டு வொர்க்கர். எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு பண்ணுவான். சீசன் 5 முடிஞ்சதுக்கு அப்பறம் சீசன் 6லையும் உதவி இயக்குநரா இருந்தான். 

அப்போதிருந்தே சின்னச் சின்ன பட வாய்ப்புகள் தீனாவுக்கு வந்துட்டு இருந்துச்சு. நான் எல்லார்கிட்டையும் சொல்ற மாதிரி அவன்கிட்டையும், ’சின்ன படம், சின்ன கேரக்டர்னு பண்ணி உன்னோட பெயரை நீயே கெடுத்துக்காத’னு சொன்னேன். பெரிய படத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்த தீனாவுக்கு ’பவர் பாண்டி’ படத்துல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ’பவர் பாண்’டி ரிலீஸானப்போ தியேட்டரில் தீனாவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. எல்லாரும் அவனை நோட் பண்ணுனாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 

அடுத்து ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ ஆரம்பிச்சதும் அவன் சில படங்களில் கமிட்டாகிட்டான். அதுனால தொடர்ச்சியா தீனாவால கலந்துக்க முடியலை. எப்போ ஃபிரீயா இருக்கானோ அப்போ மிஸ் பண்ணாம ஷூட்டிங் வந்திருவான்.  ரொம்ப நல்ல உழைப்பாளி. அவன் இன்னும் மிகப்பெரிய உயரத்துக்கு போகணும். God bless you dheena