Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும்! - 16

#BanTasmacபாரதி தம்பி

ன மெட்ராஸ் கோசம்’ (Mana Madras Kosam) - ‘நம்ம சென்னைக்காக’ என்ற பெயரில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தெலுங்கு திரையுலகத்தினர் ஒன்றுசேர்ந்து நிதி திரட்டிக்கொண்டிருந்த போதுதான்... நம்ம தமிழ் நடிகர் சிம்புவின் ‘பீப் பாடல்’ வெளியானது. மக்கள் எல்லோரும் மழை வெள்ளத்தின் பாதிப்புகளில் சிக்கிச் செத்துக்கொண்டிருந்தபோது இதுபோன்ற ஒரு பாடலை வெளியில் கசியவிடவும், அது பிரச்னையானதும் ‘ஆமா, அப்படித்தான் பாடுவேன். இதில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை’ எனத் திமிராகப் பேசவும் உடம்பின் சகல அணுக்களிலும் ஆபாசம் நிரம்பி வழிய வேண்டும். ‘இது நானும் அனிருத்தும் பெர்சனலாக, ஜாலியாகத் தயாரித்த பாட்டு’ என்கிறார் சிம்பு. பெர்சனல் என்றால் எதற்காக ‘பீப்’ சவுண்டு? வெளியிடுவது எல்லாம் அப்புறம்... உங்களுக்குத் தனிப்பட்ட வகையில் சொல்லிக்கொள்ளவே வாய் கூசும் ஒரு வார்த்தைக்கு மெட்டு போட்டு, பின்னணி இசை அமைத்து, இசைக்கோர்ப்புசெய்து அதைப் பாடலாக ஒலிப்பதிவு செய்வதே அருவருப்பு இல்லையா? அந்த பெர்சனலில் வேறு யாருமே இல்லையா? சிம்புவும் அனிருத்தும் மட்டும்தான் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? சவுண்டு இன்ஜினீயர் உள்ளிட்ட மற்ற தொழில்நுட்பப் பணியாளர்கள் யாரும் இல்லையா? ஒரு குழுவே சேர்ந்து தயாரித்த வக்கிரப் பாடல் அது.

வக்கிரமான மனநிலையுடன் இருப்பதும் வாழ்வதும் சிம்பு மற்றும் அனிருத்தின் தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். அதை அவர்களின் குடும்பத்தினர் அங்கீகரிக்கலாம். ஆனால், அந்த அருவருப்பை பொதுவெளியில் வாந்தி எடுத்து வைப்பதையும், அவற்றை பொதுமக்களிடையே பரப்புவதையும் தனிப்பட்ட கருத்துரிமை எனச் சொல்வது அயோக்கியத்தனம். உண்மையில் இத்தனை கேடான ஒரு கொச்சைப் பாடலைப் பாடியதற்காகவும் பெண்களை இழிவுபடுத்தியதற் காகவும் சிம்பு மீது அரசு தானாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்திருக்க வேண்டும். ஆனால், சிம்பு வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறது. கேட்டால், ‘போராட்டம் நடத்துபவர்களால் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடக் கூடாது இல்லையா?’ எனக் கேட்பார்கள். அப்படியானால் சிம்புவின் ஆபாசப் பாடல் சமூக அமைதியைக் கெடுத்துச் சிதைக்கிறதே... அது பரவாயில்லையா?

குடி குடியைக் கெடுக்கும்! - 16

இந்த ஒட்டுமொத்தப் பாடல் சர்ச்சையில், ‘இப்படிப் பாடுவது என் தனிப்பட்ட உரிமை’ என சிம்பு கோருவதுதான் பிரச்னையின் ஆதார மையம். இது சிம்புவின் வாதமோ, இந்த ஆபாசப் பாடலுக்கு மட்டும் சொல்லப்படும் வாதமோ மட்டும் அல்ல... கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒலித்துவரும் டாஸ்மாக் பாடல்களுக்கு சினிமாக்காரர்கள் தரும் விளக்கமும் இதுதான். ‘இது கலை. என் கதை என்னும் கலைக்குள் வரும் கதாபாத்திரம் குடிப்பதா, வேண்டாமா என்பதை நான்தான் முடிவுசெய்வேன்’ எனச் சொல்கிறார்கள். இரண்டு வாய்ப்புகளை நம் முன் நீட்டினாலும் இறுதியில் அவர்களின் கதாபாத்திரம் குடிப்பதை மட்டுமே தேர்வுசெய்யும். ‘கண்ணதாசன் காரைக்குடி... பேரைச் சொல்லி ஊத்திக் குடி...’யில் தொடங்கி, ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா...’ வரை ஏராளமான பாடல்களை உதாரணம் காட்ட முடியும். ஒவ்வொரு படத்திலும் குடியை ஆராதித்து ஒரு பாடல் வைப்பதை, ஒரு சடங்காகவே செய்யத் தொடங்கிவிட்டது தமிழ் சினிமா.

‘இதற்கு சினிமாக்காரர்களைக் குற்றம் சொல்ல முடியாது. சமூகத்தின் இயல்பு அப்படி இருக்கிறது. எங்கு திரும்பினாலும் டாஸ்மாக் கடைகள். எல்லா கடையிலும் பெருங்கூட்டம். இதைக் கதைக்குள் கொண்டுவந்தால் மட்டும் எப்படித் தவறாகும்?’ என இதற்கு பதில் சொல்கிறார்கள். ஒரு தர்க்கத்துக்கு இதை `சரி' என வைத்துக்கொண்டால், சமூக இயல்பை எதிரொலிக்கிறோம் என்கிறீர்களே... அப்படியானால் சமூகத்தின் இதர இயல்புகளை அப்படியே எதிரொலிக்கிறீர்களா? கௌரவக் கொலை என்ற பெயரில் சாதி ஆணவத் திமிரில் கர்ப்பிணிப் பெண்களைக் கருவறுத்துக் கொலைசெய்கிறார்கள். திருச்சி, திண்ணியத்தில் கொடுத்த லஞ்சப் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காக இரண்டு தலித்களின் வாயில் மனித மலத்தைக் கரைத்து ஊற்றினார்கள். விழுப்புரம் அருகே சாதி மாறி காதலித்துத் திருமணம் செய்துகொண்ட கண்ணகி-முருகேசன் என்கிற காதல் ஜோடியை ஊரே ஒன்றுகூடி வாயில் விஷத்தை ஊற்றிக் கொன்றார்கள். கோகுல்ராஜ் என்கிற தலித் இளைஞன், தண்டவாளத்தில் துண்டிக்கப்பட்ட உடலோடு கிடந்தான். அந்த வழக்கை நேர்மையாக விசாரிக்க முயன்ற விஷ்ணுப்ரியா என்ற டி.எஸ்.பி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கு ஆதரவாக நியாயம் கேட்ட மகேஸ்வரி என்கிற மற்றொரு டி.எஸ்.பி மர்மமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவற்றில் எது ஒன்றையேனும் உள்ளது உள்ளபடி சொல்லும் மனத்துணிவு உண்டா?

சமூகத்தின் இயல்பை கலையில் பிரதிபலிப்பது ஒரு கலைஞனின் கடமை. ஆனால், அதற்கு எந்த இயல்பைத் தேர்வுசெய்கிறீர்கள் என்பதற்குப் பின்னால் அரசியலும் வியாபாரமும் இருக்கின்றன. மேலே சொன்ன சாதி ஆதிக்கச் சிக்கல்களை கதையில் கையாண்டால் உங்களுக்கு படம் வெளியிடுவதில் பிரச்னை வரும். ஆனால் குடியைக் கொண்டாடி படம் எடுத்தால் ஒரு பிரச்னையும் இல்லை. மாறாக அரசு வரிவிலக்கு தரும். அரசுக்குப் பிரச்னை எல்லாம், ‘மூடு டாஸ்மாக்கை மூடு...’ எனப் பாடும் கோவன் வகையறாக்கள்தான். அவர்களைத்தான் நள்ளிரவில் வீடு புகுந்து கைதுசெய்து தேசத்துரோக வழக்கு பதிவுசெய்வார்கள். ‘இதற்கெல்லாம் தேசத் துரோக வழக்கா? ஒரு சாதாரண மனிதனுக்காக, எதற்காக ஓர் அரசாங்கமே களம் இறங்கி வேலைசெய்கிறது?’ என உச்ச நீதிமன்றம் கழுவி, கழுவி ஊற்றினாலும் அதற்காக அரசு வெட்கப்படாது. ‘பயந்தா, தொழில் பண்ண முடியுமா?’ எனத் துடைத்துப் போட்டுவிட்டு, ‘புத்தாண்டு டார்கெட் 500 கோடி’ எனப் போய்க்கொண்டே இருக்கும்.

குடி குடியைக் கெடுக்கும்! - 16

டாஸ்மாக்கில் ஏராளமானோர் குடிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை அல்ல... அந்தக் குடிவெறியை அரசே ஊக்குவிக்கிறது என்ற உண்மையின் மறுபகுதியும் இருக்கிறது. இந்த அரசியலை சினிமாவில் உரக்கப் பேச மறுப்பது ஏன்?

குடியைக் கொண்டாடும் காட்சிகளும் பாடல்களும் மிகவும் சகஜமாக படத்தில் காட்டப்படுவதன் விளைவை நம் வீடுகள் தோறும் பார்க்கலாம். சின்னஞ்சிறு குழந்தைகள், ‘தண்ணி அடிச்சா தப்பாம்மா, திட்றாங்க அப்பா அம்மா...’ என ஆடிக்கொண்டே பாடுகிறார்கள். அந்த வயதில் அவர்களுக்குப் பொருள் புரியாமல் இருக்கலாம். ஆனால், குடிப்பது வாழ்வின் இயல்பான செயல்களில் ஒன்று என்ற எண்ணம் அவர்களின் எண்ணங்களில் பதிந்து போகிறது. அதனால்தான் இன்று பள்ளி மாணவர்கள்கூடக் குடிக்கிறார்கள். திருச்செங்கோட்டில் கடந்த மாதம் மூன்று பள்ளி மாணவிகள் குடி போதையில் வகுப்பறைக்கே வந்தார்களே... அவர்கள் எல்லாம் யார்? சிம்புவின், தனுஷின், ஆர்யாவின், சிவகார்த்திகேயனின் இன்னும் குடியைக் கொண்டாடும் தமிழ் சினிமா ஹீரோக்களின் ரசிகைகள்தான். பிறந்த நாளுக்குக் குடிக்க வேண்டும், தேர்வு முடிந்ததும் குடிக்க வேண்டும், வேலை கிடைத்ததும் குடிக்க வேண்டும், வேலை போனதும் குடிக்க வேண்டும், அக்காவின் திருமணத்துக்கு தம்பி, தன் நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வேண்டும்... என குடிப்பதற்கான வித விதமான காரணங்களை கலைஞர் களாகிய நீங்கள்தான் சொல்லித் தருகிறீர்கள். மக்கள், தங்கள் வாழ்வில் அத்தகைய தருணங்கள் வரும்போது தன்னியல்பாக குடியின் மூலமாக அதை எதிர்கொள்கின்றனர்.

சினிமாவை பொழுதுபோக்காக மட்டும் தள்ளிவைத்துப்பார்க்கக்கூடிய முதிர்ச்சியான மனப்போக்கு தமிழ்ச் சமூகத்தில் இல்லை. தங்களுக்கான தலைவர்களை தொடர்ந்து சினிமாவில் இருந்து தேடுவது இதனால்தான். சினிமாக்காரர்கள், அவர்களின் தகுதிக்கு மீறி புகழும் பொருளும் சேர்ப்பதும் இதனால்தான். எனவே குடியை நியாயப்படுத்தும் காட்சிகளும் பாடல் களும் மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க அளவுக்கு செல்வாக்கு செலுத்துகின்றன. குடிப்பது தீங்கானது என்ற கூச்சத்தைப் போக்குகின்றன. புதிய குடிகாரர்களை உற்பத்திசெய்கின்றன. நான்கு பேர் குடித்துக்கொண்டிருந்த இடத்தில் அதை பத்துப் பேராக மாற்றியதில் தமிழ் சினிமாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. ‘சினிமாவால்தான் குடிக்கிறார்கள்’ என இதை ஒன்லைனாகச் சுருக்க முடியாது. அரசாங்கம் வீதிதோறும் மதுக்கடை திறந்து வைத்திருப்பதால்தான் இத்தனை குடிகாரர்கள் பெருகி யுள்ளனர்; அது தெளிவு. ஆனால், அந்தக் குடிகாரர்களின் எண்ணிக்கையைப் பெருக்கியதில் சினிமாவுக்கு உள்ள பங்கை மறுக்க முடியாது. மக்களின் குடி மோகத்தைத் தூண்டி டாஸ்மாக் மூலம் அரசு கல்லா கட்டுகிறது என்றால், அந்த மோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு சினிமாக்காரர்கள் கல்லா கட்டுகிறார்கள்.

இப்போது ஊர் எங்கும் வெள்ளப் பாதிப்புகள் கடுமையாக இருக்கின்றன. லட்சக்கணக்கானோர் வீடு இழந்து, வாழ்வு இழந்து நடு வீதியில் நிற்கின்றனர். என்ன செய்வது எனத் தெரியவில்லை. அடுத்த நாள் சோற்றுக்கே வழியில்லை. குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது எனவும் தெரியவில்லை. பித்துப் பிடித்ததுபோல் அலைகிறார்கள். இந்தக் கொடும் துன்பத்தில் இருந்து விடுபடும் வழி எதுவும் தென்படவில்லை. என்ன செய்யலாம்? ‘இன்பத்துக்கும் துன்பத்துக்கும் டாஸ்மாக்கே தீர்வு’ என அரசு ஏற்கெனவே பயிற்றுவித்துள்ளது. சினிமாவிலும் அதைத்தான் கற்றுத்தருகிறீர்கள். எனவே, கையில் இருக்கும் நிவாரண ரூபாயுடன் அவர்கள் டாஸ்மாக் வாசலில் போய் நிற்கிறார்கள். வெள்ளப் பாதிப்பு நடந்த அனைத்துப் பகுதிகளிலும் இனிவரும் காலங்களில் டாஸ்மாக் வருவாய் நிச்சயம் உயரத்தான் போகிறது. இந்த அவலமான நிலையை உருவாக்கியதில், வளர்த்து எடுத்ததில் சினிமாவின் பங்கு எதுவுமே இல்லையா?

சினிமாவுக்கு ஒரு சிக்கல் வந்தால், அதை ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்னையைப்போல மாற்று கிறார்கள். ‘திருட்டு டி.வி.டி-யில் படம் பார்க்காதீர்கள். அது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுகிறது’ என மீண்டும், மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறார்கள். சரிதான், ஏற்கவேண்டிய கருத்துதான். ஆனால் மது என்னும் கொடிய நஞ்சு எத்தனை மோசமாக தமிழ்நாட்டு மக்களைச் சீரழிக்கிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? ஏழைகளிடம் எஞ்சியிருக்கும் கடைசி நூறு ரூபாயை சினிமாவும் மதுவும்தான் போட்டிபோட்டுக்கொண்டு உறிஞ்சுகின்றன என்பது தெரியுமா? அந்த மதுவை நியாயப்படுத்தி மீண்டும் மீண்டும் படம் எடுக்கிறீர்களே... உங்களை என்ன செய்வது?

‘சிரம் அறுத்தல் வேந்தருக்கு பொழுதுபோக்கும் இனிய கலை. ஆனால் நமக்கோ, அதெல்லாம் உயிரின் வாதை’ என்றார் பாரதிதாசன். குடியைக் கொண்டாடுவது உங்களுக்குப் பொழுதுபோக்கு. ஆனால் மக்களுக்கோ, அது உயிரின் வாதை!

- போதை தெளிவோம்...