அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் Season 2 , episode 3

தன்ஷிகாவின் கம்மலைத் தூக்கியெறியச் சொன்னார் பாலா சார்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... புத்தாண்டு வாழ்த்துகள்! இந்த வருஷம், ‘அவள் 16’ மூலமா உங்களை எல்லாம்

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

மீட் பண்ணதில் எனக்கு இன்னும் சிறப்பா அமைஞ்சிருச்சு; அடுத்த வருஷமும் அமையப் போகுது!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

சரி... நான் முதன்முதலா தியேட்டரில் பார்த்த படம், எங்க நாயுடு ஹால் ஷோரூம்ல நான் வேலை பார்த்து சம்பளம் வாங்கின அனுபவம், என் காலேஜ் லைஃப் பத்தியெல்லாம் பேசிட்டோம். இப்ப அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்...

நான், காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும்போது, அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். ஐஸ்வர்யா என் கூடவே இருந்து தைரியம் சொல்லிட்டே இருந்தா. ஆனா... சிகிச்சை பலனின்றி, அப்பா இறந்துட்டாங்க. எங்க குடும்பமே நிலைகுலைஞ்சு போயிட்டோம். ஆறுதலும், அன்பும் நிறைய கிடைச்சாலும், எங்கப்பாவோட வெற்றிடத்தை இன்னிக்கு வரைக்கும் நிரப்ப முடியாம மனசுக்குள் கண்ணீர் விட்டுட்டுதான் இருக்கோம்.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

சண்டைக்கோழியா இருந்த நானும் எங்க அண்ணனும், அப்பா இறப்புக்குப் பிறகு நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். அப்பாவின் இடத்தை, என் அண்ணன் நிரப்பினார். ரெண்டு பேரும் சேர்ந்து எங்க ஷோரூம் பொறுப்புகளைப் பார்த்துக்கிட்டோம். அப்புறம் எனக்குக் கல்யாணமாகி, ஈரோட்டில் கணவர் வீட்டில் செட்டில் ஆனேன். எப்பவும் துறுதுறுனு இருக்கிற என்னால, ஹவுஸ் வொய்ஃபா ரெண்டு வாரத்துக்கு மேல இருக்க முடியல. ஈரோடு பகுதியில ஜவுளி சார்ந்த தொழில் அதிகம் என்பதால, கோபிசெட்டிப்பாளையத்தில் பட்டு நெசவாளர்கள் பலரையும் சந்திச்சு, அவங்ககிட்ட நியூ டிசைன் புடவைகளை டிசைன் செய்து வாங்கி, சென்னையில இருக்கிற எங்க அண்ணனுக்கு அனுப்பிவெச்சேன். அந்தப் புடவைகளுக்கு எல்லாம் இங்க நல்ல வரவேற்பு கிடைக்க, பிசினஸைத் தொடர்ந்து செய்தேன். நல்ல வருமானம் கிடைச்சது.

ஒரு கட்டத்தில், என் கணவர் வேலை விஷயமா சென்னைக்கு வர, நானும் வந்துட்டேன். என் பொண்ணு சமன்னா பிறந்தா. குழந்தைக்கு ஆறு மாசம் இருக்கும்போது, ரொம்ப உடம்பு முடியாமப் போயிருச்சு. டாக்டர், மதியத்தோட டெட்லைன் கொடுத்துட்டாரு. அதுவரை அவ்வளவா கடவுள் நம்பிக்கை இல்லாத நான், மனித ஆற்றலை மீறிய விஷயத்துக்கு ஆண்டவன்கிட்ட சரணடையற அந்த நொடியில் நின்னபோது, முழு நம்பிக்கையோட, அர்ப்பணிப்போட, என் பொண்ணுக்காக திருப்பதி வெங்கடாசலபதிக்கு மொட்டை போடுறதா வேண்டினேன். அவர் அருளால சமன்னா குணமாகிட்டா. நானும் என் வேண்டுதலை நிறைவேத்திட்டேன்.

பொண்ணு கொஞ்சம் வளர்ந்ததும், மறுபடியும் பிசினஸ் மைண்ட் ஸ்பார்க் ஆச்சு. எங்க அண்ணனோட நாயுடு ஹால் ஷோரூம்ல, ஒரு பங்களிப்பும் செய்யாத எனக்கு ஷேர் மட்டும் கிடைக்கிறது சங்கடமா இருந்தது. அதனால, ஒரு பிசினஸ் ஐடியா யோசிச்சேன். பழைய மாடல் பட்டுப் புடவைகளுக்கு, ட்ரெண்டி பிளவுஸ் டிசைன் செய்து சேல் செய்ய... நல்ல வரவேற்பு. தெரிந்த, தெரியாத பிரபலங்கள்னு நிறைய ஆர்டர்கள் கிடைச்சது.

ஒருநாள் ஐஸ்வர்யா, ‘நான் ஒரு படம் டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன். நீ காஸ்ட்யூம் டிசைனரா வொர்க் செய்றியா?’னு கேட்டா. ‘சினிமாவா... நோ வே!’னு சொல்லிட்டேன். என் ஸ்கூல் டேஸ்ல இருந்து இப்போ வரைக்கும் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட், நடிகர் சூர்யா அண்ணாவின் சிஸ்டர் பிருந்தா. அவங்க மூலமா, இயக்குநர் பாலா அண்ணாவின் மனைவி மலர் அண்ணி எனக்கு அறிமுகமானாங்க. அவங்களுக்கு நான் நிறைய டிரெஸ்ஸஸ் டிசைன் செய்து கொடுத்தேன். ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸானோம்.

ஒரு நாள் பாலா அண்ணா ஆபீஸ்ல இருந்து போன். போனேன். ‘என் அடுத்த படம் ‘பரதேசி’யில, நீ காஸ்ட்யூம் டிசைனரா வொர்க் பண்றியா?’ன்னு கேட்டாரு. ஷாக்காகி, சர்ப்ரைஸாகி ஒப்புக்்கிட்டேன். ‘சுதந்திரம் கிடைக்கிறதுக்கு முற்பட்ட காலத்துல, டீ எஸ்டேட்ல வேலை செய்த ஏழைகள் பத்தின கதை. அவங்களுக்கு மாத்திக்க ஒரு துணிக்கு மேல இருக்காது, அந்த ஊர் மண்ணு கலர்லதான் அவங்க டிரெஸ் இருக்கும். இப்படி அந்தப் பீரியடு காஸ்ட்யூம்க்கான ரெஃபரன்ஸ் எடுத்துட்டு என்னை வந்து பாரு!’னு சொன்னார் பாலா அண்ணா.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

நான் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு. இருந்தாலும், ரொம்ப சின்சியரா வொர்க் செஞ்சேன். நிறைய நூலகங்களில் ரெஃபரன்ஸ் எடுத்தேன். பாலா அண்ணாகிட்ட அதையெல்லாம் கொடுத்தப்போ, அடுத்து ஒரு சப்ஜெக்ட்டை கொடுத்து ரிசர்ச் பண்ணிட்டு வரச் சொல்வார். அவரைப் பொறுத்தவரை, நல்லா இல்லைன்னு சொல்ல மாட்டார், ஆனா, அவர் எதிர்பார்க்கிற ரிசல்ட் கிடைக்கிற வரைக்கும் ‘இன்னும் பார்க்கலாம்’னுதான் சொல்வாரு. இப்படி ஒவ்வொரு முறை அவர்கிட்ட `ஓ.கே’ வாங்கினதும் கஷ்டமான டாஸ்க்தான்.

இதுல எனக்கொரு சின்ன கொள்கை வெச்சுக்கிட்டேன். தொழில் வேற... சொந்தம் வேற. அதனால என் சினிமா புராஜெக்ட்டுக்குத் தேவைப்பட்ட மெட்டீரியல்களை எங்க நாயுடு ஹால் ஷோரூம்ல வாங்க மாட்டேன். சென்னை, காஞ்சிபுரம்னு பல ஏரியாக்களில் தேடி அலைஞ்சு வாங்குவேன். குறிப்பா, கைத்தறி ஆடைகளைச் சேகரிக்கிறது எனக்குப் பெரிய சவாலா இருந்தது.

இப்படி நான் வேலைகளில் இருந்தப்போ, ஒருநாள் ஐஸ்வர்யா வந்தா. ‘என் படத்துக்கு `நோ’ சொல்லிட்டு, பாலா சார் படத்துக்கு `யெஸ்’ சொல்லிட்டியா?’னு சண்டை போட்டா. ‘நீ என் ஃப்ரெண்டுடீ. உன்னை என்னால சமாதானப்படுத்த முடியும். ஆனா, என்னோட ஃபேவரைட் டைரக்டர்களில் ஒருத்தரான பாலா சார் படத்தில் வாய்ப்பு கிடைக்கிறதே பெரிய மரியாதை இல்லையா?’னு கேட்டதும், புரிஞ்சுக்கிட்டா. சொன்னேன்ல, அவ என் ஃப்ரெண்ட்!

‘பரதேசி’ ஷூட்டிங்ல, நிறைய டெக்னீஷியன்களோட சேர்ந்து வேலை பார்த்தது எனக்குப் புது அனுபவமா இருந்தது. எங்க ஷோரூம்ல லேபரர்ஸ் கூட வேலை பார்த்த அனுபவத்தில், அங்கேயும் ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்டர், ஹீரோ கூட சாப்பிடாம, சாதாரண டெக்னீஷியன்ஸ் கூடத்தான் சாப்பிடுவேன். எனக்கு அதுதான் பிடிக்கும்.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

ஒரு நாள் ஷூட்டிங்ல, ‘தன்ஷிகாவோட கம்மல் அழகா இருக்கு’னு சொன்னேன். உடனே பாலா அண்ணா, ‘கம்மல் நல்லா இருக்கா? அப்போ அதைக் கழட்டி தூக்கிப் போடு’னு சொன்னார். நான் ஷாக் ஆகி முழிக்க, ‘அவளே புருஷனைத் தொலைச்சுட்டு வறுமையில இருக்குற கேரக்டர். அவளுக்கு அழகான கம்மல் சரியா இருக்குமா?’னு கேட்டப்போதான், ஒரு கேரக்டரைசேஷன்ல காஸ்ட்யூம், அக்சஸரீஸ் வரைக்கும் அவர் கொடுக்கிற கவனம் புரிஞ்சது.

ஒரு வழியா ஷூட்டிங் ஓவர். யூனிட்லகூட யாருக்குமே படத்தை ஸ்க்ரீன் பண்ணலை. ‘பரதேசி’ ரிலீஸ்... சத்யம் தியேட்டர்ல மார்னிங் ஷோ பார்த்தேன். படத்தில் என் பங்களிப்பு நிறைவா, திருப்தியா இருந்தது மாதிரி உணர்ந்தேன். மறுபடியும் ஃபேமிலியோட ஈவினிங் ஷோ, ஃப்ரெண்ட்ஸோட நைட் ஷோனு... அந்த நாள் மறக்க முடியாதது. ஒவ்வொரு ஷோ முடியும்போது, என் நலம் விரும்பிகள் எல்லோரும் கால் செய்து பாராட்டுவாங்க... பிளஸ்டு!

தேசிய விருது அறிவிப்பை கேட்டு ஷாக் ஆனது, ஜனாதிபதிகிட்ட தேசிய விருது வாங்கியது, ‘பரதேசி’ படத்துக்கு அடுத்த சினி புராஜெக்ட்ஸ், என் நட்பு வட்டம்... ஜனவரி 12-ம் தேதி வர்ற ‘அவள் 16’-ல ஷேர் பண்றேன்!

மீண்டும் ஒரு முறை... ஹேப்பி நியூ இயர்!

கு.ஆனந்தராஜ், படங்கள்:எம்.உசேன்