பேட்டி-கட்டுரைகள்
கதைகள்
சினிமா
Published:Updated:

சசி என்கிற சர்க்கரைக்கட்டி!

சிலிர்ப்பு / இரா.சரவணன்

ட்பு என்றால் சசிகுமார் என அருஞ்சொற்பொருளில் அதிரடி மாற்றம் வரலாம். நட்பு பாராட்டுவதில் சசிகுமாருக்கு அப்படியொரு நல்ல பெயர். 'படத்தில்தான் டெரர், பழக்கத்தில் பச்சப்புள்ள...’ என்பதுதான் சசியின் இமேஜ். 

தமிழ்த் திரையுலகில் மட்டும் அல்ல... ஆந்திரா, கேரளா, மும்பை என அக்கட பூமிகளிலும் சசியின் சர்க்கரைக்கட்டி சிரிப்பு பிரசித்தம் ஆகிவிட்டது! இதர மொழிக் கலைஞர்களின் விழாக்களில் கலந்துகொள்வதும், தன்னுடைய சினிமா விழாக்களில் இதர மொழிக் கலைஞர்களை முன்னிறுத்துவதும் சசியின் ஸ்பெஷாலிட்டி. அப்படி சில நண்பர்கள் குறித்து இங்கே மனம் திறக்கிறார்.

சசி என்கிற சர்க்கரைக்கட்டி!

பிரமிக்க வைத்த ப்ளஸ்ஸி!  

அமைதின்னா எப்படி இருக்கும்னு தெரியும். பேரமைதின்னா அது ப்ளஸ்ஸி சார்தான். பேசவே மாட்டார்; அப்படியே பேசினாலும் மெல்லிய குரலில்தான் இருக்கும். அவரோட முதல் படம் 'காழ்ச்ச’.  ஃபோர்பிரேம் தியேட்டர்ல பிரிவியூ பார்த்தேன். அப்போ நான் அசிஸ்டென்ட் டைரக்டர். 'காழ்ச்ச’ பட எடிட்டர் ராஜா முகமது மூலமா என்னை ப்ளஸ்ஸிகிட்ட அறிமுகப்படுத்தி, 'அசத்திட்டீங்க சார்’னு கைகுலுக்கினேன். மெல்லிய புன்னகைதான் பதிலா வந்தது.

'சுப்ரமணியபுரம்’ படத்தை நான் பண்ணினப்ப, ப்ளஸ்ஸி சாரோட அடுத்த படமான 'தன்மாத்ரா’ ரிலீஸ். ரொம்ப அருமையான படைப்பு. பாராட்டி நாலு வார்த்தை பேசலாம்னா, நம்மளோட கூச்சசுபாவத்துக்கு சொல்லவே வேண்டியது இல்லை. அதனால, அமைதியா இருந்துட்டேன். என்னோட 'சுப்ரமணியபுரம்’ ரிலீஸாகி பட்டையக் கிளப்பிய நேரம், அந்தப் படத்தோட திரைக்கதையை மலையாளத்தில் மொழிபெயர்த்து புத்தகமா வெளி யிட்டாங்க. நானும் சமுத்திரகனி அண்ணனும் அந்த விழாவுக்காக கோழிக்கோடு போயிருந்தோம். புத்தகத்தை வெளியிட்டவர் யார் தெரியுமா? நம்ம ப்ளஸ்ஸி சாரேதான்.  மனசாரப் பாராட்டினார். நிறையப் பேச நினைச்சு, கொஞ்சமா பேசி... தயக்கமா சிரிச்சபடியே எங்க நட்பு நகர்ந்தது.

'ஈசன்’ படத்துக்கு அபிநயாவின் தந்தை கேரக்டருக்கு ஆள் தேடினப்ப, என் மனசுக்குள்ள முதல்ல தெரிஞ்சது அவர்தான். அந்தப் பாத்திரத்துக்கான சாந்தமும் பேரமைதியும் ப்ளஸ்ஸி சார்கிட்டதான் இருந்துச்சு. இதுக்காக நான் அவரைப் பார்த்துப் பேசினப்ப, அவருக்கு ஆச்சர்யம் தாங்கலை. 'மலை யாளத்தில் இயக்குநர்கள் நடிச்சுப் பழக்கம் இல்லையே’ன்னு சொன்னார். என்னோட பாசத்துக்காக அவரோட டிஸ்கஷனை ஒத்திவெச்சுட்டு வந்தார். 'நான் ஒரு வெள்ளைப் பேப்பர். நீங்க எப்படி வேணும்னாலும் எழுதிக்கங்க’ன்னு பெருந் தன்மையா சொன்னார்.

'நீங்க பேசினாலே சத்தம் வராதே... உங்களை வெச்சு எப்படி சசி டைரக்ட் பண்ணப்போறார்’னு மோகன்லால் சாரே கிண்டல் பண்ணாராம். அமைதியான தகப்பனா ப்ளஸ்ஸி சார் நிச்சயம் நல்லபடி பண்ணுவார்னு எனக்குத் தெரியும். ஆனால், படத்தில உக்கிரமா வர்ற சாமியாடும் காட்சிகளில் அவர் எப்படி நடிக்கப்போறார்ங்கிற தயக்கம் இருந்தது. அவரை வெச்சு நாங்க பண்ணிய முதல் காட்சியே காரைக்குடியில் சாமியாடுற காட்சிதான். கண்களை விரிச்சு, அரிவாள் ஓங்கியபடி உக்கிரமா அவர் ஆடியதைப் பார்த்து நாங்களே ஆடிப்போயிட்டோம். அப்படியொரு ஆவேசம் அவர் முகத்தில்.

மலையாளத்தில் நான் பண்ற 'மாஸ்டர்ஸ்’ பட பூஜைக்கு வந்தவர், 'நான்தான் சசியை வெச்சு முதல்ல படம் பண்ணணும்னு நினைச்சேன். ஆனா, ஜானி ஆண்டனி முந்திக்கிட்டார்’னு சொன்னார். அமைதியும் அன்புமா என்னை வியக்க வைக்கிற அந்தப் படைப்பாளியோட அழைப்புக்காக நான் காத்திருக்கேன்!

கோபக்காரக் குழந்தை ரஞ்சித்!  

'டே தம்பிகளா’ன்னு வாஞ்சையா கூப்பிடுற இன்னொரு அண்ணன் ரஞ்சித். நாங்களும் பதிலுக்கு, 'டே அண்ணா'ன்னுதான் கூப்பிடுவோம். 'மோதலில் தொடங்கிய காதல்’னு சொல்வாங்களே... எங்க நட்பும் அப்படி அதிரடியாத்தான் ஆரம்பித்தது. 'சுப்ரமணியபுரம்’ மலையாளத்தில் ஹிட் ஆனப்ப, 'இது வன்முறைப் படம்’னு ரஞ்சித் அண்ணன் லோக்கல் பத்திரிகைகளில் பிரிச்சு மேய்ஞ்சிட்டாராம்.

நான் கேரளா போயிருந்தப்ப அங்கே இருந்த பத்திரிகையாளர்கள், 'ரஞ்சித் உங்கள் படத்தை கடுமையா விமர்சித்திருக்கிறாரே’ன்னு கேட்டாங்க. 'அவரை நான் பார்த்ததே இல்லை. அவர் ரொம்ப சீனியர். படத்தில ஆயுதப் பிரயோகம் அதிகமா இருக்குன்னு சொன்னது அவரோட தனிப்பட்ட கருத்து. எனக்குத் தெரிஞ்சு அமைதிதான் மிகப்பெரிய ஆயுதம். உங்க கேள்விக்கு என்னோட பதிலும் அமைதி!’ன்னு சொன்னேன். அது அங்கே பரபரப்பு பேட்டியாகிடுச்சு. திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு விழாவுக்கு ரஞ்சித் வந்திருந்தார். சிங்கத்தை அதோட குகையிலேயே சந்திக்கிற மாதிரி நேர்ல போய் பார்த்தேன். நமக்குத்தான் வழக்கமான சிரிப்பு ஒண்ணு இருக்குமே... அதை அள்ளிவிட்டு சிரிச்சா, மனுஷன் பொசுக்குன்னு கட்டிப்பிடிச்சு, 'உன்னோட சுப்ரமணியபுரம் பார்த்தேன்’னு சிலாகிக்க ஆரம்பிச்சிட்டார்.  

பீரியட் ஃபிலிம் பண்றதில் டெரரான ஆள். அவரோட 'பலேரிமாணிக்கம்’ செம படம். தயாரிப்பு, நடிப்பு, இயக்கம்னு என்னை மாதிரியே மூணு சுமைகளையும் ஆசையா சுமக்கிற ஆள். 10 இயக்குநர்கள் மூலமா 10 கதைகளை வெச்சு அவர் பண்ணிய 'கேரள கபே’ ரொம்ப வித்தியாசமான முயற்சி. . 'இந்தக் கோபக்கார ஆளை எப்படிப்பா நண்பனாக்கினே’ன்னு கேரளாவே நம்மளைப் பார்த்து ஆச்சர்யப்படும். அந்தக் கோபக்காரக் குழந்தையை தமிழ் சினிமா பக்கம் தள்ளிக்கிட்டு வரணும்கிறதுதான் என்னோட பேராசை!

சசி என்கிற சர்க்கரைக்கட்டி!

'அடடே’ அனுராக் காஷ்யப்!  

நான் 'நாடோடிகள்’ நடிச்சுக்கிட்டிருந்த நேரம். கேமராமேன் கதிர், ''அண்ணே, அனுராக் காஷ்யப்னு ஹிந்தி டைரக்டர் ஒருத்தர்... 'பிளாக் ஃபைவ் டே’னு ஒரு படம் பண்ணி இருக்கார். அவர் உங்களோட சுப்ரமணியபுரம் படத்தை சப் டைட்டிலோடு பார்க்க ஆசைப்படுறார்''னு சொன்னார். அப்போ இருந்த அரிபரியில அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. 'நாடோடிகள்’ படத்தை முடிச்சிட்டுப் பார்த்துக்கலாம்னு அமைதியா இருந்திட்டேன். அப்போ, 'தேவ் டி’ன்னு ஒரு படம் ரிலீஸாகி இருந்தது. படத்தைப் பார்த்து மிரண்டுபோன நான், 'யார்ப்பா இந்த அனுராக் காஷ்யப்’னு கேட்டேன். 'உங்களோட சுப்ரமணியபுரம் படத்தை பார்க்க ஒருத்தர் ரொம்ப நாளா ஆசைப்படுறாரே... அவர்தான்’னு சொன்னார் கதிர். எனக்கு ஒரு மாதிரியா போயிடிச்சு. அனுராக் நம்பர் வாங்கி கால் பண்ணினேன். அவர்கிட்ட எப்படிப் பேசுறதுன்னு நான் மனசுக்குள்ளேயே ரிகர்சல் நடத்திக்கிட்டு இருக்க, அவரோ போனை ஆன் பண்ணதுமே, 'சொல்லுங்க சசி’ன்னு கூலா ஆரம்பிச்சார். மிரண்டு போயிட்டேன். என்னோட நம்பர் ஏற்கெனவே அவரோட செல்லில் இருந்திருக்கு.

'தேவ் டி’ படத்தைப் பற்றி சிலாகிச்சேன். 'அதையெல்லாம் விடுங்க... எனக்கு எப்போ சுப்ரமணியபுரத்தைக் காட்டுவீங்க’ன்னு கேட்டார். தனி பிரிண்டையே அவருக்காகத் தயார் பண்ணிகிட்டு, நானும் கதிரும் மும்பை போனோம். அவரோட ஆபீஸ்ல எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு சுப்ரமணியபுரத்தைப் போட்டுக் காண்பிச்சார். கட்டிப் பிடிச்சுக்கிட்டார். எந்தெந்த ஃபெஸ்டிவல்களுக்கு எல்லாம் படத்தை அனுப்பலாம்னு க்ளாஸ் எடுத்தார். அதுக்கான வழிமுறைகளை சின்னக் குழந்தைக்குச் சொல்ற மாதிரி கத்துக் கொடுத்தார். அவரோட ஆபீஸ்ல, 'நோ சுமோக்கிங் 26 ஆன் ஸ்க்ரீன் அவுட் ஆஃப் ஸ்க்ரீன் 30’ன்னு போட்டிருந்தார். 'ஓடாத படத்தை ஓடினதாச் சொல்லி பார்ட்டி வைக்கிற பழக்கம் எனக்குக் கிடையாது’ன்னு சொல்லிச் சிரிச்சார். என் அண்ணன்கள் பாலா, அமீர்மேல பேரபிமானம் கொண்ட அனுராக், என்னோட ஆசாபாசமா பழகுறது எனக்கு பெரிய கிப்ட்!

குருநாதர் ஜானி ஆண்டனி!  

எனக்காக இரண்டு வருஷங்கள் காத்திருந்த படைப்பாளி. அவரோட 'மாஸ்டர்ஸ்’ படத்தில் ஒரு பத்திரிகையாளர் பாத்திரம். 'என்னோட படத்தில் வர்ற பத்திரிகையாளன் நேர்மையானவன்; கண்ணில பொறியும், கையில வெறியுமா அலையிறவன். அதனால இந்தப் பாத்திரத்துக்கு உண்மை யிலேயே நேர்மையான ஒரு ஆள் எனக்குத் தேவைப்படுறார். அவர் பெயர் சசிகுமார்!’னு ஒரு பத்திரிகையில் வெளிப்படையா பேட்டி கொடுத்து, என்னை கௌரவிச்சவர். 'கேரளா ஷூட்டிங் வர்றப்ப சசியை பத்தி ரமா பார்த்துக்குவீங்களா’னு சிலர் கேட்க, 'எங்க குழந்தை மாதிரி பார்த்துக்கிறோம்’னு சொல்லி சிலிர்க்கவைத்த பாசக்காரர். தமிழ்ல என்னை நானே அறிமுகப்படுத்திக்க வேண்டிய சூழல். ஆனால், எனக்காகக் காத்திருந்து என்னை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய விதத்தில் ஜானி ஆண்டனிதான் என் குருநாதர்!

சசி என்கிற சர்க்கரைக்கட்டி!

  லட்சியவாதி லால்ஜோஸ்!  

மலையாளத்தில் 'சாந்துப்பொட்டு’, 'நீலத்தாமரா’ படங்கள் மூலமா பலருடைய கவனத்தையும் ஈர்த்த படைப்பாளி. கொச்சின்ல திடீர்னு ஒரு நாள் அவரை சந்திச்சேன். சுப்ரமணியபுரத்தை சிலாகிச்சுப் பேசினார். புதுமுகங்களை வெச்சு அதே மாதிரி ஒரு படம் பண்ணப் போறதா சொன்னார். அதுக்கப்புறம் போன்ல நிறைய பேசுவோம். ஒரு முறை ஃபெஸ்டிவலுக்கு இந்தச் சின்னப் பயலை ஜட்ஜா கூப்பிட்டிருந்தார். அங்கே மாணவர்களைத் திரட்டி சினிமா சம்பந்தமா க்ளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தார். 'ஈசன்’ ஷூட்டிங் சமயத்தில் நேர்ல வந்து வாழ்த்தினார். சக கலைஞர்களின் சாதிப்புகளில் பூரிக்கிற பெருந்தன்மை கொண்ட மனுஷன்.

உழைப்பாளி தீபன்!  

சமுத்திரகனி மூலமா எனக்கு அறிமுகமான ஆச்சர்யப் புள்ளி. 'நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பன்’னு 'நாடோடிகள்’ படத் தில் நாங்க பேசிய டயலாக்குக்கு ஏத்த மனுஷன். 'மாஸ்டர்ஸ்’ ஸ்டில் ஷூட்டுக்கு கேரளா போயிருந் தப்ப அவரைக் கூப்பிட்டேன். 'ஒரு முக்கியமான வேலையா இருக்கேன்’னு சொன்னார். 'உங்க அபிமான நடிகர் பிருத்வி கூப்பிட்டிருந்தா வருவீங்க... நான் கூப்பிட்டா வருவீங்களா’ன்னு சும்மா வறண்டு இழுத்தேன். பாவம்ங்க அந்த மனுஷன்... ஸ்டில் ஷூட்டுக்குப் பதறி அடிச்சு ஓடிவந்தவர், நான் ஃப்ளைட் பிடிக்கிற வரைக்கும் கூடவே வந்தார். அந்த அளவுக்கு வெள்ளந்தியான மனுஷன்.

மாநிலம், மொழிங்கிற பாகுபாடுகளை எல்லாம் தாண்டி, எந்நாளும் இந்த நட்பு தொடரும். காரணம், இந்த உலகம் இயங்குறதே நட்பால்தான்னு உறுதியா நம்புறவன் நான்!