Published:Updated:

“சிம்புவை ரீச் பண்ணவே முடியலை!” கஷ்டம் சொல்லும் விஷால்

அலாவுதின் ஹுசைன்
“சிம்புவை ரீச் பண்ணவே முடியலை!” கஷ்டம் சொல்லும் விஷால்
“சிம்புவை ரீச் பண்ணவே முடியலை!” கஷ்டம் சொல்லும் விஷால்

ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, அனைக்கா சோட்டி உள்பட பலர் நடிக்க அறிமுக இயக்குநர் காளீஷ் இயக்கியுள்ள திரைப்படம் ‘கீ’. மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில், ‘கீ’ படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஜாக்குவார் தங்கம், மன்னன், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, இயக்குநர்கள் கே.வி. ஆனந்த், ஆர்.வி. உதயகுமார், மனோபாலா, ஆதிக் ரவிசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

‘கீ’ பட நாயகன் ஜீவா பேசுகையில், “இது, மூன்று வருடங்களுக்கு முன் கேட்ட கதை. இதை, இயக்குநர் காளீஷ், பல தயாரிப்பாளர்களுக்குக் கூறினார். அவர்களில் மைக்கேல் ராயப்பன் இந்தக் கதையையும் இயக்குநரின் திறமையையும் நம்பி இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார். இது, இன்டர்நெட் உபயோகத்தால் நடக்கும் சாதக பாதகங்களைக் கூறும் படம். சினிமா இன்று முற்றிலும் வியாபாரமாகிவிட்டது. 'கோ' போன்ற ஒரு பெரிய படத்தில் நடித்தபிறகு அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய படம் இன்னும் எனக்கு அமையவில்லை. ஆனால், இந்த ‘கீ’ அப்படியொரு படமாக இருக்கும்” என்றார். 

இயக்குநர் காளீஷ் பேசுகையில், “இந்தக் கதை மைக்கேல் ராயப்பன் சாருக்குப் புரியுமா என்று ஆரம்பத்தில் எனக்குச் சந்தேகம். ஆனால் கதையைக் கேட்டதும், ‘நல்லா இருக்கு. நானே தயாரிக்கிறேன்’ என்று சொன்னார். தயாரிப்பாளர்கள் எங்களைப் போன்ற இளம் இயக்குநர்களுக்கும் வாய்ப்பளித்து உதவ வேண்டும் என்றார். 

அடுத்து பேசிய இயக்குநர் கே.வி.ஆனந்த், “ 'கோ' படத்தில் மாநிலத்தின் முதல்வரை தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரத்துக்கு ஜீவா சின்ன பையன் மாதிரி இருப்பார் என்று எனது உதவி இயக்குநர்கள் கூறினார்கள். ஆனால் கடைசியில் அவர்தான் அந்தக் கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்தார். அதேபோல் 'கவண்' படத்துக்காக விஜய் சேதுபதியிடம் பேசும்போது, ‘அவர் பேசினால் வாயில் பீடா போட்டுக்கொண்டு பேசுவதுபோல் இருக்கும். அவரெல்லாம் எப்படி டிவி ஆங்கராக நடிக்க முடியும்’ என்று என்னுடைய ஒரு உதவி இயக்குநர் கேட்டார். ஆனால் விஜய் சேதுபதிதான் கவண்’ படத்தில் நடித்தார். இப்படி இருவருமே என் முதல் சாய்ஸாக இல்லாதவர்கள். ஆனாலும் தங்கள் கதாபாத்திரங்களில் தரமாக நடித்துத் தரக்கூடியவர்கள். நடிப்பில் பிஞ்சிலயே பழுத்த ஆள் ஜீவா, பழுத்தே பிஞ்சானவர் விஜய் சேதுபதி” என்றார். 

தயாரிப்பாளர் மன்னன் பேசுகையில், “தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட்விலையைவிட கூடுதலாக விற்கிறார்கள். அதை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக முறைபடுத்த வேண்டும்’ என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் விஷாலிடம் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “விஷால் தயாரிப்பாளர்கள் சங்கப் பொறுப்புகளையேற்று வேலைகளை ஆரம்பித்தபோது எந்த தயாரிப்பாளரும் அவருடன் இருந்து உதவவில்லை. இப்போது இங்கு கோரிக்கைகள் வைப்பதோ, கேள்வி கேட்பதோ ஏற்புடையது இல்லை” என்றார். 

பிறகு பேசிய தயாரிப்பாளர் தேனப்பன், “ ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்காக அதன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்பு மீது புகார் அளித்திருந்தார். அதன் மீது ஏன் இன்னும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று கேட்டார். அதற்கு தயாரிப்பாளர் வின்னர் ராமசந்திரன், “சங்க செயற்குழுவில் எழுப்ப வேண்டிய கேள்விகளை எல்லாம் இங்கு எழுப்பாதீர்கள்’ என்று தேனப்பனைப் பார்த்து கூச்சலிட்டார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் தேனப்பன் தொடர்ந்து பேச, விழா அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது. இருவரையும் தயாரிப்பாளர் கே.ராஜன் சமாதானப்படுத்தினார். 

இதைத்தொடர்ந்து பேச வந்த விஜய் சேதுபதி, "தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கிறோமா, ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இருக்கிறோமா என்று ஒரு நிமிடம் குழம்பிவிட்டேன். ஒரு குழுவாக இருக்கும்போது பிரச்னைகள் வருவது சகஜம். நமது குடும்ப பிரச்னையை நம் இடத்தில் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் பொது வெளியில் பேசுவதால் நம்மை ‘சினிமாக்காரர்கள்’ எனப் பெரிதாகக் குறிப்பிடுகிறார்கள். ஒருபக்கம் தரம் தாழ்த்தியும் பேசப்படுகிறோம். சினிமா எடுத்து பார்த்தால்தான் தயாரிப்பாளர், நடிகர், இயக்குநரோ வலி தெரியும். அவ்வளவு ஏன் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட தான் நடிக்கும் படம் நல்லா வரணும்னுதான் கஷ்டப்படுவான். ஓடாத படத்துல நடிச்சா நம்மளால வெளிய சொல்ல முடியாதுங்கிற விஷயம் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டா இருந்த எனக்குத் தெரியும். நான்கு படங்கள் வரிசையா ஓடலைனா யார் வீட்டுக்கும் யாரும் வரமாட்டாங்க. வெற்றியடைந்தால் மட்டுமே இங்கு இடம் கிடைக்கும். நம் பிரச்னைகளை நம் இடத்தில் வைத்து பேசிக்கொள்ளலாம்” என்றார். 

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் பேசியபோது, “இங்கு நடந்த அமளிக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இருத்தரப்பும் எதை எங்கு பேசவேண்டுமோ அங்கு பேசியிருக்கலாம். பொறுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தயாரிப்பாளர்களுக்கு நல்லது ஏற்படும் காலம் அருகில் உள்ளது. இந்தப் படத்தை நல்லபடியாக ரிலீஸ்செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் முழு உதவி செய்யும். எனது 'இரும்புத்திரை' படம் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. இந்தப் படத்துக்காக அதை வேறொரு தேதிக்கு மாற்றி வைத்து இருக்கிறேன்” என்றவர் தயாரிப்பாளர் தேனப்பனின் கேள்விக்கு பதில் சொன்னார். 

“தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கமுடியவில்லை. அந்தப் புகாருககு சிம்பு தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் வரவில்லை. ஒருவர் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். சிம்புவை தொடர்பு கொள்ளவே இயலவில்லை. மேல் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் இந்தப் பிரச்னையில் நேரம் பிடிக்கிறது. நல்ல கதையுடன், படக்குழுவுடன் மைக்கேல் ராயப்பன் தயாராக இருந்தால் முன்பணம் வாங்காமல் ஒரு படம் நடித்துத்தர நான் தயார்” என்றார்.