Published:Updated:

“தமிழ் ராக்கர்ஸை நண்பனாய் பார்க்கலாமே..!?” - சினிமாவிலிருந்து ஒரு குரல்

“தமிழ் ராக்கர்ஸை நண்பனாய் பார்க்கலாமே..!?” - சினிமாவிலிருந்து ஒரு குரல்
“தமிழ் ராக்கர்ஸை நண்பனாய் பார்க்கலாமே..!?” - சினிமாவிலிருந்து ஒரு குரல்

விஷால், அர்ஜூன், சமந்தா, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள படம் 'இரும்புத்திரை'. விஷால் ஃப்லிம் ஃபேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ராஜ்கிரண், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், குட்டி பத்மினி, ரோஹினி, ஜாக்குவார் தங்கம், ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் பங்கேற்று பேசினர். வழக்கமாக இவ்வகை சினிமா விழாக்களில் சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுப்பது வழக்கமான ஒன்றாக இருக்கும். ஆனால், இந்த விழாவில் அந்த செலவை தவிர்த்து அதற்கு நிகரான ஒரு தொகையை பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகளுக்கு உதவி தொகையாக வழங்கினர் படக்குழுவினர்.

படத்தின்  இயக்குநர் பி.எஸ். மித்ரன் படத்தைப் பற்றி கூறுகையில், “இப்படத்தின் கதையை பல தயாரிப்பாளர்களிடம், பல நடிகர்களிடம் கூறியுள்ளேன். அப்படி சிறியத் தயாரிப்பாளராக இருந்தால் பெரிய நடிகர் தேதியை வாங்கி வரச்சொல்வார்கள், பெரிய நடிகராக இருந்தால் பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருந்தால் நடிக்கலாம் என்று சொன்னார்கள். இவை இரண்டும் ஒரு சேர அமைந்தது எனக்கு விஷாலிடம்தான். கதையைக் கேட்ட உடனே ஓ.கே சொல்லி தயாரிக்கவும் ஒப்புக் கொண்டார். படப்பிடிப்பின் முதல் நாள் பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று இருந்தேன். அப்போது எனது அருகே வந்த விஷால், “தமிழ் சினிமாவிற்கு நல்ல இயக்குநரை அறிமுகப் படுத்தியிருக்கிறேன் என்று பெருமையாக கூறிக் கொள்வேன்” என்றார். இப்படியாக நம்பிக்கையுடன் என் வேலையை ஆரம்பித்தேன். இன்று டெக்னாலஜி மூலம் நமது பல தகவல்கள் திருடப் படுகின்றது. அப்படி திருடப்படும் தகவல்களைக் கொண்டு பல கோடி ரூபாய் சுரண்டப்படுகிறது. அப்படி எனது நண்பனின் வங்கி கணக்கில் இருந்த 40000 ரூபாய் தொலைந்தது. அதைப் பற்றி விசாரித்த எனக்கு கிடைத்த தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டதுதான் இந்தக் கதை. நம்மை சுற்றி பலபேருக்கு இது நடந்திருக்கும். 

“இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் வேலை பார்த்தது மறக்கமுடியாத நிகழ்வு. மீசை அரும்பும் வயதில் அவர் இசையுடன் பயணப்பட்ட வாழ்க்கை. முதல் காதலி பார்த்த நாள் ஆரம்பித்து முதல் காதல் தோல்வி இப்போது முதல் படம் என எல்லா இடங்களிலும் யுவனின் இசைதான்" என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் 125வது திரைப்படம் 'இரும்புத்திரை'  

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில்  “இரும்புத்திரை எனது 125வது திரைப்படம். தனக்கு என்ன வேண்டுமென்று நன்கு அறிந்தவர் இயக்குநர் மித்ரன். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் பிடித்து அதற்கு பின்னணி இசையமைக்கிறேன் என்றால் அது இரும்புத்திரைதான்" என்றார்.   

டார்ச்சர் செய்வான் யுவன்

இயக்குநர் ஆர். வி. உதயகுமார் “யுவனை பல நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன். எனது பல படங்களின் கம்போஸிங் இளையராஜா வீட்டில்தான் நடக்கும். அப்போது ஒரு சிறு கீபோர்டை வைத்துக்கொண்டு என் டியூனைக் கேளுங்க கேளுங்க என டார்ச்சர் செய்வான். அனைத்தும் நல்ல டியூன்களாகவே இருக்கும். அக்கா இந்த பையன் பெரிய ஆளா வருவான்னு அவரது அம்மாவிடம் அப்போதே கூறுவேன். சின்ன கவுண்டர் கதையை முழுவதும் கேட்டு முடித்தவுடன் அப்புறம் என நையாண்டியாக கேட்பார்” எனக் கூறினார்.

நாளைக்கான இசை  

இயக்குநர் லிங்குசாமி பேசுகையில் “விஷால், தான் செய்யும் வேலையில் முழு ஈடுபாடுடன் இருப்பார். இதை நான் சண்டக்கோழி படத்தில் பார்த்து இருக்கிறேன். இப்படத்தை பார்க்கும்போது நாளைக்கான ஒரு இசையும், நாளைக்கான ஒரு ஒளிப்பதிவு, நாளைக்கான ஒரு இயக்குநரும் பார்க்க முடிகிறது’’.

குட்டி பத்மினி பேசுகையில் “விஷால் நல்ல மனம் கொண்டவர், உதவும் மனபான்மையுள்ளவர். சினிமாத்துறையில் இரவு பகல் என்று பாராமல் உதவி வேண்டுவோருக்கு முன் நின்று உதவக் கூடியவர். விஷால் நீங்கள் சீக்கிரம் அரசியலுக்கு வரவேண்டும். என் வாக்கு உங்களுக்குதான். காலத்தை கடத்தாதீர்கள்" என்றார்.

தமிழ் ராக்கர்ஸை நண்பனாய் பார்க்கலாமே - ஆர்.கே. செல்வமணி

“எனது காதலி யுவன் ஷங்கர் ராஜா, முதல் முதலாக எனது படத்தில் அவரை அறிமுகப் படுத்தலாம் எனப் பூஜையெலாம் போட்டோம். அது தள்ளிப்போனது, அதன் பின்னர் இருவரும் இணையவே வாய்ப்பு கிடைக்கவில்லை. 125வது படம் என்பது மிகப் பெரிய சாதனை.  இயக்குநர் மித்ரன் நல்ல படம் எடுப்பது மட்டுமல்லாமல் மேடையிலும் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் பாடல் காட்சிகளில் விஷாலை பார்க்கும்போது அமிதாப் பச்சனை பார்ப்பதுபோல் உள்ளது’’ என அனைவரையும் வாழ்த்தி ஆரம்பித்தார் ஆர்.கே.செல்வமணி. 

“முன்னாடியெல்லாம் படம் நல்லா இல்லையென்றால் மட்டும்தான் தயாரிப்பாளர் நஷ்டம் அடைவார். ஆனால் இன்று படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் தயாரிப்பாளர் சம்பாதிக்க முடியாத நிலையுள்ளது. சினிமா மூலம் பலரும் சம்பாதிக்கின்றனர். ஒவ்வொரு படத்தின் பாடல்களையும் இவ்வளவு விலை எனத் தரைமட்ட, தகர விலைக்கு வாங்குகின்றன மியூசிக் லேபில்கள்.

சமீபத்தில் நடந்த  நட்சத்திர கலைவிழாவிற்கே அப்பாடல்களை உபயோகிப்பதற்கு ஒரு கோடி ரூபாய் காப்புரிமை தொகையாக பெற்றுக் கொண்டது. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு ஒரு ரூபாய்க் கூட வரவில்லை. இப்படி சினிமா வழியாக பல பேர் சம்பாதிக்கிறார்கள். படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள்  யாரும் வாழவில்லை. கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் புரளக் கூடிய இந்த தமிழ் திரைத்துறையில் எந்த தயாரிப்பாளரும் செழிப்பாக இல்லை என்பதுதான் வேதனை.

இன்று படம் பார்க்கும் மக்களில் 30 சதவீத மக்கள்தான் தியேட்டரில் படம் பார்க்கிறார்கள். மற்றவர்கள் ஆன்லைன், திருட்டு டிவிடி மூலம்தான் பார்க்கிறார்கள். இன்று இன்டர்நெட் வழியாக மக்கள் இருக்கும் இடத்திற்கே படத்தை கொண்டு செல்கிறான் தமிழ் ராக்கர்ஸ். கடந்த 12 வருடமாக சிறிதும் பெரிதுமாய் பல்வேறு படங்களை வெளியான அன்றே வெளியிடும் அளவிற்கு வளர்ந்துவிட்டான் தமிழ் ராக்கர்ஸ். தமிழ் சினிமாத் துறையிடம் இருந்து உனக்கு ஒன்பது சத்வீதம், எனக்கு ஒன்பது சதவீதம் என 18% ஜி.எஸ்.டியை பங்கு போட்டுக் கொள்ளும்  மத்திய மாநில அரசுகள் இந்த துறையை கண்டுகொள்ளவில்லை. ஆன்லைன் பைரசி என்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இங்கே இன்டர்நெட் சேவையை பல நிறுவனங்களுக்கு பிரித்து தருவதே மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனம்தான். அப்படியானால் ஒரு திருட்டுபொருளை பார்ப்பதற்கு அரசாங்கமே வழிவகை செய்து தருவது எவ்வளவு பெரிய குற்றம்” என்றார்.

எப்படி கள்ள சாரயத்தை ஒழிக்க அரசே சாராயத்தை விற்கிறதோ, அதேபோல் சினிமாத் துறை தமிழ் ராக்கர்ஸை விரோதியாகப் பார்க்காமல் அவனை நண்பனாக்கிக் கொண்டு அதிலிருந்து எப்படி தயாரிப்பாளர்களுக்கு பணம் ஈட்டி தர முடியும் என்பதை பார்க்க வேண்டும். மக்களுக்கு இன்று எல்லாமே ஹோம் டெலிவரியாக வருகிறது அதேபோல் சினிமாவும் மக்களை சென்றடைய செய்ய வேண்டுமென தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலிடம் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்

நான் என்றைக்கோ அரசியல்வாதி - விஷால்

மற்ற விருந்தினர்களும் வாழ்த்தி பேச முத்தாய்ப்பாக பேசிய விஷால், “எனது தயாரிப்பில் அதிக நாட்கள் எடுத்த திரைப்படம் இரும்புத்திரை.  டிஜிட்டல் யுகத்தில் நடக்கும் கேமைப் பற்றி பேசும் திரைப்படம் இது. இதில் வசனம் பேசும்போது உண்மையாக உணர்ந்து பேசினேன். எனது வீட்டிலும் இப்படி ஒரு விஷயத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்படத்தில் இடம்பெறும், சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கும். இப்படத்தின் இயக்குநர் என்னுடன் சேர்ந்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், ஆர்.கே. நகர் என மூன்று தேர்தல்களை சந்திதுள்ளார். முதல் இரண்டிற்கு வெற்றி பெற வேண்டும் என வேண்டியவர். ஷூட்டிங் தள்ளி போகுமோ என்ற பயத்தில் ஆர்.கே நகர் தேர்தலில் நான் வெற்றி பெறக் கூடாது என் வேண்டிக் கொண்டார்.  அது போலவே நாமினேஷன்கூட ஆகல. 

நான் அரசியலுக்கு வரணும்னு சிலப்பேரும்,  வரக் கூடாதுனு சிலரும் சொல்கிறார்கள். ஆனால் நான் அரசியலுக்கு எப்போதோ வந்துட்டேன். என்னை பொறுத்தவரை அரசியல் என்பது சமூக சேவைதான். அதை நான் என்றைக்கோ ஆரம்பித்துவிட்டேன். நமது பிரதிநிதி நம் தொகுதிக்கு வரமாட்டாரா என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. சமீபத்தில் ஒரு பப்புள் கம்மால் மெட்ரோ ரயிலில் விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே சிங்கப்பூர் பாராளுமன்றம் கூடி மெட்ரோ ரயிலில் பபுள்காம் சாப்பிட தடை விதித்தது. இப்படி மக்களுக்காக இருப்பதுதான் நான் எதிர்பார்க்கும் மாற்றம். இன்று  இருக்குழந்தைகளை படிக்க வைத்தோம் என்று இங்கிருந்து வெளியே செல்வேன்" என்றார் விஷால்.