Published:Updated:

``யெஸ்.. ஐ ஆம் எ கே, லெஸ்பியன், பை செக்ஸுவல்..!" #LadiesAndGentleWomen படம் எப்படி?

சுஜிதா சென்
``யெஸ்.. ஐ ஆம் எ கே, லெஸ்பியன், பை செக்ஸுவல்..!" #LadiesAndGentleWomen படம் எப்படி?
``யெஸ்.. ஐ ஆம் எ கே, லெஸ்பியன், பை செக்ஸுவல்..!" #LadiesAndGentleWomen படம் எப்படி?

ஒரு பால் ஈர்ப்பு பற்றிய சர்ச்சை தொடர்ந்து நம் சமூகத்தில் இருந்து வருகிறது. நிறைய ஒரு பாலின ஈர்ப்பாளர்கள் தற்கொலை செய்துகொள்வதும் நடந்துள்ளன. ஆனால், பொதுச் சமூகத்தில் அதைப்பற்றிய விவாதங்களோ, கலந்துரையாடல்களோ நடைபெறாத சூழலில், அதற்கான விவாதமேடையை அமைத்துக்கொடுத்திருக்கிறது 'லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன்' எனும் ஆவணப்படம். 'காதல் என்பது ஆன்மாக்களுக்கு இடையில் தோன்றும் இயற்கையான ஒன்று. சாதி, மதம்போல பாலினம் சார்ந்தும் காதலைப் பிரிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல' என்பதை மையமாக வைத்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதை இயக்குநர் பா. ரஞ்சித்தின் 'நீலம்' அமைப்பு தயாரிக்க, மாலினி ஜீவரத்தினம் இயக்கியிருக்கிறார். இந்த ஆவணப்பட வெளியீடு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த ஆவணப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். தமயந்தி பாடல்களை எழுதியுள்ளார். இது சென்னை ரெயின்போ திரைப்பட விழாவில் விருது வென்றிருக்கிறது. இப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்களைப் பற்றிப் பார்ப்போம். 

இதில் எல்.ஜி.பி.டி (Lesbian-Gay-Bisexual and Transgender) செயற்பாட்டாளர்கள், மனநல மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், திருநங்கைகள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் தன்பால் ஈர்ப்பு பற்றி நமக்கு விளக்குகின்றனர். வடமாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ-சுசித்ரா எனும் இணையர்கள் அவர்களின் ஒருபால் ஈர்ப்பு காதலை இந்த ஆவணப்படத்தின் மூலம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டுள்ளனர். 

செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படும் சிறுதெய்வ வழிபாட்டிலும் ஒருபால் ஈர்ப்பு கொண்ட சிற்பங்கள் இருக்கின்றன என்றும் புதுக்கோட்டை மாவட்டதைச் சேர்ந்த குடுமியான் மலையில் உள்ள பெண் தெய்வங்களான பாப்பாத்தி மற்றும் கருப்பாயி இணையர்களைப் பற்றிய ஒருபால் ஈர்ப்பு காதல் கதையும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், இது பண்டைய காலம் முதலே நம்மிடமிருந்து வரும் பழக்கம் எனவும், அதற்கு சாட்சியாக நம்மிடம்  எத்தனையோ ஆயிரம் சிலைகள் இருக்கின்றன எனவும் கூறுகின்றனர். இது மதத்திற்கும், கலாசாரத்திற்கும் எதிரானது என்பதனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த பலரும் இந்த மாதிரியான சிற்பங்களைத் தகர்த்து வருகின்றனர் என்பதற்கான சாட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. 

மேலும், சென்னை தண்டையார்பேட்டையில் நிகழ்ந்த கிறிஸ்டி-ருக்மணி இணையர்களின் தற்கொலை பற்றியும், அவர்களது தற்கொலையின் பின்னணி பற்றியும் இதில் பேசப்பட்டுள்ளது. சாதி ஆணவக்கொலைகளைத்தாண்டி ஒருபால் ஈர்ப்பு கொண்டவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் கெளரவம் கருதி ஆணவக் கொலை செய்கின்றனர். அவர்களது மரணத்தில், பால் சார்ந்த அடையாளங்கள் தெரியக் கூடாது என்பதனால் கொலைகளுக்கான பின்னணியும் இங்கு மறைக்கப்படுகிறது. மறுநாள் செய்தித்தாள்களில், 'தோழிகளுக்கு இடையே வரம்புக்கு மீறிய நட்பால் ஏற்பட்ட விபரீதம்' என்ற தலைப்பில் செய்திகள் வெளியாகின்றன. 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செக்ஷன் 377-ன் கீழ், எல்.ஜி.பி.டி என்பது இயற்கைக்கு மாறான குற்றங்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, உடலுறவு தனிப்பட்ட நபரின் சுதந்திரம் என்பதைத்தாண்டி, இயற்கைக்கு எதிரான வரம்பு மீறல்தான் எல்.ஜி.பி.டி என்றும் அதற்கு இந்தியச் சட்டத்தில் இடமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே ஒருபால் ஈர்ப்பு இணையர்கள் இதனை எதிர்க்கும் வண்ணம் கோஷமிட்டு எதிர்ப்பதையும் இதில் காணமுடிகிறது. 

மேலும், இந்த ஆவணப்படத்தில் தங்களது கருத்துகளைக் கூறும் உளவியலாளர்கள், "உங்களது குழந்தை தனக்குத் திருமணம் வேண்டாம் என்று கூறினால், அதற்கான பின்னணிகளைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களது பாலியல் நோக்குநிலை (Sexual Orientation) என்ன என்பதையும், அவர்கள் யாரை மணம்முடிக்க விரும்புகின்றனர் என்பதையும் அவர்களிடம் தெளிவாகப் பேசுங்கள். பலரது வீட்டில் பாலியல் நோக்குநிலை மறைக்கப்பட்டு, அவர்களின் விருப்பத்துக்கு மாறாக கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இது, சாதாரண பெண்ணை மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துவது எவ்வளவு கொடுமையானதோ, அதேபோல்தான் லெஸ்பியன்களை மற்றொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்ளும்படி சொல்வதும்." என்று கூறுகின்றனர். 

இதுபற்றி எல்.ஜி.பி.டி செயற்பாட்டாளரான சங்கரி, "திருநங்கைகளுக்கான அங்கீகாரம் என்பது சாதாரணமாகக் கிடைத்தது அல்ல. நிறைய வலி, வேதனை, அவமானம், கோபம், வெறுப்பு இவற்றுக்கு இடையே போராடி சமூக வெறுப்பையும் சம்பாதித்துதான் எங்களுக்கான உரிமைகள் பெறப்பட்டுள்ளன. எனவே, தங்களது உடல் சார்ந்த தேவைகளை இந்தச் சமூகத்துக்கு உணர்த்தினால்தான் புரியும். அது ஒருபால் ஈர்ப்பின் அடிப்படையில் அமைவதில் தவறு ஏதும் இல்லை." என்கிறார். 

இந்தப் படத்துக்கான திரையிடல் முடிந்ததும், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பா.ரஞ்சித், "இந்தப் படத்தின் மூலம் எல்.ஜி.பி.டி-க்கான பிரச்னைகளைச் சிறிதளவாவது சரிப்படுத்த இயலும் என்ற நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சமூகத்தில் மத அடிப்படையில், சாதி அடிப்படையில் எப்படிப் பிரிவினை இருக்கிறதோ, அதுபோல் பாலின அடிப்படையிலும் பிரிவினை இருக்கிறது. திருநங்கைகளை நாம் கேலி செய்து பார்த்திருப்போம். அது தற்போது ஒருபால் ஈர்ப்பினருக்கும் நடந்து வருகிறது. அதுபோல் மக்கள் துப்புரவுத் தொழிலாளர்களை ஏளனமாக நினைக்கிறார்கள். உண்மையில் அவர்களது வலி என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளத் தவறுகிறோம். இந்தமாதிரி மனிதப் பிரிவினை மற்றும் மனித இயல்பினை கொச்சைப்படுத்தும் இனமாகத்தான் நாம் ஒருபால் ஈர்ப்பினரைப் பார்க்கிறோம். அதன் பின்னால் இருக்கும் உடல் அறிவியலை விளக்கும் விதமாக இப்படம் அமைந்திருக்கிறது" என்று கூறினார். 

மேலும், இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் மாலினி ஜீவரத்தினம் பேசுகையில், "ஒடுக்கப்படுற ஒவ்வொருவரின் குரலும் ஒன்றுதான். அது கறுப்பினத்தவராகவோ, சமூக அநீதிக்கு எதிராகவோ, எல்.ஜி.பி.டி-யின் உரிமைக்காகவோ இருக்கலாம். நாங்கள் அனைவரும் கேட்பது ஒன்றுதான், 'எங்களை அடிமைப்படுத்தாதீர்கள். எங்களை தற்கொலைக்குத் தூண்டாதீர்கள். எங்களை ஆணவக்கொலைக்கு உட்படுத்தாதீர்கள். நாங்களும் உங்களை மாதிரி சக தோழமைகள்தான். இந்த மேடையில் இப்படி நிற்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 'Yes. I'm a Gay/ Lesbian/ I'm a bisexual' என்று மார்தட்டிக் கொள்வதற்கு. நான் பயங்கரத் தாழ்வுமனப்பான்மை உள்ள ஒரு பெண். நான் இந்த மேடையில் என்னோட அடையாளத்தைப் பெருமையாகச் சொல்லிக்கொள்வதற்குக் காரணம், பா.ரஞ்சித் அண்ணா. நான் லெஸ்பியன்னு சொல்லி முதன் முதலில் முகநூலில் போஸ்ட் போடும்போது, எல்லாரும் என்னை ஒதுக்கிவைத்தனர். ஆனால், அதே மக்கள் இன்று இந்தத் திரைப்பட விழாவிற்கு வருவதற்கும் அத்தனை ஆர்வம் காட்டினார்கள். எனவே ஒரு புன்னகைப் போராட்டம் என்பது யாரையும் காயப்படுத்தாமல், குற்றஉணர்ச்சியை மட்டும் உண்டாக்கியது என்றால், அதுதான் வெற்றி. இது ஆண்களுக்கு எதிரான படமல்ல. ஆணாதிக்கத்துக்கு எதிரான படம்' என்று கூறினார்.

படம் முடிந்தவுடன் அதை  ஒடுக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த குரலாகவே  பார்வையாளர்கள்  ஆதரித்தார்கள். ஆனால், எப்போதுமே பாதிக்கப்பட்டவர்களின் குரல் அவர்களைச் சார்ந்து மட்டும்தான் ஒலிக்கும் என்பதற்கு இந்த ஆவணப்படமும் விதிவிலக்கல்ல. இப்படம் ஒருபால் ஈர்ப்பினரின் நியாயங்களைப் பேசிய அதேசமயம், அவர்களை மிக மேன்மையானவர்களாகவும், மற்றவர்களை மிக மோசமானவர்களைப்போலவும் சித்திரிப்பதாக அமைத்திருந்ததும் மறுப்பதற்கில்லை. ஆனாலும், பலகாலமாக பேசவே தயங்கிக்கொண்டிருந்த,  ஒரு பிரச்னையைப் பொதுவெளியில் காட்சிப்படுத்தியமைக்கு படக்குழுவினரைப் பாராட்டலாம்.