வெளியிடப்பட்ட நேரம்: 16:58 (23/01/2018)

கடைசி தொடர்பு:20:15 (24/01/2018)

'எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை. படம் நல்லா வரணும்!' விஜய் - முருகதாஸ் பட அப்டேட்ஸ் #Vijay62

'மெர்சல்' திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, ஆனந்த விகடன் 2017-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது... என விஜய் உற்சாகமாக இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி' மாதிரி இப்போது நடித்துவரும் இந்தப் படமும், விஜயின் கதாபாத்திரமும் பெரிதாகப் பேசப்படும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக புதுப்படத்தின் பூஜை ஒருநாள் போடப்படும், படப்பிடிப்பு இன்னொருநாள் தொடங்கப்படும் என்பது கோடம்பாக்க சினிமா நியதி. கடந்த 19-ம்தேதி பனையூரில் பூஜை போடப்பட்டு, அன்றைக்கே படப்பிடிப்பும் ஆரம்பித்துவிட்டனர். ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடித்த 'விவசாயி' படத்தை நினைவில் வைத்துக்கொண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'கத்தி' படத்தில் நடித்தார். இப்போது எம்.ஜி.ஆர் நடித்த 'படகோட்டி', 'மீனவ நண்பன்' படங்களை ஞாபகத்துக்குக் கொண்டுவருகிற மாதிரி மீனவர் வேடத்தில் நடிக்கப் போவதாக இப்படம் குறித்து செய்தியைப் பரப்பிவருகிறார்கள். 'துப்பாக்கி'யில் பயன்படுத்தப்பட்ட ஸ்லீப்பர்செல் என்கிற வார்த்தை பிரசித்தி பெற்றது. 'கத்தி'யில் விவசாய நிலங்களை அப்பாவி விவசாயிகளிடம் அபகரிக்கும் கும்பலை எதிர்த்துப் போராடும் போராளி வேடத்தில் விஜய் நடித்திருந்தார்.

விஜய் -62

தற்போது சமூகத்தில் புரையோடிக் கிடக்கும், மக்கள் அனுபவித்து வரும் கொடுமையான ஒரு விஷயத்துக்கு விடை சொல்கிற கதைதான் 'விஜய்-62' படத்தின் கதை என்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய் பேசும் வசனங்களில் அர்த்தம் பொதிந்த சமூகச்சாடல் வேண்டும் என்று விரும்பிய முருகதாஸ், அதற்காக வசனம் எழுதுவதற்காக எழுத்தாளர் ஜெயமோகனைத் தேர்வு செய்திருக்கிறார். ரஜினி நடித்துவரும் '2.0' படத்துக்கு வசனம் எழுதி இருப்பதும் எழுத்தாளர் ஜெயமோகன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில், சமூக அநீதியை எதிர்த்துப் போராடும் இளைஞனாக நடித்துக்கொண்டிருக்கிறாராம் விஜய். சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் முட்டுக்காடு பகுதியில் படகுத்துறை இருக்கிறது. அங்கே செல்லும் ஆறு நேரடியாகக் கடலில் கலக்கிறது. அந்த இடத்தில் கடல் நீரும், நதியின் நீரும் கலக்கும் இடத்தில் பிரமாண்டமான செட் போட்டு அசத்தியிருக்கிறார்கள். விஜயின் வீடு நீலாங்கரையில் இருப்பதால் படப்பிடிப்பில் கால நேரம் பார்க்காமல் சந்தோஷமாக நடித்து வருகிறார். விஜய் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் வேடிக்கைப் பார்க்கச் சென்று விபரீதம் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு ஒரு கி.மீ முன்னரே பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஷூட்டிங் நடக்கிறது. இப்போது நடந்துவரும் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறும் என்று சொல்கிறார்கள். விஜய் நடிக்கும் பெரும்பாலான காட்சிகள் நகரத்தில், குறிப்பாக மக்கள் நடமாடும் தெருக்களில் படமாக்க முடிவுசெய்திருக்கிறார், முருகதாஸ். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தினாலும் விஜயை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடிவிடும் என்பதால், அடுத்த ஷெட்யூல் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடத்துவதற்கு திட்டமிட்டு வருகின்றனர். 'மெர்சல்' படத்தில் இசையமைத்து  இருந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை விஜய்க்கு ரொம்பவும் பிடித்துப்போனது. அதனால், இந்தப் படத்துக்கு விஜய் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ரஹ்மானையே ஒப்பந்தம் செய்திருக்கிறது, தயாரிப்பு தரப்பு. 

சன் பிக்சர்ஸ் எத்தனையோ படங்களைத் தயாரித்திருந்தாலும் அத்தனை படங்களிலும் தயாரிப்பாளர் என்று தனது பெயரை கலாநிதிமாறன் போட்டுக்கொண்டது இல்லை. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 'எந்திரன்' படத்தில் மட்டும் தனது பெயரை பதித்துக் கொண்டார். அதன்பிறகு இப்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்குத் தயாரிப்பாளர் இடத்தில் தனது பெயரைப் போட்டுக்கொண்டார், கலாநிதிமாறன்.  'விஜய் படத்துக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. படம் பிரமாண்டமா வரணும்' என்று ஏ.ஆர்.முருகதாஸுக்கு, கலாநிதிமாறன் பச்சைக்கொடி காட்டி விட்டதாக சந்தோஷமாகச் சொல்கிறார்கள்.      
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்