Published:Updated:

கமல் தயாரிப்பில் விக்ரம் - அக்‌ஷ்ரா, கீர்த்தி சுரேஷின் கிஃப்ட், விஜய்யின் ஹீரோயின்! #QuickSeven

சுஜிதா சென்
கமல் தயாரிப்பில் விக்ரம் - அக்‌ஷ்ரா, கீர்த்தி சுரேஷின் கிஃப்ட், விஜய்யின் ஹீரோயின்! #QuickSeven
கமல் தயாரிப்பில் விக்ரம் - அக்‌ஷ்ரா, கீர்த்தி சுரேஷின் கிஃப்ட், விஜய்யின் ஹீரோயின்! #QuickSeven

பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு 'நடிகையர் திலகம்' என்ற தலைப்பில் திரைப்படமாக வெளியாக இருக்கிறது. இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். மேலும், பிரகாஷ் ராஜ், நாணி, சமந்தா உட்பட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவின் சீனியர் கலைஞர்களுடன் சாவித்திரியைப் பற்றி கலந்துறையாடி பல அறிய தகவல்களைத் தெரிந்துகொண்டார். அந்தவகையில், தான் நடித்த பழைய படத்தின் படப்பிடிப்பின்போது, அந்த செட்டில் பணியாற்றிய அனைவருக்கும் சாவித்திரி தங்க நாணயம் பரிசளித்ததை அறிந்த கீர்த்தி சுரேஷ், செட்டில் இருந்த படக்குழுவினருக்குத் தானும் தங்க நாணயத்தைப் பரிசாக அளித்துள்ளார்.

'பாகுபலி-2' படத்துக்கு பிறகு 'பாகமதி' படத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. இந்தப் படம் வருகிற 26-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ஐதராபாத்தில் இருக்கும் தனது வீட்டில் நவீன ஜிம் ரெடி செய்து, தனது எடையை உடற்பயிற்சிகள் மூலம் கணிசமாகக் குறைத்துள்ளார் அனுஷ்கா. இந்நிலையில், இவரைப் பார்த்த இயக்குநர் கெளதம் மேனன், தனது அடுத்த மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். ஏற்கெனவே அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் அனுஷ்காவை இரண்டாம் கதாநாயகியாக நடிக்க வைத்திருந்தார் கெளதம் மேனன். தற்போது, 'துருவ நட்சத்திரம்' படத்தை அடுத்து, தான் இயக்கவிருக்கும் மல்டி ஸ்டார் படத்தில் அனுஷ்காவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தைக் கொடுக்க இருக்கிறார். இதில் டூயட் பாடல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


விஜயகாந்தின் இளைய மகனான சண்முகப்பாண்டியன், 'சகாப்தம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியதை அடுத்து, தற்போது 'மதுரவீரன்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தை, பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், பல முன்னணி ஹீரோக்களின் படம் அந்நாளில் வெளியானதால் 'மதுரவீரன்' படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், விஷாலின் 'இரும்புத்திரை' பட ரிலீஸ் தள்ளிபோனதால், வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதியன்று 'மதுரவீரன்' திரைப்படம் தியேட்டரில் வெளியாகவிருக்கிறது. இந்நாளில், விஜய்சேதுபதி மற்றும் கெளதம் கார்த்திக் நடித்துள்ள 'ஒருநல்ல நாள் பார்த்து சொல்றேன்', மிஷ்கினின் 'சவரக்கத்தி' ஆகிய படங்களும் வெளியாகிறது.  


மல்ஹாசனின் 'ராஜ்கமல் இன்டர்நேஷனல்' பட நிறுவனம் தொடர்ந்து கமல் நடிக்கும் படங்களை மட்டுமே தயாரித்து வந்தது. 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', 'மகளிர் மட்டும்', 'நளதமயந்தி' போன்ற பிற நடிகர்களின் படத்தையும் அவ்வப்போது தயாரித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தது. இந்த வரிசையில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படத்தை கமல் தயாரிக்க இருக்கிறார். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்க இருக்கிறார். 

விஜய்-62 படத்துக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிற நிலையில், இப்படத்துக்கு இரண்டு கதாநாயகிகள் எனும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு இரு வேடங்கள் என்ற செய்தியும் உலா வருகிறது. இந்நிலையில், படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தபடியாக 'வனமகன்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான சயீஷா நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். 

விக்ரம் நடித்துள்ள 'ஸ்கெட்ச்' படம் திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது, மேலும், 'துருவநட்சத்திரம்', 'சாமி-2' ஆகிய படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இவரது மகன் துருவ், தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இதுபற்றிப் பேசிய விக்ரம், "அர்ஜுன்ரெட்டி கதைக்கு என் மகன் கச்சிதமாகப் பொருந்துவார். ஒரு தந்தையாக எனது மகனின் முதல் படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஒருவேளை துருவ் இந்தப்படத்தில் நடிக்கவில்லை என்றால் நானே கதாநாயகனாக நடிப்பேன்" என்று கூறியுள்ளார். 

'திருட்டுப்பயலே-2' படத்திற்குப் பிறகு 'காலக்கூத்து' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் பிரசன்னா. இந்நிலையில், டிவிட்டரிலும்  இவர் ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் நித்தியானந்தைப் பற்றிய இவரது டிவீட் செம வைரல். "உண்மையில் இந்துமதத்தைக் கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்தியானந்தா கூட்டம்தான். அழித்தொழிக்கப்பட வேண்டிய இந்து எதிரி இக்கூட்டமே. சூடிக்கொடுத்த சுடர்கொடியே இவ்வர்ப்ப பதர்களைச் சுட்டெரித்துவிடு" என்று ட்விட்டியுள்ளார். இவரது இந்த ட்விட்டிற்கு ஒருவர், 'நித்யானந்தவாவைச் சீண்டுவது ஏன்?' என்ற தொணியில் ஒரு கேள்விகேட்க, 


அதற்குப் பதிலடியாக, "நம் இந்துமதம் ஒருபோதும் தரம் தாழப் பழக்கவில்லையே அன்பரே. மனதாரச் சொல்லுங்கள் உங்களுக்கு அவர்கள் செயல் சரியெனப் படுகிறதா? சிறுவயதில் உபன்யாசங்கள் மார்கழி மாதம் அதிகாலை பஜனை என்று பக்தி பழகிய எனக்கு ஆண்டாளின் பெருமை யாரோ சொல்ல வேண்டியதில்லை" என்று கூறியுள்ளார் பிரசன்னா.