Published:Updated:

"அந்த ஹீரோ வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத கேரக்டர்!" யாரை கலாய்க்கிறார் விஜய் சேதுபதி?

"அந்த ஹீரோ வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத கேரக்டர்!" யாரை கலாய்க்கிறார்  விஜய் சேதுபதி?
"அந்த ஹீரோ வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத கேரக்டர்!" யாரை கலாய்க்கிறார் விஜய் சேதுபதி?

 விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா கொணிடேல்லா நடிப்பில், ஆறுமுகக் குமார் இயக்கித் தயாரித்துள்ள படம், 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்'. இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தைப் பற்றியும்,  சக நடிகர் கௌதம் கார்த்திக் பற்றியும், ஆன்மிகம் பற்றியும் விஜய் சேதுபதியிடம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இது.

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படம் ஒரு ஃபேன்டஸி காமெடி திரைப்படம். படத்தில் சிலருக்கு லட்சியம் இருக்கும். அதுமாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிச்சிருக்கேன். சிலருக்கு லட்சியமே இருக்காது. அப்படி ஒரு கேரக்டர்ல கெளதம் கார்த்திக் நடிச்சிருக்கார். யாரையும் புண்படுத்தாம, எனக்கு வேணுங்கிறதைத் திருடும் 'ஆர்கானிக் திருடனாக' இப்படத்தில் நடித்திருக்கிறேன். உங்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிற மாதிரி ஒரு  படமா இது இருக்கும். 

காட்டுவாசி கதாபாத்திரம்

எமசிங்கபுரம்னு ஒரு காட்டுப் பகுதியோட தலைவன் கதாபாத்திரம் எமன். ஒரு காட்டுவாசி கும்பல்; கூட்டம் கூட்டமா வாழ்வோம். எங்களுக்குனு சில விதிமுறைகள் இருக்கு, அதுபடிதான் வாழ்வோம். பெண்களை மதிக்கணும், திருடறதுதான் இந்தக் கூட்டத்தோட வேலை. அப்படித் திருடனாலும் அதைப் பகிர்ந்துக்கணும்னு கொள்கை இருக்கும். இப்படி ஒரு கூட்டமா இருக்கிற எங்களுக்கு வெளியில இருந்து வர்றவங்களால நடக்குற சம்பவங்கள்தான் கதை. 'காட்டுவாசிகள்' என்பது கதையைச் சொல்றதுக்கான பின்னணிதான். இது முழுக்க முழுக்க கற்பனையான கதை.  படத்துல வில்லனும் கிடையாது, கெட்டவனும் கிடையாது. ஒரு ஜாலியான பொழுதுபோக்கு கதை.   

வெவ்வேறு விதமான் ஜானர்களில் படம் பண்றீங்க ஃபேன்டஸி படம் எப்படி இருந்தது?

ஒவ்வொரு படமும் ஒரு அனுபவம்தான். இத்தனை படங்கள் நடிச்சாச்சு, இப்போ இந்த படம் ஒரு ஃபேன்டஸியா பார்க்காம, ஒரு பொழுதுபோக்குப் படமாதான் பார்க்குறேன். இயக்குநர் சொல்ல வந்தது மக்களுக்குப் புரியுதா, அவரோட கருத்து மக்களுக்குப் போய்ச் சேருதா.. இதுதான் எனக்கு முக்கியம். ஏற்கெனவே மக்களை நிறையா சாகடிக்குறாங்க, நான் வேற தியேட்டருக்குள்ள சாகடிக்காம இருக்கணும்ல!  

சமீபகாலமாக உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரிகிறதே? இது பயிற்சியால் வந்ததா அனுபவமா? 

இது ஒவ்வொரு படத்திலும் கிடைச்ச பாடத்துனால இருக்கலாம். ஒரு கதை சொன்னாங்க, நான் நடிச்சேன்னு இல்லாம... அதை ஏன் எழுதியிருக்காங்க, இதுக்கு ஆடியன்ஸ் ஏன் கைத்தட்டுறாங்க, இந்த சீன் ஏன் வேலைக்கு ஆகலை, ஏதோ ஒரு வகையில குறைபாடா இருக்கிற படத்தை எப்படி மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம், இந்தப் படம் எந்த அளவுக்கு வியாபாரம் செய்யும்... இப்படி நிறைய கணக்கு போடவேண்டியதா இருக்கு. பகுத்தறிதல் முக்கியமா இருக்கு. பகுத்தறிந்ததால்தான் என் எண்ணங்கள் மாறியிருக்கு. சிந்திக்கிறதுக்குப் பயிற்சி தேவையில்லை, உணர்ச்சி இருந்தால் போதும். இல்லனா இவர் சொல்லியிருக்கிறார், அவர் சொல்லியிருக்கார்னு மேற்கோள் காட்டிப் பேசவேண்டும். எனக்கு அப்படிப் பேசவராது. அதனால, என்னோட வாழ்க்கையில இருந்துதான் எடுத்துப் பேசணும். அதனால, இந்த முதிர்ச்சி தெரியலாம்.

தொடர்ந்து இவ்வளவு படங்கள் நடிக்கிறீர்கள் சோர்வை உணர்வதுண்டா? ஆன்மிக நம்பிக்கையுடவரா நீங்கள்?

சோர்வு எப்போது ஏற்படும்... பிடிக்காத விஷயத்தைச் செய்யும்போதுதான். எனக்கு ரொம்பப் பிடிச்ச சினிமாவைத் தொழிலாகச் செய்றேன். ஒவ்வொரு படத்தையும் சந்தோஷமா நடிக்குறேன். புதுப்புது  சீன்கள் என்னை எக்ஸைட் செய்கிறது. இதுல மனசு உற்சாகமா இருந்தா, உடலும் உற்சாகமா இருக்கும். மனசு சொல்றதுதான், உடம்பு கேட்கும். உடம்புக்கு ஒரு பிரச்னைன்னா மனசுகிட்ட சொல்லும், மனசைத் தயார்படுத்துனா, அது உடம்பைத் தயார்படுத்தும். பிடித்த ஆட்களைப் பார்த்தா ஒரு உற்சாகம் பிறக்கும், அது எனக்கு சினிமா மூலம் கிடைக்குது. ஆன்மிகம்  வெளியில இருக்கிறதா உணர்வதா இல்ல, உள்ளே இருக்கிறதா உணர்வதா? இதுதான் கேள்வி. எல்லோருக்குள்ளும் இருக்கும் கருணையை உணர்வதுதான், ஆன்மிகம். உள்ளே இருக்கிற கருணையைக் கொன்னுட்டு கடவுளைத் தேடமுடியாது."

'விக்ரம் வேதா' படத்தில் மாதவன், இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக்... இருவருக்கும் உள்ள வித்தியாசம்?

இருவருக்கும் ஈகோ கிடையாது. மாதவன் என்னைவிட சீனியர் நடிகர். அவரை கௌதமுடன் ஒப்பிடமுடியாது. தொழில் மீது இருக்கும் பக்திதான் நம்மை உயர்த்தும் என்பதைத் அறிந்தவர் கௌதம் கார்த்திக். இன்னும் பல உயரங்களைத் தொடக்கூடிய தகுதிகளையுடையவர். பெரிய சினிமா குடும்பத்திலிருந்து வந்தாலும், சீன் போடாத ஒரு சாதாரண நடிகன். ஒரு நடிகனாக கௌதம் நல்லா நடிக்கிறார். சிலர் நாம குறிப்பிடுற 'சாக்லேட் பாய்' இமேஜை நம்பி அதுல சிக்கிப்பாங்க. ஆனா, கௌதம் நிறைய வெரைட்டி காட்டி நடிக்கமுடியும். 'ரங்கூன்'ல பார்த்ததைவிட அதிக லைவ்லியா இந்தப் படத்துல நடிச்சிருக்கார். இந்தப் படத்துல கௌதம் கொஞ்சம்கூட வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத கேரக்டர். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்துல வந்த சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரம் மாதிரி இவரோட கதாபாத்திரம் இருக்கும்.