Published:Updated:

ஏ.ஆர்.ரஹ்மானின் 2வது மலையாளப் படம், மோகன்லால் மகனை வாழ்த்தும் மம்மூட்டி..! #MalluUpdates

ஏ.ஆர்.ரஹ்மானின் 2வது மலையாளப் படம், மோகன்லால் மகனை வாழ்த்தும் மம்மூட்டி..! #MalluUpdates
ஏ.ஆர்.ரஹ்மானின் 2வது மலையாளப் படம், மோகன்லால் மகனை வாழ்த்தும் மம்மூட்டி..! #MalluUpdates

மலையாள சினிமாவின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் சிலவற்றை பார்ப்போம்...

• பழைய நடிகர் பாலாஜியின் மகள் சுசித்ராவை மணந்தவர், ஓரிரு நேரடித் தமிழ்ப் படங்களில் நடித்தவர்... என்று மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கும் தமிழ் சினிமாவுக்குமான தொடர்பு நாம் அறிந்ததே. இவருக்கு ப்ரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் ப்ரணவ், மலையாள திரைப்பட இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக இருந்தவர். ஜீத்து தமிழ், மலையாளத்தில் இயக்கிய ‘பாபநாசம்’ உள்பட சில படங்களில் ப்ரணவ் அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

இந்த நிலையில் ப்ரணவ் தன் குரு ஜீத்து ஜோசப்பின் இயக்கத்திலேயே நடிகராக அறிமுகமாகி உள்ளார். ‘ஆதி’ என்கிற இந்தப் படத்தில் ப்ரணவ், தாண்டோட்ட வீரராக நடித்துள்ளார். தாண்டோட்டம் என்பது தடைகளைத் தாண்டி தாண்டி ஓடக்கூடிய ஒரு விளையாட்டு. ‘ஆதி’ படம், வரும் 26ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதற்கிடையில் மோகன்லாலின் குடும்பத்தார் சமீபத்தில் மம்மூட்டியை கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். ‘இது, ‘ஆதி’ பட சிறப்பு காட்சியைக் காண நடந்த சந்திப்பு’ என்று மலையாள பத்திரிகையாளர்களால் பேசப்பட்டது. ஆனால் இது வழக்கமாக நடக்கும் நட்பு சந்திப்பே என்கிறது இரு தரப்பும். முன்னதாக கடந்த 17ம் தேதி மம்மூட்டி தன் முகநூல் பக்கத்தில், ப்ரணவை வாழ்த்தி வரவேற்று ஒரு பதிவை பதிந்துள்ளார். “சினிமாவில் நுழையும் எங்கள் அப்புவுக்கு வாழ்த்துகள்...’ என்று தொடங்கி செல்கிறது அந்தப் பதிவு. ப்ரணவை நாமும் வாழ்த்துவோம்! 

‘ஃபஹத் பாசிலும் அவரது மனைவி நஸ்ரியாவும் மீண்டும் சேர்ந்து நடிக்க உள்ளனர்’. இதுதான் மலையாள சினிமாவின் சமீபத்திய பரபரப்பு செய்தி. இயக்குநர் அன்வர் ரஷித், முன்னதாக ‘பெங்களூர் டேஸ்’, ‘ப்ரேமம்’ உள்பட சில படங்களை தயாரித்தவர். ‘உஸ்தாத் ஹோட்டல்’ உள்பட சில படங்களை இயக்கியும் இருக்கிறார். இவர் இயக்கும் அடுத்த படம், ‘ட்ரான்ஸ்’. ஃபஹத் பாசில் நடிக்கும் இந்தப் படத்துக்கான ஹீரோயின் தேடல் நடந்து வருகிறது. இதில்தான் ஃபஹத்தும் நஸ்ரியாவும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்று செய்திகள் அலையடிக்கின்றன. திருமணத்துக்குப் பிறகு நஸ்ரியா தற்போது அஞ்சலி மேனன் இயக்கும் ஒரு படத்தில் ப்ரித்விராஜ், பார்வதி ஆகியோருடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

• இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தன் கால்நூற்றாண்டு கால சினிமா பயணத்தில் 1992ல் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ‘யோதா’ என்ற ஒரே ஒரு மலையாளப் படத்துக்கு மட்டுமே இசையமைத்து உள்ளார். அதைத்தவிர அவர் வேறு எந்தப் மலையாளப் படங்களுக்கும் இசையமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது தன் 2வது மலையாளப் படமாக ப்ரித்விராஜ் நடிக்கும் ‘அடுஜீவிதம்’ என்ற படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.  இந்தத் தகவலை துபாயில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஏ.ஆர்.ரஹ்மானே உறுதிப்படுததியுள்ளார். 

• ‘ஜஸ்டிஸ் ஃபார் ஸ்ரீஜித்’. இது சமீப நாள்களாக கேரளாவை உலுக்கிக்கொண்டிருக்கும் குரல்.  தன் தம்பியின் கொலைக்கு நீதிகேட்டும் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று  கேட்டு திருவனந்தபுரத்தில் தலைமைச்செயலகத்துக்கு எதிரே சாலை ஓர நடைபாதையில் அமர்ந்து மாதக்கணக்கில் தனி நபர் சத்யாகிரகத்தை நடத்தி வருகிறார் . தன் தம்பியின் கொலையில் ஒரு முக்கிய அரசியல்வாதி ஒருவரின் தொடர்ந்து இருக்கிறது என்பது ஸ்ரீஜித்தின் வாதம். ஸ்ரீஜித்தின் போராட்டத்துக்கு ஆதரவாக பல தளங்களில் இருந்து ஆதரவுக் குரல்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் கேரள திரையுலகினர் இந்தப் போராட்டத்துக்கு பெரிய அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த சமயத்தில் இசையமைப்பாளர் கோபி சுந்தர் ஒரு பாடலை கம்போஸ் செய்து ஸ்ரீஜித்துககு சமர்ப்பணம் செய்துள்ளார். ‘ஓர் இசையமைப்பாளனாக எனக்குத் தெரிந்த ஆதரவு வழி இதுதான்’ எனும் கோபிசுந்தர், ‘இந்தப் பாடலின் மூலம் வரும் வருவாய் அனைத்தும் ஸ்ரீஜித்துக்கே போய்ச் சேரும்’ என்றும் சொல்லியிருக்கிறார்.