Published:Updated:

"இசையால் வசமானோம்!"

ஜி.வி.பிரகாஷ் சைந்தவி காதல் சீக்ரெட்ஸ் சினிமா ம.கா.செந்தில்குமார், படங்கள்:கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி

லைதீபாவளி உற்சாகத்தில் இருக்கிறது ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி வீடு!

"இசையால் வசமானோம்!"

''அப்ப அவர் 10-ம் வகுப்பு. நான் 8-ம் வகுப்பு. ரெண்டு பேருமே ஒரே ஸ்கூல். அப்போலேர்ந்தே ரெண்டு பேருக்குமே ஒருத்தரை ஒருத்தர் ரொம்பப் பிடிக்கும். நாங்க வளர வளர, எங்களுக்கு இடையில் இருந்த அந்த அன்பும் நூலிழைகூடக் குறையாம வளர்ந்துக்கிட்டே இருந்தது. அதனால, காதலை அவர் முதல்ல சொல்லியிருந்தாலும், நான் சொல்லியிருந்தாலும் ரெண்டு பேருமே ஓகே-னுத£ன் பதில் சொல்லியிருப்போம்!'' என்று வெட்கத்தில் கன்னம் சிவக்க, தன் காதல் கதையைச் சொல்கிறார் சைந்தவி. 12 வருட காதல், கல்யாணத்தில் முடிந்த மகிழ்ச்சி இருவர் முகத்திலும்.  

''முதல்ல லவ் சொன்னது நானா இருந்தாலும், அவங்க அதுக்கு முன்னாடியே என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்கன்ற விஷயம் எனக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது. பொதுவா எதுக்காவது போன் பண்ணினால், விஷயத்தைச் சட்டுபுட்டுனு பேசிட்டு வைக்க மாட்டாங்க. 'ம்... அப்புறம் என்ன விஷயம்?’னு கொக்கி போடுவாங்க. 'நான் ஏதாவது சொல்லணும்னு நினைக்கிறியா? முதல்ல நீ சொல்லு; அப்புறம் நான் சொல்றேன்’பாங்க. 'என்னடாது... ஏதோ தப்பா இருக்கே! சரியில்லையே?’னு நினைச்சு சிரிச்சுக்குவேன்'' என்று ஜி.வி. புன்னகையுடன் சொல்லி நிறுத்த... ''தப்பா இருக்கா? இருக்கும், இருக்கும்!'' என்று பொய்க் கோபம் காட்டிய சைந்தவி,

''இவர் 11-வது படிக்கும்போதே, பாதியில படிப்பைக் கட் பண்ணிட்டார். மியூஸிக்ல சாதிக்கணும்னு அத்தனை ஆர்வம்! அப்புறம் நேர்ல சந்திக்கிறதே சுத்தமா குறைஞ்சிடுச்சு. இந்த 12 வருஷமும் நாங்க நேர்ல சந்திச்சதைவிட, போன்ல பேசினதுதான் அதிகம். மற்ற காதலர்களைப்போல பார்க், பீச், சினிமான்னு எதுக்கும் போனது இல்லை. ஆனா, இவரோட தங்கச்சியோடு சினிமாக்களுக்குப் போயிருக்கேன்...'' என்றார்.

"இசையால் வசமானோம்!"

''ஒரு நிமிஷம்...'' என்று இடைமறித்த ஜி.வி., ''ஸ்கூல் படிக்கும்போது இவங்க டெல்லிக்கு ஒரு மியூஸிக் காம்பெடிஷனுக்காகப் போயிருந்தாங்க. அங்கே இருந்து போன் பண்ணிப் பேசினாங்க. அப்பதான் எங்க லவ் கன்ஃபர்ம் ஆச்சு!'' என்று பழைய நினைவுகளில் மூழ்க, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் சைந்தவி.

''எங்க வீட்டுக்கு இவரோ, அவங்க வீட்டுக்கு நானோ புதுசு இல்லை. ஆனாலும், எங்க லவ் அரசல்புரசலா வீட்டுக்குத் தெரிய வந்ததும், உடனே என்ன, ஏதுன்னு ரெண்டு பக்கத்துலயும் யாரும் விசாரிக்கலை. 'நமக்குத் தெரிஞ்சுடுச்சுங்கிற விஷயம் அவங்களுக்குத் தெரிஞ்சுட்டா, சுதந்திரமா லவ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க’னு நினைச்சு, தெரியாத மாதிரியே காட்டிக்கிட்டாங்க. அப்புறம், நாங்களே வீட்டுல விஷயத்தைச் சொன்ன பிறகு, 'ரெண்டு பேரும் ஒரே ஃபீல்டு! அதோட, பையன் நான்-வெஜ்; பொண்ணு வெஜ். இது சரிவருமா?’னு ரெண்டு வீட்லயும் யோசிச்சாங்க. நாங்க உறுதியா இருந்ததால, எங்க விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து சம்மதிச்சாங்க!'' என்கிறார் சைந்தவி.

''இவங்களுக்காக நடுவுல நான் கொஞ்ச நாள் நான்-வெஜ்ஜை விட்டேன். ஆனா, அது நமக்கு செட்டாகலை. அப்புறம், தொடர்ந்து சாப்பிட ஆரம்பிச்சுட்டேன். ஆனா, இவங்களுக்கு நான்-வெஜ் சமைக்கத் தெரியாது. வெஜ் பிரமாதமா செய்வாங்க'' என்கிற ஜி.வி-யைத் தொடர்ந்த சைந்தவி, ''என் பக்கத்துல உட்கார்ந்து நான்-வெஜ் சாப்பிடுறதோ, நான் பரிமாறுவதோ எனக்குப் பிரச்னை இல்லை. ஆனா, நான் சாப்பிட மாட்டேன்!'' என்கிறார்.

ஜி.வி-யின் இசையில், அவரின் முதல் படமான 'வெயில்’ படத்தில் வரும், 'உருகுதே... மருகுதே’ பாட்டுதான் சைந்தவிக்கு ஆல் டைம் ஃபேவரைட்டாம். தவிர, 'இது என்ன மாயம்’, 'மாலை நேரம்’, 'அக்கம் பக்கம்’, 'பூக்கள் பூக்கும் தருண’மும் இஷ்டமாம்.

''காதல் பாடல்கள் கம்போஸ் பண்ணும்போது சைந்தவியின் இன்ஸ்பிரேஷன் இருக்குமா?'' என்று ஜி.வி-யிடம் கேட்டதும் சிரித்தவர், ''நிச்சயமா! ஆனா, அவங்களை நினைச்சுப் பண்ணணும்னு பண்றது இல்லை. அந்த லவ் என்னையறியாமல் பாடலா மாறி வரும்!'' என்றார்.

''ஜி.வி-யிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்கள் என்னென்ன?'' என்று கேட்டதும், தயக்கமே இல்லாமல் மளமளவென்று பட்டியலிட்டார் சைந்தவி.

''இவர் பயங்கர வொர்க்கஹாலிக்! கல்யாணத்துக்குப் பிறகுதான், வீட்டுக்கே வர்றார். முன்னெல்லாம் தூக்கம், சாப்பாடு எல்லாமே ஸ்டுடியோவுலதான். ஸ்டுடியோவுக்குள்ள போயிட்டார்னா பகலா இரவா, மழையா வெயிலா எதுவும் அவருக்குத் தெரியாது.  கடுமையான உழைப்பு வேண்டியதுதான். ஆனா, எதுக்காக உழைக்கிறோம்? நல்ல சாப்பாடு, ஆரோக்கியமான உடல், மன நிம்மதி இதுக்காகத்தானே? அதையெல்லாம் கெடுத்துக்கிட்டு உழைச்சு என்ன சாதிக்கப்போறோம்? இது ஒண்ணுதான் இவர்கிட்ட எனக்கு வருத்தம். அவர்கிட்ட பிடிச்ச விஷயங்களையும் சொல்லிடறேன். ரொம்ப அன்பான, அரவணைப்பான மனுஷன். யாரைப் பற்றியும் புறம் பேச மாட்டார். மனசுல பட்டதை அவங்க முகம் கோணாத அளவுக்கு அவங்ககிட்டேயே சொல்லிடுவார். ரொம்ப மரியாதையானவர்'' என்றார் சைந்தவி.

''கண்டிப்பான ஸ்கூல் டீச்சர் மாதிரி இவங்க. ஒரு வரைமுறை வெச்சிருக்காங்க. எது பண்ணினாலும், அதை அதை அப்படி அப்படித்தான் பண்ணணும். இது பிளஸ்ஸா மைனஸான்னு தெரியலை. ஆனா, இவங்களுக்கு நான் அப்படியே நேர் எதிர்! இவங்க ரொம்ப ஸ்வீட். யாரையும் ஹர்ட் பண்ண மாட்டாங்க. ஆனா, தன்னைத்தானே ஹர்ட் பண்ணிக்குவாங்க. ரொம்ப சென்ஸிடிவ். சுருக்கமா சொன்னா, எக்ஸ்ட்ரா சுகர் ஸ்வீட்!'' என்று மனைவியைப் புகழும் ஜி.வி-க்கு, சைந்தவி பாடியதில் 'விழிகளில் வானங்கள்’, 'யாரோ யாரோ’ பாடல்கள் மிகவும் பிடிக்குமாம்.

ஜி.வி. படம் தயாரிப்பதிலும் நடிப்பதிலும் ஆரம்பத்தில் சைந்தவிக்கு சின்ன தயக்கம் இருந்ததாம். '' 'மியூஸிக் நல்லாத்தானே போயிட்டு இருக்கு. எதுக்கு தயாரிப்பு, நடிப்பெல்லாம்?’னு பார்க்கிற எல்லாருமே இவரைக் கேட்பாங்க. நானும்கூடக் கேட்டேன். ஆனா, 'நான் எல்லாத்தையுமே பண்ணிப் பார்க்கணும்னு நினைக்கிறேன். என்னவெல்லாம் வாய்ப்பு இருக்கோ, எல்லாத்தையும் முயற்சி பண்ணிப் பார்க்க விரும்பறேன். என்னைத் தடுக்காதே’ன்னு பேசி, என்னை கன்வின்ஸ் பண்ணிட்டார். அவர் சொல்றதும் சரின்னு தோணுச்சு'' என்ற சைந்தவி,  

''தெய்வத்திருமகள்-ல வந்த 'விழிகளில்’ பாடினது பிடிச்சுப் போய், பிறகு பேசி ஃப்ரெண்டானவங்க சங்கீதா மேடம். நடிகர் விஜய் சாரின் மனைவி. அவங்கதான் கல்யாணப் பட்டுப் புடவை எங்கே எடுக்கணும்கிறதுல தொடங்கி, எல்லாத்துக்கும் எங்க ஃபேமிலி மெம்பர் மாதிரி அவ்வளவு உதவியா இருந்தாங்க. அதேபோல முகூர்த்தம், ரிசப்ஷனுக்கு வந்திருந்து வாழ்த்தினாங்க. ஃபுல் மேரேஜையும் ஆர்கனைஸ் பண்ணினது டைரக்டர் ஏ.எல்.விஜய்தான். இதேபோல் ஹலோ எஃப்.எம். ஆர்ஜே. பாலாஜியும் ஃபுல் சப்போர்ட்!'' என்கிற சைந்தவி, ''ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி சார், 'என் பொண்ணு கல்யாணத்துக்கு எப்படிப் பண்ணுவேனோ அப்படிப் பண்ணிடுறேம்மா’னு சொல்லி, சொன்னபடியே ஸ்வீட் பொக்கே தொடங்கி வெரைட்டியான ஸ்வீட் தந்து அசத்தினார்'' என்றார்.

''கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் எங்கேயும் போகலையா?'' என்றோம்.

"இசையால் வசமானோம்!"

''ஏன் போகாம..? ஒரு நாள் இல்ல, ரெண்டு நாள் இல்ல.. மொத்தம் 10 நாள் ட்ரிப். ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னிதான் எங்க ஹனிமூன் ஸ்பாட்!'' என்று சொல்லிச் சிரித்த ஜி.வி., ''ஹாட் ஏர் பலூன்ல சுத்தினது நல்ல எக்ஸ்பீரியன்ஸ். அதுல மேலே போய் சிட்னி நகரைப் பார்த்தது பிரமாதமான அனுபவம்!'' என்றார். ஏ.ஆர்.ரஹ்மான் இவர்களுக்காக ஸ்பெஷல் ரிசப்ஷன் ஏற்பாடு செய்ததைக் குறிப்பிடுகிறார்கள். ''ரஹ்மான் சாரை ரொம்ப நாள் கழிச்சு, எங்க மேரேஜ்லதான் பார்த்தேன். பெர்சனலா அவரோட கெஸ்ட்களுக்காக லீலா பேலஸ்ல ரிசப்ஷன் வெச்சிருந்தார். எல்லாரும் போனோம். சமீபத்தில்கூட ஒரு பேட்டியில் தனக்கு பிடிச்ச இசையமைப்பாளர்கள்ல என் பேரையும் சொல்லியிருந்தார். சந்தோஷமா இருந்தது!'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சைந்தவிக்கு ஜி.வி-யின் மீது ஒரு செல்லக் கோபம் இருக்கிறது. அது, இவரின் கர்னாடக சங்கீத நிகழ்ச்சிகளில் ஜி.வி. இதுவரை ஒன்றில்கூட கலந்துகொள்ளவில்லை என்பதுதான். ''ஆறேழு வருஷமா டிசம்பர் மியூஸிக் சீசன்ல கச்சேரி பண்ணிட்டு இருக்கேன். ஆனா, எதுக்கும் அவர் வந்ததே கிடையாது. ஆனா, என்கரேஜ் பண்ணுவார். கல்யாணத்துக்குப் பிறகு நடக்குற கச்சேரிகள்ல பார்க்குற எல்லாரும் என்கிட்ட  கேக்குற முதல் கேள்வி, 'அவர் வரலையா?’ என்பதுதான்'' என்ற சைந்தவி, ஜி.வி-யிடம் திரும்பி, ''என்ன... இந்த முறை டிசம்பர் சீஸனுக்காவது நீங்க என்னோட கச்சேரிக்கு வருவீங்களா, மாட்டீங்களா?'' என்று கேட்க,

''இந்த டிசம்பர் சீஸன் சமயம் நான் நடிக்கிற 'பென்சில்’ படத்துல பிஸியா இருப்பேன். இருந்தாலும், உன் கச்சேரிகளுக்கு கால்ஷீட் கொடுக்க ட்ரை பண்றேன்!'' என்று பிகு செய்த ஜி.வி-யை பொய்யாக அடிக்கப் பாய்கிறார் சைந்தவி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு