Published:Updated:

என் சிந்தைக்கினிய சினிமா தேவதை!

சினிமா கலை வித்தகர் ஆரூர் தாஸ்

பிரீமியம் ஸ்டோரி

ர் இளஞ்சிறுவன்... படிப்பில் அவனுக்குப் பிடிப்பு இல்லை. புத்தகங்களில் அவன் புத்தி செல்லவில்லை. தவிர, கேட்கும் சக்தியை இழந்தவன் அவன். 'மக்கு’ என்றும், மந்த குணமுள்ளவன் என்றும் எல்லோராலும் இகழப்பட்டவன். ஆனால், அவன்தான் பிற்காலத்தில் தலைசிறந்த விஞ்ஞானி எனப் புகழப்பட்டான். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அற்புதக் கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்தவன் எனப் போற்றப்பட்டான்.

என் சிந்தைக்கினிய சினிமா தேவதை!

அவன் உலகுக்குக் கொடையாக அளித்த மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் எல்லாம் மிக முக்கியமானதும், 125 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட இன்றளவும் உலக மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒன்றாக இணைந்து கோடானு கோடி மனித உள்ளங்களைக் குதூகலிக்கச் செய்துகொண்டிருப்பதும், மேன்மேலும் பரிணாம வளர்ச்சி கண்டு விஸ்வரூபம் எடுத்து வளர்ந்திருப்பதுமான ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு - 'சினிமா’.

இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும், அந்த இளைஞன் 'தாமஸ் ஆல்வா எடிசன்’ என்று!

ஆம். ஆனால், தாமஸ் ஆல்வா எடிசன் தனது கண்டுபிடிப்புக்கு முதலில் வைத்த பெயர் 'கினிமா’. நாளடைவில் அது மருவி சினிமா ஆனது. அந்தக் காலத்தில், வடசென்னை புனித பிரான்சிஸ் தெருவில் அமைந்திருந்த அமரர் வி.எம்.பரமசிவ முதலியாருக்குச் சொந்தமான ஸ்ரீமுருகன் டாக்கீஸ், ஆரம்ப காலத்தில் 'கினிமா சென்ட்ரல்’ என்னும் பெயரில்தான் வழங்கப்பட்டு வந்தது.

1887-ல் தாமஸ் ஆல்வா எடிசன் சினிமாவைக் கண்டிபிடிப்பதற்கு 36 ஆண்டுகளுக்கு முன்பாக, 1851-ல் 'ஜூல்ஸ்டுபாக்’ என்பவர் 'பயாஸ்கோப்’ என்னும் படம் காட்டும் கேமரா கருவியைக் கண்டுபிடித்தார். ஆகவே, அத்தகைய கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்பட்ட காரணத்தால், அப்போது சினிமா 'பயாஸ்கோப்’ என்றே அழைக்கப்பட்டது.

எடிசன் சினிமாவைக் கண்டுபிடித்து, தனது உதவியாளரான 'வில்லியம் டிக்ஸன்’ என்பவருடன் இணைந்து, ஃபிலிமில் சில காட்சிகளை எடுத்துக்காட்டிய பின்பு, எட்டு ஆண்டுகள் கழித்து 1895-ல் 'லூமியர் பிரதர்ஸ்’ என்னும் இரு சகோதரர்கள் பாரீஸ் நகரில் சில துண்டுத் துண்டான சினிமாப் படங்களை எடுத்து, அவற்றைப் படம் காட்டும் புரெஜக்டரின் வழியாகக் காண்பித்து, மக்களை மகிழ்வித்தார்கள். 'முதன்முதலில் சினிமாப் படம் காட்டியவர்கள்’ என்னும் சிறப்புக்குப் பாத்திரமானவர்கள் இவர்கள்தான். இந்த லூமியர் சகோதரர்கள்தான் முதன்முதலில் சினிமாவையே கண்டுபிடித்தவர்கள் என்றும், அவர்கள் அதை வெளி உலகுக்குப் பிரகடனம் செய்வதற்கு முன்பாக எடிசன் முந்திக்கொண்டு தனது சினிமா கண்டுபிடிப்பை அறிவித்துவிட்டார் என்றும் ஒரு மாறுபட்ட கருத்து நிலவுகிறது.

என் சிந்தைக்கினிய சினிமா தேவதை!

ஆரம்பத்தில் மௌனப் படமாக வெளியான சினிமாவில், 1990-ம் ஆண்டு ஒலி இழை (soundtrack) தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டு, சினிமா முழு வளர்ச்சி அடைந்து எழுச்சி பெற்றது.

1884-ல் அமெரிக்காவில் 'ஜார்ஜ் ஈஸ்ட்மேன்’ என்கிற விஞ்ஞானி சினிமாப் படம் பதிவாவதற்குத் தேவைப்படுகிற 'செலூலாய்டு’ என்னும் ஃபிலிமைக் கண்டுபிடித்தார். அவர் நினைவாகத்தான் கலர் ஃபிலிமுக்கு 'ஈஸ்ட்மேன் கலர்’ என்று பெயர் வைத்தார்கள்.

''ஒரு சினிமாப்படம் இரண்டு மேஜைகளின் மீது உருவாகிறது. ஒன்று, கதை எழுதப்படும் எழுத்தாளரின் மேஜை; இரண்டாவது, பல நிகழ்ச்சிகளைக் கொண்ட அந்தக் கதை ஆடல், பாடல் முதலிய அம்சங்களுடன் படமாக்கப்பட்ட பின்னர், இறுதியாக அதை வெட்டியும் ஒட்டியும், நீக்கியும் சேர்த்தும் முழுமைபெற்ற ஒரு சினிமாவாகத் தொகுக்கப்படும் எடிட்டரின் மேஜை'' என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.

உலகில் முதன்முதலாக எடுக்கப்பட்ட ஆங்கிலப் பேசும்படம் the great train robbery 'பெரும் ரயில் கொள்ளை’. வெறும் 11 நிமிடங்களே ஓடக்கூடிய ஒரே ஒரு ரீல் கொண்ட முழுநீளப்படம் இது. மக்களின் மனத்தைக் கொள்ளை கொண்டுள்ள சினிமாவில், முதல் பேசும்படமே 'கொள்ளை’யோடு ஆரம்பம் ஆனது ஒரு பொருத்தம்தான்! அதுவரை, தியேட்டர் திரையில் எந்தச் சத்தமும் இல்லாமல் மௌனமாக ஓடிய சினிமா, ஓடி ஆடிப் பேசுவதைக் கண்டும் கேட்டும் மக்கள் ஆனந்தமும் ஆச்சர்யமும் கொண்டு, உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தனர். எட்வின் போர்ட்டர் என்பவர், அந்த முதல் பேசும் படத்தைத் தயாரித்து, இயக்கிப் பெரும்புகழ் பெற்றார்.

1899-ல், ஐரோப்பாவில் இருந்து கப்பலில் முதன்முதலாக வட இந்தியாவில் - பம்பாயில் வந்து இறங்கியது 'சினிமா’. 'ஹரிஷ் சந்திர பட்வடேகர்’ என்கிற மராட்டிய இயக்குநர்... ஒரு ரீல், அரை ரீல் என துண்டுத்துண்டாகச் சில மௌனப் படங்களைத் தயாரித்து, இயக்கத் தொடங்கினார். அதைத் திரையில் பார்த்த மராட்டிய மக்கள் மயங்கினார்கள்.

அதென்னவோ தெரியவில்லை... இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில், வட இந்தியாவில் - பம்பாயில் மராட்டியரும், தென்னிந்தியாவில் மதராஸில் (சென்னையின் பழைய பெயர்) தமிழரும் கொண்டிருந்த அளவுக்கு சினிமா மீது அதிக ஆர்வமும் மோகமும் இந்தியாவின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அந்த்க்காலத்தில் கொண்டிருக்கவில்லை.

1910 வாக்கில், பம்பாயைச் சேர்ந்த மராட்டியரான 'டி.ஜி பால்கே’ என்கிற 'துந்துராஜ் கோவிந்த் பால்கே’, சினிமா கலையில் ஆர்வம் கொண்டு, லண்டன் மாநகருக்குச் சென்று ஒளிப்பதிவுக் கருவி மற்றும் படப்பிடிப்புக்கான அனைத்து உபகரணங்களையும் விலை கொடுத்து வாங்கி வந்தார். நடிகர்களைத் தேடி அலையாமல், தனது குடும்பத்தினரையே நடிக்க வைத்து, தொன்றுதொட்டு சோக ரசத்துக்கென்றே பிரபலமான 'அரிச்சந்திரா’ கதையை மௌனப்படமாக நான்கு ரீல்களுக்குள் எடுத்து, 1913-ல் வர்த்தகரீதியில் வெளியிட்டார். அந்தப் படத்தை அனைத்துத்

தரப்பு மக்களும் மீண்டும் மீண்டும் வந்து பார்த்து, அது சினிமாப்படம் என்பதையே மறந்து, மேடை நாடகத்தை நேரில் பார்ப்பதாக எண்ணி, அதோடு ஒன்றிப்போய் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டு அழுதனர்.

என் சிந்தைக்கினிய சினிமா தேவதை!

'அரிச்சந்திரா’ படம் மகத்தான வெற்றி பெற்று, பால்கேவுக்குப் பணத்தை அள்ளித் தந்தது. அதைக் கொண்டு, தொடர்ந்து நூறு படங்கள் வரையில் எடுத்தார். ஒருகட்டத்தில், கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருட்கள் அனைத்தையும் இழந்து, 1944-ல் காலமானார். ஆக, 1910 முதல் 1944 வரையில் மொத்தம் 34 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையே வாழ்ந்த டி.ஜி.பால்கேதான் 'இந்திய சினிமாவின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார். அவருடைய பெயரால்தான் இன்றைக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு 'தாதா சாகேப் பால்கே’ விருது அளித்து, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கொடுத்துப் பெருமைப்படுத்துகிறது நமது மத்திய அரசு.

அந்த 'சினிமா மேதை’ பால்கேயின் சிருஷ்டிகளைப் பார்த்து உந்துதல் பெற்றார், வேலூரைச் சேர்ந்த ஆர்.நடராஜ் முதலியார். மோட்டார் கார் மெக்கானிக்கான இவர் பம்பாய் சென்று, சினிமாக் கலையைக் கற்றுத் தேர்ந்து, முதன்முதலாக 'கீசக வதம்’ என்னும் புராணக் கதையை மௌனப் படமாகத் தயாரித்து, இயக்கி, அதற்கு அவரே ஒளிப்பதிவும் செய்து, 1917-ல் வெளியிட்டு வெற்றி பெற்றார். அதன் மூலமாக 'முதல் தமிழ் மௌனப்படத் தந்தை’ என்ற புகழுக்கும் பெருமைக்கும் உரியவரானார்.

நடராஜ முதலியாரைப் பின்பற்றி, மதராஸ் வெங்கையா நாயுடு என்பவர், தன் மகன் பிரகாஷை லண்டனுக்கு அனுப்பி வைத்து, அங்கு தங்கி சினிமா கலைநுட்பங்களைப் பழுதறக் கற்றுவரச் செய்தார். பின்னர், தந்தையும் மகனுமாகச் சேர்ந்து பல தமிழ் மௌனப் படங்களைத் தயாரித்தனர். அவற்றை அந்தக்காலத்தில், இன்று உயர்நீதிமன்றம் இருக்கும் இடத்துக்கு எதிரில் உள்ள பாரிஸ் கார்னர் பகுதியில், துணியினால் ஆன 'டென்ட்’ கொட்டகை அமைத்து, மக்களுக்குத் திரையிட்டுக் காட்டி மகிழ்வித்தனர்.

இந்திய சினிமாவின் மௌனப்பட காலம் முடிவுக்கு வந்து, பேசும்படப் புதிய யுகம் உதயமாவதற்கு முதல் காரணகர்த்தா - பம்பாயைச் சேர்ந்தவரும், ஈரான் தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, பின்னர் அங்கிருந்து புலம்பெயர்ந்து வந்து, பம்பாயில் குடியமர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஆர்.தீஷிர் இராணி என்பவர். 'ஆலம் ஆரா’ என்ற பெயரில், முதன்முதலாக இந்தி பேசும் படத்தைத் தயாரித்து, 1931-ல் வெளியிட்டு வெற்றி பெற்றார். அந்த 'ஆலம் ஆரா’ இந்திப் பேசும்படம் அந்தக்காலத்தில் 'ஸெவன் வெல்ஸ்’ என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட ஏழுகிணறு பகுதியில், புனித ஃபிரான்சிஸ் தெருவில் இருந்த வி.முருகேச முதலியாருக்குச் சொந்தமான 'கினிமா சென்ட்ரல்’ தியேட்டரில் 1931-ல் வெளியிடப்பட்டது.

'ஆலம் ஆரா’வைத் தொடர்ந்து, ஆர்.தீஷிர் ஈரானி தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஹெச்.எம்.ரெட்டியை அழைத்து தனது 'இம்பீரியல் கம்பெனி’யின் பேனரில், முதல் தமிழ் பேசும் படமாக 'காளிதாஸ்’ கதையைத் தயாரித்து, வெளியிட்டு வெற்றி பெற்றார். இந்தப் படம் 31.10.1931-ல் ரிலீஸாகி, பெரும் வெற்றிபெற்றது. இதில் காளிதாசனாக, அன்றைய பிரபல  பாடகர் பி.ஜி.வெங்கடேசனும், கதாநாயகியாக தஞ்சாவூர் சாலியமங்கலத்தைச் சேர்ந்த கர்ணம் பஞ்சாபகேச அய்யரின் புதல்வியான டி.பி.ராஜலட்சுமியும் நடித்தனர். இந்த டி.பி.ராஜலட்சுமிதான் 'மிஸ் கமலா’ என்னும் படத்தைத் தயாரித்து, எழுதி, இயக்கி, முதல் பெண் இயக்குநர், எழுத்தாளர் என்ற பெருமை பெற்றவர்.

10.9.1931-ல் பிறந்த நான், முதல் தமிழ் படத்தை விட 51 நாட்கள் மூத்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. நான் சினிமாவுக்கு வந்து இது வைர விழா ஆண்டு. 1952-ல் எனது 21-வது வயதில், திருவாரூரில் இருந்து புறப்பட்டு வந்து தென்னிந்தியாவின் 'ஹாலிவுட்’ ஆன கோடம்பாக்கத்தில், அக்காலத்தில் கொடிகட்டிப் பறந்த கதை, வசனம், பாடல£சிரியர் 'அமரகவி’ தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளனாக அமர்ந்து, அவரிடம் தமிழாக்கக் கலையைக் கற்று, படிப்படியாக முன்னேறி, 500 தமிழாக்கப் படங்களுக்கு வசனமும், அத்துடன் 'மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆருக்கு 21 படங்கள், 'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுக்கு 28 படங்கள் உட்பட 500 படங்களுக்குப் பணியாற்றி, ஆக 1000 படங்கள் வரையில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அனைத்து இந்திய சாதனை புரிந்து தமிழ் சினிமா உலகில் பெருமைக்குரிய ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறேன்.  

60 ஆண்டுகளாக எனக்கு வாழ்வும் வளமும் நலமும் வழங்கி, இப்போதும் என் ஆறாவது தலைமுறை இளைய கலைஞர்களுடன் இணைந்து வடிவேல் இரட்டை வேடங்களில் நடிக்கும் 'தெனாலிராமன்’ படத்துக்கு வசனம் எழுதி இன்றைக்கும் எழுத்துப் பணிபுரியச் செய்திருக்கும் - என் சிந்தைக்கு இனிய சினிமா தேவதையே! இந்திய சினிமாவின் இந்த நூறாவது ஆண்டில் உன்னை சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்! நீ நீடூழி வாழ்க!

'கலை வித்தகர்' ஆரூர்தாஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு