Published:Updated:

ரொமான்டிக் லால்குடி!

தொகுப்பு வீயெஸ்வி

பிரீமியம் ஸ்டோரி

மேதைகளின் வாழ்க்கைக் கதைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பு இல்லை. அதுவும், அவர்கள் வாழும் காலத்திலேயே இந்த முயற்சியில் ஈடுபட்டால், நம்பகத்தன்மை நூறு சதவிகிதம் கிடைத்துவிடுகிறது. நூலாசிரியர் ரீல் விட்டுக்கொண்டிருக்க முடியாது!

ரொமான்டிக் லால்குடி!

வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் வாழ்க்கைக் கதையை வாசிப்பு நேர்த்தி குறையாமல் தொகுத்திருக்கிறார் லக்ஷ்மி தேவ்நாத். அவரது ஐந்து வருட உழைப்பின் பலன் இந்த நூல். நிறைய ஆராய்ச்சிக்குப் பின் எழுதப்பட்டிருக்கிறது. நூறு பேருக்கு மேல் சந்தித்துத் தகவல் திரட்டியிருக்கிறார். லால்குடியுடன் கிட்டத்தட்ட 200 மணி நேரம் செலவழித்து, அவரது நினைவலைகளைக் கிளறி, பல்வேறு சம்பவங்களை கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார்.

புத்தகத்தை எழுதி முடித்து இரண்டு முறை அதை லால்குடியிடம் படித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். ஒரு வரிகூட நீக்கச் சொல்லவில்லையாம் அவர். புதிதாக ஒரு வார்த்தை சேர்க்கவும் வற்புறுத்தவில்லையாம். தன்னைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களையும் நூலில் இடம்பெற அனுமதித்திருக்கிறார் லால்குடி.

முழுவதும் எழுதிவிட்ட பின்னரும், ஜெயராமன் உயிருடன் இருந்தபோதே, தவிர்க்க இயலாத காரணங்களால் இந்தப் புத்தகத்தை வெளிக்கொண்டு வர இயலவில்லை.

லால்குடியின் ஒலிப்பேழைகள் அவரது இசையை வரும் தலைமுறையினர் கேட்டு மகிழ வழிவகுக்கும். அதுபோல, ஹார்ப்பர் காலின்ஸின் வெளியீடான இந்த நூல், மகத்தான அந்த இசைக் கலைஞன் கடந்துவந்த பாதையை காலத்துக்கும் தெரிவித்துக்கொண்டிருக்கும்.

இனி, புத்தகத்திலிருந்து...

'ஒரு நாள், கச்சேரியை முடித்துவிட்டு வீடு திரும்பிய பின்னர்தான் உணர்ந்தேன். அன்றைய கச்சேரியில் தியாகராஜரின் கீர்த்தனைகளில் ஒன்றுகூட நான் வாசிக்கவில்லை. அது என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. நேராக எனது பூஜை அறைக்குள் விரைந்து சென்று, வயலினை கையில் எடுத்து வைத்துக் கொண்டேன். தியாகராஜரின் கீர்த்தனையான 'அபராதமுல நோர்வ ஸமயமு’வை (நான் செய்த தவறுக்கு என்னை மன்னித்துவிடு!) வாசித்தேன்’.

- லால்குடி ஜெயராமன்

புகழின் உச்சம்!

வருடம் 1930. செப்டம்பர் மாதம் 17-ம் தேதி. பகல் 2 மணி. பிறந்த குழந்தையின் அழுகுரல் காற்றில் மிதந்தது. கோபால ஐயர்- சாவித்திரி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது அறிந்து குடும்பம் மகிழ்ந்தது.

ரொமான்டிக் லால்குடி!

கைராசிக்காரி என்று கருதப்பட்ட மருத்துவச்சி, கைகளில் குழந்தையைத் தவழவிட்டபடியே வெளியே வருகிறாள். குழந்தையின் நெற்றியின் நடுப்பகுதியில் நாமம் மாதிரியாக நரம்புப் புடைத்திருப்பதைப் பார்க்கிறார் தாத்தா சுந்தர சாஸ்திரி. குழந்தையின் ஜாதகத்தைக் கணிப்பதற்கு முனைகிறார். புனர்வசு நட்சத்திரம். ராமபிரானின் நட்சத்திரம். நவமி. ராமன் பிறந்த தினம். கட்டங்களில் கிரங்களை அந்தந்த இடத்தில் பொருத்துகிறார் சுந்தர சாஸ்திரி. ஜாதகத்தை ஆராய்ந்தபோது, அவரது முகத்தில் விரிந்தது புன்னகை. குழந்தை வளர்ந்ததும், புகழின் உச்சம் தொட விதிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளிக்குத் தடை!

பள்ளியில் மதிய நேரம். வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர் திடீரென்று கண் அயர்ந்துவிட்டார். எதிர்பாராமல் கிடைத்த இடைவே¬ள யால் குஷி அடைந்த மாணவர்கள், சேட்டையில் இறங்கிச் சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்கள். இது ஆசிரியரின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது. கோபமடைந்த அவர், முதலில் கண்ணில் பட்ட மாணவனைத் தண்டித்தார். துரதிருஷ்டவசமாக அது ஜெயராமன்! இத்தனைக்கும் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். ஆசிரியர் அடித்ததில் மணிக்கட்டு வீங்கிவிட்டது. காயத்துடன் வீடு திரும்பினான். எரிச்சல் அடைந்த கோபால் ஐயர், மகனுக்குக் கைகளில் இப்படி காயம் ஏற்படும் என்றால், அப்படிப்பட்ட பள்ளிக்கு அவன் போகத் தேவையில்லை என்று தீர்மானித்துவிட்டார். எனவே, ஐந்தாவது வகுப்புடன் ஜெயராமனின் பள்ளிப் படிப்பு முடிவுக்கு வந்துவிட்டது.

மலரில் தாத்தா போட்டோ!

'விகடன்... விகடன்... ஆ...னந்த விகடன்’ - லால்குடியின் தெருக்களில் நடந்தபடியே விகடன் வந்துவிட்டதை அறிவித்தார் அந்த விற்பனையாளர். ஜெயராமன் அவசரமாக அம்மாவிடம் காசு வாங்கிக்கொண்டு வெளியே ஓடினான். காசைக் கொடுத்துவிட்டு, விகடன் தீபாவளி மலரை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான். பக்கங்களைப் புரட்டினான். அதில் தன்னுடைய தாத்தா வாளாடி ராதாகிருஷ்ண ஐயரின் புகைப்படம் வெளியாகியிருப்பதைப் பார்த்து ஆனந்தம் கொண்டான். கையில் வயலினுடன், ராமநாதபுரம் சேதுபதியின் அருகில் உட்கார்ந்திருந்தார் தாத்தா. வேறு பல வித்வான்களும் உட்கார்ந்திருந்தனர். மலருக்காக அப்பா அனுப்பிவைத்திருந்த போட்டோ அது.

முதல் கச்சேரி!

ரொமான்டிக் லால்குடி!

ஜெயராமனுக்கு பன்னிரண்டு வயது. அப்பாவிடம் பாடம், பயிற்சி, மற்றவர்களின் கச்சேரிகளை பஞ்சாயத்து போர்டு அலுவலகத்தில் கேட்பது என்று பிசியாக இருந்த நாட்கள் அவை. 1942-ல், லால்குடி கோயிலில் அவனுடைய முதல் வயலின் கச்சேரி அரங்கேறியது. கோபால ஐயரும் உடன் வாசித்தார். வேறு முக்கியத்துவம் எதுவும் அந்த நிகழ்ச்சிக்குக் கொடுக்கப்படவில்லை. குடும்பத்தினர்கள்கூட வரவில்லை. இந்தக் கச்சேரிக்குப் பின்னர், பயிற்சி தீவிரமானது. வாய்ப்பாட்டுக்குப் பக்கவாத்தியமாக வயலின் வாசிக்கும் திறனை ஜெயராமனிடம் ஊக்கப்படுத்தினார் கோபால ஐயர். அப்பா பாட, மகன் வயலினில் பின் தொடரும் பயிற்சி தொடர்ந்தது.

ஜி.என்.பி. கொடுத்த அட்வான்ஸ்!

வருடம் 1948. டிசம்பர் மாதம் 26-ம் தேதி. டீன் ஏஜ் பருவத்தில் இருந்த ஜெயராமனுக்கு மியூசிக் அகாடமி தன் கதவுகளைத் திறந்துவிட்டது. இதற்கு முன்பே சங்கீத உலகின் ஜாம்பவான்களுக்குப் பக்கவாத்தியமாக வயலின் வாசித்துவிட்டார் ஜெயராமன். அகாடமியில், பகல் நேரக் கச்சேரி ஒன்றில் பாலக்காடு கே.வி.நாராயண சுவாமி பாட, ஜெயராமன் வயலின். முதல் வரிசையில் ஆலத்தூர் சகோதரர்கள், செம்பை வைத்தியநாத பாகவதர், பழனி சுப்ரமணிய பிள்ளை, மைசூர் டி.சௌடய்யா, ஜி.என்.பி., என்று சிம்மங்கள்! திரை ஏறி, ஒன்றரை மணி நேரத்துக்குப் பின் இறங்கியது. பாராட்டுக்களும் கைத்தட்டல்களுமாக அரங்கம் அதிர்ந்தது.

க்ரீன் ரூமில் தனது தோளை யாரோ தட்ட, திரும்பிப் பார்த்தார் ஜெயராமன், ஜி.என்.பி.!

''பேஷா வாசிச்சேப்பா!'' முதுகில் தட்டிக் கொடுத்தவர், ''பிப்ரவரி 10 உனக்கு கச்சேரி எதுவும் இல்லையே?'' என்று கேட்டார்.

'தன்னிடம் இப்படி ஒரு கேள்வியா’ என்று அதிர்ந்த ஜெயராமன், பணிவாகத் தலை ஆட்டினார்.

பத்து ரூபாய் நோட்டு ஒன்றை ஜெயராமனின் சட்டைப் பைக்குள் வைத்த ஜி.என்.பி., ''தப்பா நினைச்சுக்காதே! என்கிட்ட இப்போ இருக்கிறது இவ்வளவுதான்! இந்தப் பணத்தை அட்வான்ஸா வச்சுக்க... பிப்ரவரி 10 அன்னிக்கு நான் பாடப்போகும் ஒரு கல்யாணக் கச்சேரியில் நீ வாசிக்கணும்னு விரும்பறேன்...'' என்று சொல்லிவிட்டு ஜி.என்.பி. கிளம்பிவிட, 'புகழின் உச்சத்தில் இருக்கும் வித்வான் ஒருவரிடம் இத்தனை எளிமையா?!’ ஜெயராமனின் வியப்பு அடங்க வெகுநேரம் ஆயிற்று.

நட்சத்திரக் கலைஞர்களுடன்...

''எனக்கு நீ அப்புறம் வாசிக்கலாம்... இப்போ சின்னக்கோண்டுவுக்கு வாசி...''

ஜெயராமனை தன் மகன் சந்தானத்துக்கு (சின்னக்கோண்டு) பக்கவாத்தியம் வாசிக்கச் சொன்னார் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர். நான்கு மாதங்

களுக்குப் பிறகு (1950) தேவகோட்டையில் விஸ்வநாத ஐயருடன் மேடை ஏறினார் ஜெயராமன்.

அதற்கு அடுத்த நாள், தேவகோட்டையில் அதே இடத்தில், 'கடுக்கண், குடுமியுடன் இருக்கிற அந்தப் பையனை, அதான் கந்தசாமி பாகவதரோட மருமானை எனக்கு வயலின் வாசிக்கச் சொல்லிடுங்க...’ என்று நிர்வாகிகளிடம் ஜெயராமனைக் குறிப்பிட்டுச் சொன்னார் 60 வயது நிரம்பியிருந்த அரியக்குடி. பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம் வாசிக்கப்போகும் ஒரு கச்சேரிக்கு, முதல் தடவையாக வயலின் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஜெயராமனுக்கு!

கல்யாணராமன்!

1958 ஆகஸ்ட் 20 அன்று ராஜம் (எ) ராஜலட்சுமியைக் கரம் பிடித்தார் ஜெயராமன். சேலத்தில் திருமணம். சென்னை, சைதாப்பேட்டையில் 137, ஜோன்ஸ் ரோடு இல்லத்தில் வரவேற்பு. இதில் வீணை எஸ்.பாலச்சந்தர் கச்சேரி.

''என் பெற்றோர் மனம் புண்படும் வகையில் நீ எப்போதும் நடந்துகொள்ளக் கூடாது. என் தந்தை, எனக்குத் தந்தை மட்டுமல்ல, குருவும் கூட!''

- இது, மனைவியிடம் தனிமையில் இருக்கும்போது, ஜெயராமன் சொன்னது.

''ராமனாகப் பிறந்தார். கையில் வில் ஏந்தி கோதண்டராமன் ஆனார். திருமணத்துக்குப் பின் இப்போது கல்யாணராமன். எங்கும் வெற்றி வாகை சூடிவருவதால் அவரை ஜெயராமன் என்று நாம் அழைக்கலாம்...''

- இப்படிப் பாராட்டுத் தெரிவித்தவர் வயலின் மேதை மைசூர் டி.சௌடய்யா.

தரிசனம்!

வருடம் 1975. ஒருநாள், லால்குடியும் அவரின் மனைவியும் காஞ்சி மகா பெரியவரைச் சந்திக்க, தேனம்பாக்கம் கிராமத்துக்குப் போகிறார்கள். அங்கு சோகமான, வருத்தம் கலந்த சூழல் நிலவுகிறது. மடத்துச் சிப்பந்திகளில் ஒருவரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பெரியவர், அறை ஒன்றில் தன்னை அடைத்துக்கொண்டு காஷ்டமௌனத்தில் இருந்தார். ஆகாரம், தண்ணீர் கிடையாது. எதற்காகவும் யாரிடமும் பேசாமல் இருந்தார்.

வேறு வழியின்றி, பரமாச்சார்யரைத் தரிசிக்கவேண்டும் என்கிற தனது ஆவலை அடக்கிக்கொண்டார் லால்குடி. இருப்பினும், புறப்படும் முன் பாடல்கள் சிலவற்றை அந்த மகானுக்குச் சமர்ப்பிக்கத் தீர்மானித்தார்.

காஞ்சிப் பெரியவருக்கு மிகவும் பிடித்தமான சாமா ராகப் பாடலுடன் தொடங்கினார். பின்னர், ஆபோகி ராகத்தில், 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?’ பாடலை வாசிக்க ஆரம்பித்தார். 'கிருபாநிதி இவரைப் போல’ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்ம்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்துகொண்டது. பாடல் முடிவுக்கு வரும் வேளையில், அறைக் கதவும் திறந்தது. கையைத் தூக்கி வாழ்த்தியபடியே ஆசார்ய சுவாமிகள் வெளியே நடந்து வந்தார்.

லால்குடியும் அருகில் இருந்த மற்றவர்களும் சிலிர்த்துப் போனார்கள்.

விருதும் சலசலப்பும்...

வருடம் 1986. திருவாரூரில் மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா. துவக்கிவைத்த ஜி.கே.மூப்பனார், ''சங்கீத கலாநிதி செம்மங்குடி அவர்களே... சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களே... சங்கீத கலாநிதி லால்குடி ஜெயராமன் அவர்களே...'' என்று ஆரம்பிக்க, அவசரமாகக் குறுக்கிட்ட செம்மங்குடி, ''அவர் இல்லே...'' என்றார் உரத்த குரலில்.

வியப்படைந்த மூப்பனார் திரும்பிப் பார்த்து, ''என்னது! அவர் இல்லையா?'' என்று புருவம் உயர்த்திக் கேட்க, ''அதுக்கென்ன, கொடுத்துட்டா போச்சு..!'' என்றார் செம்மங்குடி.

கொடுக்கால் கொட்டியதுபோல் ஆனது லால்குடிக்கு. விழா மேடையில் நெளிந்தபடியே உட்கார்ந்திருந்தார். அன்று இரவே மெட்ராஸ் கிளம்பி வந்து, மறுநாள் செம்மங்குடியின் வீட்டுக்குச் சென்றார்.

''நான் உங்ககிட்டே ஒரு விஷயம் தெரிவிக்க வந்திருக்கேன். எனக்குச் சங்கீத கலாநிதி விருது வேண்டாம். ஒருவேளை, அந்த விருதை எனக்குக் கொடுக்க விரும்பினால், அதை மறுப்பது மூலம் உங்களையோ, அகாடமியையோ இன்சல்ட் செய்ய நான் விரும்பலே. அதனாலதான் முன்கூட்டியே இதைத் தெரிவிக்கிறேன்...'' என்றார் லால்குடி, செம்மங்குடியிடம்.

''ஓ..! நீ அவ்வளவு பெரிய ஆளாயிட்டியா? உன் முடிவை அகாடமிக்குச் சொல்லிடறேன்'' என்ற செம்மங்குடியின் வார்த்தைகளில் கிண்டல், கோபம்.

''இல்லே... நான் பெரியவன் ஆயிடலே. இந்த விருதுக்கு பெரிய க்யூ காத்துண்டிருக்கு. நான் விலகிக்கறேன்...''

செம்மங்குடி மூலம் தகவல் அறிந்த அகாடமி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி! விதிவிலக்காக ஒரு சிலர் இருக்க, மற்ற வித்வான்கள் இந்த விருதுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். லால்குடியின் நிலைப்பாடு வேகமாகப் பரவியது. இசை உலகில் அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

கந்தன் செயல் அன்றோ...

வருடம் 2008. மியூசிக் அகாடமியின் 80-வது ஆண்டுவிழா. தன் மீது படிந்திருந்த கறையைப் போக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது அகாடமிக்கு.

1986 சம்பவத்துக்குப் பிறகு, லால்குடிக்கு சங்கீத கலாநிதி வழங்க பலமுறை முன்வந்தது அகாடமி. ஏற்கெனவே எடுத்த முடிவை மாற்றிக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருந்த லால்குடி, ஒவ்வொரு முறையும் அதை மறுத்து வந்தார்.

பதிலாக, 'சிறப்பு வாழ்நாள் சாத¬ன யாளர் விருது’ லால்குடிக்கு வழங்க முன் வந்தது மியூசிக் அகாடமி. லால்குடி அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.

மார்ச் 9 (2008) அன்று அகாடமியின் சரித்திரத்தில் முக்கிய நிகழ்வு. வருடா வருடம் என்று இல்லாமல் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்ட விருது இது.

''இதற்குமுன் லால்குடியை அகாடமி கௌரவிக்கவில்லை. இப்போது இதைவிட உரிய சந்தர்ப்பம் கிடையாது. இந்தச் சிறப்பு விருதினைப் பெற லால்குடி ஜெயராமனைவிடத் தகுதி வாய்ந்தவர் வேறு எவரும் கிடையாது'' என்ற விழா மேடையில் தெரிவித்தார், அகாடமியின் தலைவர் என்.முரளி.

ஏற்புரையின்போது இந்த விருதை முருகப் பெருமானுக்கு சமர்ப்பித்தார் லால்குடி.

'கந்தன் செயல் அன்றோ...

வந்த வாழ்வும் வளர் புகழும்

கந்தன் செயல் அன்றோ...’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு