Published:Updated:

''வாவ் அனுஷ்கா, திகில் பங்களா, திடீர் திகீர் டுவிஸ்ட்..!" - 'பாகமதி' விமர்சனம்

''வாவ் அனுஷ்கா, திகில் பங்களா, திடீர் திகீர் டுவிஸ்ட்..!" - 'பாகமதி' விமர்சனம்
News
''வாவ் அனுஷ்கா, திகில் பங்களா, திடீர் திகீர் டுவிஸ்ட்..!" - 'பாகமதி' விமர்சனம்

''வாவ் அனுஷ்கா, திகில் பங்களா, திடீர் திகீர் டுவிஸ்ட்..!" - 'பாகமதி' விமர்சனம்

சாமி சிலைகள் கடத்தல் விவகாரத்தில் நாட்டுக்காக நல்லதுசெய்யும் அமைச்சரை சிக்க வைக்கத் திட்டமிடுகிறது அரசாங்கம். அவரின் தனிச் செயலாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரி அனுஷ்காவிடம் விசாரணை நடத்த 'பாகமதி' பங்களாவிற்கு அழைத்துச்செல்கிறார்கள். காணாமல்போன சிலைகள் கிடைத்ததா, அரசு மற்றும் அரசியல் ஆட்டத்தில் அனுஷ்காவின் பங்கு என்ன? 'பாகமதி' யார்... என்ற பல கேள்விகளும், அதற்கான பதிலும்தான் 'பாகமதி' திரைப்படம்.

ஈஸ்வர் பிரசாத் (ஜெயராம்) அமைச்சராய் இருக்கும்போது திண்டுக்கல், கரூர் என சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல ஊர்களின் புராதன சிலைகள் காணாமல்போகின்றன.  அது தொடர்பாக பத்திரிகையாளர் கேட்கும் கேள்விகளுக்கு 'இன்னும் 15 நாள்களில் காணாமல் போன சிலைகளைக் கண்டுபிடித்தே தீருவேன். அப்படி இல்லையென்றால் என் பதிவியை ராஜினாமா செய்வது மட்டுமல்ல, அரசியலில் இருந்தே விலகுகிறேன்' என்று ஆக்ரோஷமாகப் பத்திரிகையாளர்களிடம் பதிலளிக்கிறார் ஈஸ்வர் பிரசாத். இவரின் நேர்மையைக் கண்டு பயப்படும் அரசாங்கம், அவரை இதே வழக்கில் சிக்கவைத்து ஊழல்வாதியாக முத்திரை குத்த, சி.பி.ஐ அதிகாரி வைஷ்ணவி ரெட்டியை (ஆஷா சரத்) விசாரணை அதிகாரியாக நியமிக்கிறது. அமைச்சருக்கு யார் நெருக்கம் என்ற கோணத்தில் வழக்கத்தைத் தொடங்கும் அவர், முன்பு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவும், தற்பொழுது காதலன் சக்தியைக் (உன்னி முகுந்தன்) கொன்ற வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதியுமான சஞ்சளா (அனுஷ்கா)வை விசாரிக்கிறார். ஊழல் பொறியில் ஜெயராமை சிக்கவைக்க விசாரணையைத் தொடங்குகிறார் ஆஷா. சிறை தண்டனைக் கைதி என்பதால் அரசாங்கத்திற்கு சொந்தமான ரகசிய பங்களா ஒன்றில் அதிகாரப்பூர்வமற்ற விசாரணை நடத்த ஏற்பாடு நடக்கிறது. ஆனால், அதே பங்களாவில் 'பாகமதி' என்ற பேய் நடமாட்டம் இருப்பதாகவும் வதந்திகள் இருக்கிறது. விசாரணை நடைபெறும்போது நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள், அந்த சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன... என்பதை விறுவிறுப்பு குறையாமல் சொல்கிறார், 'பாகமதி' படத்தின் இயக்குநர் ஜி.அசோக். 

வழக்கம்போல, 'ஆஸம்' நடிப்பை வெளிப்படுத்தி லைக்ஸ் அள்ளுகிறார், அனுஷ்கா. நிஜவாழ்க்கையில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக துடிப்புடன் செயல்படுவது, காதலன் உன்னி முகுந்தனுடன் காதல் காட்சிகளில் கலக்குவது, பங்களாவில் 'பாகமதி'யாக வெரைட்டி நடிப்பைக் கொடுத்து மிரட்டுவது... என நிறைய உழைத்திருக்கிறார். பாகமதி, சஞ்சளா கேரக்டர்களுக்கு அனுஷ்காவை வேறுபடுத்திக்காட்டும் ஆடை வடிவமைப்பும் கச்சிதம். 'நல்ல' அரசியல்வாதியாக ஜெயராமின் நடிப்பு பிரமாதம். படத்தின் முதல்பாதியில் ஒருவிதமாகவும், பின்பாதியில் வேறுவிதமாகவும் மடைமாறும் அவருடைய கேரக்டருக்கு ஜெயராம் மிகப் பொருத்தம். அனுஷ்காவின் காதலனாக, களப் போராளியாக வந்துபோகும் உன்னி முகுந்தன் கொடுத்த கேரக்டரை சரியாக செய்திருக்கிறார். இவர்களைத் தவிர, விசாரணை அதிகாரி ஆஷா சரத், ஏ.சி.பி முரளி, ஷர்மா, தலைவாசல் விஜய்... எனத் திரையில் உலவும் கேரக்டர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

படத்தின் பெரும்பாலான சம்பவங்கள் பாகமதி பங்களாவிலேயே நடப்பதால், 'பாகமதி' பங்களாவை தத்ரூபமாகக் கொண்டுவருவதற்கு அவ்வளவு மெனக்கெடலோடு உழைத்திருக்கிறார், கலை இயக்குநர் ரவீந்திரன். பங்களாவின் விரிசல், உடைசல்களில் தொடங்கி, படிந்திருக்கும் தூசிகளையும் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் பெரிய பங்களாவைப் பார்க்கும்போது இருக்கும் பிரமிப்பைப் படமும் கொடுக்கிறது. பேய்ப்படமா, சரித்திரப் படமா, த்ரில்லர் கதையா... என கேள்விகளுடனேயே பயணிக்கும் திரைக்கதை மேலும் சுவாரஸ்யம் சேர்க்கிறது. பேய்ப்படங்களுக்கே உரிய பின்னணி இசையைக் கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார், இசையமைப்பாளர் தமன். படத்தில் பாராட்டப்படவேண்டிய மற்றொரு விஷயம், எடிட்டிங்.  அனுஷ்காவின் காதல் போர்ஷன், ஜெயராமின் அரசியல் போர்ஷன், விசாரணை, பேய் பங்களா... எனப் பல கிளைகளாகப் பயணிக்கும் திரைக்கதையை நேர்த்தியாக வெட்டி, ஒட்டியிருக்கிறார், வெங்கடேஷ்வரராவ். படத்திற்குத் தேவையானதை நிறை/குறை இல்லாமல் வழங்கியிருக்கிறார், ஒளிப்பதிவாளர், ஆர்.மதி. 

விளக்குகள் எரிந்து அணைவது, சட்டெனக் கடக்கும் உருவம், தானாக ஆடிக்கொண்டிருக்கும் நாற்காலி... எனப் பேய்ப்படங்களுக்கே உரிய டெம்ப்ளேட் காட்சிகள் முதல்பாதியின் சுதியைக் குறைத்தாலும், அடுத்தடுத்து உடைபடும் டுவிஸ்டுகள், திசைதிரும்பும் திரைக்கதை... என பிற்பாதியில் வேகம் கூட்டி ரசிக்கவைக்கிறார், இயக்குநர். 'பாகமதி யார்?' என்ற கேள்விக்கான பதில் செம! விறைப்பும் முறைப்புமான அதிகாரியாக வரும் ஆஷா சரத்துக்கு, அனுஷ்கா கொடுக்கும் 'டுவிஸ்ட்' செமயோ செம! இப்படிப் பல 'அடடே'க்களுக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருக்கின்றன, 'வீக்' பாயிண்ட்டுகள்!

பேய்ப்படத்தில் லாஜிக் மீறல்களை எதிர்பார்க்ககூடாது என்றாலும், 'இந்த சீனுக்கு எதுக்கு?' என்ற கேள்விகள் பல இடங்களில் எழுகிறது. படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்கள் மட்டுமே தமிழில் பேசியிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு டப்பிங்தான். ஆனால், சில இடங்களில் தமிழ் டப்பிங் ஒட்டாமல், லாங் ஜம்ப் ஆகிறது. இதுபோன்ற விறுவிறுப்பாக நகரும் பேய்ப்படங்களுக்கு காமெடி மிகப்பெரிய துணை. ஆனால், காமெடி டிராக் டோட்டல் டேமேஜ்! தவிர, அனுஷ்காவை விசாரிக்க 'பாகமதி' பங்களாவைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன, விசாரணைக்காக அழைத்துவரப்பட்டிருக்கும் அனுஷ்கா தங்கிக்கொள்வதற்காக மொத்த பங்களாவையும் கொடுக்கவேண்டிய கட்டாயம் என்ன, அனுஷ்காவின் செயல்பாடுகளுக்குப் பிற்பாதியில் சொல்லும் காரணங்கள் சரியாக இருந்தாலும், அதையெல்லாம் ஒற்றை ஆளாக எப்படிச் செய்யமுடியும்? என ஏகப்பட்ட கேள்விகள். காதல் காட்சிகள் படத்திற்குப் பெரிய பக்கமாக இல்லையென்றாலும், அதைப் படமாக்கும் விதத்தில் இருக்கும் க்ளிஷேவைத் தவிர்த்திருக்கலாம். இப்படிப் பல 'பார்த்துப் பண்ணியிருக்கலாம்' வகையான லாஜிக் மீறல்களும், கேள்விகளும் துரத்தினாலும், 'பாகமதி' பங்கம் இல்லாமல், ரசனையைக் கடத்துகிறது. அதற்காகவே, பாகமதி கோட்டைக்கு நிச்சயம் விசிட் அடிக்கலாம்!