Published:Updated:

காமெடி ஓ.கே... மத்ததெல்லாம்...? - ’மன்னர் வகையறா’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
காமெடி ஓ.கே... மத்ததெல்லாம்...? - ’மன்னர் வகையறா’ விமர்சனம்
காமெடி ஓ.கே... மத்ததெல்லாம்...? - ’மன்னர் வகையறா’ விமர்சனம்

வக்கீலுக்கு பரிட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாண்புமிகு மாணவன் விமல். விமலுக்கு ஆனந்தியைப் பார்த்ததும் ஆங்... அதேதான் கண்டதும் காதல். விமலின் அப்பா பிரபு ஊரிலேயே, ஆங்... அதேதான் நல்ல மனிதர். ஊர் பிரச்னைகளுக்காக போராடுபவர். அப்ப பிரபுவுக்கு ஒரு வில்லன் இருக்கணும்ல. ஆங்.. ஒரு வில்லன் இருக்கார். அவருக்கு கெட்டது பண்றது தான் வேலை. விமலோட அண்ணன் கார்த்திக். அவருக்கு ஒரு காதலி. அந்த காதலியோட தங்கச்சி ஹீரோயின். ஆனா, ஹீரோயினும் வில்லனும் சொந்தம்.  

அப்புறம் காமெடி, ஃபைட்டு, பாட்டு,காமெடி , ஃபைட்டு, பாட்டு, ஃபைட்டு, பாட்டு,ஃபைட்டு, பாட்டு, ஃபைட்டு,காமெடி, சுபம் . ஹீரோ குடும்பம், வில்லன் குடும்பம், ஹீரோயின் குடும்பம் மூணும் சேர, விலக, யார் கடைசியா யார் கூட சேர்றாங்கன்னு நடக்கற களேபரம் தான் 'மன்னர் வகையறா'.

மன்னர் வகையறா, மொய் எழுதுற இடத்துல ஜாதிய சொல்லி பெருமை பேசுதல், கலப்புத் திருமணம் பண்ணினவங்களை போலீஸ் ஸ்டேசன்லயே அடிச்சு பொளக்கறதுன்னு ஜாதி வெறியர்களை கொம்பு சீவும் காட்சிகளையும் ஏகத்துக்கு வைத்திருக்கிறார்கள். அதே போல், இன்னும் எத்தனை நாளைக்கு 'புஷ்பா புருசன் யாரு', காலைல ரமேஷ், மாலைல சுரேஷ் போன்ற வசனங்களை காமெடி என சொல்லி திரையில் அரங்கேற்றுவார்கள் என தெரியவில்லை. 

ஆனால், இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு பார்த்தால், படம் ஜாலியாகவே செல்கிறது. ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, சரண்யா பொண்வண்ணன், ஜெயபிரகாஷ் என ஒரு ஊரே படத்தின் காமெடிக்கு தீனி போட்டாலும், படம் முழுக்க கலக்கி இருப்பவர் ஆனந்தி தான். அவர் வரும் காட்சியில் எல்லாம் தியேட்டரில் சிரிப்பு சத்தம் கொட்டுகிறது. அவ்வளவு சின்ன பெண்ணாய் இருக்கிறார். பள்ளியில் படிப்பதாக சொன்னாலும் நம்பும் அளவுக்கு இருக்கிறது அவரது முகம். ஆனந்தியின் முந்தைய படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தப் படத்தில் இருந்து கமர்ஷியல் ஹீரோயினாக வளர்ந்திருக்கிறார்.

விமல் இந்தப் படத்தை தானே தயாரித்து நடித்துள்ளார். இது அவருக்கு 25வது படமும் கூட. எப்படியாவது படத்தை ஹிட்டடித்து விட வேண்டும் என தயாரிப்பாளராக பல செலவும், நடிகராக தனது முழு உழைப்பையும் கொட்டியுள்ளார். அவை இரண்டுமே ஸ்கீரினில் நன்றாக தெரிவது என்பதே அவருக்கு வெற்றி.

இயக்குநர் பூபதி பாண்டியன் , தான் காமெடியில் எப்போதுமே கிங் என்பதை மற்றுமொரு முறை நிரூபித்திருக்கிறார். படத்தில் வரும் பாட்டியில் இருந்து எல்லா துணை நடிகர் கதாபாத்திரத்திலும் காமெடி துணுக்குகளை அள்ளி வீசியிருக்கிறார். அது பல இடங்களில் க்ளிக்கும் ஆகி இருக்கிறது. விமல் - ஆனந்தி மொபைல் காமெடி, பிரபு வீட்டுக்கு சரண்யா குடும்பம் வருவது, பரிட்சை ஹால், கல்யாண மேடை என படம் முழுக்க அவ்வளவு காமெடி இருந்தும், சற்று தூக்கலாய் வரும் சண்டைக் காட்சிகளும், பாடல்களும் ஒரு கட்டத்தில் சோர்வை ஏற்படுத்திவிடுகிறது. 

இருக்கிற பாடல்கள் போதாது என நினைத்தாரோ என்னவோ, 'கட்டாயக் கவிஞர் ' இயக்குநர் பூபதி பாண்டியன் எழுதியது என சொல்லி ப்ரோமோ பாடல் வேறு படத்தில் வருகிறது. எதுக்க்க்க்க்க்க்க்கு! . அது போக அரிவாள் சண்டை, வேல் சண்டை, கார் சேஸ் சண்டை, முகமூடி போட்ட சண்டை என ரகத்துக்கு ஒன்று வருகிறது. 

'மாப்ள பரிட்சை நல்லா எழுதி இருக்கேல' என விமலை கேட்டுக்கொண்டே இருப்பார் ரோபோ சங்கர். வழக்கம் போல விமல் பரிட்சையில், அது ஸ்பாய்லர் சொல்ல முடியாது. காமெடியிலேயே 70 மார்க்குக்கு மேல் வாங்கும் பூபதி பாண்டியன், தேவையில்லாமல், அதிக பேப்பர் வாங்கி பாடல், சண்டை என எழுதி ரசிகர்களை கடுப்பேற்றி, இறுதியில் ஜஸ்ட் பாஸ் வாங்குகிறார். 

வீக்கெண்டில் ஜாலி மூடில் ஒரு படத்துக்கு சென்று திரும்பலாம், என நினைப்பவர்கள் நிச்சயமாய் மன்னர் வகையறாவுக்கு ஒரு ரவுண்ட் அடிக்கலாம்.