Published:Updated:

"வடிவேலுவுக்குப் பதில் விஜய்... ஆனால், நிறைய மாத்தினோம்!" - எழில் #22YearsOfThulladhaManamumThullum

"ரொம்ப உணர்வுபூர்வமா அந்தக் கதையைக் கேட்டதால, வடிவேலு பதற்றமாயிட்டாரு.. அவருக்கு இந்தக் கதை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அப்புறம் வடிவேலுவும் நானும் நிறைய தயாரிப்பாளர்களைப் பார்த்தோம். வடிவேலு ஹீரோன்னு சொன்னதுமே துரத்தி விட்டுடுவாங்க."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விஜய் நடித்த காதல் படங்களில் 'காதலுக்கு மரியாதை' படத்திற்கு பின்னர் மிக முக்கியமான படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'. விஜய், சிம்ரன் நடித்த இந்தப் படம்தான் எழில் இயக்கிய முதல் படம். தமிழ் சினிமாவின் தலைசிறந்த காதல் படங்களில் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துக்கும் ஒரு தனி இடமுண்டு. இந்தப் படத்தைப் பற்றிய சில தகவல்களையும், இயக்குநர் எழிலிடம் அவரது முதல் பட அனுபவம் எப்படி இருந்தது என்பதையும் தெரிந்துகொள்வோம்.

* விஜய்க்கு இது 21-வது படம். இந்தப் படத்தின் மூலம்தான் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ஓப்பனிங் வேல்யூ உருவானது. மேலும், விஜய் படங்களுக்கு மினிமம் கியாரன்டி தரலாம் என்ற நிலையும் இந்தப் படத்திலிருந்துதான் ஆரம்பமானது. 

* 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் நடிகை சிம்ரன் கல்லூரி மாணவியாக, மாவட்ட ஆட்சியராக நடித்தது மட்டுமன்றி, ஒரு கவிஞராகவும் நடித்திருக்கிறார். ‘மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னைத் தேடினேன்..’ என்னும் அவரது கவிதை ஆனந்த விகடனில் வெளிவருவது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். 

* ’சிட்டிலைட்ஸ்’  என்னும் சார்லிசாப்ளின் படத்தின் பாதிப்பில் உருவான திரைப்படம்தான் துள்ளாத மனமும் துள்ளும்.

* இயக்குநர் எழிலுக்கு மட்டுமல்ல இயக்குநர் கரு. பழனியப்பனுக்கும் ’துள்ளாத மனமும் துள்ளும்’ தான் முதல் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் இணை இயக்குநராக அறிமுகமானார் கரு. பழனியப்பன். 

* ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் ‘டவுசர் பாண்டி’ வேடத்தில் நடித்த பாரி வெங்கட்  என்னும் புதுமுக நடிகர் இந்தப் படம் வெளிவந்த சில நாளிலேயே விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இதனால் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் வருத்தமடைந்தனர். 

* 1999 ஆம் ஆண்டு தமிழக அரசின் இரண்டாவது சிறந்த படத்துக்கான விருது ’துள்ளாத மனமும் துள்ளும்’ படத்திற்குக் கிடைத்தது. மேலும், எம்.ஜி,ஆர்  விருதினை நடிகர் விஜயும், சிறந்த நடிகைக்கான விருதை சிம்ரனும் பெற்றுக் கொண்டனர். 

* ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர்களுள் ஒன்று. இந்தப் படத்திற்குக் கிடைத்த அதீத வரவேற்பால் ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 

* கேரளாவில் நடிகர் விஜய்க்குத் தனி மார்க்கெட் ஏற்பட அடித்தளமிட்டுக் கொடுத்த திரைப்படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ தான். இந்தப் படத்துக்குப் பிறகு கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. 

* வசூலில் மாபெரும் வெற்றி பெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படம் தமிழகத்தில் பல இடங்களில் நூறு நாள்களைக் கடந்து ஓடியது. கேரளாவில் 125 நாள்கள் கடந்து ஓடியது. 

* ‘துள்ளாத மனமும் துள்ளும்’  திரைப்படத்தில் இடம்பெற்ற "இன்னிசை பாடிவரும்" பாடல் அந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட். ‘மேகமாய் வந்து போகிறேன்’ பாடலை மட்டும் விஜயன் என்பவர் எழுதியிருந்தார். வைரமுத்து- எஸ். ஏ. ராஜ்குமார் காம்போவில் வந்த மற்ற பாடல்கள் புகழடைந்து படத்தின் வெற்றிக்குப் பக்கபலமாயிருந்தன. 

 * ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படம் தெலுங்கில் நாகார்ஜுனா நடிப்பில் ’நவ்வு வஸ்தவனி’ என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ருக்கு கதாபாத்திரத்தில் தமிழில் நடித்த சிம்ரனே தெலுங்கிலும் நடித்தார். மேலும்,1999- ஆம் வருடம் மட்டும் சிம்ரனின் நடிப்பில் 12 திரைப்படங்கள் வெளியாகின. 

சில கேள்விகளுடன் இயக்குநர் எழிலைத் தொடர்பு கொண்டோம்.

"துள்ளாத மனமும் துள்ளும்" கதையை விஜய்க்கு முன்பு யார் யாரிடம் சொன்னீங்க?

‘’சார்லிசாப்ளினோட  'சிட்டிலைட்ஸ்' படம்தான் ’துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துக்கு இன்ஸ்ப்ரேஷன். சார்லிசாப்ளின் படம் என்பதால் முதலில் இதை வடிவேலுவுக்காகத்தான் பண்ணேன். அதற்கப்புறம் முரளி சாருக்கு ஏத்த மாதிரி மாத்தினேன்.  ஐம்பது தயாரிப்பாளர்கள்கிட்ட கதை சொல்லியிருப்பேன். அந்த டைம்ல ’பார்வை இல்லாத பொண்ணோட கதையைப் படமாகப் பண்ணி யாரும் ஜெயிச்சதில்லை’னு ஒரு சினிமா சென்டிமென்ட் இருந்துச்சு. அதனாலயே யாரும் படம் பண்ண முன்வரலை.

ஒருசிலர் கண்ணு தெரியாத பொண்ணுனு சொன்ன உடனேயே 'சிட்டிலைட்ஸ்' க்குப் போயிடுவாங்க. இது, ’அந்த கதை இல்லைங்க. வேற கதைங்க'னு சொன்னாலும் அவங்க புரிஞ்சிக்கமாட்டாங்க. ஹீரோயினுக்கு ஹீரோவைப் பிடிக்கும். ஆனால், நேர்ல பார்த்தா வில்லனா தெரியும்"ங்கிறதே அந்த பீரியட்ல ரொம்ப புதுசா இருந்தது. அதனாலயே நிறைய தயாரிப்பாளர்களால கதையைப் புரிஞ்சிக்க முடியலை.’’

வடிவேலு இந்தக் கதையை கேட்டுவிட்டு என்ன சொன்னார்?

’’வடிவேலு சினிமாவுக்கு வந்த காலத்திலிருந்தே எனக்கு அவரை நல்லாத் தெரியும். அந்த பீரியட்லதான் வடிவேலு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துக்கிட்டு வந்தாரு. ஒருநாள் சும்மா ஃப்ரெண்ட்லியா பேசிட்டு இருக்கும்போது, இந்தக் கதையை வடிவேலுகிட்ட சொன்னேன். கதையைச் சொல்லிட்டு இருக்கும்போது சிங்கமுத்து வெளியே இருந்தாரு. இந்தக் கதையை முழுசா கேட்டதும் ஷாக் ஆகிட்டாரு. உடனே, "முருகேசா, சிங்கமுத்து இங்க வாங்கடா.... இந்தக் கதையைக் கேளுங்கடா.. எழில் என்னமோ சொல்லிச்சு... எனக்கு அழுகைவந்துடுச்சுடா..." அப்படினாரு.

ரொம்ப உணர்வுபூர்வமா அந்தக் கதையைக் கேட்டதால, வடிவேலு பதற்றமாயிட்டாரு.. அவருக்கு இந்தக் கதை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அப்புறம் வடிவேலுவும் நானும் நிறைய தயாரிப்பாளர்களைப் பார்த்தோம். வடிவேலு ஹீரோன்னு சொன்னதுமே துரத்தி விட்டுடுவாங்க. இப்படியே போயிட்டு இருக்கும்போதுதான், பாண்டியன்னு ஒரு ஃப்ரெண்ட் என்கிட்ட, ‘டேய்... இந்தக் கதை வடிவேலுவுக்கு மட்டும் பொருந்துற கதை கிடையாது. வேற யாருக்கு ஏத்த மாதிரி வேணாலும் மாத்தலாம்டா’னு சொன்னான். அதற்கப்புறம் முரளி சாருக்கு ஏத்த மாதிரி மாத்தினேன். அவருக்கும் கதை பிடிச்சிருந்தது. ஆனால், வடிவேலு மாதிரி அவருக்கும் தயாரிப்பாளர் கிடைக்காமல் போயிட்டாங்க.’’

இயக்குநர் எழில்
இயக்குநர் எழில்

விஜய் கதையைக் கேட்டுவிட்டு என்ன சொன்னார்?

’’இந்தக் கதையை விஜய்க்கு முன்பே ஆர். பி. சௌத்ரி சார்கிட்டதான் சொன்னேன். இந்தக் கதையைச் சொல்லும்போதே, கதையோட ஜீவனை சரியாப் புரிஞ்சிக்கிட்டாரு. கதை அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. விஜய்கிட்ட போய்ச் சொல்லிட்டு வாங்கன்னு என்னை அனுப்பி வெச்சாரு. விஜய் ஸ்கிரிப்ட்டு முழுவதும் கேட்டுட்டு ஒரு நிமிடம் சைலன்ட்டா இருந்தாரு. அப்புறம், ’எனக்கு ஒருநாள் டைம் கொடுங்க’ன்னு சொன்னாரு. நான் கிளம்பி வந்துட்டேன். சௌத்ரி சார்கிட்ட, ‘விஜய் ஒருநாள் டைம் கேட்டாரு’னு சொன்னேன். மறுநாள் நானும் சௌத்ரி சாரும் விஜய்யைப் பார்க்கப் போனோம். அங்கே, எஸ். ஏ. சி சார் இருந்தாரு. விஜய் உள்ள இருந்தாரு. சௌத்ரி சாரைப் பார்த்ததும் எஸ். ஏ. சி சார், ’நீங்க என்ன சார் இங்க வந்துருக்கீங்க’னு கேட்டாரு. சௌத்ரி சார், "எழில் விஜய்கிட்ட கதை சொன்னாரு. ஒருநாள் டைம் கேட்டாரு. அதான் என்ன சொல்றாருனு கேட்டுட்டுப் போகலாம்னு வந்தோம்’னு சொன்னாரு. உடனே எஸ். ஏ.சி சார், "அய்யயோ. கதை ரொம்ப சூப்பரா இருக்குன்னு என்கிட்ட சொன்னாரே. உங்ககிட்ட சொல்லலையா?" அப்படின்னாரு. அப்போதான் உள்ள இருந்து வந்தாரு விஜய். என்கிட்ட வந்து, "கதை ரொம்ப நல்லாயிருந்தது சார். கதையைக் கேட்டதும் பீல் பண்ணிட்டு இருந்தேன். ரொம்ப நல்லாயிருக்கு"னு சொன்னார்.’’

விஜய்க்காக கதையில் என்னென்ன மாற்றங்கள் செஞ்சீங்க?

’’நிறைய மாற்றங்கள் செஞ்சேன். முதலில் அந்தப் படத்துல ஆக்‌ஷன் ப்ளாக் கிடையாது. விஜய்க்காகதான் ரெண்டு ஆக்‌ஷன் ப்ளாக் வெச்சேன். வடிவேலுவுக்கு கதை சொல்லும்போது இந்தப் படத்தில் பாட்டு கிடையாது. விஜய் படம்ங்கறதால நல்ல நல்ல பாடல்கள் வெச்சோம். முதலில் ஹீரோவோட கேரக்டர் பெயின்டராத்தான் இருந்துச்சு. அதற்கப்புறம் அதைப் பாடகரா மாத்திட்டேன். இதெல்லாம் இல்லாமல் கமர்ஷியலா சில மாற்றங்கள் செஞ்சேன்.’’

படம் வெளிவந்து 22 வருடங்கள் ஆச்சு. எப்படி இருக்கு..? 

‘’அன்னைக்கும் சரி... இன்னைக்கும் சரி... இந்தப் படத்துக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கும். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தை நல்லா சிரிச்சுப் பார்த்துட்டு வெளியே வந்தவங்க, என்கிட்ட, ‘படம் ரொம்ப நல்லாயிருக்கு சார். இருந்தாலும் நீங்க ’துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மாதிரி ஒரு படம் பண்ணணும்’னு சொன்னாங்க. கடவுளோட அருளால நான் என்னுடைய முதல் படத்திலேயே டபுள் செஞ்சுரி அடிச்சேன். பத்து வருடமா நமக்கு சினிமாவுல ஒரு இடம் கிடைக்கலையேன்னு விரக்தியில இருந்தப்போ, எனக்கு நம்பிக்கை கொடுத்ததே அந்த ஸ்கிரிப்ட்டுதான். அந்த ஸ்கிரிப்ட்டும் ஒரு சரியான ஹீரோ, தயாரிப்பாளர், மியூசிக் டைரக்டர்கிட்ட போய்ச் சேர்ந்ததாலதான் இவ்வளவு பெரிய ஹிட் ஆச்சு. ஒரு படைப்பைச் சரியா செய்தால் காலம் கடந்தும் நிற்கும். அதேபோல, இத்தனை வருடங்கள் கழித்தும் இந்தப் படத்தை மக்கள் கொண்டாடுவதைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு