’மைனா’ செந்தாமரை முதல் `வி.ஐ.பி’ தங்கபுஷ்பம் வரை... தமிழ் சினிமாவில் முகம் காட்டாத கேரக்டர்ஸ்..!

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்திருக்கும் படங்களின் மூலம் எத்தனையோ கேரக்டர்கள் நம் மனதில் ஆழமாய்ப் பதிந்திருக்கின்றன. அது அந்த நடிகர், நடிகைகளின் நடிப்பு, அழகு, கதாபாத்திரத்தின் தன்மை எனப் பல காரணங்களுக்காக நிகழ்ந்திருக்கலாம். ஆனால், ஒரு கதாபாத்திரத்தின் முகத்தை, உருவத்தைப் பார்க்காமல் நமக்கு அவர்களைப் பிடிக்கும் என்பதையும் பல படங்களில் காட்டியிருக்கிறார்கள் தமிழ் சினிமா இயக்குநர்கள். இயக்குநர் பாலசந்தர் 'இருமல் தாத்தா' கதாபாத்திரம் மூலம் இதை எப்போதோ அறிமுக செய்திருந்தாலும், இப்போது அவை அதிகம் தென்பட ஆரம்பிக்கின்றன. அவற்றில் சில இங்கு...

செந்தாமரை - மைனா:

செந்தாமரை - மைனா

மைனா’ படத்தில் ’மாமோய் நீங்க எங்க இருக்கீங்க...’ என்ற ரிங்டோன் மூலம் நமக்குப் பரிச்சயமானவர் செந்தாமரை. தம்பி ராமையாவின் மனைவி கதாபாத்திரமாக படத்தில் வரும் இந்த கேரக்டரை இயக்குநர் பிரபுசாலமன் போன் உரையாடலிலேயே காட்டியிருப்பார். அதுவும் இவரது குரல் இல்லாமலேயே. பல இடங்களில் தம்பி ராமையா - செந்தாமரை எபிசோடு சிரிப்பு காட்டினாலும், ஹீரோ விதார்த் இவரைப் போனில் ‘அம்மா’ என்று அழைக்கும் இடமும், செந்தாமரை அழுவதற்குத் தம்பி ராமையா சொல்லும் காரணமும் நம்மைக் கண்கலங்க வைத்துவிடும். இதே படத்தில் கவரிமான் ராஜா என்ற கதாபாத்திரம் அவர் மனைவியிடம் போனில் பேசும் காட்சி ஒன்றையும் வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

செல்லம் - எங்கேயும் எப்போதும்:

ஒரு விபத்து, இரண்டு பேருந்து, அதில் பயணிக்கும் பல பயணிகளின் கதை என 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் விறுவிறுப்புடன் கதை சொல்லியிருப்பார் இயக்குநர் சரவணன். அந்தப் பேருந்துகளில் பயணிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு தனிக் கதை இருக்கும். தன் மகள் பிறந்ததிலிருந்து அவளின் முகத்தைப் பார்க்காத தந்தை, வெளிநாட்டு வேலையின் கான்டிராக்ட் முடிந்து ஊருக்கும் செல்வார். 

செல்லம் - எங்கேயும் எப்போதும்

’அப்பா போனை எடுப்பா... போன் அடிக்குதுப்பா, எடுப்பா...’ எனத் தனது மகளின் குரலை ரிங்டோனாக வைத்து அவரது பாசத்தை நமக்குக் கடத்திருப்பார் அந்தத் தந்தை. ‘அப்பா உன்ன பார்க்கதாம்மா வந்துட்டு இருக்கேன். நம்புமா...’ என அவர் போனில் மகளிடம் பேசும் காட்சியின் மூலம், அவரது வருகையை அந்த மகள் எவ்வளவு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்பது நமக்குத் தெரியும். விபத்தால் அவர் இறந்தபிறகு ஒலிக்கும் அதே ரிங்டோன் நமக்குள் ஒலி வலியைக் கடத்தும். படத்தில் பல கதாபாத்திரங்களை இயக்குநர் காட்டியிருந்தாலும், முகம் காட்டாத அந்த குழந்தை பலர் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தக் குழந்தையின் பெயரை படத்தில் சொல்லாத இயக்குநர், அந்தத் தந்தை தன் மகள் அழைக்கும் தொலைபேசி எண்ணை ‘செல்லம்’ என பதிவு செய்திருப்பதை மட்டும் காட்டிருப்பார்.

கலை - விழித்திரு:

கலை - விழித்திரு

சென்னைக்கு வேலைத் தேடி சென்றிருக்கும் தன் அண்ணன் எப்போது ஊருக்கு வருவார் என்ற பரிதவிப்புடன் இருக்கும் தங்கைதான் கலை. ’இந்த போன்ல போட்டோ எடுத்தா அழகா தெரிவாங்களா... என் தங்கச்சி ரொம்ப அழகா இருப்பா, அவளுக்குதான் இந்த போன்...’ என தங்கச்சிக்காக ஒரு போன் வாங்கிவிட்டு செல்லலாம் என நினைக்கும் கிருஷ்ணாவுக்கு தொடங்கும் முதல் சிக்கல், க்ளைமாக்ஸில் அவர் உயிரையே எடுத்துவிடும். முதல் சீனிலிருந்து க்ளைமாக்ஸ் வரை, ‘அண்ணே எப்போ வருவ... கிளம்பிட்டீயாணே...’ என ஓர் இரவு முழுவதும் விழித்திருந்து தன் அண்ணனின் வருக்கைக்காகக் காத்திருக்கும் இந்த தங்கை, தன் பாசமிகு குரலாலேயே நம் மனதில் நின்றவர். 

தங்கபுஷ்பம் - வேலையில்லா பட்டதாரி 1 & 2:

தங்கபுஷ்பம்

மேலே இருக்கும் கதாபாத்திரங்கள் ரொம்ப எமோஷனலாய் இருக்க, இது மட்டும் என்ன காமெடி கதாபாத்திரம் என நீங்க நினைப்பது சரிதான். இருந்தாலும் முகம் காட்டாமல் நகைச்சுவை கதாபாத்திரமாக படம் நெடுக இருந்ததில், அதுவும் இரண்டு பாகங்களிலும் நம்மை சிரிக்க வைத்ததாலும்தான் தங்கபுஷ்பம் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகளில் பல படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் முகம் காட்டாத பல கதாபாத்திரங்கள் எமோஷனலாகவும், காமெடியாகவும் நம் மனதில் பதிந்திருக்கின்றன. அப்படி உங்கள் மனதில் பதிந்த கதாபாத்திரம் எது என்பதை  கமென்ட்டில் பதிவிடுங்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!