Election bannerElection banner
Published:Updated:

இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா... சென்னையில்! சிறப்புகள், சிக்கல்கள்! #IFFC

இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா... சென்னையில்! சிறப்புகள், சிக்கல்கள்! #IFFC
இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா... சென்னையில்! சிறப்புகள், சிக்கல்கள்! #IFFC

இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா... சென்னையில்! சிறப்புகள், சிக்கல்கள்! #IFFC

தமிழ் ஸ்டுடியோ இயக்கமும், சலனம் அறக்கட்டளையும் இணைந்து இந்த ஆண்டு முதல் இனி ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி முதல் வாரத்தில் ’சென்னை சுயாதீன திரைப்பட விழா’வை (Independence Film Festival of Chennai) நடத்தவிருக்கிறார்கள். இந்த ஆண்டு ஒரு நாள் மட்டுமே நடக்கவிருக்கும் இந்த விழாவில் இரண்டு திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவில் முதல் சுயாதீன திரைப்பட விழாவை நடத்துவதில் என்னென்ன சிக்கல்கள் இருந்தன என்பதையும், இந்த விழா பற்றிய முழுமையான தகவல்களையும் தெரிந்துகொள்ள தமிழ் ஸ்டுடியோ அருணிடம் பேசினோம்.

’’இந்தியாவில் நடக்குற முதல் க்ரவுடுஃபண்டிங் (crowdfunding) திரைப்படவிழா இது. பிப்ரவரி 4-ஆம் தேதி (காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை) ஆர்.கே.வி ஸ்டுடியோ மற்றும் பிரசாத் லேப் ஆகிய இரண்டு இடங்களில் படங்களைத் திரையிடுகிறோம். இந்த இரண்டு இடங்களில் மொத்தம் 6 படங்கள், இரண்டு வகுப்புகள் மற்றும் இரண்டு குழு விவாதம் நடைபெறவிருக்கிறது. இவை மொத்தத்திற்கும் சேர்ந்து 100 ரூபாய் டிக்கெட் வசூலிக்கிறோம். உதவி இயக்குநர்கள், மாணவர்களாக இருந்தால் 50 ரூபாய்தான். 

கன்னடப் படமான ’ஹரி கத பிரசங்கா’, ஹிந்திப் படமான ’ரங்கபூமி’, சிங்களப் படமான ’ஆறிதழ் அரளிப்பூ’, மலையாளப் படமான ’ஓராளப்பாக்கம்’, லீனா மணிமேகலையின் ’Is it too much to ask’ என்கிற ஆவணப்படம் மற்றும் தமிழ்ப் படமான ’சிவபுராணம்’ ஆகிய 6 படங்கள்தான் திரையிடுகிறோம்.

திரைப்படங்களை எப்படிப் பார்ப்பது என்பதைப் பற்றி ’காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டனும், சுயாதீனத் திரைப்படங்களுக்கு (independent movie) திரைக்கதை எழுதுவது எப்படி என்பதைப் பற்றி சிங்களப் படங்களின் இயக்குநர் பிரசன்ன விதானகேவும் வகுப்புகள் எடுக்கிறார்கள். 

LGBTQ புரிதல், சினிமாவில் பெண்கள், திரைப்படத் தணிக்கைத்துறையின் அதிகார வரையறை குறித்து அனன்யா காசரவல்லி, சணல் குமார் சசிதரன் மற்றும் லோகேஷ்குமார் ஆகியோரும், சுயாதீனத் படங்களுக்கான சந்தை குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர்கள் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், நித்திலன், அருண்பிரபு புருஷோத்தமன், விஜய் ஜெயபால் ஆகியோர் கலந்துகொள்ளும் குழு விவாதம் நடைபெறவுள்ளது. அதுமட்டுமல்லாமல் ‘சிவபுராணம்’ படத்தின் திரையிடல் முடிந்தபிறகு, அந்தப் படக்குழுவோடு ஒரு விவாதமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

க்ரவுடுஃபண்டிங் மூலம் நடத்த வேண்டும் என்று நாங்கள் முடிவுசெய்ததும், பல நண்பர்கள் சின்னதும் பெரியதுமாய் பல உதவிகளைச் செய்தனர். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஒரு லட்சமும், ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி 50,000 ரூபாயும் கொடுத்தனர். பல முகநூல் நண்பர்களும், ‘இந்த விழாவில் எங்களது பங்கும் இருக்கவேண்டும்’ என்று பணம் மட்டுமல்லாது பல உதவிகளும் செய்துவருகின்றனர். 

இந்த ‘சென்னை சுயாதீன திரைப்பட விழா’ என்பது எங்களின் நீண்ட நாள் கனவு. இதை நடத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன. முக்கியமான சிக்கலே பொருளாதாரம்தான். அதுமட்டுமல்லாமல், கேன்ஸ் போன்ற பெரிய திரைப்பட விழாக்களுக்கு ஒரு படம் தேர்வாகவேண்டும் என்றால், வேறு எந்த விழாக்களிலும் அந்தப் படம் திரையிடப்படக் கூடாது என்கிற விதி இருக்கிறது. அதனாலேயே இந்தமாதிரி சுயாதீனத் திரைப்பட விழாக்களுக்குப் படங்கள் கொடுக்க பலர் முன்வருவதில்லை. சிலர் படங்களை வினியோகஸ்தர்களுக்கு விற்பனை செய்திருப்பார்கள். அந்தப் படங்களை நாம் காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். ஏற்கெனவே நமக்குப் பொருளாதாரப் பிரச்னை இருப்பதால், அப்படியும் வாங்கமுடியாது. இப்படிப் பல சிக்கல்களினால் தள்ளிப்போன இந்த விழாவை, இந்த வருடம் எப்படியும் நடத்திவிட வேண்டும் என்று ஆரம்பித்துவிட்டோம்.

அடுத்த வருடத்திலிருந்து அதிகமான நாள்கள், அதிகமான படங்கள், அந்தப் படங்களுக்குப் பரிசுகள், விவாதங்கள் என இன்னும் பல நிகழ்வுகள் நடக்கும். அந்த நம்பிக்கையுடன் இந்த விழாவைத் தொடங்குகிறோம்’’ என்றார் தமிழ் ஸ்டுடியோ அருண்.
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு