'' 'பேரன்பு' படம் பார்த்து ஐந்து நிமிடம் வரை நெகிழ்ந்து கைதட்டிய நெதர்லாந்து ரசிகர்கள்!" | 'Peranbu' movie Screening in International Film Festival Rotterdam

வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (30/01/2018)

கடைசி தொடர்பு:13:10 (30/01/2018)

'' 'பேரன்பு' படம் பார்த்து ஐந்து நிமிடம் வரை நெகிழ்ந்து கைதட்டிய நெதர்லாந்து ரசிகர்கள்!"

உலகில் பெர்லின், வெனீஸ், பிரான்ஸ் எனப் பல உலகத் திரைப்பட விழா நடந்து வருவது வழக்கம். நெதர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் நடந்துவரும் 'ரோட்டம் டேம் உலகத் திரைப்பட விழா'வில் இதுவரை தமிழ்மொழித் திரைப்படங்களே திரையிடப்பட்டது இல்லை. இந்தமுறை திரைப்பட விழாவில் தமிழ் படங்களை திரையிடலாம் என்று  குழுவினர் ஆலோசனை சொன்னார்கள். அப்போது 'ஏற்கெனவே இலங்கைத் தமிழர்கள் பிரச்னை உலகளவில் இருந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்மொழிப் படங்களைத் திரையிட வேண்டாம்' என்று விழாக் குழுவினரில் பலபேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்குப் பாலாவின் 'நான் கடவுள்', மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' ஆகிய படங்களைத் திரையிட்டுக்காட்ட, தமிழ்சினிமாவின் தரத்தைப் பார்த்து அதிர்ந்துவிட்டனர். தமிழ்ப் படத்துக்கு எதிர்ப்புக்குரல் கொடுத்த அத்தனைபேரும் ஆதரவுக்குரல் கொடுக்கத் துவங்கினர்.

கடந்த பத்து வருடங்களில் வெளிவந்த வித்தியாசமான தமிழ்ப் படங்களை தேடித்தேடிப் பார்த்து, ஆச்சர்யத்தில் உறைந்து போயினர். இதுவரை பாலிவுட்டில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் இந்திப் படங்கள் மட்டுமே இந்திய சினிமாக்கள்  என்று நினைத்துக் கொண்டு இருந்தோம், தமிழ்சினிமா உலகைப் பார்த்து பிரமித்துப்போய் நிற்கிறோம்' என்று வியப்புடன் கூறியிருக்கிறார்கள் பலர். 

பேரன்பு

குறிப்பாக ராம் இயக்கிய 'கற்றது தமிழ்', ' தங்கமீன்கள்', 'தரமணி' திரைப்படங்கள் அவர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தன. 'அடுத்து, ராம் எந்தப் படத்தை இயக்கிவருகிறார்?' என்று விசாரித்தனர். அப்போதுதான், பி.எல்.தேனப்பன் தயாரிப்பில், மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் 'பேரன்பு' படத்தை ராம் இயக்கிவருகிறார் என்ற விவரம் தெரியவந்தது. 'தங்க மீன்கள்' படத்தில் ராமின் மகளாக நடித்த சாதனா, 'பேரன்பு' படத்தில் மம்முட்டியின் மகளாக நடிக்கிறார். 

பெர்லின் திரைப்பட விழாவில் 'பேரன்பு' படத்தைத் திரையிடலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்த தயாரிப்பாளர் தேனப்பனும், டைரக்டர் ராமும் நெதர்லாந்து திரைப்பட விழாவிலேயே ஃபிரிமியர் ஷோவாக வெளியிடலாம் என்று முடிவுசெய்து, அவர்களின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தனர். நெதர்லாந்து அமைப்பு தேனப்பன், ராம் இருவரும் தங்கள் நாட்டுக்கு வருவதற்கும் திரும்புவதற்குமான விமான டிக்கெட்டை ஒரு மாதத்துக்கு முன்னரே எடுத்து அனுப்பியது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, 'பேரன்பு' படத்தின் ஹீரோ மம்முட்டியும் நெதர்லாந்து செல்வதற்கு ஆசைப்பட்டு, அதற்கான வேலைகளில் இறங்கினார். இங்கே கேரளாவில் தொடர்ந்து படப்பிடிப்பு இருப்பதால் கால்ஷீட்டுகளில் குளறுபடி ஏற்படும் என்பதால், நெதர்லாந்து பயணத்தை ரத்து செய்தார். மம்முட்டி போலவே 'பேரன்பு' படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் நெதர்லாந்து செல்வதற்குத் திட்டமிட்டு, கடைசிநேரத்தில் செல்லமுடியாமல் தவிர்த்தார். இறுதியாக 25-ஆம்தேதி இயக்குநர் ராம், தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோர் நெதர்லாந்துப் புறப்பட்டுச்சென்றனர். மம்முட்டி மகளாக நடிக்கும் சாதனா, துபாயில் வசித்து வருகிறார். அவர் தனது  அம்மா, அப்பாவுடன் துபாயில் இருந்து நெதர்லாந்து புறப்பட்டுச் சென்றார். 

பேரன்பு

நெதர்லாந்தில் 'பேரன்பு' படம் மட்டுமல்ல, ஏற்கெனவே தமிழகத்தில் ரிலீஸான பாலாவின் 'நான் கடவுள்', 'பரதேசி', மிஷ்கின் இயக்கிய 'யுத்தம்செய்', 'பிசாசு', கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா', குறுப்படங்களின் தொகுப்பான 'அவியல்', ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' 'தரமணி', தனுஷின் 'பொல்லாதவன்', 'கொடி', 'சூதுகவ்வும்', 'வாயை மூடிப்பேசவும்', 'மாநகரம்' உள்ளிட்ட படங்களும் திரையிடுகின்றனர். கடந்த 28-ஆம்தேதி நெதர்லாந்தில் வெள்ளைக்காரர்கள் பெரும்திரளாக அமர்ந்திருந்த திரையரங்கில் 'பேரன்பு' திரைப்படத்தை ஃப்ரிமியர் காட்சியாகத் திரையிட்டனர்.

 

'பேரன்பு' படத்தின் க்ளைமாக்ஸ் முடிந்தபிறகு வெள்ளைக்காரர்கள் அனைவரும் எழுந்துநின்று 5 நிமிடங்கள் தொடர்ந்து கரவொலி எழுப்பிக்கொண்டே இருந்தனராம். அதன்பின் தேனப்பன், ராம், சாதனா ஆகியோர் மேடை ஏற்றப்பட்டனர். 'பேரன்பு' படம்குறித்து அந்நாட்டு ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மூவரும் பதில் அளித்தனர். முதன்முதலாக  தமிழ்மொழியில் திரையிடப்பட்ட 'பேரன்பு' திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதால், நெதர்லாந்தில் திரைப்பட விழா நடத்தும் 'ரோட்டர் டேம் உலக சினிமா திரப்பட விழா' கமிட்டியினர் மகிழ்ச்சியாக உள்ளனர். இன்று, விருதுகளைத் தேர்வுசெய்யும்  விமர்சகர்களுக்கான திரைப்படக்காட்சி திரையிடவிருக்கின்றனர். அதன்பிறகே 'பேரன்பு' திரைப்படம் எந்தெந்த விருதுகளைப் பெறப்போகிறது என்கிற விவரங்கள் வெளியாகும்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்