Published:Updated:

'விஷாலோட சண்டை போடும்போதெல்லாம் சிரிப்புதான் வரும்!'' - 'வில்லன்' அர்ஜூன்

'விஷாலோட சண்டை போடும்போதெல்லாம் சிரிப்புதான் வரும்!'' - 'வில்லன்' அர்ஜூன்
News
'விஷாலோட சண்டை போடும்போதெல்லாம் சிரிப்புதான் வரும்!'' - 'வில்லன்' அர்ஜூன்

'விஷாலோட சண்டை போடும்போதெல்லாம் சிரிப்புதான் வரும்!'' - 'வில்லன்' அர்ஜூன்

'ஜெய்ஹிந்த்-2' படத்தைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தயாரித்து இயக்கியுள்ள படம், 'சொல்லிவிடவா'. தன் மகள் ஐஷ்வர்யாவை கதாநாயகியாக வைத்து இயக்கியிருக்கும் படத்தில், கன்னடத்தில் பல படங்கள் நடித்துள்ள சந்தன் குமார்  ஹீரோவாக நடித்துள்ளார். ரொமான்டிக் டிராமா ஜானரில் உருவாகியிருக்கும் இப்படம், பிப்ரவரி 9-ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான அர்ஜுனை சந்தித்துப் பேசினோம். 

உங்கள் மகளை வைத்துப் படம் இயக்கும் எண்ணம் எப்போது வந்தது?

"என் பொண்ணை வெச்சு டைரக்ட் பண்ணணும்னு ஆரம்பத்துல இருந்தே ஒரு எண்ணம் இருந்துச்சு. அவங்க முதல் படம் 'பட்டத்து யானை' பண்ணபிறகு, அவங்களை வழக்கம்போல இல்லாம ஸ்கிரீன்ல கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் காட்டணும்னு தோணுச்சு. அதற்கான வேலைகளை உடனே செய்ய ஆரம்பிச்சு, ரெண்டு மூணு கதைகளை எழுதினேன். அதுல அவங்களுக்கு இந்தக் கதை ரொம்பப் பிடிச்சுப்போய் ஓகே சொன்னாங்க. அப்படித்தான் படம் ஆரம்பிச்சது. இந்தப் படத்துல அவங்களோட திறமையை வெளிக்கொண்டு வரணும்னு நிறைய எமோஷன்களைச் சேர்த்து ஒரு வடிவம் கொடுத்திருக்கேன். நீங்கதான் எப்படி இருக்குனு பார்த்துட்டு சொல்லணும்".

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீங்களும் பைலிங்குவல் படங்கள் நிறைய பண்ணிருக்கீங்க. இப்போ இந்தப் படமும் பைலிங்குவல். அதில் என்ன ஸ்பெஷல்? 

கன்னடம், தமிழ் ரெண்டு மொழியுமே எனக்கு ரொம்ப நெருக்கமானது. கன்னடம் என் தாய்மொழி. தமிழ் எனக்கான ஒரு அடையாளத்தைக் கொடுத்து, எனக்குனு ஒரு இடத்தைக் கொடுத்து சாப்பாடுபோட்ட மொழி. ரெண்டு மாநில மக்களுக்கும் என்னை நல்லாத் தெரியும். தெலுங்கும் எனக்குப் பரிட்சயமான மொழிதான். ஆனா, மூணு மொழியில படம் எடுக்குறது அவ்வளவு சுலபம் இல்லை. அதனால், எனக்கு நெருக்கமான மொழிகள்ல நெருக்கமான மக்களுக்காக இந்தப் படம் எடுத்தேன். அதுதான் ஸ்பெஷல்"

ஒரு இயக்குநரா சொல்லுங்க... உங்க மகளோட ப்ளஸ் மைனஸ் என்ன?

"என் மகள்னு சொல்றதைவிட இந்தப் படத்துல நடிச்ச ஆர்டிஸ்ட்னு சொல்றதுதான் சரி. படம் எடுக்குறதுக்கு முன்னாடி நிறைய ரிகர்சல் பண்ணோம். அப்படிப் பார்க்கும்போதே, அவங்களுக்கு என்ன வரும், வராதுனு எனக்கு அவங்களைப் பத்தின ஒரு வியூ கிடைச்சிருச்சு. அதைவெச்சு, அந்த ஆர்டிஸ்ட்க்கு ஒரு டெய்லர்மேன் மாதிரி என் வேலைகளை அவங்களுக்குத் தகுந்தமாதிரி செஞ்சிருக்கேன். இதெல்லாம் முடிஞ்சு ஷூட்டிங் போனபிறகு, ஒரு இயக்குநரா ஆர்ட்டிஸ்டிற்கு இது வருமா வராதாங்கிற கவலையே இல்லை. நிறைய வொர்க்‌ஷாப் பண்ணதுனால ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப ஈஸியா இருந்துச்சு. அப்போ எனக்கு இருந்த கவலை என்னன்னா, இந்தக் கதையை எப்படி சுவாரஸ்யமா காட்டுறதுங்கிறது மட்டும்தான்"

கன்னட ஹீரோவை அறிமுகப்படுத்தி இருக்கீங்களே?

"தமிழ் ஹீரோ, கன்னட ஹீரோனு நாம பிரிக்கமுடியாது. அவர் ஒரு ஹீரோ கேரக்டர்ல நடிக்கக்கூடிய நடிகர், அவ்ளோதான். அவங்க எந்த மொழியைச் சார்ந்தவங்கனு பார்க்கத் தேவையில்லை. ஒரு லவ் ஸ்டோரிக்கு புது ஹீரோதான் கரெக்டா இருப்பாங்க. ஏன்னா, அப்போதான் எந்த இமேஜும் இருக்காது. ஒரு ஆக்‌ஷன் இமேஜ் இருந்தா, படத்துல இவர் ஃபைட் பண்ணப்போறாராங்கிற மாதிரி எதிர்ப்பார்ப்பு இருக்கும். புது ஹீரோ நடிச்சாதான் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இருக்காது. அது மட்டுமல்லாம, இவர் இந்தக் கதைக்கு சரியான நபரா இருந்தார். "

காஷ்மீர், தர்மசாலா மாதிரியான இடங்கள்ல ஷூட்டிங் இருந்திருக்கு. என்ன மாதிரியான சவால்களைச் சந்திச்சீங்க?

"அந்த இடங்கள் எல்லாமே ராணுவத்தோட கன்ட்ரோல்ல இருக்கு. அதனால, அங்க அனுமதி கிடைக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அந்த இடத்துக்குப் போக, வர ரொம்ப சிரமப்பட்டோம். ஒரு தயாரிப்பாளரா சொல்லணும்னா செலவும் எக்கச்சமாகிடுச்சு. செலவைப் பார்த்தோம்னா படத்தை நியாயப்படுத்த முடியாதே..."

சுஹாசினி, பிரகாஷ்ராஜ் மாதிரியான சீனியர் ஆர்டிஸ்ட்கள், யோகிபாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் மாதிரியான காமெடி ஆர்டிஸ்ட்கள்னு ஒரு பெரிய ஸ்டார் பட்டாளமே இருக்காங்களே?

"இது பக்கா கமர்ஷியல் படம். மக்களுக்கு என்ன பிடிக்குதோ அதைக் கொடுக்கணும். இப்போ எல்லாரும் காமெடி எதிர்ப்பார்க்குறாங்க. அதனால, யோகிபாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் மாதிரியான ஆர்டிஸ்ட்களைப் படத்துல கொண்டுவந்தேன். அப்புறம், கதைக்கு என்ன தேவையோ அதுக்குத் தகுந்தமாதிரி நடிகர்கள் இருக்கணும். சென்டிமென்ட், காமெடி, ஆக்‌ஷன் எல்லாமே படத்துல இருக்கும். அது எல்லாத்துக்குமே யாரெல்லாம் இருந்தா கதைக்கு ஒரு உயிர் கிடைக்குமோ அவங்க எல்லாம் படத்துல இருக்காங்க."

விஷாலுக்கு வில்லனா 'இரும்புத்திரை' படத்துல நடிச்ச அனுபவம்? 

"விஷால் என்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தார். இப்போ, ஹீரோ, நடிகர் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர்னு பல பொறுப்புகள்ல இருக்கார். ரொம்ப நல்ல வளர்ச்சி. இதெல்லாம் அவரோட சாதனையா நினைக்கிறேன். நான் ரொம்ப வருடமா பார்க்குற விஷாலுக்கு வில்லனா நடிச்சது, ரொம்ப சந்தோசமாவும் ஜாலியாவும் இருந்துச்சு. அவர் கூட ஃபைட் சீன் வரும்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். சீரியஸே இருக்காது. படம் நல்லா வந்திருக்கு. " 

படத்தைப் பற்றி ஐஷ்வர்யா அர்ஜுன் பேசியதிலிருந்து...

'பட்டத்து யானை' படத்திற்குப் பிறகு அப்பா டைரக்‌ஷன்ல ஒரு படம். எப்படி இருக்கு? 

"ரொம்ப சந்தோசமா இருக்கு. ஏன் இவ்ளோ கேப் விழுந்திடுச்சுன்னு நிறைய பேர் கேட்குறாங்க. அதுக்குப் பதில், இந்தப் படம் பார்த்தா அவங்களுக்கே தெரியும். எனக்கு அப்பா எடுத்த படங்கள் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்போ, அவர் படத்துல ஹீரோயினா நடிக்கிறது ரொம்பவே ஹாப்பி."

அப்பா டைர்க்‌ஷன்ல இருந்து என்ன கத்துக்கிட்டீங்க? 

"டெக்னிக்கலா நிறையவே கத்துக்கிட்டேன். அப்பாவே தயாரிக்கிறதுனால சில அட்வான்டேஜ் இருந்துச்சு. நடிப்பு கத்துக்கிறதுங்கிறது உடனே வராது. தொடர்ச்சியான பயிற்சியும் ஆர்வமும் இருந்துக்கிட்டே இருக்கணும். எனக்கு, அப்பாவோட படத்துல இருந்து அவரைப் பார்த்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். இன்னும் நிறைய கத்துக்கணும்னு நினைக்கிறேன். "

படத்துல உங்க கேரக்டருக்காக எப்படி உங்களைத் தயார்ப்படுத்திக்கிட்டீங்க?  

"இந்தப் படம் ஒரு லவ் ஸ்டோரி. நான் ரிப்போர்ட்டரா வருவேன். படத்துல போர் வர்ற மாதிரியான காட்சிகள்லதான் ரிப்போர்ட்டரா என் வேலை இருக்கும். அதுக்காக சில ரெஃபரென்ஸ் பார்த்து என்னைத் தயார்படுத்திக்கிட்டேன்." 

ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்க அப்பாவுக்கும், வீட்டுல இருக்கிற அப்பாவுக்கும் என்ன வித்தியாசம்? 

"நிறைய வித்தியாசம். வீட்டுல அவர் சின்னப் பையன் மாதிரி பேசிக்கிட்டு இருப்பார். அவர் ஸ்கீரின்லதான் ஆக்‌ஷன் கிங். வீட்ல ரொம்ப எமோஷன், சென்ட்டிமென்ட்டான நபர். ஸ்கீரின்ல அப்பாவைப் பார்த்துட்டு, வீட்டுல பார்த்தா நினைச்சுப்பார்க்க முடியாத அளவுக்கு மாற்றம் தெரியும். வீட்டையும் தொழிலையும் குழப்பிக்கமாட்டார். "

அப்பாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட விஷயம் என்ன? 

"அவரோட மன உறுதிதான். ஒரு நடிகரா இருக்கும்போது நிறைய சவால்கள் இருக்கும். நிறைய பேரைச் சந்திக்கவேண்டியிருக்கும். அடுத்தடுத்து படம், ஷூட்டிங்னு ஓடிக்கிட்டே இருக்கணும். ஆனா, எவ்வளவு ப்ரஷர் இருந்தாலும் குடும்பம்னு வந்துட்டா எங்களை ரொம்ப நல்லாப் பார்த்துப்பார். அந்தப் பணிச்சுமையை எங்ககிட்ட காட்டிக்கமாட்டார். அதைப் பார்த்தா, எனக்கு ஆச்சர்யமா இருக்கும்"

என்ன மாதிரியான காட்சிக்கு அதிக டேக் எடுத்துக்கிட்டீங்க? 

"ஷூட்டிங் போகுறதுக்கு முன்னாடியே ரிகர்சல் பார்த்தோம். அதனால, அதிக டேக் எல்லாம் போகலை. ஆனா, அப்பா முன்னாடி ரொமான்ஸ் சீன்ல நடிக்கும்போது கொஞ்சம் தயக்கமா இருந்தது." 

அப்பா சொல்லி நீங்க மாத்திக்காதது? 

"அப்பா சொன்னார்னா நான் கண்டிப்பா மாத்திக்குவேன், மாத்தியிருக்கேன். ஆனா, நான் எந்த ஒரு விஷயம் பண்ணாலும் கடைசி நிமிடத்துல பரபரப்பா பண்ற நபர். எதுலேயும் டைமிங் மெயின்டெயின் பண்ணமாட்டேன். அதை மாத்திக்கோனு அப்பா சொல்லிட்டே இருக்கார். அதுக்காக முயற்சி பண்ணிட்டு இருக்கேன்".