Published:Updated:

'நாச்சியார்' முதல் 'கலகலப்பு-2' வரை பிப்ரவரியில் மிஸ் பண்ணக்கூடாத 13 படங்கள்!

'நாச்சியார்' முதல்  'கலகலப்பு-2' வரை  பிப்ரவரியில் மிஸ் பண்ணக்கூடாத 13 படங்கள்!
News
'நாச்சியார்' முதல் 'கலகலப்பு-2' வரை பிப்ரவரியில் மிஸ் பண்ணக்கூடாத 13 படங்கள்!

'நாச்சியார்' முதல் 'கலகலப்பு-2' வரை பிப்ரவரியில் மிஸ் பண்ணக்கூடாத 13 படங்கள்!

முன்பெல்லாம் ஒரு படம் வெளிவந்து நூறு நாட்கள், இருநூறு நாட்கள் வரையெல்லாம் திரையரங்குகளில் ஓடும். ஆனால், இப்போது ஒரு படம் வெளிவந்து பத்து நாட்கள் தியேட்டர்களில் ஓடினாலே போஸ்டர் அடித்து வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். போகப்போக, படம் ரிலீஸானாலே சக்சஸ் பார்ட்டி கொடுக்கும் காலம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அந்தளவிற்கு அதிகபடியான படங்கள் வெளியாக ஆரம்பித்துவிட்டன. தியேட்டர்கள் கிடைக்காது என்ற காரணத்தால்கூட படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போடுகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் பத்திற்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதமும் பத்து படங்களுக்கு மேல் திரைக்கு வரவிருக்கிறது. அதுவும், வரும் 2-ஆம் தேதி மட்டும் ஐந்து படங்கள் ரிலீஸிற்குக் காத்திருக்கின்றன. அந்தப் படங்களைப் பற்றி ஓர் பார்வை...
 

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் (பிப்.2) :

கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நான்கு படங்களிலும், கெளதம் கார்த்திக் ஐந்து படங்களிலும் நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் இந்தப் படத்தின் மூலம் இந்த வருடத்திற்கான அக்கவுண்டை ஓபன் செய்கின்றனர். அறிமுக இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதியின் எட்டு கெட்டப்புகள், விஜய் சேதுபதி - கெளதம் கார்த்திக் காம்போ, காமெடி ட்ராமா ஜானர் ஆகியவை படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மதுரவீரன் (பிப்.2) :

விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிக்கும் இரண்டாவது படம் இது. ஒளிப்பதிவாளராக இருந்த பி.ஜி.முத்தையா இந்த படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமெடுத்திருக்கிறார். ஜல்லிக்கட்டையும் அதன் அரசியலையும் மையமாக வைத்து எடுத்துள்ள இப்படத்திற்கு, மதுரையில் இருந்து சின்ன வயசுலேயே ஃபாரீனுக்குப் போய்விட்டு, 15 வருடம் கழித்துத் திரும்ப வருவதுதான் கதைக்களம். சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, பாலசரவணன்  என பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க கிராமத்து பேக் ட்ராப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் பி மற்றும் சி சென்டர்களில் நல்ல வரவேற்பைப் பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

ஏமாலி (பிப்.2) :

'முகவரி', 'காதல் சடுகுடு', 'நேபாளி' உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இஸட்.துரை இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'ஏமாலி'. ரொமான்டிக் த்ரில்லர் ஜானரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், தற்போது உள்ள காதலர்களின் மனநிலையை ஒப்பிட்டுக் காண்பித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஐ.டி ஊழியர், லிவிங் டுகெதர் ரிலேசன்ஷிப்பில் இருக்கும் நபர், போலீஸ், சிஐடி ஆபீஸர் என சமுத்திரக்கனி நான்கு கெட்டப்களில் தோன்றவிருக்கிறார். லவ், பிரேக்அப் என இளைஞர்களைக் கவரும் வகையில் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். 

படைவீரன் (பிப்.2) : 

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த தனா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பாரதிராஜா, விஜய் யேசுதாஸ், அகில் ஆகியோர் முன்னணி நட்சத்திரங்களாக நடித்துள்ளனர். தென் மாவட்ட பகுதியில் வாழும் கிராமத்து இளைஞனைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் பாரதிராஜா சில பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கிராமத்தில் நகரும்  இந்த கதைக்களத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய் யேசுதாஸின் இரண்டாவது படம் என்பது குறிப்படத்தக்கது. 
 

விசிறி (பிப்.2) :

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, அன்றிலிருந்து இன்று வரை இரண்டு உச்ச நட்சத்திரங்களின் ரசிகர்களுக்குள் யார் கெத்து என்று தொட்டதற்கெல்லாம் வாய்க்கால் தகராறு இருந்துக்கொண்டேதான் இருக்கும். அதுபோல, விஜய் - அஜித் ரசிகர்களின் நடவடிக்கைகளும், இவர்களுக்குள் நடக்கும் ரிவெஞ்சுகளோடு காதலையும் சேர்த்துக்காட்டியிருப்பதாகக் கூறியுள்ளார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மகாலிங்கம். தல - தளபதி ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக இருக்குமா இல்லையா என்று பொருத்திருந்து பார்ப்போம். 

சவரக்கத்தி (பிப்.9) :

மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்தவரும் அவரது சகோதரருமான ஆதித்யா படத்தை இயக்கியுள்ளார். கைவிடப்பட்டு தன் வாழ்வை தக்கவைத்துக்கொள்கிற ஒருவன், தன்னையும் தன் இருப்பையும் நியாயப்படுத்திக்கொள்வதற்காக கோபம்கொள்ளும் வேறொருவன், காது கேட்காதிருந்தும் மக்களை கேட்கக்கூடிய ஒரு பெண் என இவர்களைச் சுற்றி நகரும் கதைக்களத்தைக் கொண்டுள்ள இப்படத்தில் ராம் கதாநாயகனாகவும் பூர்ணா நாயகியாகவும் மிஷ்கின் வில்லனாகவும் நடித்துள்ளனர். வழக்கமான மிஷ்கின் படம்போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என படக்குழு கூறியிருக்கிறது. 

கலகலப்பு 2 (பிப்.9) :

சுந்தர்.சி இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதியின் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவா, ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரஸா, ரோபோ சங்கர், சதீஷ் என பயங்கரமான கூட்டணியைக்கொண்டு உருவாகி உள்ளது. ஜாலியான கமர்ஷியல் படமாக 2012-ல் வெளிவந்த 'கலகலப்பு' வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இந்தப்படம் உருவாகியுள்ளது. சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் படங்களின் ஜானரைப் போல் இல்லாமல்  பல ப்ரஷர்களில் தியேட்டருக்கு வருபவர்களைக் காமெடி எண்டர்டெயினராக இருந்து கலகலவென வைத்திருக்கும் என நம்புவோம். 

சொல்லிவிடவா (பிப்.9) :

'ஜெய்ஹிந்த் 2' படத்திற்கு பிறகு அர்ஜுன் இயக்கியிருக்கும் படம் 'சொல்லிவிடவா'. தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் வெளியாகும் இந்தப்படத்தில் கன்னட ஹீரோ சந்தன் குமார் அறிமுகமாகிறார். அவரது மகள் ஐஷ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கிறார். பத்திரிகையாளர்களாக வரும் ஹீரோ - ஹீரோயினுக்குள் வரும் காதலையும் வழக்கம்போல் நாட்டுப்பற்றையும் காட்சிப்படுத்தியுள்ளார். உண்மையில் 'சொல்லிவிடவா' ஐஷ்வர்யா அர்ஜுனுக்கு சொல்லும்படியான படமாக அமையுமென்பது அர்ஜுனின் எண்ணம். 
 

நாச்சியார் (பிப்.16) :

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நாச்சியார்'. ஜோதிகா காவல்துறை அதிகாரியாகவும், ஜி.வி.பிரகாஷ்குமார் திருடனாகவும் நடித்துள்ளனர். மேலும், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தக்கதை ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஜோதிகாவும் ஜி.வி.பிரகாஷும் வழக்கத்திற்கு மாறான தோற்றத்தில் இருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நாகேஷ் திரையரங்கம் (பிப்.16) : 

இசாக் இயக்கத்தில் ஆரி, ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாகேஷ் திரையரங்கம்'. ஹாரர் ட்ராமாவை ஜானாரகக் கொண்டுள்ள இப்படத்தின் கதைக்களம் என்னவென்றால், பேய் ஒன்று தியேட்டரில் குடிபுகுந்துள்ளது.  ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் ஆரி, இந்தத் தியேட்டரை எப்படி விற்கிறார் என்பதே. ஏற்கெனவே நிறைய ஹாரர் படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம் அதிலிருந்து தனித்துத் தெரியுமா என்பதைக் காத்திருந்து பார்ப்போம். 

வீரா (பிப்.16) : 

எல்ரெட் குமார் தயாரிப்பில் ராஜவர்மன் இயக்கத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் படம் 'வீரா'. ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், தம்பிராமையா என முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். படம் ரிலீசாகும் என பலமுறை அறிவிப்பு வந்தும் வெளியாகாமல் தள்ளிப்போக, இந்த முறை நிச்சயமாகத் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

கரு (பிப்.23) : 

இயக்குநர் விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி தெலுங்கு நடிகர் நாக செளர்யா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகவிருக்கும் படம் 'கரு'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் ஹாரர் த்ரில்லர் ஜானர் படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சாய் பல்லவி - நாக செளர்யா ஆகிய இருவருக்கும் இது முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சாய் பல்லவி நடிப்பதாலும் இயக்குநர் விஜய்யின் ஹாரர் த்ரில்லர் முயற்சிக்காகவும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகி உள்ளது. 

கீ :

புதுமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கீ'. சயின்ஸ் ஃபிக்ஷன் சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, மைக்கல் ராயப்பன் தயாரித்துள்ளார். இந்தப் படமும் பிப்ரவர 9-ஆம் தேதி வெளியாவதாக தகவல்கள் வந்தன. ஆனால், ஜீவா நடிக்கும் 'கலகலப்பு-2' படமும் அதேநாளில் ரிலீஸாவதால் படத்தின் தேதியை மாற்றலாமா, அல்லது அதேதேதியில் வெளியிடலாமா என்ற பேச்சுவார்த்தை நடைப்பெற்றுவருகிறது. ஆனால், படம் இந்த மாதத்திற்குள் வெளிவரும் என்று உறுதியாகச் சொல்கிறது படக்குழு.