Published:Updated:

"நிவின்பாலி ரசிகரா போனா, த்ரிஷா ரசிகரா வெளியே வருவீங்க!" - 'ஹே ஜூட்' படம் எப்படி?

"நிவின்பாலி ரசிகரா போனா, த்ரிஷா ரசிகரா வெளியே வருவீங்க!" -  'ஹே ஜூட்' படம் எப்படி?
"நிவின்பாலி ரசிகரா போனா, த்ரிஷா ரசிகரா வெளியே வருவீங்க!" - 'ஹே ஜூட்' படம் எப்படி?

ப்பாவி ஹீரோவிற்கு அவனது கனவைத் தேடிச்செல்ல உதவி செய்யும் ஹீரோயின். கதாநாயகன் நினைத்தது கிடைத்ததா, ஹீரோ, ஹீரோயின் இருவரும் சேர்ந்தனரா... என்ற ஆதிகாலத்துக் கதையை கடற்கரையில் காதோரம் வருடிச்செல்லும் மெல்லிய காற்று மாதிரி வருடலாய்ச் சொல்லும் படம்தான், 'ஹே ஜூட்'!.  

கணிதத்தின் மீதும் கடல் ஆராய்ச்சியின் மீதும் ஆழமாய்க் காதல் கொண்டவன்  ஜுட் (நிவின்பாலி). ஆழ்கடல் நீச்சல் (ஸ்கூபா டைவிங்) செய்ய ஏங்கும் ஜுட், தண்ணீர் என்றால் பயந்து நடுங்குபவன். குறித்த நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால், பட்டினி கிடப்பான். 28 வயது ஆனாலும் எந்த வேலையிலும் நிரந்தரமாக இல்லாதவன். தவிர, நண்பர்கள் இல்லாததால் தனது பிரச்னைகளை ஹேன்டிகேமில் சொல்லிச் சொல்லி பதிந்து வைத்துக்கொள்ளும் வினோதப் பேர்வழி. ஆன்டிக் கைவினைப் பொருட்கள் கடை வைத்திருப்பவர், டோமினிக் (சித்திக்). 'திராவிட வரலாற்றின் சிறப்புகொண்டது' என ஒரு கமண்டலத்தை 'லாஸ்ட் பீஸ்' எனச் சொல்லி கடைக்கு வரும் ஃபாரீனர்களிடம் ஏமாற்றித் தலையில் கட்டும், 'கஞ்சத்தனமான' குடும்பத்தலைவர்  டோமினிக். தனது மகனின் எதிர்காலத்தைப் பற்றி அன்றாடும் கடவுளிடம் வேண்டும் ஜூட்டின் அம்மா, மரியா (நீனா குருப்). முடிந்தவரை ஆளை விழுங்கித்  தின்னும் அளவிற்குக் கேடியான  தங்கையாக ஆண்ட்ரியா. 

கடல் உயிரினங்கள் மீதுள்ள ஆர்வத்தில், அவற்றைப் படித்து வைத்துகொள்ளுதல், பேப்பர் கட்டிங்ஸ் எடுத்துக்கொள்ளுதல்... இவ்வாறே கொச்சின் நகரில் ஜூட் வாழ்க்கை நகர்கிறது. தந்தை டோமினிக் இவனை 'ஜீனியஸ்' என்று அழைத்தாலும், கணிதத்தைத் தவிர, ஜுடின் மீது அப்பாவிற்குப் பெரிய நம்பிக்கையில்லை. தனது உயில் விஷயமாக கோவாவை வந்தடைகிறார்கள் டோமினிக், மரியா மற்றும் ஜூட். 

கோவா கடற்கரையோரம் 'பீட்டல்' என்ற பெயரில் கஃபே வைத்திருக்கும் பாடகி  கிரிஸ்டல் (த்ரிஷா), அவரது தந்தை மனோதத்துவ டாக்டர் செபாஸ்டியன் (விஜய் மேனன்) ஆகிய இருவரும் டோமினிக்கின் பங்களாவின் அவுட் ஹவுஸில் வசித்து வருகிறார்கள். அங்கிருந்து அவர்களைக் காலிசெய்யச் சொல்கிறார், டோம்னிக். 'அதில் சில பிரச்னைகள் இருக்கு' என வக்கீல் சொல்ல அங்கேயே தங்கி சரி செய்ய முடிவெடுக்கிறார்கள் டோமினிக் அண்ட் ஃபேமிலி. தனது மியூசிக் பேண்டுடன் ரிகர்சல் செய்துகொண்டிருக்கும்போது, மோதலில் ஆரம்பிக்கிறது கிர்ஸ்டல்-ஜூட் இடையேயான அறிமுகம். மேலே சொன்ன பிரச்னைகளுக்கு இடையில், ஜூடும், கிரிஸ்டலும் எப்படி ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்கிறாரகள், செபாஸ்டியன் அந்த வீட்டைக் காலி  செய்தாரா இல்லையா, ஜூட்டின் ஆசை நிறைவேறியதா... என்பதைப் பொறுமையாகச் சொல்கிறது, 'ஹே ஜுட்' . 

உப்பிய கன்னம், பெல்டைத் தாண்டி வந்து விழும் தொந்தி... என இருக்கும் ஜூட், நம்பர்ஸ் மீது பெரும்காதல் கொண்டவர். லவ், உணவு, கடல் மற்றும் அதை சார்ந்த விஷயங்களின் என்சைக்ளோபீடியா. பெரிதாக யாரிடமும் பேசமாட்டான் என 'ஆஸ்பெர்ஜெர்ஸ் சிண்ட்ரோம்' அறிகுறிகளுடைய கதாபாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார் நிவின். அவர் நடிப்பு வழக்கமாக இல்லாமல், வழக்கத்தைவிட அதிகமாகவே செய்திருக்கார். அவர் எமோஷனல் ஆகும்போதும் சரி, வெட்கபடும் சில இடங்களில் சரி... நமக்கே 'க்யூட்' எனச் சொல்லலாம் போலத் தோன்றுகிறது. 'தோசை மொறுமொறுனு வேணும்' என அடம் பிடிக்கிற காட்சி, 'மீன் தொட்டி வாங்கித்தர்றோம்' என்றவுடன் கோவாவுக்குக் கிளம்புவது... என நிவின் செய்யும் சேட்டைகள், பியூட்டி! 

விரல் விட்டு எண்ணக்கூடிய கேரக்டர்கள், அதற்குத் தகுந்த ஒரு அவுட்லைன் என இயக்குநர் ஷ்யாமபிரசாத் வேலையை முழுமையாகச் செய்திருக்கிறார். நிர்மல் சஹாதேவ், ஜார்ஜ் கென்னத்தின் திரைக்கதை கதைக்குத் தேர்வையான ஒரிஜினலைக் கொடுத்திருக்கிறது. இயல்பாகத் தங்களை எக்ஸ்போஸ் செய்துகொள்ளும் கதாபாத்திரங்கள், அழகான காட்சி அமைப்புகள் என இயக்குநருக்குக் கொடுக்கும் பாஸிட்டிவ் கிரிடிட்ஸைக் கொடுத்துக்கொண்டே போகலாம். விஜய்மேனன், சித்திக், நீனா குரூப் இவர்களுக்கு நடிக்கத்தெரியும் என்பதைவிட, அந்தந்த நடிப்புக்கான அளவுகோள் தெரிந்து இருப்பது கூடுதல் சிறப்பு. ஒரே காம்பவுண்டில் இருந்துகொண்டு 'டாம் அண்ட் ஜெர்ரி' போல சண்டைபோடும் காமெடி, 'செம' ரகம்!. குறிப்பாக, ஜூட் மற்றும், கிரிஸ்டல் ஏன் நண்பர்களாய் இருக்கவேண்டும் என்ற காட்சியில் இந்த மூவரின் நடிப்பும் கலங்கடிக்கிறது. ஒரு 'குளோஸர் டூ லைஃப்' படங்களில் வசனங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இயக்குநர் நன்கு புரிந்துகொண்டிருப்பதற்கு ஹாட்ஸ் ஆஃப்.  இவர் படத்தில் சொல்லும் 'மனித உணர்வுகள் நம்பர்ஸ் மாதிரி கிடையாது; நம்பர்ஸ் பொய்சொல்லாது' என்பதைப் போன்ற வசனங்கள், பொய் சொல்லாமல், உண்மையை உணர்த்துகிறது.     

ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் தனக்கு இதுதெரியும், அதுதெரியும் என அலட்டிக்கொள்ளாமல், எந்தக் காட்சிக்கு எது ஃப்ரேமில் முக்கியமோ, எது இருக்கவேண்டுமோ அதைமட்டும் காட்டியிருகிறார். (ப்ரோ, 'விஜய்-62' படத்துக்கு வெயிட்டிங்). நிவின் ஹேன்டிகேம் எடுக்கும் ஷாட்களில், கேமிரா எங்கே இருக்கிறது எனத் தேடவேண்டி இருக்கிறது. 

கோவாவின் இயற்கையான அழகை அப்படியே பின்னணியாக வைத்திருப்பது, போர்ச்சுகல் பங்களாக்களின் இன்டீரியர், ஜூட்டின் அறை, ஆன்டிக் பொருட்கள்... என செயற்கை எதுவும் தெரியாத வகையில் உழைத்திருக்கிறார், கலை இயக்குநர்.  ஆண்ட்ரியா, ஜார்ஜ் குரியன் (அஜு வர்கீஸ்), த்ரிஷாவின் மியூசிக் பேண்ட் நண்பர்கள் எனக் குறைந்த நேரங்களே வரும் கதாபாத்திரங்களும் மனதில் பதியும்படி ஃபெர்பாமென்ஸ் செய்திருக்கிறார்கள்.       

இயக்குநர் ஷ்யாம பிரசாத்தின் முந்தைய படங்களில் வேலைசெய்த ராகுல் ராஜ், ஜெயச்சந்திரன், கோபிசுந்தர், ஔசிப்பச்சன் ஆகியோர் ஆளுக்கொரு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். ஒளசிப்பச்சன் பின்னணி இசையமைத்துள்ளார். கோபி சுந்தரின் இசையில் 'ஹே லா லா' பாடல் முணுமுணுக்க வைக்கிறது. காட்சிகளின் எமோஷனுக்கு அழகு செய்யும் அளவிற்குப் பாடல்களும், பின்னணி இசையும் இருக்கின்றன.

படத்தின் அழகைப் பார்த்து, எடிட்டர் கார்த்திக் ஜோகேஷும் மயங்கி அப்படியே விட்டுவிட்டார் போலும். சில இடங்களில் இழுவையாக இருக்கு என்பதை உணராமலே இருந்துவிட்டார். படத்தின் நீளத்திற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால் ஆரம்பக் காட்சிகள் சிலவற்றிற்குக் 'கட்' கொடுத்திருக்கலாம். படம் நல்ல அனுபவத்தைக் கொடுப்பதால், நீளம் பெரிய குறையாகத் தெரியவில்லை.     

இசையும் த்ரிஷாவும் ஒண்ணுதான்... இரண்டுமே படத்தில் ஃபிரெஷ் அண்ட் ஃபீல்குட்! நிவின்பாலி ரசிகராகப் படம் பார்க்கச் சென்றால், த்ரிஷா ரசிகராக வெளியே வரலாம். தனக்கு முதல் மலையாளப் படம் என்பது தெரியாத அளவிற்கு நடித்திருந்ததும், குறைந்த அளவு மேக்அப், குட்டிக் குட்டி பிம்பிள்ஸ் என 'ஹீரோயின்' த்ரிஷா, 'நடிகை' த்ரிஷாவாக முழுமையாக டிரான்ஸ்ஃபார்ம் ஆகியிருக்கிறார். த்ரிஷாவின் காஸ்ட்யூம்களும் லைக்ஸ் அள்ளுகிறது. இந்த வருடம், த்ரிஷாவிற்குத் தமிழில் அரைடஜன் படம் இருக்கிறது. இதில்,  இந்தப்படம் மாதிரி சில படங்கள் இருந்தாலே, தமிழ் ரசிகர்களுக்கு ஜாலிலோ ஜிம்கானாதான்! 

குறைவோ, நிறைவோ வாழ்க்கையை முழுசாக் கொண்டாடணும், நாம் நாமாகவே இருந்தால் நமக்கான காதல் நம்மைத் தேடி வரும் என அன்பாகச் சொல்லும் டியூட், இந்த 'ஹே ஜூட்'!.

பின் செல்ல