Published:Updated:

“அன்புச்செழியனை விடுங்க... இன்னும் சிலபேர் இருக்காங்க அவங்களை என்ன பண்ணப்போறீங்க?” - கந்துவட்டி அத்தியாயம்-9

“அன்புச்செழியனை விடுங்க... இன்னும் சிலபேர் இருக்காங்க அவங்களை என்ன பண்ணப்போறீங்க?” - கந்துவட்டி அத்தியாயம்-9
“அன்புச்செழியனை விடுங்க... இன்னும் சிலபேர் இருக்காங்க அவங்களை என்ன பண்ணப்போறீங்க?” - கந்துவட்டி அத்தியாயம்-9

மார்ச் 1-ம் தேதியில் இருந்து எந்தப் படத்தையும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதில்லை' என்ற முடிவை ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள், நான்கு மாநில சினிமா பிரமுகர்கள். இந்த ஆலோசனையில் மிக முக்கியமாக அவர்கள் குறிப்பிடுவது, நாம் இத்தொடரில் இதுவரை பேசிய விஷயங்கள்தான்! 

* இணையதளங்களில் நடக்கும் முறைகேடான டிக்கெட் விற்பனையைத் தடுக்க, தயாரிப்பாளர்கள் சங்கமே புதிய செயலியை அறிமுகப்படுத்துவது.

* விநியோகஸ்தர்கள், திரையரங்குகளைத் தன்னிச்சையாகக் கையகப்படுத்துவதைத் தடுப்பது.

* மினிமம் கியாரண்டி அடிப்படையில் புதுப்படங்களை விநியோகம் செய்ய, விநியோகஸ்தர்களைச் சம்மதிக்க வைப்பது.

* இதுபோன்ற நடவடிக்கைகளுக்கெல்லாம் திரையரங்குகள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், மார்ச் 1-ம் தேதி முதல் ரிலீஸ் செய்வதில்லை மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் நிறுத்திவைப்பது.

இதுபோன்ற பல முடிவுகளை ஆலோசித்து வைத்திருக்கிறார்கள். இனி, இந்த அத்தியாயத்திற்கு வருவோம்... தமிழ்சினிமாவின் தரமான படங்களின் தயாரிப்பாளர் ஒருவர், தமிழ் சினிமாவை இறுக்கிப் பின்னிக்கொண்டிருக்கும் கந்துவட்டி தொடர்பான அத்தனை விஷயங்களையும் தெளிவாக அடுக்கி வைக்கிறார். இவர் சொல்லும் அத்தனை விஷயங்களையும் கேட்கும்போது,  'முதல்வன்' படத்தில் ரகுவரன் சொல்லும், 'இவரே பாம் வைப்பராம்; இவரே கண்டுபிடிப்பாராம்' என்ற  வசனம், கந்துவட்டிக்குப் பணம் கொடுக்கும் சிலருக்குப் பொருத்தமாக இருக்கும். ஏனெனில், ஒரு திரைப்படத்தின் பூஜை தொடங்கி, ரிலீஸுக்கு நடக்கும் பஞ்சாயத்துகள் வரை... இங்கே எல்லாமே குறிப்பிட்ட சில நபர்களின் கன்ட்ரோலில்தான் இருக்கிறது என்ற நிலை, தமிழ் சினிமாவின் சாபக்கேடு!

"அரசியல்வாதிகளுக்கு, ஆட்சியில எப்படியாவது 'பவர் சென்டரா' இருக்கணும்னு தோணும்ல... சினிமாவுலேயும் அப்படித்தான். கந்துவட்டிக்குப் பணம் கொடுக்கிற சிலர், 'சினிமாவே என் கன்ட்ரோல்ல இருக்கணும்'னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு அசோக்குமாரோட மரணம் எல்லாம் பெரிய பாதிப்பையோ, தாக்கத்தையோ கொடுக்காது. ஏன் தெரியுமா, அந்த 'பவர் சென்டர்' இடத்தைப் பிடிக்க அவங்க என்னவேணும்னாலும் பண்ணுவாங்க.'' என அவர் சொல்லும்போதே, தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னையின் வீரியும் புரிகிறது.

"சினிமா ஒரு பிசினஸ். அந்தத் தொழிலுக்குத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறதைவிட, அந்தப் படத்துக்குப் பணம் கொடுக்கிற ஃபைனான்ஸியர்கள் நேர்மையா இருக்கணும். அது இங்கே இல்லை. 'ஃபைனான்ஸ் வாங்காம, படம் தயாரிக்கவேண்டியதுதானே?'னு நீங்க கேட்கலாம். ஆனா, தமிழ் சினிமாவுக்குள்ளே தயாரிப்பாளரா இறங்கிப் பார்த்தாதான், 'இவங்ககிட்ட பணம் வாங்கித்தான் படம் பண்ணணும்; லாபமோ, நஷ்டமோ இந்த வட்டத்துக்குள்ளேயேதான் சுத்திக்கிட்டு இருக்கணும்னு புரியும்.

ஒரு படத்துக்குப் பூஜை போடுவோம். சாட்டிலைட் ரைட்ஸ், ஃபாரீன் ரைட்ஸ்னு ஏதாவது ஒண்ணை வித்துட்டு, வாங்குன கடனுக்கு வட்டி கொடுப்போம், படத்தோட ஷூட்டிங்கிற்கு செலவு பண்ணுவோம். திரும்பப் பணம் வேணும்னா, தியேட்ரிகல் ரைட்ஸ், அதர் லாங்குவேஜ் ரைட்ஸ்னு விற்போம். பிறகு....? மீண்டும் வட்டி அதிகமாயிருக்கும். அந்தப் பணத்தைக் கட்டுறதுக்கு வழி தேடுவோம். எல்லாம் ஓகே ஆயிடுச்சுன்னா, ரிலீஸ் பண்ணப் பணம் இருக்காது. பணம் இல்லாம ரிலீஸ் பண்ணவும் முடியாது. ஏன்னா, நாம யார்கிட்ட கடன் வாங்குறோமோ, அவர் கன்ட்ரோல்லதான் பெரும்பாலான தியேட்டர்ஸ் இருக்கும். மறுபடியும் அவர்கிட்டயே கடன் வாங்கி, தியேட்டருக்குக் கொண்டுவர்ற படம், நல்லபடியா ஓடிச்சுன்னா, எல்லாக் கடனையும் அடைச்சுட்டு, கிடைக்கிற எலும்புத்துண்டை நாம எடுத்துக்கலாம். ஒரு தயாரிப்பாளருக்குக் கிடைக்கிற அதிகபட்ச லாபம் இதுதான். விதைக்கிறதுக்குக் கடன் வாங்கிட்டு, வாங்குன கடனுக்கு ஒவ்வொரு வரப்பா வித்துக்கிட்டே வந்தா, விவசாயிக்குக் கோவணம்தான் மிஞ்சும். அந்தக் கதைதான், தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் நடக்குது.

இதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கவே வேணாம்... அதுக்கெல்லாம் நிறைய வழிகள் இருக்கு. அது எல்லோருக்கும் தெரிஞ்சும் இருக்கு. ஆனா, அதை தமிழ்சினிமாவுல நடைமுறைப்படுத்த முடியலை. காரணம்... ஏற்கெனவே சொன்ன, சிலரோட 'கன்ட்ரோல்'தான். எல்லோரும் அன்புச்செழியனைப் பத்தி மட்டுமே பேசிக்கிட்டு இருக்கீங்க. அவரைமாதிரி இன்னும் ஐந்து பெருமுதலைகள் இருக்காங்க. அவங்களையெல்லாம் என்ன பண்ணப்போறாங்க... ஒண்ணும் பண்ண முடியாது. அரசு தலையிட்டு, இதுக்கு ஒரு தீர்வு கொண்டுவந்தாதான் உண்டு. ஆனா, அரசியல்ல இருக்கிற பல பேரோட 'கன்ட்ரோல்'ல இருக்கிறவங்கதான், நான் சொன்ன அந்தப் பெருமுதலைகள். கேட்கும்போதே தலைசுத்துதா, இதுதான் நிஜம்!" என்கிறார், அந்தத் தயாரிப்பாளர். கந்துவட்டிப் பிரச்னை குறித்தும், அதைக் களைய இவர் சொல்லும் வழிமுறைகள் எளிமையானவை.

சினிமாவுக்கு என்று அல்ல, பெரும்பாலான தொழில்களுக்கு ஃபைனான்ஸ் மிக முக்கியம்தான். ஆனால், மற்ற தொழில்களுக்குப் ஃபைனான்ஸ் பெறும்போது இருக்கும் வெளிப்படைத்தன்மை, சினிமாவில் இருப்பதில்லை. அந்தத் தயாரிப்பாளரின் பார்வையில் சொன்னால், 'இருக்க விடுவதில்லை'.

'ஆமா, அதுதான் நிஜம். ஃபைனான்ஸைத் தொழிலா பண்றவங்களுக்கு அதோட நெளிவு சுழிவுகள் தெரியும். சூதாட்டமா இருந்தாலும், வடநாட்டு ஃபைனான்ஸியர்கள், அதில் ஒரு நேர்மையைக் கடைப்பிடிச்சாங்க. இங்கே நான் குறிப்பிடுற சில ஃபைனான்ஸியர்கள் செஞ்ச முதல் காரியமே, வடநாட்டு ஃபைனன்ஸியர்களைத் தமிழ்சினிமாவில் இருந்து வெளியேற்றியதுதான். இந்தத் தொடர்ல இதுக்கு முன்னாடி சிலபேர் சொன்ன மாதிரி, யாரும் வெத்துப் பேப்பருக்கு எல்லாம் பணம் கொடுக்கிறதில்லை. நான் சொன்ன ஐந்து பேரோட வேலை என்னன்னா, அரசியல்ல புரளும் பணத்தை சினிமாவுக்குள்ள இறக்கி, அதை அதிக லாபத்துல மீட்டு எடுத்து, மீண்டும் அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கிறதுதான். இவங்க எல்லோரும், கடன் வாங்காம படம் எடுக்கணும்னு நினைக்கிற சிலரையும் கடன் வாங்க வெச்சிடுவாங்க. அதுக்கு இவங்க வெச்சிருக்கிற ஒரு 'ஃபார்முலா'வை சினிமாவா எடுத்தா, அவ்ளோ சுவாரஸ்யமாவும் விறுவிறுப்பாவும் இருக்கும்!" என்கிறார், அவர்.

இதுவரை இத்தொடரில் அலசிய அத்தனை விஷயங்களுக்கும் தீர்வு என்ன, கந்துவட்டிப் பிரச்னை ஓயுமா ஓயாதா, தமிழ்சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும், டிஜிட்டல் யுகத்தில் இதற்கு மாற்று கிடைக்காதா, முக்கியமாக, இந்த அத்தியாயத்தில் இவர் சொன்ன அந்த 'ஃபார்முலா' என்ன... மிக மிக முக்கியமாக, 'கந்துவட்டி... தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா?' என்பதை இறுதி அத்தியாயத்தில் பார்ப்போம்.