Published:Updated:

'அந்தப் படத்துல ஒரே ஒரு குறைதான்..!’ - ‘ஏமாலி’ விமர்சனங்களுக்கு வி.இஸட்.துரை பதில்

'அந்தப் படத்துல ஒரே ஒரு குறைதான்..!’ - ‘ஏமாலி’ விமர்சனங்களுக்கு வி.இஸட்.துரை பதில்
'அந்தப் படத்துல ஒரே ஒரு குறைதான்..!’ - ‘ஏமாலி’ விமர்சனங்களுக்கு வி.இஸட்.துரை பதில்

'அந்தப் படத்துல ஒரே ஒரு குறைதான்..!’ - ‘ஏமாலி’ விமர்சனங்களுக்கு வி.இஸட்.துரை பதில்

ஒரு கொலை செய்யத் திட்டம் போடும்போது, உண்மையாகவே அந்தக் கொலையை செய்தால் என்னென்ன மாதிரியான விசாரணைகள் நடக்கும் என்பதை முன்கூட்டியே கற்பனையாகச் செய்து பார்த்துவிட்டு, அதிலுள்ள குறைகளைக் களைந்தபிறகு கொலை செய்யலாம் என்ற படு புத்திசாலித்தனமான ஒன்லைனை வைத்து, 'ஏமாலி' படத்தை இயக்கியிருக்கிறார் வி.இஸட்.துரை. படத்தில் பாராட்டும்படியான விஷயங்களைவிட இயக்குநரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் அதிகம் இருந்ததால், இயக்குநரிடம் பேசினோம்.

சமபால் ஈர்ப்பாளர்களைப் பற்றி சமீபமாகத்தான் தமிழ் சினிமாவில் நல்லவிதமாகக் காட்சிப்படுத்திவருகிறார்கள். ஆனால், உங்கள் படத்தில் மீண்டும் அவர்களை காமெடிக்குப் பயன்படுத்தியுள்ளீர்களே..?

’’இது சமபால் ஈர்ப்பாளர்கள் பற்றிய படம் கிடையாது. நான் அவர்களுக்காக ஒரு படத்தை முழுமையாக எடுத்து, அதில் அவர்களை காமெடியாகக் காட்டியிருந்தால் இந்தக் குறையை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், ’ஏமாலி’ படத்தின் கதை அது இல்லை. இந்தப் படத்தில் நான் வைத்த அந்த ஒரு காட்சி காமெடிக்காக மட்டும்தான். வடிவேலு ’அவனா நீ’னு சொல்லும்போது எப்படி காமெடியாக எடுத்துக்கொண்டீர்களோ, அதேபோல்தான் இந்தப் படத்தில் வரும் ’அவளா நீ’ என்ற காட்சியையும் சிரிப்பதற்காகத்தான் எடுத்தேன். இந்தக் காட்சியை நான் சீரியஸ் டோனில் வைக்கவே இல்லை. என் வீட்டிலேயும் பெண்கள் இருக்காங்க. நான் ஒருபோதும் பெண்களைத் தவறாகக் காட்டவேண்டும் என்று நினைத்ததுகூட இல்லை.’’

புதுமுக நடிகர்களை வைத்து இயக்க என்ன காரணம்..?

’’இது பெரிய ஸ்டார் காஸ்டிங்கிற்கான படம் கிடையாது. புதுமுக நடிகர்கள் மற்றும் ஒரு படம் பண்ணின நடிகர்களுக்கு, ‘நாம் பெரிய நடிகர்களாக ஆகணும்னா என்ன வேணாலும் ரிஸ்க் எடுக்கலாம்’னு ஒரு எண்ணம் இருக்கும். அப்படிப்பட்ட எண்ணம் உள்ளவங்கதான் இந்தப் படத்துக்கு தேவைப்பட்டாங்க. அதனாலதான் இந்த காஸ்ட்டிங்.’’

கதைக்கு சம்பந்தமே இல்லாத சில ஷாட்களைப் பயன்படுத்தியதற்கு என்ன காரணம்..?

’’பாலச்சந்தர் சாரோட ’அவள் ஒரு தொடர்கதை’ படத்துல ’தெய்வம் தந்த வீடு’னு ஒரு பாட்டு வரும். அந்தப் பாட்டுல சுஜாதா மேடம் ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு வந்து, ரூமுக்குள்ள போய் டிரெஸ் மாத்திட்டு வருவாங்க. இந்த சீனை ரூமுக்குள்ளே போற மாதிரியும், வெளியில வரும்போது வேற டிரெஸ்ஸில் வர்ற மாதிரியும் காட்டியிருந்தாலே ஆடியன்ஸுக்குப் புரிஞ்சிருக்கும். ஆனா, பாலச்சந்தர் சார் கேமராவை ரூமுக்குள்ள கொண்டு போயிருப்பார். அவங்க சேலையை கழட்டுற ஷாட்டும் வெச்சிருப்பார். இது இந்தப் படத்துக்கு தேவையில்லைனு பார்க்கிறவங்க நினைக்கலாம். ஆனா, ஒரு இயக்குநரா அந்த ஷாட்டை வைக்கணும்னு அவர் முடிவு செய்திருக்கிறார். அப்படித்தான் நானும் இந்தப் படத்தில் சில ஷாட்ஸ் வெச்சேன். அதெல்லாம் இயக்குநரோட சுதந்திரம், கிரியேட்டிவிட்டி. அவ்வளவுதான்.’’

சமுக வலைதளங்களில் பலரும் சொல்கிற ஒரு வார்த்தை, ‘ 'முகவரி' படம் எடுத்த இயக்குநரின் படமா இது’ என்பதுதான். அதையெல்லாம் பார்த்தீர்களா..?

’’நிறைய பேர் என்கிட்ட, ‘படத்தோட கான்செப்ட் புதுசா இருக்கு. இதுமாதிரி எந்தப் படத்திலும் நாங்க பார்க்கலை. எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ். ரொம்ப டெப்த்தான படம்’னு சொன்னாங்க. இன்னைக்கு நீங்க பேப்பர்ல பார்த்தீங்கன்னா, காதலால வர்ற பிரச்னைகள்தான் அதிகம். இனிமேல் இப்படி நடக்கக் கூடாது என்பதைத்தான் வித்தியாசமான திரைக்கதையில் சொல்லியிருக்கேன். நான் எந்த ஹாலிவுட் படத்தைப் பார்த்தும் இந்த ஒன்லைனை எடுக்கலை. இந்த ஒன்லைனை நான் யோசிச்சதும், அதுக்காக பல மாதங்கள் வொர்க் பண்ணிதான் திரைக்கதை எழுதினேன். ஏனோதானோனு ஒரு விஷயத்தைக்கூட இந்தப் படத்தில் நான் சேர்க்கலை. கஷ்டப்பட்டு நான் செய்த ஒரு விஷயத்தை பலபேர் சரியாப் புரிஞ்சுக்கலைனு நினைக்கும்போதுதான், வருத்தமா இருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் படத்தோட நீளத்தைக் கொஞ்சம் குறைச்சிருக்கலாம் என்பதுதான் குறையாகப் பட்டது. வேற எதுவும் குறையாக இல்லை. சமூகத்துக்குத் தேவையான ஒரு படத்தை கொடுத்திருக்கோம் என்கிற மகிழ்ச்சிதான் அதிகமாக இருக்கு’’ என்று சந்தோஷமாக முடித்தார் இயக்குநர் வி.இஸட்.துரை.

அடுத்த கட்டுரைக்கு