Published:Updated:

"ரெண்டே நாள்ல ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்குவாங்க... பாருங்களேன்!" - ஓர் இயக்குநரின் ஆதங்கம்

உ. சுதர்சன் காந்தி.
"ரெண்டே நாள்ல ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்குவாங்க... பாருங்களேன்!" - ஓர் இயக்குநரின் ஆதங்கம்
"ரெண்டே நாள்ல ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்குவாங்க... பாருங்களேன்!" - ஓர் இயக்குநரின் ஆதங்கம்

நிறைய இயக்குநர்கள், நடிகர்கள் எனப் புதுப்புது நபர்கள் திரைத்துறைக்குள் என்ட்ரி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான சூழலாக இருந்தாலும், சில பல பிரச்னைகளையும் சந்திக்கவேண்டியிருக்கிறது. அதனால், ஒரு நாளுக்கு ஐந்து ஆறு படங்கள் வெளியாகும் நிலை இன்றைய சினிமாவில் சாதாரணமாக இருந்து வருகிறது. அதில் பெரிய பட்ஜெட் படங்களும் சின்ன பட்ஜெட் படங்களும் அடங்கும். அந்தவகையில், கடந்த 2- ம் தேதி, 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஏமாலி', 'மதுரவீரன்', 'படைவீரன்', 'விசிறி' என ஐந்து படங்கள் வெளியாயின. 'விசிறி' படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றிமகாலிங்கம் தன் படத்திற்குத் தியேட்டர்கள் கிடைக்கவே இல்லை. நாங்கள்தான் முதலில் ரிலீஸ் தேதி அறிவித்தோம் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து அவரிடம் பேசியபோது, "நாங்க ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே பிப்ரவரி 2-ம் தேதியிலதான் ரிலீஸ் பண்ணப்போறோம்னு முடிவு பண்ணி அறிவிச்சோம். ஆனா, பெரிய ஸ்டார்களோட படங்கள் வெளியாகுதுங்கிற செய்தியைக் கடைசி நேரத்துல அறிவிச்சு நிறைய தியேட்டர்களைப் பிடிச்சிடுறாங்க. எங்க படத்துக்கு ஐநாக்ஸ், எஸ்கேப், கமலா இந்தமாதிரியான தியேட்டர்கள்ல ஒரு ஷோ கூட கிடைக்கவே இல்லை. எங்க படத்தைத் தமிழ்நாடு முழுக்க 100 தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்ண பிளான் பண்ணியிருந்தோம். ஆனா, படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முதல் நாள் ராத்திரிதான் அறுபது தியேட்டர்கள்ல படத்தை வேணாம்னு சொல்லி பெரிய படங்களைப் போட்டுட்டாங்க. அதனால், எங்களுக்கு நாற்பது தியேட்டர்கள்தான் கிடைச்சுது. அதுக்கும் தியேட்டர் மேனேஜர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதா இருந்தது. யூ-டியூப்ல முப்பது லட்சம் பேருக்கு மேல் எங்க படத்தோட டிரெய்லரைப் பாத்திருக்காங்க. படம் எந்தத் தியேட்டர்ல ஓடுதுனு பார்த்துட்டு ரொம்ப தூரத்துல இருந்தெல்லாம்கூட வந்து பார்த்துட்டுப் போறாங்க. 'பக்கத்துல எங்கேயுமே படம் போடலை'னு சொல்றாங்க. 'ஒரு தியேட்டரை வாடகைக்கு எடுத்து வாழ்ந்தாவே ஆஹா ஓஹோனு வாழலாம்போல'னு சொல்றாங்க. அந்தளவுக்கு இருக்கு இன்றைய நிலைமை. 

சின்ன படத்துக்கு ஒரு விலை, பெரிய படத்துக்கு ஒரு விலைனு ஒரே தியேட்டர்ல இரண்டு விலை நிர்ணயம் இருக்கணும். அப்போதான் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனா, அந்தச் சூழலை உருவாக்கவே மாட்டேங்கிறாங்க. அந்த நாள் மட்டும் அஞ்சு படம் வெளியாகுற மாதிரி இருக்குனா, அந்தப் படங்களோட தயாரிப்பாளர்கள் உட்கார்ந்து பேசினா, ஒரு இரண்டு படம் தேதி தள்ளிப்போகுற வாய்ப்பு இருக்கும். அந்த ஒற்றுமையும் இல்லைனா, என்னதான் பண்றது? சினிமா தயாரிப்பாளர்கள் பல வியாபாரச் சூழல் இருந்தாலும் அதைச் செய்யமுடியாம இருக்கிறதுக்குத் தடையே விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பும்தான். படத்தை ரிலீஸ் பண்றதுக்கான எல்லா செலவையும் நான்தான் பண்றேன். ஆனா, யாரோ ஒருத்தன் படம் ஓடுனாலும் ஓடாமல் போனாலும் பத்து சதவிகித கமிஷன் நமக்கு வந்திடும்னு போஸ்டரைக்கூட ஒழுங்கா ஒட்ட மாட்டேங்குறாங்க. காசு கொடுத்து வாங்கியிருந்தால் இப்படிப் பண்ணுவாங்களா? இந்தப் பிரச்னைகளுக்காகத்தான் மார்ச் மாசம் ஸ்ட்ரைக் அறிவிச்சிருக்காங்க. விஷால் தலைமையில் இருக்கிற குழுவால் கண்டிப்பா நல்லது செய்யமுடியும். ஆனா, சில பெரிய தலைகள் அவங்களைத் தடுக்குறாங்க. தயாரிப்பாளர் சங்கம் மார்ச் மாசம் பண்ணப்போற ஸ்டிரைக்கிற்கு முன் வெச்சிருக்கிற எல்லாக் கோரிக்கைகளுமே உபயோகமானதுதான். ஆனா, அது இதுனு காரணம் சொல்லி, ரெண்டே நாள்ல ஸ்ட்ரைக்கை உடைப்பாங்க பாருங்களேன். நாங்களும் போன் பண்ணி விநியோகஸ்தர்கள்கிட்ட சொல்றோம். அவங்களும் நல்லாதான் பேசுறாங்க. ஆனா, ஆள் வராத தியேட்டர்கள்ல நம்ம படமும் ஆள் வர்ற தியேட்டர்கள்ல பெரிய படங்களும் ரிலீஸ் ஆகுது. அவங்க படம் ஓடமாட்டேங்குது. நம்ம படம் பாக்கணும்னு நினைச்சாலும் ரொம்ப தூரம் போய்ப் பார்க்க வேண்டியதா இருக்கு. சிறு பட்ஜெட் படங்களுக்கு ஆதரவு கொடுக்கணும்னு மேடையில மட்டும் சொல்றாங்க. அது எல்லாமே வெறும் நடிப்புதான். பெரிய படமா இருந்தா, வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்ணலாம்னு திங்கட்கிழமைதான் முடிவே பண்றாங்க. காரணம், அவங்ககிட்ட பணம் இருக்கு. இந்தப் பிரச்னையால எனக்கு 60 லட்சம் ரூபாய் நஷ்டம். இருந்தாலும், யூ-டியூப்ல நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறதுனால, டிஜிட்டல்ல நல்லாப் போகும்னு நம்பிக்கையில இருக்கேன். " என்றபடி முடித்தார் வெற்றி மகாலிங்கம். 

சிறிய பட்ஜெட் படங்களுக்கான நற்செய்தி, இந்தச் சூழலிலாவது கிடைக்குமா?