Published:Updated:

"கமல் சார்னா பயம்... ரஜினி சார்னா பக்தி!”

"கமல் சார்னா பயம்... ரஜினி சார்னா பக்தி!”
பிரீமியம் ஸ்டோரி
News
"கமல் சார்னா பயம்... ரஜினி சார்னா பக்தி!”

அதிஷா

ரு வருட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார் டிடி. இளையராஜா, மாதவன் என அடுத்தடுத்து காபி வித் டிடி கமகமக்கிறது. வீட்டில், கால்களை அதிகம் அசைக்காமல் பொறுமையாக நடந்து வந்து வரவேற்கிறார்.

``கால் இன்னும் முழுமையா குணமாகலை. ஒரு மாசத்துல டக்குனு ரெடியாகிடுவேன்’’ என்றபடி காபியோடு உட்கார, டிடி வித் காபி ஆரம்பம்.

``நடுவுல கொஞ்சம் ஆளைக் காணோமே... எங்கே போனீங்க, என்னாச்சு?’’

``இந்த வீட்லயேதான் இருந்தேன். கால்ல கொஞ்சம் பிரச்னை, சரியா நடக்க முடியலை. சின்னச் சின்னதா சில ஆபரேஷன்ஸ்; எக்கச்சக்க ரெஸ்ட். நடக்கும்போதுகூட கடகடனு ஸ்பீடா நடக்கிற ஆள் நான். ஆனா, நடக்க முடியாம ஆகிருச்சு. எப்பவும் வலியோடுதான் இருந்தேன். எனக்கு ரெண்டு ஆப்ஷன் இருந்தன. ஒண்ணு... இதையே நினைச்சு ஃபீல் பண்ணிட்டு முடங்கிரலாம்; இல்லைனா இவ்ளோ பெரிய இடைவெளியை நிறையக் கத்துக்கப் பயன்படுத்திக்கலாம். நான் தேர்ந்தெடுத்தது ரெண்டாவது ஆப்ஷன். நிறையக் கத்துக்கிட்டேன். முக்கியமா... நிறைய டி.வி பார்த்தேன்; நிறைய புக்ஸ் படிச்சேன். எனக்குப் பிடிச்ச விஷயங்கள் நிறையப் பண்ணேன். இந்த நேரத்துலதான் என் பிஹெச்.டி வொர்க்கை ஃபுல்லா முடிச்சேன். இதோ இப்போ ரெடியாகிட்டேன். ராஜா சார் இன்டர்வியூ எப்படி... நல்லாயிருந்ததா?’’

"கமல் சார்னா பயம்... ரஜினி சார்னா பக்தி!”

``அந்த இன்டர்வியூ பற்றி ராஜா சார் என்ன சொன்னார்?''

``ராஜா சார், நார்மலா நிறையப் பேச மாட்டார். ஆனா, அன்னைக்கு என்னன்னு தெரியல, என்கிட்ட அவ்ளோ பேசினார். ஷூட்டிங்குக்கு முன்னாடியே ‘சார், கதைகள் கேட்கிறதுனா எனக்கு ரொம்பப் பிடிக்கும்’னு சொல்லிட்டேன். நிறையக் கதைகள் சொன்னார். அப்படியே ஒட்டுமொத்த செட்டும் அவர் சொல்லச் சொல்ல மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவங்க மாதிரி கேட்டு்ட்டிருந்தாங்க. ராஜா சார் இன்டர்வியூக்கு அதிகமா மெனக்கெட்டு எங்களை தயார் பண்ணிக்கிட்டோம். அதுதான் சரியா வேலை செஞ்சிருக்கு. அதனாலதான் அது அவ்ளோ ஸ்பெஷலா வந்தது.’’

`` `காபி வித் டிடி'-ல உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச பேட்டி எது?''

``எவ்வளவோ இருக்கு. எல்லாமே ரொம்ப ஸ்பெஷல்தான். காபி வித் டிடி-யோட முதல் எபிசோட்ல நயன் கலந்துக்கிட்டாங்க. அதுலதான் நான் ஃபர்ஸ்ட் டைம் அவங்களை `லேடி சூப்பர் ஸ்டார்’னு சொன்னேன். அதுக்கு அப்புறம் எல்லாருமே அவங்களை அப்படித்தான் சொல்றாங்க. அதுல எனக்கு ஸ்பெஷல் பெருமை.’’

``டிடி வாங்கின பெஸ்ட் பாராட்டு?''

``கமல் சாரை இன்டர்வியூ பண்ணும்போதுதான் நான் ரொம்பப் பயந்துபோனேன். ஏன்னு தெரியல, எப்பவும் இருக்கிறதைவிட ரெண்டு ஸ்பூன் எக்ஸ்ட்ரா பயம். அந்த இன்டர்வியூ எடுத்து முடிச்சிட்டோம். டி.வி-யில ஓடிட்டிருக்கும்போது ‘கரெக்்ட்டா பேசியிருக்கோமா... உளறிட்டோமா... ஷோ முடிஞ்சதும் நல்லா திட்டு வாங்கப்போறோமோ?’னு திக்திக்திக்னு இருக்க, கௌதம் மேனன் சார் போன் பண்ணி ‘கமல் சார் பேட்டி ரொம்ப நல்லா இருந்தது. கமல் சாரை ரொம்ப அழகா ஹேண்டில் பண்ணி,  ரொம்ப கூலா பண்ணியிருக்கீங்க’னு சொன்னார். அது எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்தது. ஏன்னா, நான் மதிக்கிற இயக்குநர்கள்ல அவரும் ஒருத்தர். அவர் படம்னா முதல் நாளே போய்ப் பார்த்துடுவேன். அதனாலேயே அந்தப் பாராட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.’’

``நீங்க பேட்டி எடுக்க விரும்புகிற ஆள் யார்?''

``இந்த வீட்டுக்கு வந்ததும் முதன்முதலில் சாமி படம்கூட மாட்டலை. அவருடைய படம்தான் மாட்டினேன். டக்குனு திரும்பி நிமிர்ந்து பாருங்க... (திரும்பிப் பார்த்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓவியம்) அவரைப் பேட்டி எடுக்கணும். ஐ லவ் ரஜினி சார்.அவரைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை, ஜஸ்ட் ஒரு முறைதான் பார்த்திருக்கேன். கோயிலுக்குப் போய் அடிக்கடி அவர் பேர்ல அர்ச்சனை பண்ணுவேன். அவர் மேல அப்படி ஒரு பக்தி. ஒரே நேரத்துல ரெண்டு படங்கள் பண்றாரு,  எவ்ளோ கெத்து. அந்த கமிட்மென்ட் சான்ஸே இல்லை. அவருக்கு அப்புறம் இளைய தளபதி விஜய் சாரை இன்டர்வியூ பண்ணணும்னுதான் ஆசை.’’

"கமல் சார்னா பயம்... ரஜினி சார்னா பக்தி!”

``அடுத்து என்ன?''

``இப்போ எடுத்த பேரை அப்படியே காப்பாத்தணும். நம்மளை இன்னும் பெட்டர் ஆக்கணும். அப்புறம் சமீபத்துல மேடி சார் கேட்டார்... ‘டிடி, நீ ஏன் ஆக்ட் பண்ண மாட்டேங்கிற?’னு. ஆனா, யாருமே வாய்ப்பு குடுக்க மாட்டேங்கிறாங்க பாஸ்.’’

 ``இல்லற வாழ்க்கை எப்படிப் போயிட்டிருக்கு?''

``கொஞ்சம் டைம் எடுத்துதான் எங்களுக்குள்ள ஒரு புரிதல் உருவாச்சு. நண்பர்களா இருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டதால ஆரம்பத்துல ஒரு கணவன் - மனைவியா நடந்துக்கவே முடியல. கல்யாணம் ஆகி ஒரே மாசத்துல கால்ல பிரச்னை ஆகிருச்சு. ஆனா, மெடிசன் வாங்கித் தர்றது, வெளியே கூட்டிட்டுப் போறதுனு பக்கத்துலயே இருந்து பார்த்துக்கிட்டார் ஸ்ரீகாந்த். நண்பனே கணவனா அமையுறது வரம். அந்த ப்ளெஸ்ஸிங் எனக்கு இருக்கு.’'