Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``ஜிகாதி கேட்ட கேள்வி, கமல் சொன்ன பதில்... இதுதான் உங்க ஸ்பெஷல்!" #5YearsOfVishwaroopam

பல படங்களின் கதைகளை ஒரு வரியில் சுருங்கச் சொல்வது சுலபம். அப்படி ஒரு வரிக் கதையாகச் சுருக்க முடியாத படம், `விஸ்வரூபம்'. டீடெயிலிங், குறியீடு... என்று உச்சம்தொட்ட இந்தப் படம் வெளியாகி இன்றோடு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.  

‘விஸ்வரூப’த்தை முதலில் டிடிஎச்சில் வெளியிடப்போகிறேன்’ என்று கமல்ஹாசன் அறிவித்ததிலிருந்து அந்தப் படத்துக்கான பிரச்னை ஆரம்பித்தது. பிறகு, ‘இது, முஸ்லிம்களின் மத உணர்வுக்கு எதிரான படம்’ என்று முஸ்லிம் அமைப்புகள் பிரச்னையை கையிலெடுக்க, அப்போதைய அதிமுக அரசு ‘விஸ்வரூபம்’ படத்துக்குத் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, ‘படத்துக்கு தடை நீக்கப்படாவிட்டால், நான் நாட்டைவிட்டே வெளியேறுவேன். கலைக்கு மதிப்பளிக்கும் வேறொரு நாட்டுக்குப் போவேன்’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேச, திரைத்துறையினர் திரண்டு வந்து கமலுக்கு ஆதரவு தெரிவித்தனர். பிறகு தடையை நீக்கக்கோரி கமல் நீதிமன்றப் படியேறினார். சில காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டபிறகு படம் வெளியானது.  

விஸ்வரூபம்

பொதுவாக கமலின் படைப்புகளில், கலை இயக்குநருக்கு அதிக வேலை இருக்கும். அப்படி இதில் ஜிஹாதி கேம்ப்களை இந்தியாவுக்குள் தத்ரூபமாக அமைத்திருந்தார் கலை இயக்குநர் லால்குடி இளையராஜா. ஃப்ரேமில் வரும் பொருள்கள்கூட கதாபாத்திரங்களாக மாற்றும் திறமை கமல் ஸ்பெஷல். அதற்கு ஓர் உதாரணம், `Charging bull' என்றழைக்கப்படும் வெண்கலச் சிற்பம். 

படத்தின் டைட்டில் முடிந்தவுடன் ஒருவர் புறாக்களுக்குத் தீனி போடுவார். அங்கிருந்து பறந்து செல்லும் புறா நேராக `Charging bull' என்றழைக்கப்படும் வெண்கலச் சிற்பத்தின் அருகில் போய் உட்காரும். 3200 கிலோக்கள் எடை, 11 அடி உயரம், 16 அடி நீளம் கொண்ட அந்தச் சிலை, நியூயார்க் நகரில் அமையப் பெற்றது. `நிதியியல், வளமை, ஆக்கிரமிப்பு' என்பதே அந்தச் சிலையின் அர்த்தம். அமெரிக்காவில் தீவிரவாதம் எப்படி ஊடுறுவியது என்பதை அதைவிட அழகாகச் சொல்லியிருக்க முடியாது. 

பின்லேடனை பிடித்ததையடுத்து, டி.வி-யில் ஒபாமா பேசும் நியூஸ் ஃப்ரேமில் அடிக்கடி வந்துபோகும். அதை நன்றாகப் பார்த்தால்,  `பெட்ரோலின் விலை 3 சதவிகிதம் உயர்வு' என்ற கீழே ஸ்க்ரோலிங் செய்தி ஓடும். பரபரப்பான ஒரு சூழலைக் காரணம் காட்டி நம் அத்தியாவசிய தேவைகளில் கை வைப்பது என்பது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பொருந்தக்கூடிய குறியீடு. மக்களின் மறதியையும், பரபரப்பையும் பயன்படுத்தி மக்கள் விரும்பாத மாற்றங்களைக் கொண்டு வரும் அரசியலை குறிப்பிட்டுச் சொல்லும் முக்கியமான குறியீடு. 

ஆரம்பத்தில், பெண் தன்மைகொண்ட மேனரிஸம், இன்னொரு பக்கம் பிரதமருடனேயே நேரடியாகப் பேசும் `ரா' உளவு அமைப்பில் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரி. ஆரம்பத்தில் விஷ்வந்த் என்று இந்து, பின் விஸாம் என்ற முஸ்லிம். அடி வாங்குவார், அடியும் கொடுப்பார்... இப்படி படம் முழுவதும் கமலை இரு கோணங்களாகவும், இருவேறு விதங்களாகவும் காணலாம். படத்தில் கமல், டபுள் ஏஜென்ட் என்பதற்கான குறியீடு இவை. இன்னும் சுறுக்கமாகச் சொன்னால், `ரெண்டும் சேர்ந்ததுதான் இவர், He's a hero, he's a villain'. 

விஸ்வரூபம்

அமெரிக்க ராணுவம், ஜிஹாதிகள் இருக்கும் இடத்தை சூறையாடி, அந்த அமைப்பைச் சேர்ந்த பல நபர்களை கொன்றிருக்கும். அதில் விரக்தியடைந்த உமர் (ராகுல் போஸ்) கமலிடம் `முஸ்லிம்கள் ஏன் உலகத்தின் எல்லா இடங்களிலுமே கஷ்டப்படுறான், உயிரிழக்கிறான், நம்ம எதுக்காகக் கண்ணீர் சிந்தணும்?' எனக் கேட்பார். அதற்கு கமல், கேள்வியில் இருக்கும் `முஸ்லிம்' என்ற வார்த்தைக்குப் பதிலாக `ஜிஹாதி' என்று கூறி `உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு, நம்ம ஜிஹாதிகள், கண்ணீர் சிந்தக் கூடாது, ரத்தம்தான் சிந்தணும்' என பதில் கூறுவார். ‘வார்த்தை மட்டும்தானே மாறியிருக்கிறது, இதிலென்ன வேறுபாடு’ என்றால், இங்குதான் கமலின் டீடெயிலிங்கைக் காண முடியும். முஸ்லிம்கள், இந்துக்களைப் போன்ற மனிதர்கள். ஜிஹாதிகள், தீவிரவாதிகள். இதுதான் கமல் தந்த பதிலுக்குப் பின்னால் உள்ள விளக்கம்.

உமர் வரும் ஒரு காட்சியில், கமலுடன் பேசிக்கொண்டே அங்கிருக்கும் புறாக்களைக் காலால் உதைப்பார். அதுவும்போக சின்னச் சின்ன மாத்திரைகளுக்குள் நியூக்ளியர் ரேடியேஷன்களை புகுத்தி, அதைப் புறாக்களின் கால்களில் கட்டி பறக்கவிட்டு நியூயார்க் நகரையே தரைமட்டமாக்க சதித் திட்டம் தீட்டுவார். இது அவர்களுக்குச் சமாதானாமே பிடிக்காது என்பதை மறைமுகமாக எடுத்துரைக்கிறது.  முக்கியமான ஒரு செயலை செய்ய முற்படும்போது, உடம்பில் இருக்கும் முடிகளை நீக்கிக்கொண்டால், அந்தச் செயலினால் உயிரிழப்பு ஏற்பட்டால் சொர்க்கத்துக்குச் செல்வார்கள் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அதனால்தான் நியூயார்க் நகரைக் காப்பாற்றுவதற்கு முன் கமல் தன் முடிகளை தானே வெட்டிக்கொள்வார். 

விஸ்வரூபம்

சங்கர் இஷான் லாய் ஆகிய மூவர் கூட்டணியின் இசையில், விஸ்வரூபம் படப் பாடல்களின் இசை, பின்னணி இசை அடுத்தகட்டத்தில் இருக்கும். இதில் இடம்பெற்றிருக்கும் ‘இவன் யாரென்று தெரிகிறதா தீ என்று புரிகிறதா’ பாடல், சமீப காலத்தில் வந்த ஆகச்சிறந்த ஹீரோவைப் போற்றும் பாடல் என்று சொல்லாம். இது தனிப்பட்ட வகையில், கமலுக்கும் இன்று பயனுள்ள வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல், ‘உன்னைக் காணாத நானிங்கு நானில்லையே’ பாடல் ஒரு மைல்கல். பாடல் வரிகளும் இசையும் காட்சியும் ஒன்றோடொன்று அவ்வளவு அழகாக பிணைந்திருக்கும். இந்தப்  பாடலுக்கு நடனம் அமைத்த பண்டிட் பிர்ஜு மகராஜுக்கும் கலை இயக்குநர் லால்குடி இளையராஜாவுக்கும் அப்போது அறிவிக்கப்பட்ட தேசிய விருது அவர்களின் உழைப்பை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு சின்னச் சின்ன காட்சியமைப்புகளில் கூட கவனம் செலுத்தி நுணுக்கமாக எடுக்கப்பட்ட `விஸ்வரூபம்' திரைப்படம், பார்க்கப்பார்க்கத்தான் பிடிக்கும், பிடிபடும். இந்த டீடெயிலிங்கை ‘விஸ்வரூபம்-2’விலும் எதிர்பார்ப்போம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்