Published:Updated:

கூவ மறந்த சேவலும் விடியாத சூரியனும்! #RockADoodle #MovieRewind

கூவ மறந்த சேவலும் விடியாத சூரியனும்! #RockADoodle #MovieRewind
கூவ மறந்த சேவலும் விடியாத சூரியனும்! #RockADoodle #MovieRewind

கூவ மறந்த சேவலும் விடியாத சூரியனும்! #RockADoodle #MovieRewind

‘பெட்டைக் கோழி கூவி பொழுது விடியாது’ என்கிற பிற்போக்குத்தனமான பழமொழி உண்டு. ஒரு சேவல் கூவமுடியாமல் போவதால், ஓர் ஊருக்கே பொழுது விடியாமல்போகிறது. வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ள அந்த ஊரை, பூனைக்குட்டியாக மாறிவிடும் ஒரு சிறுவன் எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதை சுவாரசியமாகச் சொல்வதே இந்தத் திரைப்படம். 

அந்தப் பண்ணையில் இருக்கும் Chanticleer என்கிற சேவல், மிகக் கம்பீரமான அழகும் இனிய குரலும் உடையது. இது பாடுகிற இனிமையான பாடல்களைக் கேட்டு, பல கோழிகள் மயங்குகின்றன. சேவல் இனிமையாகக் கூவிய பிறகுதான் அந்த ஊரில் சூரியன் உதிக்கும். ஆனால், சூரிய வெளிச்சம் ஊருக்குள் வருவதை விரும்பாத ஆந்தை ஒன்று, தனது மந்திர சக்தியால் கூவமுடியாதவாறு சேவலின் வாயைக் கட்டிப்போடுகிறது. கூவமுடியாத சேவலைக் கண்டு ஊர் சிரிக்க, அவமானத்துடன் தலைகுனிந்து ஊரை விட்டேபோகிறது சேவல். அடுத்த நாள், சேவல் கூவாததால் சூரியன் வரவில்லை. மாறாக, தொடர்ந்து மழை பெய்வதால் அந்த ஊரே நீரில் மூழ்கத் தொடங்குகிறது. 

இதுவரை அனிமேஷனாக வந்துகொண்டிருந்த காட்சிகள், வழக்கமான படக்காட்சியாக மாறுகின்றன. இந்தக் கதையை எட்மண்ட் என்கிற சிறுவன் படித்துக்கொண்டிருக்கும்போதே, வெளியே சத்தம் கேட்கிறது. அச்சத்துடன் எட்டிப் பார்க்கிறான். வெளியே கடும் மழை. ஊர் வெள்ள அபாயத்தில் மூழ்கும் ஆபத்தில் இருக்கிறது. பெற்றோர் இயன்றவரை அதைத் தடுப்பதற்கான போராட்டத்தில் இருக்கிறார்கள். தான் புத்தகத்தில் படித்துக்கொண்டிருக்கும் கதை வெளியே தொடர்வதை அதிர்ச்சியுடன் பார்க்கும் எட்மண்ட், சேவல் கூவினால் சூரியன் தோன்றி, மழை நின்றுவிடும் என நினைக்கிறான். 

மறுபடியும் அனிமேஷன் உலகம். எட்மண்ட் மழையைத் தடுக்க முயல்வதை அறியும் ஆந்தை, தனது மந்திரசக்தியால் அவனைச் சிறிய பூனைக்குட்டியாக மாற்றி விழுங்கப் பார்க்கிறது. அந்தச் சமயத்தில் Patou என்கிற வேட்டை நாய் வருகிறது. ஆந்தையைக் கடித்துவிட்டு எட்மண்ட்டை காப்பாற்றுகிறது. பூனைக்குட்டி வடிவில் இருக்கும் எட்மண்ட், தன்னிடமிருக்கும் வெளிச்சத்தைப் பாய்ச்சியதும் ஆந்தை பயந்து ஓடுகிறது. 

இனி, வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஊரைக் காப்பாற்ற ஒரே ஒரு வழிதான் என்பதை உணர்கிறார்கள். ஊரைவிட்டு எங்கோ சென்றுவிட்ட சேவலை, எப்படியாவது தேடி அழைத்துவந்து கூவவைத்தால் சூரியன் வரும். இவர்களின் பிரச்னைகளும் முடியும். 

பூனைக்குட்டி வடிவில் இருக்கும் எட்மண்ட், வேட்டை நாய், ஒரு புத்திசாலியான எலி, இரண்டு பறவைகள் என ஒரு கூட்டணி உருவாகிறது. சேவலைத் தேடிக் கிளம்புகிறது. ஆனால், தனது அடியாட்களை அனுப்பி இவர்களுக்கு பல்வேறு விதங்களில் இடைஞ்சலையும் ஆபத்தையும் தருகிறது அந்த வில்லங்க ஆந்தை. 

பூனைக்குட்டியால் சேவலை திரும்ப அழைத்துவர முடிந்ததா, ஊருக்கு வந்த ஆபத்து அகன்றதா, பூனைக்குட்டியாக மாறிவிட்ட எட்மண்ட் என்ன ஆனான் என்பதைச் சுவாரசியமான காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார்கள். 

Rock A Doodle, live action/animated திரைப்படம் என்பதால், அனிமேஷன் காட்சிகள் பெரும்பாலும் வழக்கமாகக் காணும் சிலதும் கலந்துவருகின்றன. எட்மண்ட் பூனைக்குட்டியாக மாறும்போது, அவனுடைய அறை அப்படியே அனிமேஷனில் மாறுவது கண்கொள்ளாக்காட்சி. 

ஷூ லேஸை கட்டிக்கொள்ளத் தெரியாமல் படம் முழுவதும் தடுமாறும் வேட்டைநாயின் சேட்டை ஒருபுறம்; ஓடும் வெள்ளத்தில் பீப்பாய்க்குள் இந்தக் கூட்டணி தப்பிச் செல்லும்போது, பதற்றம் காரணமாக அதைக் கொத்தி ஓட்டையாக்கி தண்ணீர் உள்ளே பாய்ந்து வரச் செய்துவிடும் பறவையின் அட்டகாசம் இன்னொருபுறம் எனப் பல ரகளையான காட்சிகள் படம் முழுதும் நிறைந்திருக்கின்றன. 

இது புனைவா அல்லது நிஜமா என்கிற மயக்கத்தை இறுதிக் காட்சியின் மூலம் ஏற்படுத்தியிருப்பது அருமை. மியூஸிக்கல் டிராமா என்பதால், இதில் வரும் இசையும் பாடல் காட்சிகளும் அற்புதம். (இசை: Robert Folk). குறிப்பாக, 'Sun Do Shine' என்கிற பாடல் மிக மிக இனிமையானது. புகழ்பெற்ற பாடகராக இருக்கும் சேவலின் இசைக் கச்சேரியில் நிகழும் கலாட்டாக்கள் ரசிக்கத்தக்கவை. 

‘ஞாயிறு போற்றுதும்’ என்பது முதற்கொண்டு பல இலக்கியப் பாடல்கள் சூரியனின் முக்கியத்துவத்தை ஆவணப்படுத்தியிருக்கின்றன. இயற்கையின் ஓர் அங்கம் பணிபுரியாவிட்டால், நம் உலகம் அழிந்துபோகும் ஆபத்தை நகைச்சுவையுடன் விவரிக்கிறது இந்தத் திரைப்படம். அபாரமான கற்பனை வளத்தோடும் சுவாரசியமான காட்சிகளோடும் படத்தை இயக்கியிருப்பவர் டான் ப்ளூத் (Don Bluth). 

>

குழந்தைகளோடு கொண்டாடவேண்டிய சிறப்பான திரைப்படம் இது.
 

அடுத்த கட்டுரைக்கு