
நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன்
`போன பிறவியில் நான் ஏதோ நல்லது செய்திருக்க வேண்டும், இப்படி ஒரு மனைவி கிடைக்க. இந்தப் பிறவியில், நிச்சயமாக அதைவிட நல்ல காரியம் நிறையச் செய்வேன்... அடுத்த பிறவியிலும் நீயே எனக்கு மனைவியாக அமைய' - நான்காம் ஆண்டு திருமண நாளில் மனைவி ஜெனிலியாவைப் பற்றி இப்படி கவிதையாக ட்வீட்டியிருக்கிறார் ரித்தேஷ். பதிலுக்கு ஜெனிலியாவும் `நாம நமக்காக உருவாக்கிய உலகம், மகிழ்ச்சியால் நிறைந்தது; என்றென்றைக்குமான அன்புடன் கூடியது' என ரீட்வீட்டியிருக்கிறார்.

ராகுல் காந்தியை `மக்கள் நாயக'னாக மாற்ற, சோனியா காந்தி முதல் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வரை பலரும் பல வழிகளில் முயற்சி செய்தும்... ஒன்றும் பலிக்கவில்லை.
இனி ஏழைகள் வீட்டில் சாப்பிட்டால் எடுபடாது என, வேறு ரூட் பிடித்து இளைஞர்களை மெள்ளக் கவர்கிறார் ராகுல். கல்லூரி மாணவர்களைச் சந்திக்கச் சென்றால், நார்மல் டி-ஷர்ட்டுடன் அவர்களிடம் ஜாலியாகப் பேசி, கலாய்த்து ட்ரெண்டிங் வண்டியில் ஏறி, ஏறி இறங்குகிறார். `மோடிக்கு கலர் குர்தா என்றால், ராகுலுக்கு டி-ஷர்ட்தான் சரி' என, யாரோ கொடுத்த ஆலோசனை பிக்கப் ஆக, இப்போது டி-ஷர்ட் + மாணவர்கள் என்ற காம்பினேஷனில் கவனம் செலுத்துகிறார் ராகுல்.

பாலிவுட்டில் இருந்துகொண்டு அலியா பட் பற்றி காதல் கிசுகிசு வராமல் இருந்தால் எப்படி? `அலியா பட்டுடன், `Student Of The Year' படத்தில் நடித்த சித்தார்த் மல்ஹோத்ரா டேட்டிங் போகிறார்; காதல் வளர்க்கிறார்' எனக் கிசுகிசு பரவ... படாரென ரிலேஷன்ஷிப்பை சைலன்ட் மோடில் போட்டுவிட்டார் அலியா. சித்தார்த் மட்டும் `ஐய்யய்யோ... நாங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். எங்களைச் சந்தேகப்படாதீங்க. இது யாரோ கிளப்பிவிட்ட ரூமர்' என ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார். அடுத்த மாதம் அலியா பட்டுக்கு 23-வது பிறந்த நாள் வருகிறது. அதில், சித்தார்த் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் இந்தக் கிசுகிசுவின் அடுத்தகட்டம்.


`என்னுடைய வாழ்க்கை படமாக்கப்பட்டால், நிச்சயமாக என் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்க வேண்டும். அப்போதுதான் அது சிறப்பாக இருக்கும்' என்கிறார் சாய்னா நெய்வால். சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் சாய்னா இதைக் கூற, அதே விழாவில் கலந்துகொண்ட தீபிகா, `அந்த ரோலில் நடிக்க எனக்கு மிகவும் ஆசை. நானும் சாய்னாவும் நிறைய முறை விளையாடி இருக்கிறோம். அவர்தான் நன்றாக விளையாடுவார். ஆனால், நான் நன்றாக விளையாடியதாகச் சொல்வார்' என, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். சாய்னாவின் வாழ்க்கையைப் படமாக்கும் ஐடியாவில் இருந்த மகேஷ் பட்டுக்கு, தீபிகாவை அந்த ரோலில் நடிக்கவைக்கலாம் எனும் பொறி தட்டியிருக்கிறதாம்.