Published:Updated:

“துபாயில் ஸ்டார் நைட்; சென்னையில் விருது விழா!” விஷால் அதிரடி #VikatanExclusive

“துபாயில் ஸ்டார் நைட்; சென்னையில் விருது விழா!” விஷால் அதிரடி #VikatanExclusive
“துபாயில் ஸ்டார் நைட்; சென்னையில் விருது விழா!” விஷால் அதிரடி #VikatanExclusive

“துபாயில் ஸ்டார் நைட்; சென்னையில் விருது விழா!” விஷால் அதிரடி #VikatanExclusive

கடந்த சில வருடங்களாகவே சினிமாத் துறைக்கு சோதனைக்காலம் போலிருக்கிறது. முதலில் திரையுலகின் மேல் ஜிஎஸ்டி வரியை விதித்தனர். அடுத்து, தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினர். இப்போது மார்ச் 1-ம் தேதி ஸ்டிரைக் என்று அறிவித்துள்ளனர். எப்போதும் தமிழ்சினிமா மட்டுமே போராட்டக்களத்தில் இறங்கும். இப்போது தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த சினிமாத் துறையும் போராட்டத்தில் குதிக்கப்போகிறது. அதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான  நடிகர் விஷாலிடம் பேசினோம்.

"உங்கள் வேட்புமனுவை நிராகரித்தபோதிலும் ஆர்.கே.நகர் மக்களுக்காக அறிக்கைவிட்டிருக்கிறீர்களே?" 

"நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே  ஆர்.கே.நகர் தொகுதிக்குச் சென்று இருக்கிறேன். அப்போதே புதுவண்ணாரப்பேட்டை - திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் கிராஸ் ரோடு சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு டாஸ்மாக் கடைகள் அங்குள்ள பொதுமக்களுக்கு ரொம்பவும் தொல்லையாக இருந்ததைக் கவனித்தேன். இப்போதும் அந்தத் துன்பம் தொடர்கதையாக இருப்பதைக்கண்டு வேதனையடைந்தேன். அதன் வெளிப்பாடாகத்தான் எனது அறிக்கையை வெளியிட்டேன். ஏதோ ஒரு தேர்தலில் வேட்புமனுவில் பிரச்னை ஏற்பட்டுவிட்டதாகச் சொன்னதற்காக ஆர்.கே நகர் மக்கள் நலனுக்காகப் போராடுவதை எந்தச் சூழ்நிலையிலும் கைவிட மாட்டேன். தமிழக அரசுக்கும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வான  தினகரனுக்கும் எனது நியாயமான கோரிக்கையை எடுத்து வைத்தேன்.   

“மலேசிய கலை நிகழ்ச்சி வெற்றியா, நடிகர் சங்கக் கட்டடத்தின் நிலை என்ன, உங்கள் திருமணம் எப்போது?"   

"தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய கிரிக்கெட், ஃபுட்பால், மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக முடிந்தன. தமிழ்சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினி சார், கமல் சார் பெருந்தன்மையோடு கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். மலேசியாவில் தமிழ்சினிமா உலகின் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் திரண்டுவந்து கலந்துகொண்டதையும், அங்கே நடந்த கலை நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் துபாயைச் சேர்ந்த முக்கியமானவர்கள் கண்டு ரசித்து இருக்கிறார்கள். மலேசியாவைப்போலவே கிரிக்கெட், ஃபுட்பால் விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகளை துபாயிலும் நடத்தித்தர வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே  நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கான பொருளாதாரச் சூழ்நிலை தற்போது உண்டாகியிருக்கிறது. விரைவில் நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்படும். அங்கே, வைத்து என்னுடைய கல்யாணம் நிச்சயம் நடக்கும்." 

“தென்னிந்திய சினிமாவின் ஸ்டிரைக் மார்ச் 1-ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடக்குமா?”

“தமிழ்சினிமாவிற்கு மட்டும் அதிகக் கட்டணத்தை நிர்ணயித்துள்ள கியூப் அமைப்பை எதிர்த்து நாங்கள் தனித்து ஸ்டிரைக் செய்யவில்லை. தென்னிந்தியாவில் உள்ள தமிழ், மலையாளம், கன்னடம் ஆந்திரா, தெலுங்கானா என்று அனைத்து சினிமாத் துறையினரும் ஒன்றுசேர்ந்து இந்தப் போராட்டத்தில் குதிக்கப்போகிறோம். தென்னிந்திய சினிமாத் துறையினருக்கு, கியூப் நிறுவனத்தின் பிரமுகர்களுக்குமான முக்கிய ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 7-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் சுமுகமான தீர்வு ஏற்படாததால் பிப்ரவரி 16-ம் தேதிக்குக் கூட்டத்தைத் தள்ளிவைத்திருக்கிறோம்.

திரைப்படத் துறையில் நடக்கப்போகும் இந்த ஸ்ட்ரைக்கில் புதுப்படங்களின் பூஜை, படப்பிடிப்பு, டப்பிங், எடிட்டிங், போஸ்ட் புரொடக்‌ஷன்  என எந்தப் பணிகளையும் நாங்கள் நிறுத்தப்போவது கிடையாது. திரையரங்குகளில்  புதுப்படங்கள் ரிலீஸ் செய்வது மட்டுமே நிறுத்தப்படும். உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் ஹாலிவுட் படங்களுக்கு கியூப் கட்டணம் 10,000 ரூபாய்க்கும் குறைவாக வாங்குகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தமிழ்ப் படத்துக்கும் ரிலீஸின்போது 32,000 ரூபாயைக் கட்டணமாக வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தங்கள் படங்களைத் தியேட்டரில் ரிலீஸ் செய்வதில், கியூப் செலவுக்கு மட்டுமென 80 லட்சம் பணத்தை வைத்திருக்க வேண்டும். ஆனால், நியாயமான விலை 15 லட்சம்தான். பிறகு, 80 லட்சம் ரூபாயைக் கட்டணமாக வசூலித்தால் எப்படிப் பொறுத்துக்கொள்ளமுடியும். இதுவரை பொறுத்துப் பொறுத்து சலித்துவிட்டோம். இனியும் இதைப் பொறுத்துக்கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை. ஏனெனில், தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் கியூப் கட்டணத்தைக் குறைத்துத் தரச்சொல்லி எத்தனையோ முறை நேரிலும், கடிதம் வாயிலாகவும் கெஞ்சிக்கேட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.  எங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற முன்வராத இவர்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டம். இந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்." 

“தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காக விருது விழா நடத்தப்போவதாகச் சொன்னீர்களே எங்கே, எப்போது?” 

“நடிகர் சங்கத்தின் கட்டட நிதிக்காக மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்தினோம். தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காக விருது விழா ஒன்றை 2018-ம் ஆண்டு நடத்துவோமென ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம். சென்னையில் மே 1-ம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ் சினிமா உலகத்தின் பிரமாண்டமான விருது விழா நடக்கவிருக்கிறது. அதற்கான வேலைகளை விரைவில் தொடங்கவிருக்கிறோம். மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள் அனைவரும் இந்த விழாவிலும் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.”                      

அடுத்த கட்டுரைக்கு