Published:Updated:

"விஷாலுக்கு ஒரு 'வாழ்த்து'... கமல் - ரஜினிக்கு ஒரு கோரிக்கை!" - மிஷ்கின்

"விஷாலுக்கு ஒரு 'வாழ்த்து'... கமல் - ரஜினிக்கு ஒரு கோரிக்கை!" - மிஷ்கின்
"விஷாலுக்கு ஒரு 'வாழ்த்து'... கமல் - ரஜினிக்கு ஒரு கோரிக்கை!" - மிஷ்கின்

''ஷாஜி மாதிரி என் நெருங்கிய நண்பர்கள் சிலருக்கே, இவர் என் தம்பினு சமீபத்துலதான் தெரியும். ஏன்னா, என்னதான் தம்பியா இருந்தாலும், அவனோட சுய அடையாளத்தோடதான் வளரணும்னு ஆசைப்பட்டேன். படத்தைத் தயாரிக்கிறேன்னு சொன்னேன், என்கிட்டயே 'நல்ல ஹியூமர் கதை சொல்லுங்க'னு சொன்னான். எனக்கு ஹியூமர் வராது. சவாலா எடுத்துப் பண்ணுவோமேனு எழுதிக்கொடுத்துட்டேன். 'துப்பறிவாளன்'ல டிரைவரா நடிச்சான், இயக்குநர் ஆயிட்டான். இப்போ, 'பேரன்பு' படத்துல நடிச்சுக்கிட்டிருக்கான். இனி, அவன் வாழ்க்கை அவன் கையில இருக்கு!" - தன் உதவி இயக்குநரும், தம்பியுமான ஆதித்யாவை இயக்குநராக அறிமுகப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் மிஷ்கின்.

''தம்பிங்கிற அடையாளத்தைத் தாண்டி, இயக்குநர் ஆதித்யாகிட்ட என்ன ஸ்பெஷல்?"

"நல்ல ஹியூமர் சென்ஸ் உள்ளவன். எப்படிப்பட்ட சீரியஸான சூழலையும், அவனால காமெடியா மாத்தமுடியும்; மாத்துவான். அவனோட இயல்புக்கு இந்தப் படம் நிச்சயம் பெரிய உதவியா இருந்திருக்கு. பார்த்திபன் உள்ளிட்ட சிலர்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டு, பல போராட்டங்களுக்குப் பிறகுதான், என்கிட்ட உதவி இயக்குநர் ஆனான். கஷ்டப்பட்டதுக்குப் பலன் நிச்சயம் கிடைக்கும். 'சவரக்கத்தி' ரெடியாகி 14 மாதங்கள் ஆயிடுச்சு. எப்பவும், 'நம்ம படம் எப்போ ரிலீஸ் ஆகும்?'னு கேட்டுக்கிட்டே இருப்பான். நான் சொன்னேன், 'இதான் நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை. கஷ்டம் வந்தா அனுபவி; படம் நல்லா ஓடும்போது சந்தோஷப்படு'னு சொல்லிட்டேன். ஏன்னா, 'சவரக்கத்தி'யைப் பார்க்கப்போற யாரும், 'இது மோசமான படம்'னு சொல்லமாட்டாங்கனு நம்புறேன்."

'' 'சவரக்கத்தி'யோட ஸ்பெஷல் என்ன?"

"என் வாழ்க்கையில நான் சந்திச்ச, என்னைக்குமே மறக்கமுடியாத ரெண்டு பார்பர்மேன்களை மையமா வெச்சுக் கதை எழுதினேன். ஆக்சுவலா, 'பார்பர் ஷாப்' ஒரு பெரிய பிரசார மேடை. பலவிதமான மக்கள் வருவாங்க; பலவிதமான கருத்துகளைச் சொல்வாங்க. ஆனா, அதையெல்லாம் காதுல வாங்கிக்கிற பார்பர், தலையை அழகுபடுத்துற வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருப்பார். அவர்கிட்ட இருந்து பெரும்பாலும் பதில்கள் வராது. இல்லைனா, ஏதாவது ஒரு பொய் சொல்லி பேச்சை மாத்திவிடுவார். அந்தக் கேரக்டர்தான், 'சவரக்கத்தி'யோட களம்."  

''உங்களோட படங்கள்ல ஆங்காங்கே இருக்கிற ஹியூமரையே சட்டுனு புரிஞ்சுக்கமுடியாது. இது முழுக்க காமெடிப் படம். ஆடியன்ஸுக்குப் பிடிக்குமா?"

"வருடத்துக்கு முந்நூறு படங்கள் ரிலீஸ் ஆகுது. அதுல பெரும்பாலும் காதலையும், காமெடியையும்தான் சொல்றாங்க. எனக்குனு ஒரு ஃபார்மேட் இருக்கு. என் மனதுக்கு நெருக்கமான கதைகளை, சைக்காலஜியும், ஃபிலாஸபியும் கலந்து ஆடியன்ஸுக்குக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். 'துப்பறிவாளன்' வெகுஜன சினிமாவா இருந்தாலும், அதுக்குள்ள இருந்த மையக் கதையைத்தான் எனக்கான அடையாளமா நான் பார்க்குறேன். ஒரு குழந்தைக்குத் தன் அப்பா, அம்மாவைவிட ஒரு நாய்க்குட்டிதான் பெருசா இருக்கு. நாய்க்குட்டியைக் கொன்னவன் யார்னு தெரியாதவரை... அந்தக் கேள்வி, அந்தக் குழந்தையோட  வாழ்நாள் முழுக்க நிழலா பின்தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கும். அது என்னமாதிரியான விளைவைக் கொடுக்கும்னு சொல்லமுடியாது. இந்தக் கேள்விக்கான பதிலை என் படத்துல சொல்லிட்ட பிறகு, என் மனசுக்குப் பெரிய அமைதி!. இப்படித்தான், மக்கள் ரசிக்கிறாங்களோ இல்லையோ, நான் உருவாக்குற கதையை அர்ப்பணிப்பு உணர்வோட கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். 'துப்பறிவாளன்' கதையை எழுதி முடிச்சதும் என் மனசுக்குக் கிடைச்ச அமைதி, 'சவரக்கத்தி'யிலும் கிடைச்சது. ஹியூமர், காமெடி ரெண்டும் வெவ்வேறு வகைகள். இதுக்குள்ளேயும் நிறைய வகைகள் இருக்கு. இந்தப் படத்துல 'சிச்சிவேஷனல் ஹியூமர்' அதிகமா இருக்கும். கதையின் ஓட்டத்துல, கதையின்  மிக முக்கியமான கனெக்‌ஷன், இந்த ஹியூமர்தான். படம் முழுக்க சிரிச்சுட்டு, வீட்டுக்கு வரும்போது ஒருவித பாதிப்பை நிச்சயம் கொடுக்கும்."

''படத்தோட டீஸர், டிரெய்லரைவிட, 'கத்தி எதுக்குத்தான்' பாட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். இந்தப் பாடலை எந்தச் சூழல்ல எழுதுனீங்க?"

"ஒருநாள் காலையில 5.30 மணிக்கு எழுந்ததும், அந்த வரிகள் கடகடனு கொட்டுச்சு. உடனே எழுதிவெச்சு, இசையமைப்பாளரைக் கூப்பிட்டு பாடியும் காட்டுனேன். திடீர்னு உருவானதுதான், இந்தப் பாட்டு. தவிர, 'கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்'ங்கிற வரிதான், படத்தோட கருவும்கூட. இந்த வரிகள் சும்மா ரைமிங்ல வந்துடுச்சா, உண்மையிலே இதுக்கு அர்த்தம் இருக்கானு யோசிச்சுப் பார்த்தேன், அர்த்தம் இருக்கு. ஏன்னா, பார்பர் ஷாப்ல எப்பவுமே கத்தி இருந்தாலும், அதோட வேலை அழகுபடுத்துறது மட்டும்தான். கத்தியோட மேக்ஸிமம் வேலை, தொப்புள்கொடி வெட்டுறதா மட்டும்தான் இருக்கணும்னு நினைக்கிறேன்."

"பொதுவா, படத்தோட டைட்டிலுக்கும், கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். 'சவரக்கத்தி'ங்கிற டைட்டிலை இந்தப் படத்துக்குத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன?"

"ரொம்ப சிம்பிள்... ஹீரோ ராம், கையில ஒரு பெட்டி வெச்சிருப்பார்; அந்தப் பெட்டிக்குள்ள எப்பவும் சவரக்கத்தி இருக்கும். வில்லன் 'மங்கா'வாகிய நான் எப்பவும் ஒரு வெட்டுக்கத்தியோட சுத்திக்கிட்டு இருப்பேன். சவரக்கத்தி, வெட்டுக்கத்தி... ரெண்டுல எது ஜெயிக்குதுங்கிறதுதான், கதை. தவிர, சவரக்கத்தியை நான் மிக முக்கியமான வார்த்தையா பார்க்குறேன். 'சவரக்கத்தி'ங்கிற வார்த்தையை உச்சரிச்சுப் பார்க்கும்போது, அதை ஒரு இசையா நான் உணர்றேன். அன்பின், அழகின் மிக முக்கியமான அடையாளம், சவரக்கத்தி. இப்படி எல்லாத்துக்கும் பொருந்திப்போறதுனாலதான், இந்தத் தலைப்பு!" 

''இன்டிபென்டென்ட் ஃபிலிம்ல ஹீரோவா நடிக்கிறீங்களாமே?" 

"மெயின் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். சொர்ணவேல் என் ஆத்மார்த்த நண்பர்; அமெரிக்காவில் திரைத்துறைப் பேராசிரியர். நான் அமெரிக்கா போனா, அவர் வீட்டுலதான் தங்குவேன். அவர் சென்னைக்கு வந்தா, என் ஆபீஸ்லதான் தங்குவார். 'ஒரு இன்டிபென்டென்ட் ஃபிலிம் பண்ணலாம்'னு சொன்னார். நான் திரைக்குப் பின்னாடிதான் இருக்க விரும்புனேன், முன்னாடி கொண்டுவந்துட்டார். 'சிங்காரம்'ங்கிற மீனவர் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். தவிர, ரொம்பநாள் கழிச்சு இந்தப் படத்துல உதவி இயக்குநராகவும் வேலை பார்த்திருக்கேன். படத்தை ஃபிலிம் ஃபெஸ்டிவெல்ஸுக்கு அனுப்ப முடிவு பண்ணியிருக்கோம். அங்கே அங்கீகாரம் கிடைச்சா, தியேட்டர்களிலும் ரிலீஸ் பண்ணலாம்னு பிளான்."

"ஒரு படைப்பாளியா, தொடர்ந்து உங்களைத் தக்கவைத்துகொள்ள என்னென்ன பண்றீங்க?"

"கடந்த ஆறு வருடமா, நிறைய கவிதைப் புத்தகங்களைத் தேடிப்பிடிச்சுப் படிக்கிறேன். மொழியை அழிச்சுட்டா, என்ன மீனிங் கிடைக்குமோ... அதைக் கவிதைகள் கொடுக்குது. 'பிரபல நாவல்கள்'னு அடையாளப்படுத்தப்படாத, ஸ்பானிஷ், அர்ஜென்டினா, யூரோப்னு 100 நல்ல நாவல்களைத் தேடிப்பிடிச்சுட்டேன். எல்லாமே 1030-களில் எழுதப்பட்ட நாவல்கள். இதையெல்லாம் அடுத்த ரெண்டு வருடத்துல படிச்சு முடிச்சிடணும்னு பிளான். இசையைக் கேட்கலை; ஒருவேளை, இளையராஜாகிட்ட வொர்க் பண்ணா அந்தப் பிரச்னை தீர்ந்திடும்னு நினைக்கிறேன்."

"விமர்சகர்கள் 'க்ளிஷே'னு சொல்ற விஷயங்களை, நீங்க உங்க 'ஸ்டைல்'னு சொல்வீங்க. ஆனா, அதைத் தவிர்த்து மிஷ்கின்கிட்ட இருந்து சமகால அரசியல், வாழ்வியல் சார்ந்த சினிமாக்களையெல்லாம் எதிர்பார்க்கமுடியாதா?"

"ஒரு கதையை எழுதி முடிச்சாலே, அது அரசியல் படம் ஆயிடும். ஏன்னா, அதுல கேள்வி இருக்கும், பதிலுக்கான தேடல் இருக்கும், கடைசியில விடை இருக்கும். 'யுத்தம்செய்' மிகக் கடுமையான அரசியல் படம்தான். 'சவரக்கத்தி'யும் அரசியல் படம்தான். நான் மனிதர்களோட உளவியலுக்குள்ளே டிராவல் பண்றதைத்தான் விரும்புறேன். அதனால, என் படங்கள்ல அரசியல், மேலோட்டமா இருக்காது. இதைத் தெரிஞ்சேதான் தவிர்க்கிறேன். 'இந்தக் கட்சியில என்ன பிரச்னை, அந்தக் கட்சியில என்ன பிரச்னை, இன்னைக்கு அந்த சாமியார் என்ன பண்ணார்' இதையெல்லாம் யோசிக்கவே எனக்குப் பிடிக்கலை. ஏன்னா, எல்லோரும் இதைத்தானே பார்த்துக்கிட்டு இருக்காங்க. நான், ஒரு படத்துல பல கதைகளை அடுக்குவேன். மேலே மென்மையான ஒரு கதையைச் சொன்னா, அடியில இன்னொரு கதை பின்தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கும். அதுக்கும் கீழே, அரசியல் இருக்கும். சுருக்கமா சொன்னா, என் படங்களில் இருக்கும் அரசியலை உறிச்சுப் பார்த்தாதான் தெரியும்."

"ரஜினி, கமல், விஷால்... சினிமா டூ அரசியல் என்ட்ரி அதிகமாயிட்டே இருக்கே?"

"இந்தக் கேள்விக்கு நான் ரெண்டு பதிலைச் சொல்லலாம். ஒண்ணு, 'கருத்துச் சொல்ல விரும்பலை'னு தவிர்க்கலாம். ஆனால், நான் அப்படிப் பண்ணமாட்டேன். ஏன்னா, ரஜினியும் கமலும் இருக்கிற திரைத்துறையிலதான் நானும் இருக்கேன். ஜனநாயக முறைப்படி யாரும் அரசியலுக்கு வரலாம். அவங்களும் வரட்டும். வந்து, மக்களுக்கு நல்லது பண்ணட்டும். நான் சினிமாக்காரன், இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த முக்கியமான பொறுப்பா, நல்ல படைப்புகளைக் கொடுக்கிறதைத்தான் பார்க்கிறேன். ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்தா, 'மக்களுக்கு நல்லது பண்ணட்டும்'னு இந்தப் பேரண்டத்தை வணங்கிக்கிறேன்."

"உங்க ஹீரோ, விஷாலோட அரசியல் செயல்பாடுகளைக் கவனிக்கிறீங்களா?" 

"தேர்தல்ல நிற்கப்போறேன்னு மனு கொடுத்துட்டு வந்து, எனக்குப் போன் பண்ணிச் சொன்னான், விஷால். சிரிப்பும், ஆச்சர்யமுமாதான் இருந்தது. எனக்கு விஷாலைப் பத்தித் தெரியும். திடீர்னு ஒரு முடிவு எடுப்பான்; எந்தக் கான்ஸியஸும் பண்ணாம எடுப்பான். அதனால, 'சரிடா, வாழ்த்துகள்'னு சொன்னேன். அவனோட முடிவுல எனக்கு உடன்பாடு இல்லை. ஆனா, முடிவு எடுத்தபிறகு அவனோட சுதந்திரத்துல நாம தலையிடக் கூடாது. முன்னாடியே கேட்டிருந்தா, 'உனக்கு இருக்கிற ஆயிரத்தெட்டு பிரச்னையில, இதுவேற தேவையா?'னு கேட்டிருப்பேன். ஏன்னா, அவன் நிறைய படங்கள்ல நடிக்கிறான், உடம்பைக் கவனிக்கிறதே இல்லை, வீட்டுல அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்றாங்க. அதனால, அவனோட அரசியல் செயல்பாடுகளுக்கும் என்னால 'வாழ்த்துகள்' மட்டும்தான் சொல்லமுடியும்."