Published:Updated:

''அந்த ரெண்டு ஹீரோயின்தான் உதயநிதிக்கு பொருத்தம்!" - கிருத்திகா உதயநிதி

சனா
''அந்த ரெண்டு ஹீரோயின்தான் உதயநிதிக்கு பொருத்தம்!" - கிருத்திகா உதயநிதி
''அந்த ரெண்டு ஹீரோயின்தான் உதயநிதிக்கு பொருத்தம்!" - கிருத்திகா உதயநிதி

" 'காளி' படம் விஜய் ஆண்டனி வாழ்க்கையில் கண்டிப்பா முக்கியமான படமா இருக்கும். இதுக்காக நிறைய உழைப்பை எங்க டீம் கொடுத்திருக்கு'' எனப் பேச ஆரம்பிக்கிறார், இயக்குநர் கிருத்திகா உதயநிதி. படத்தின் அப்டேட்ஸ் பற்றி அவரிடம் பேசினோம். 

'காளி' ஷூட்டிங் ஸ்பாட்டில்  நான்கு ஹீரோயின்களை எப்படி வைத்து சமாளித்தீர்கள்?

``நான்கு பேருக்குமே காம்பினேஷன் இல்லை. அதனால் எனக்கு பெருசா எந்தவொரு பிரச்னையும் வரலை. சவாலான விஷயம் அப்படினா, நாலு பேருகிட்டேயும்  கதை சொல்லி, எல்லோருக்கும் படத்திலே முக்கியமான ரோல்னு சொல்லி கால்ஷீட் வாங்கினதுதான். படம் பாக்கும்போதும் நாலு பேரையும் ஆடியன்ஸுக்குக் கண்டிப்பா பிடிக்கும்.'' 

படத்தில் நடித்த நான்கு கதாநாயகிகளை நீங்கதான் செலக்ட் செய்தீர்களா?

``இவங்க நாலு பேரையும் நான்தான் செலக்ட் பண்னேன். விஜய் ஆண்டனி சில ஹீரோயின்களைப் பரிந்துரை பண்ணாலும், 'இல்லை, உங்க டேஸ்ட்டும் என் டேஸ்ட்டும் இந்த விஷயத்துல ஒத்துவராது'னு சொல்லிருவேன். இந்தப் படத்துக்காக விஜய் ஆண்டனி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். சுனைனா, அஞ்சலி இந்தப் படத்திலே நடிக்கணும்னு அப்படி உறுதியா இருந்தேன். அஞ்சலிக்குதான் கொஞ்சம் கால்ஷீட் பிரச்னை வந்துச்சு. சமாளிச்சு நடிச்சார்.'' 

ஃபாத்திமா விஜய் ஆண்டனிக்கும் உங்களுக்குமான நட்பு?

``ரொம்ப ஃப்ரெண்ட்லி. இந்தப் படத்தோட ஷூட்டிங்  ஸ்பாட்ல இயக்குநர், தயாரிப்பாளர், தயாரிப்பு நிர்வாகி... எனப் பலரும் பெண்கள்தான். பாவம், விஜய் ஆண்டனிதான் தனியா இருந்தார். பலநேரம் படத்தோட டிஸ்கஷன் விஜய் ஆண்டனி வீட்டின் டைனிங் ஹாலில்தான் நடக்கும். விஜய் ஆண்டனி ரொம்ப டெடிகேஷன். இன்னும் ஐம்பது டேக் போகணும்னு சொன்னாலும், ரெடியா இருப்பார். 

அனிருத், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி என மூன்று இசையமைப்பாளர்களிடம் வேலை பார்த்த அனுபவம்?

நான் ரொம்ப லக்கினு ஃபீல் பண்றேன். 'வணக்கம் சென்னை', 'சதையை மீறி', 'காளி' என நான் வேலை பார்த்த எல்லா படங்களிலும் மியூசிக் ஸ்பெஷல். எனக்கு இசை ஞானமெல்லாம் அவ்வளவா இல்லை. ஆனா, எனக்குக் கிடைச்ச மியூசிக் டைரக்டர்ஸ் ரொம்ப திறமைசாலிகள். அனிருத் எப்போவுமே யூத் ஃபுல்லாகத்தான் இருப்பார். அவருடன் வேலை பார்க்கும்போது நமக்கும் அந்த யங் ஃபீலிங் கிடைச்சிரும். 'சொடக்கு மேல' பாட்டைக் கேட்டுட்டு அவருக்கு மெசேஜ் பண்னேன். நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் சேர்ந்து வொர்க் பண்ண வெயிட் பண்ணிட்டு இருக்கோம். சந்தோஷ் நாராயணனுடன் 'சதையை மீறி' ஆல்பம் பண்ணினேன். இது ரொம்ப சென்சிட்டிவான விஷயம். சமூக விஷயத்தைச் சொல்லும்போது, 'கடமையே'னு பண்ணிடக் கூடாது. அதேநேரத்தில் தப்பாகவும் பண்ணிடக் கூடாதுனு அர்ப்பணிப்போடு வொர்க் பண்ணார், சந்தோஷ். விஜய்ஆண்டனிகூட வொர்க் பண்ணும்போது கம்ஃபர்ட் ஜோன் கிடைக்கும். ஒரு பாட்டு பிடிச்சிருக்கா, இல்லையானு சொல்ற சுதந்திரத்தை விஜய் ஆண்டனி இயக்குநர்கள்கிட்ட கொடுத்திடுவார்.''  

'வணக்கம் சென்னை' படத்துக்குப் பிறகு திடீரென்று திருநங்கைகளுக்கான ஆல்பம் பண்றதுல களமிறங்கிட்டீங்களே? 

``ஒரு என்.ஜி.ஓ அமைப்பின் மூலமாகத்தான் திருநங்கைகள் பற்றிய விழிப்புஉணர்வுக்காக  'சதையே மீறி' ஆல்பம் பண்ணேன். இந்த என்.ஜி.ஓ அமைப்பு திருநங்கைகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செஞ்சுக்கிட்டு வர்றாங்க. அவங்களே அவ்வளவு பண்ணும்போது, நாமும் ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. இந்த ஆல்பத்துக்காக வடசென்னை, சூளைமேடு ஏரியாவில் இருக்கிற ஐம்பது திருநங்கைகளை அவங்கே வீட்டுக்கே போய் பார்த்தேன். அப்புறம்தான் இந்த ஆல்பத்துக்கான கதையை ரெடி பண்ணேன். திருநங்கைகள் குழந்தையாக இருக்கும்போதுதான் தங்களுக்குள்ளே ஏற்படுற மாற்றத்தை உணர்வாங்க. அப்போ, பெற்றோர்கள் அவங்க உணர்ச்சியைப் புரிஞ்சுக்காம, வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுறாங்க. இது எந்த விதத்திலேயும் நியாயமே இல்லை!"

உதயநிதிக்கு ஏத்த ஜோடினு யாரைச் சொல்வீங்க?

``ஹன்சிகாவுடன் இரண்டு படம் பண்ணியிருக்கார். ஹன்சிகாவுக்கும், இவருக்கும் ஓரளவுக்கு கெமிஸ்ட்ரி ஒத்துப்போகும். அதேமாதிரி நயன்தாராவுக்கும் இவருக்கும்கூட ஸ்கீரீன் ஃபேஸ் நல்லாயிருக்கும். ஸ்கிரீன்ல ரெண்டுபேருமே அவருக்கு ஏத்த ஜோடிதான்.''  

எந்த ஹீரோவை இயக்க ஆசை?

``விக்ரம் சாரோட வொர்க் பண்ணணும்னு ரொம்ப ஆசை. அவருடைய ஆக்டிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'எப்படியாவது விக்ரம் சாருக்குக் கதை ரெடி பண்ணணும்'னு அடிக்கடி நினைப்பேன்.'' 

உங்கள் கணவர் படத்தில் கேமியோ ரோல் கிடைச்சா, நீங்க நடிப்பீங்களா? 

``கண்டிப்பா மாட்டேன். கேமரா முன்னாடி நிற்கிறதுன்னாலே நமக்கு அலர்ஜி. அதனால, முக்கியமான கேரக்டர் கிடைச்சாலும் நடிக்க மாட்டேன்.''  

தற்போது இருக்கும் அரசியல் மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீங்க?

``அரசியல் குடும்பத்துல இருக்கேன்னுதான் பேர். ஆனா, எனக்கு வெளியே நடக்கிற அரசியல் பத்தி எதுவுமே தெரியாது. சிலசமயம் என் உதவி இயக்குநர்களே, 'மேடம், உங்க கட்சியில இப்படி ஆயிடுச்சாமே, அப்படி ஆயிடுச்சாமே'னு கேட்பாங்க. 'அப்படியா?'னு கேட்டுட்டு நகர்ந்திடுவேன். என் ஃப்ரெண்ட்ஸ் சிலபேர்கூட அடிக்கடி கிண்டல் பண்ணுவாங்க. சினிமாவைத் தவிர, வேற எதுலேயும் நான் கவனம் செலுத்துறது இல்லை.''