“நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் இயக்குநர் சற்குணம்!”  'களவாணி' பட தயாரிப்பாளர் நசீர் குற்றச்சாட்டு #VikatanExclusive

‘இந்த ஆனிபோய், ஆடிபோய் ஆவணி வந்துச்சுனா அவன் டாப்பா வருவான்னு பட்டிக்காட்டு ஜோசியர் சொல்லிப்புட்டார். நீங்க வேணா பாருங்க, அதெல்லாம் அவன் டாப்பா வருவான்...’ இந்த வசனம் மட்டுமல்ல, ‘களவாணி’யை இயக்கி அறிமுகமான சற்குணம், தயாரிப்பாளர் நசீர், அதில் நடித்த விமல், ஓவியா, சூரி... உள்பட பலர் டாப்பாக வந்தனர். அப்படி டாப்பாக வந்து நட்பாக இருந்த தயாரிப்பாளரும் இயக்குநரும்தான் தற்போது முட்டிக்கொண்டு நிற்கின்றனர். காரணம், தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கும் ‘பார்ட்-2’ கலாசாரம். 

களவாணி

முதலில் இந்தப் படத்தைத் தயாரித்த நசீர் பற்றிய ஓர் அறிமுகம். இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான 'மெட்ராஸ் டாக்கீ’ஸில் தயாரிப்பு நிர்வாகியாக 11 ஆண்டுகள் வேலை பார்த்தவர் நசீர். 'அலைபாயுதே' பட வெற்றிக்குப் பிறகு மாதவனின் கால்ஷீட் தேதிகளை கவனித்துக்கொண்டார். பிறகு த்ரிஷாவின் மேனேஜர். இப்படி இருந்த நசீர் தயாரித்த முதல் படம் 'களவாணி’. அது, நல்ல படம் என்ற பெயரையும், நல்ல வசூலையும் கொடுத்தது. இந்த நிலையில் ஊரெல்லாம் பார்ட்-2 பண்ணிக்கொண்டிருக்கும்போது, நாமும் ‘களவாணி’க்கு பார்ட்-2 எடுப்போம் என்ற முயற்சியில் இயக்குநர் சற்குணமும் தயாரிப்பாளர் நசீரும் இறங்கினர். 

இந்த நிலையில், தயாரிப்பாளர் நசீரிடமிருந்து பத்திரிகையாளர்களுக்கு மெயில் மூலம் ஒரு தகவல் அனுப்பப்பட்டது. அதில், ‘எனது தயாரிப்பு நிறுவனமான ஷெராலி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "களவாணி" மற்றும் "எத்தன்" படங்களுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றிப்படங்களாக்கிய அனைவருக்கும் நன்றிகள். தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் "வதம்" எனும் படத்தை தயாரித்து வருகிறேன். இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.

களவாணி

மேலும் விரைவில் "களவாணி 2" படத்தைத் தயாரிக்கவுள்ளேன், இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் தெரிவிக்கிறேன். "களவாணி 2" படத்திற்கான படத்தலைப்பின் உரிமையைத் தயாரிப்பாளர் சங்கத்தில் 17/01/2018 அன்று முறையே பதிவு செய்து ஒப்புதல் பெற்றுள்ளேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

நசீரும் சற்குணமும் இணைந்துதான் ‘களவாணி’க்கு பார்ட்-2 பண்ணுகிறார்கள் என்று தகவல் வந்த நிலையில், எதற்கு இந்த திடீர் மெயில் என்று சந்தேகம் எழுந்தது. அந்தச் சமயத்தில், விமல்-ஓவியா நடிக்க சற்குணம் ‘கே-2’ என்ற படத்துக்கான படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் என்று சற்குணம் தரப்பிலிருந்து புகைப்படங்களுடன் கூடிய தகவல் வந்தது. இதன்மூலம், நசீர், ‘களவாணி’ என்கிற தலைப்பை தராததால், ‘கே2’ என்ற பெயரில் சற்குணம் படம் எடுக்கிறார் என்பதையும் அதனால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. 

இதுகுறித்து தயாரிப்பாளர் நசீரிடம் பேசினோம். “நான் மாதவன்சாருக்கு கால்ஷீட் பார்த்துக்கொண்டு இருந்த சமயத்தில், ‘நான் டைரக்டர் விஜயிடம் உதவி இயக்குநரா இருக்கேன். மாதவன் சார்க்குப் பொருத்தமான கதை வெச்சிருக்கேன்...' என்று சற்குணம் என்னை முதலில் அணுகினார். அப்போது அவர் சொன்ன கதையைக் கேட்டேன். 'இது விஜய்சார் மாதிரியான மாஸ் ஹீரோ செய்யவேண்டிய படம், மாதவன் சார்க்கு சரியா வராதுனு நினைக்கிறேன்’னு சொன்னேன். அப்போது, ‘இதைத்தவிர வேற கதை ஏதாவது வெச்சிருக்கீங்களா’னு கேட்டேன். அப்போது அவர் என்கிட்ட சொன்னதுதான், ‘களவாணி’ கதை. அது எனக்கு முன், 10 முன்னணி தயாரிப்பாளர்கள்ட்ட சொல்லி நிராகரிக்கப்பட்ட கதை. எனக்கென்னவோ அந்தப் படத்தை தயாரிக்கணும்னு தோணுச்சு. 

களவாணி

சற்குணம், இயக்குநர் விஜய் சார்ட்ட ஒரே ஒரு படத்தில் மட்டுமே உதவி இயக்குநரா வேலை பார்த்திருந்தார். ஆனாலும் அவர் திறமையானவர்னு உணர்ந்தேன். எல்லாத்தையும் கடந்து அவரின் நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால மற்ற எதையும் பெரிதா எடுத்துக்காம ‘களவாணி’ கதையை நானே தயாரிச்சேன். படமும் மிகப்பெரிய வெற்றியை அடைஞ்சது. அந்த வெற்றிக்கு கதையும், அதில் அடிநாதமா இருந்த நகைச்சுவையும் முக்கியமான காரணம். 

இந்தச் சமயத்தில் நானும், சற்குணமும் சேர்ந்து அதே 'களவாணி' டீமுடன் சேர்ந்து 'களவாணி-2' எடுப்பதா போன வருஷம் அறிவிச்சோம். 2017 அக்டோபர் மாசம் எங்க டீம் போட்டோவுடன் நாளிதழ்கள்ல செய்தியும் வந்தது. அந்தப்பட டெக்னீஷியன்கள் எல்லாம் அந்தச் செய்தியைப் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகிட்டாங்க. இதே சற்குணமும், களவாணி மாதிரியே அதோட அடுத்த பாகத்தையும் பிரமாதமா எடுப்போம்னு என்கிட்ட சொன்னார். நாங்கள் எல்லோரும் ஒண்ணா திட்டமிட்டு பரபரப்பா இயங்கிட்டு இருந்தோம். 

இதுக்கிடையில், ‘கதையை ரெடி பண்ணிட்டீங்களா’னு நான் சற்குணத்தை தொடர்ந்து போன் பண்ணி கேட்டுட்டே இருப்பேன். 'இதோ, சொல்லிடுறேன்... அதோ சொல்லிடுறேன்’னு சொல்லி இழுத்துக்கிட்டே இருந்தார். ஆனால் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு என்னுடன் பேசுவதை சற்குணம் நிறுத்திவிட்டார். நான் போன் பண்ணினால் அவர் அழைப்பை ஏற்பது இல்லை. எனக்கு வருத்தமாக இருந்தது.  

களவாணி

கடந்த 10 நாள்களுக்கு முன் திடீரென என்னைப் பார்க்க வந்தார். “ ‘களவாணி-2' படத்தை நானே சொந்தமாக தயாரிக்கப்போறேன் சார்” என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்றதுக்கு முன்பேயே, “ 'களவாணி-2' டைட்டிலை எனக்கு கொடுங்க சார்” என்றார். சற்குணத்தின் இந்த மாறுபட்ட பேச்சு எனக்கு ஏமாற்றத்தை தந்துச்சு. அந்த வருத்தத்துல, ‘வேணும்னா படத்தை நீங்களே தயாரிச்சுக்கங்க. ஆனா, 'களவாணி-2' டைட்டிலை தரமாட்டேன்'னு சொல்லிட்டேன். அடுத்த பார்ட் எடுப்போம்னு கடந்த ஒரு வருஷமா என்கிட்ட நல்லவிதமா பழகி வந்த சற்குணம் எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டார்னுதான் சொல்லணும். 

இப்ப முதல் பாகத்தில் நடிச்ச அதே  ஆர்டிஸ்ட், டெக்னீஷியன்களுடன் 'k-2' என்ற தலைப்பில் படமெடுப்பதாக விளம்பரப்படுத்தியிருக்கார். எதுக்காக இப்படி உதாசீனப்படுத்தினார்னு இப்பவரை எனக்குப் புரியலை. சினிமா நண்பர்கள் பலர் எனக்கு போன் பண்ணி, ஏதோ துக்கம் விசாரிப்பதுபோல் விசாரிக்கிறது வேதனையைத் தருது. 'களவாணி' படப்பிடிப்பின் போதோ, ரிலீஸின் போதோ எனக்கும் சற்குணத்துக்கும் எந்தவிதக் கருத்து வேறுபாடுகளும் வந்ததே இல்லை. ஒருவேளை 'களவாணி-2' படத்துக்கு என்னிடம் அதிகச் சம்பளம் டிமாண்ட் பண்ண முடியாதோனு யோசிச்சிருப்பாரானும் புரியலை. இப்படி என்ன ஏதுனு சொல்லாமலேயே விலகினதால் ஏற்பட்ட வலிக்கு அவர் என்ன பதில் சொல்லுவார்? 

களவாணி

முதன்முதலில் சினிமாவுக்கு வந்து முதல்படம் இயக்கும் வாய்ப்பை வழங்கும் தயாரிப்பாளரை அந்த இயக்குநர் தலையில் வைத்து கொண்டாட வேண்டாம், தரையில் போட்டு மிதிக்காமல் இருந்தாலே போதும்” என்று வருத்தத்துடன் முடித்தார் நசீர். நசீரின் கேள்விகளுக்கு சற்குணத்தின் பதில் என்ன என்பது குறித்து அறிய, அவரை அலைபேசியில் அழைத்தோம். ஆனால் சற்குணம் நம் அழைப்பை எடுக்கவில்லை. இது தொடர்பாக திரு சற்குணம் விளக்கமளிக்க முன்வந்தால், பரீசிலனைக்குப் பின் வெளியிடத் தயாராக இருக்கிறோம்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!