Published:Updated:

'அந்த டிஸ்க்ளைமர்லாம் டூ மச்!' - 'கலகலப்பு 2' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
'அந்த டிஸ்க்ளைமர்லாம் டூ மச்!' - 'கலகலப்பு 2' விமர்சனம்
'அந்த டிஸ்க்ளைமர்லாம் டூ மச்!' - 'கலகலப்பு 2' விமர்சனம்

தனக்குச் சொந்தமான பூர்வீகச் சொத்தைத் தேடி காசிக்கு வரும் ஜெய்... காசியில் ஒரு பாடாவதி மேன்ஷன் நடத்தும் ஜீவா... ஒரு பொருளைத்தேடி அடியாள்களோடு காசிக்கு வரும் ஓர் அரசியல்வாதி... போலிச் சாமியார் யோகி பாபு... இவர்களுக்கும் சென்னையில் இருக்கும்  சீட்டிங் சாம்பியன் சிவாவுக்கும் என்ன சம்பந்தம்? என்கிற கதையைத் தன் டிரேட்மார்க் காமெடி- க்ளாமர் காக்டெய்ல் கலந்து கலகலப்பாக்கி தந்திருக்கிறார் சுந்தர்.சி.

அதே டெய்லர் அதே வாடகை என்பதுபோல ’கலகலப்பு1’-ன் டெம்ப்ளேட்டை எடுத்துவைத்துக் கதை பண்ணி இருக்கிறார். முதல் பாகத்தில் வந்த கேரக்டர் பெயர் முதற்கொண்டு அதே அதே! விமல்-மிர்ச்சி சிவாவுக்குப் பதில் இதில் ஜீவா- ஜெய். அஞ்சலி, ஓவியாவுக்குப்பதில் கேத்ரின் தெரஸா, நிக்கி கல்ராணி, சந்தானத்துக்குப் பதில் மிர்ச்சி சிவா, இளவரசு கேரக்டருக்குப் பதில் விடிவி கணேஷ்... அவ்வளவு ஏன் அந்த கூகுள் நாய்க்குப் பதிலாக சுகர் எனும் நாய் வரை உல்ட்டா புல்ட்டாதான்!  லொக்கேஷனை மட்டும் காசிக்கு மாற்றி கதையை கலர் ஜெராக்ஸ் அடித்திருக்கிறார்.

படத்தில் நடித்தவர்கள் பட்டியலை எழுத அரைக்குயர் நோட்டு தேவைப்படும். ஆனால், அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிட்டு ஒற்றை ஆளாக ஸ்கோர் செய்வது மிர்ச்சி சிவா மட்டும்தான்.முதல் பாகத்தில் சந்தானம் பண்ணிய அல்ட்டிமேட் வெட்டுப்புலி காமெடியை  இதில் மிர்ச்சி சிவா `இட்டு' நிரப்புகிறார். பாதி படத்தில் வந்தாலும் காமெடியில் ஊசிப்பட்டாசு ஒன்லைனர்கள் கொளுத்தி சிரிக்க வைச்சதுக்கு நன்றி ப்ரோ! 

தனது பூர்வீகச் சொத்தை தேடி வரும் ஜெய், நிக்கி கல்ராணி மேல் காதல் கொள்வது, தனது தங்கையை சதீஷுக்கு கல்யாணம் செய்துவைத்து, சதீஷின் தங்கை கேத்ரின் தெரசாவை கல்யாணம் செய்ய நினைக்கும் ஜீவா என இவர்களின் காதல் ப்ளஸ் காமெடி போர்ஷன் ஓரளவு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள் ஜெய் மற்றும் ஜீவா. இருவருக்கும் சமமான அளவு முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளார் சுந்தர்.சி.

கமர்ஷியல் பட ஹீரோயின்களுக்கே உண்டான வரைமுறையில் வந்து போகிறார்கள் நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா. அழகான தாசில்தாராக நிக்கி கல்ராணி கொஞ்சம் பூசினாற்போல இருக்கிறார். கேத்ரின் தெரஸா செம க்யூட் எக்ஸ்பிரஷன்களில் அள்ளுகிறார்.  பாடல் காட்சிகளில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கின்றன இந்த ரெண்டு பொம்மைகளும்!. க்ளைமேக்ஸில் இவர்கள் போடும் சண்டை, எக்ஸ்ட்ரா போனஸ்.

காசியின் இன்னொரு முகத்தை அழகியலோடு படமாக்கியிருப்பது ஆஸம். காசி என்றாலே அகோரி சாமியார்கள், எரியூட்டப்படும் சடலங்கள் என இருட்டாகக் காட்டாமல் கலர்ஃபுல் ரங்கோலி ஆட்டம் ஆடியிருக்கிறது யூ.கே.செந்தில் குமாரின் கேமரா. முருகா விலாஸை காண்பிக்கும்போதெல்லாம் ஆர்ட் டைரக்டர் பொன்ராஜ் குமார் கவனிக்கவைக்கிறார்.

'கூகுள்ல பொலிடீஷியன்னு அடிச்சுப் பாருங்க. இப்போ ஊழல் பண்றவங்க பேருதான் வரும். காந்திஜி, நேதாஜி பேர்லாம் வராது!' என ஆங்காங்கே பத்ரியின் வசனங்கள் ஓ.கே ரகம். சுந்தர்.சி படத்தில் லாஜிக் பார்க்காமல் இன்னும் இறங்கி அடித்திருக்கலாமே பாஸ். 

ராதா ரவி, யோகி பாபு, மதுசூதன் ராவ், சதீஷ், ரோபோ சங்கர், ராம்தாஸ், விடிவி கணேஷ், வையாபுரி, மனோபாலா, சிங்கம்புலி, சிங்கமுத்து, ஜார்ஜ் மர்யான், விச்சு, சந்தானபாரதி, தளபதி தினேஷ் என எக்கச்சக்க கேரக்டர்கள்  காமெடி பண்ணியிருக்கின்றன. சில இடங்கள் சிரிப்பு பல இடங்களில் அலுப்பு. பொதுவாக சுந்தர்.சி படங்கள் என்றாலே க்ளைமாக்ஸில் 'வேற லெவல்' காமெடி கதகளி ஆடியிருப்பார்கள். இதில் நீ...ள...மா...ன க்ளைமாக்ஸ் அலுப்பைத் தருகிறது. 

கலர்ஃபுல் கார்னிவெல் சினிமாவுக்கு இசை ரொம்ப முக்கியமானது. ஆனால், அது ரொம்பவே மிஸ். ‘ஒரு குச்சி ஒரு குல்ஃபி’ பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. அதிகம் மெனெக்கடணும் ஆதி. சுந்தர்.சி படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாதுதான். அதற்காக `லாஜிக்கே பார்க்காதீங்கப்பா'னு  டிஸ்க்ளைமர் போடுவதெல்லாம் ரொம்பவே ஓவர் பாஸ்!

ஆங்காங்கே தெறிக்கும் பன்ச்களைப் படம் முழுவதும் பறக்கவிட்டிருந்தால் கலகலப்பு - 2 இன்னும் கலர்ஃபுல்லாக இருந்திருக்கும்.

பின் செல்ல