Published:Updated:

"கடந்த கால வாழ்க்கை என்பது கழற்றிப்போட்ட பாம்புச் சட்டை!”

"கடந்த கால வாழ்க்கை என்பது கழற்றிப்போட்ட பாம்புச் சட்டை!”

கதிர் பாரதி, வெய்யில், படங்கள்: ஜெ.முருகன்

"கடந்த கால வாழ்க்கை என்பது கழற்றிப்போட்ட பாம்புச் சட்டை!”

கதிர் பாரதி, வெய்யில், படங்கள்: ஜெ.முருகன்

Published:Updated:
"கடந்த கால வாழ்க்கை என்பது கழற்றிப்போட்ட பாம்புச் சட்டை!”

`கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’ எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணனுக்கு இப்போது வயது 93. இவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் கிராமம். கடந்த 25 வருடங்களாக புதுச்சேரியில் வசித்துவருகிறார். தமிழில் பல முக்கியமான சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்தக்காரர்; கரிசல் வட்டார  வழக்கு அகராதியைத் தொகுத்தவர். `மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன்’ என கி.ரா சொன்னாலும்,  தமிழ் இலக்கியத்தில் இவரது பங்களிப்புக்காகவே புதுவை மத்திய பல்கலைக்கழகம் இவரை சிறப்புப் பேராசிரியராக நியமித்தது. கி.ரா-விடம் எது குறித்தும் உரையாடலாம். அனுபவம் கலந்த உதாரணங்களும் சொலவடைகளும் நையாண்டிகளும் சரளமாக வந்துவிழுந்துகொண்டே இருக்கும். அவருடனான உற்சாக உரையாடலில் இருந்து சில முக்கியப் பகுதிகள் இங்கே...

"கடந்த கால வாழ்க்கை என்பது கழற்றிப்போட்ட பாம்புச் சட்டை!”

``பிறந்த மண்ணிலேயே வேலை பார்த்து, அங்கேயே கடைசி வரை வாழ்கிற சூழல் இப்போதைய தலைமுறைக்கு இல்லை. பிழைக்கிற இடம்... வேறு ஒரு மாநிலம், தேசம் என்றாகிவிட்டது. இந்த இடம்பெயர்தலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

``நானே இருபத்தைந்து வருடங்களாக புதுச்சேரியில் வாழ்கிறவன்தானே. எங்கள் சமூகத்தில் கல்யாணம் ஆன பிறகு மாப்பிள்ளை களை, பெண்கள் எவ்வளவு அழுத்தங்கள் கொடுத்தாவது தங்கள் பிறந்த ஊருக்குக் கூட்டிவந்துவிடுகிற ஒரு மனோபாவம் இருக்கிறது. எங்கள் சமூக மக்கள் வாழ்கிற கிராமங்களில் எழுபத்தைந்து சதவிகித ஆண்கள் இப்படி இடம்பெயர்ந்தவர்கள்தான். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இது சமூக வழக்கமாகவே இருக்கிறது. இதைப் பற்றிக்கூட தேசிக விநாயகம் பிள்ளை நையாண்டியாக கவிதைக் குறுங்காவியம் ஒன்றை எழுதியிருப்பார். சமூகத்தில் ஆரம்பத்தில் வேலைக்காக இடம்பெயர்ந்தவன் அடைந்த பொருளாதார செழிப்பைப் பார்த்து, அவர்கள் குடும்பங்கள் அடைகிற சௌகர்யங்களைப் பார்த்து மற்றவர்கள் பிழைப்புக்காக இடம்பெயர்ந்தார்கள். ஆனால், உள்ளூரில் பிழைப்பவர்களும் வெளியே போய் பிழைப்பவர்களும் அடைகிற இன்னல்கள் இப்போது ஒன்றாகிவிட்டன. பிறந்த மண்ணை விட்டு ஒரு மனிதன் பிழைப்பு தேடிச் செல்ல, உலகப் பொருளாதாரம், அரசியல் சூழல், நவீன வசதிகள் எல்லாம்... காரணங்களாக இருக்கின்றன. ஆனால், இது நிரந்தரம் அல்ல. கிட்டத்தட்ட எழுபது வருடங்களாகக் கட்டிக்காக்கப்பட்ட சோவியத் யூனியனே உடைந்துவிட்டது. இப்போது இருப்பதுகூட மா சே துங் சீனா அல்ல. எல்லாம் மாற்றம் கண்டு வருகின்றன.  ஆனால்,  இவையும்கூட நிரந்தரம் அல்ல.’’
``புதுச்சேரியில் வாழ்ந்துவரும் இந்த நாட்களை எப்படி உணர்கிறீர்கள்?’’

``செல்லும் காசு எங்கே கிடந்தாலும் அதுக்கு மவுசுதான்; அது செல்லும் வரை!’’

``இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்... எழுதும் மனநிலையை எப்படித் தொடர்கிறீர்கள்?’’

``எழுதுகிறவனுக்கு பேனா, செங்கோல்போல. எழுதாவிட்டாலும்கூட `செங்கோல்' மனசுக்குள் வேலை பண்ணிக்கொண்டே இருக்கும். எழுதாத எழுத்தாணியைத் தூரப்போடுவது இல்லை. ஆயுதபூசை அன்று கழுவி, சுத்தப்படுத்தி பூசையில் வைக்கிறோம். நாயனம் வாசிக்க முடியாத உடல் படுகிழமாக ஆகிவிட்ட நிலையிலும், மனசுக்குள் ராகங்கள் சிறகுவிரித்து சஞ்சாரம் பண்ணிக் கொண்டே இருக்கும்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``இளைய படைப்பாளிகளின் எழுத்துக்களை வாசிக்கிறீர்களா?’’

``புதிய அல்லது வித்தியாசமான பெயர்களைப் பார்த்ததும் படித்துப் பார்க்கத் தோன்றும். ஏமாற்றமும் கிடைக்கும். `அட!' என்று வியப்பதுவும் உண்டு. சிலது படித்த வேகத்தில் மறந்துபோவதும் உண்டு.’’

``இப்போதும் யாருக்கேனும் கடிதங்கள் எழுதுகிறீர்களா?’’

``கடிதமழை ஓய்ந்து பல காலம் ஆகிவிட்டதே. நினைக்கும்போது பெருமூச்சுவிடத் தோன்றுகிறது. என்னுடைய மரத்தில் முதல் காய்ப்பே கடிதங்கள் தான். எனது முப்பது வயதுக்கு மேலேதான் கதைகள் என்று அரும்புவிடத் தோன்றின. ஆனாலும் எனது கடிதங்களுக்கு நண்பர்கள் மத்தியில் தனி மவுசு இருந்தது ஓர் ஆச்சர்யம்தான். எதிர்வரும் புத்தகப் பெருவிழாவுக்கு சென்னையில் எனது மொத்தக் கடிதங்களும் ஒரே புத்தகமாக வருகிறது என்று மீரா கதிர் சொல்லியிருக்கிறான். விடிந்தால் தெரியும் வெளிச்சம். கு.அழகிரிசாமி இல்லாமல் கடிதங்கள் கிடையாது.’’

"கடந்த கால வாழ்க்கை என்பது கழற்றிப்போட்ட பாம்புச் சட்டை!”

``வசவுச் சொற்களைத் திரட்டிக்கொண்டிருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள்... அந்தப் பணி முடிந்துவிட்டதா?’’

``வசவுகளில் எத்தனையோ வகைப்பாடுகள் உண்டு. ஒருத்தனுக்கோ ஒருத்திக்கோ சந்தோஷம் வந்துவிட்டால் போதும்; அதன் வெளியீடே வசவாகத்தான் வரும். வசவு இல்லாமல் மொழி இல்லை; வசவு இல்லாமல் வாழ்க்கையும் இல்லை. வட்டாரந்தோறும் வசவுகள் மாறும். `செங்கமாங்கி’ என்று ஒரு வசவைக் கண்டெடுத்தேன். இங்கே, தமிழ் அறிஞரிடம் கேட்டால் உற்சாகம் காட்டவில்லை யாரும். பணி ஓய்வுபெற்ற ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்னைத் தற்செயலாகச் சந்தித்தபோது, `நீங்கள் எழுதிய கெட்டவார்த்தைக் கதைகளைப் படித்துப் பார்த்தேன். அதில் ஒரு கெட்டவார்த்தைகூட இல்லையே!’ என்றார். வசவுகள் எல்லாம் கெட்டவார்த்தையில்தான் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. கைபேசிகள் மலிந்துவிட்டதால் கவனம் திரும்பிவிட்டன. மொழி அபிமானிகள் யாரும் வசவுகளைத் திரட்டுவதாகத் தெரியவில்லை. நஷ்டம்தான்; என்ன செய்ய?!’’

``கமல்ஹாசன், அவரது பிறந்த நாளில் உங்களைச் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கௌரவித்தார். அந்தச் சந்திப்பைப் பற்றி சொல்லுங்களேன்?’’


``எதிர்பாராத ரசமான சந்திப்பு. சென்னைக்கு என்னால் வர முடியாத நிலை என்று சொல்லிவிட்ட பிறகு, அவரே இங்கு வந்தார். கி.ரா-வுக்கும் சினிமாவுக்கும் ஏதோ ஒரு தொந்தம் இருக்கும் போலிருக்கு. கமலை நான் இவ்வளவு கிட்டத்தில் வைத்துப் பார்த்தது இல்லை; தூரத்தில் வைத்தும் பார்த்தது இல்லை. அவர் நடித்த `குணா’ எனக்குப் பிடித்த படம். கமலின் வருகை ஒரு வசந்தம் வந்து போனதுபோல என்றும் நினைவில் நிற்கும்.’’

``உங்களது `கிடை’ குறுநாவல், `ஒருத்தி’ என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. சினிமா, எழுத்தைவிட அழகியல்பூர்வமானது எனக் கருதுகிறீர்களா?’’

``அதிலென்ன சந்தேகம்? எழுத்து என்பது கண் வழி மட்டுமே அல்லது வாசித்துக் கேட்கும்போது காது வழி மட்டுமே நமக்குள் போகிறது. சினிமா அப்படி அல்லவே. ஒரு பின்னணி ஒலியோடு, சில சமயம் பின்னணி இசையோடு காட்சியும் ஓசையும் கலந்து நமக்குள் நுழைகிறது. அதில் தெரியும் காட்சி, யதார்த்தக் காட்சியைவிட ரம்மியமான வேறுபாடு கொண்டது; அது பலம் பொருந்தியது; வல்லமை வாய்ந்தது. இன்னும் சொல்லப்போனால் நாடகத்தில் பார்ப்பதைவிட வித்தியாசமானது. `செலுவி’ என்ற சினிமா பார்த்தேன். கன்னடத்து நாட்டுப்புறக் கதை. எடுத்தவரும் கன்னடத்துப் பிரபல இயக்குநர்... இந்த விநாடியில் அவர் பெயர் ஞாபகத்துக்கு வரலை. இன்னும் என் மனசை விட்டுப்போக மாட்டேன் என்கிறது.’’

``கருத்துச் சுதந்திரம் தொடர்ந்து நசுக்கப்படுவதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார்களே... இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?’’

``தொடர்ந்து கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவதை யார்தான் ஆதரிப்பார்கள்? சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பித் தரலாமா என்பதிலும் சில விஷயங்கள் உண்டு எனக்கு. `இவை அறிஞர்கள் கூடித் தேர்ந்தெடுத்தது அல்லவா?’ என்கிறார்கள். பாரதிதாசன் அவர்களுக்கு நாடகத்துக்கும், கண்ணதாசன் அவர்களுக்கு நாவலுக்கும் சாகித்ய அகாடமி அறிஞர்களைக் கூட்டி, ஆய்வுசெய்து, தெரிந்த பரிசுகள் என எப்படிச் சொல்வது? வாங்கியவர்கள் பாடு, கொடுக்கிறவர்கள் பாடு என்று விட்டு விடலாமா, விமர்சகர்களுக்கு வேலை கிடையாதா... இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். `அவை எல்லாம் கிடக்கட்டும்; நீர் என்ன சொல்லுகிறீர்?’ என்று என்னைக் கேட்டால் மௌனம்தான் எனது பதில். பட்டங்கள், பரிசுகள், விருதுகள் இவை பேரில் இப்போது எனக்கு நம்பிக்கை, மரியாதை போய்விட்டது.’’

"கடந்த கால வாழ்க்கை என்பது கழற்றிப்போட்ட பாம்புச் சட்டை!”

`` `சாகித்ய அகாடமி விருதுகள் அதிகம் இடதுசாரிகளுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது’ என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?’’

`` `மார்ச்’ (முன்னேறுங்கள்) என்ற குரல் வந்ததும் இடதுகாலை எடுத்து முன்வைப்பதே (லெஃப்ட் ரைட் என) வழக்கம். பழைமை வழக்கப்படி மணப்பெண்ணை மட்டும் `வலதுகாலை முன்னே எடுத்து வை’ என்பார்கள். புதுமை என்பதற்்கு எப்போதும் இடதுக்குத்தான் மவுசு. சாகித்ய அகாடமி விருதுகளை முதலில் இருந்து கவனித்தால், முதன்முதலில் தட்டிக்கொண்டு போனவர்கள் எல்லாம் வலதுசாரியிலும் வலதுசாரிகள். ஆனால், பெரியவர்கள். பெரியவர்கள் அநேகமாக அப்படித்தான் இழுத்துப் பிடிப்பவர்களாக இருப்பார்கள். வலது சாரிகளிலும் பிரமாதமான இலக்கியவான்கள் உண்டு; அதேபோல் இடதுசாரிகளிலும் உண்டு.’’

``புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக இருந்திருக்கிறீர்கள். மாணவர்கள் இந்தக் கல்விமுறையோடு சுமுகமாக இருப்பதாக உணர்கிறீர்களா?’’

``மாணவர்களின் அந்தக் கல்விமுறையைப் போதிக்க நான் அங்கே செல்லவில்லை. மாணவர்களின் பாடத் திட்டத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. வகுப்பறையில் அவர்களோடு நான் சமமாக உட்கார்ந்து உலகியல் `வம்பு'தான் பேசிக்கொண்டிருப்பேன். முக்கால் மணி நேரம் போனதே தெரியாது. கதைகள்-காரணங்கள் சொல்வது, நான் படித்த புத்தகங்கள் பற்றி, சினிமா நாடகங்கள், ஊர் உலகக் காட்சிகள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்கள் இப்படித்தான் இருக்கும். வகுப்பு முடிந்தவுடன் அட்டெண்டன்ஸில் வந்த மாணவர்களை வரவு வைத்து, கையெழுத்தும் போட்டுவிட்டு வருவேன். சின்ன வயசில் பள்ளியில் நல்ல மாணாக்கனாக நான் இருந்தது இல்லை. பல்கலைக்கழகத்தில் நல்ல பேராசானாக இருந்தேன்.’’

``நீங்கள் பல தேர்தல், அரசியல் சூழலைப் பார்த்திருப்பீர்கள். இப்போது தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் கூட்டணியில் மும்முனைப் போட்டி ஆரம்பமாகியிருக்கிறது... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``பொதுவாக இப்போதுள்ள அரசியல் சூழல் எனக்கு உவப்பாக இல்லை. இது பற்றி அவசியமான கருத்துக்களைச் சொன்னால், அதுவே தனிபட்ட முறையில் எனக்கு எதிரான தொந்தரவாக மாறிவிடுகிறது. ஆனாலும், ஒன்று சொல்கிறேன்... எங்கள் ஊரில் `இண்டு செடி’ என்று புதர்ச் செடி ஒன்று உண்டு. அது கீழ்நோக்கிய முட்களைக் கொண்டது. அதற்குள் கையை இலகுவாக விட்டுவிட முடியும். ஆனால், வெளியே எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இப்போதுள்ள தேர்தல் அரசியல் சூழலைப் பற்றி பேசுவது அப்படி ஆகிவிடுமோ எனத் தயங்குகிறேன்; தவிர்க்கிறேன்.’’

``புதிதாக எழுத வருகிறவர்கள், வாசகர்கள் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய புத்தகங்களைப் பரிந்துரைப்பீர்களா?’’

``எவை எவை என எங்களுக்கு எல்லாம் யாரும் - எந்தப் பாவிமட்டையும் - சொல்லவில்லையே. நாங்களாகத்தான், கழுதைகள் பேப்பர்களைத் தின்பதுபோல் (!) மேய்ந்தோம். படிக்கப் படிக்க நமக்கே பிடிபட்டுவிடும். நம்மிடம் அவர்கள் பட்டியல் கேட்பது உரிச்ச வாழைப்பழங்கள் கேட்பதுபோல.’’

``இத்தனை ஆண்டுகால வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது இடதுசாரிக் களச்செயல்பாட்டாளர், எழுத்தாளர், பேராசிரியர்... இவற்றில் உங்களுக்குப் பிடித்த நிலை எது?’’

``மூன்று பகுதிகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மூன்றும் கழற்றிப்போட்ட பாம்பின் சட்டைகள்போல. இவை பற்றி யாரும் என்ன கருத்துக்கள் சொன்னாலும் இப்போதுள்ள மனநிலையில் என் மனசைத் தொடப்போவது இல்லை. பாராட்டினால், `சரிதாம்’ என நினைத்துக்கொள்வேன். கண்டித்தால், `ரொம்ப சரி’ எனச் சொல்லிக்கொள்வேன். ஒலி மாசு இல்லாத இடத்தில் நிம்மதியாக சுருதி சுத்தமான இசை கேட்டுக்கொண்டிருக்கவே ஆசை. முக்கியமாக நாயன (நாகஸ்வர) இசை.’’

``உங்களது கனவுப் படைப்பு என்று ஏதேனும் உள்ளதா? `மாஸ்டர் பீஸ்’ என உங்களது எழுத்தில் எதைக் கருதுகிறீர்கள்?’’


``இனிமேல் கனாக்கண்டு, `போரும் சமாதானமும்’ எழுதி முடிக்கவா முடியும். அது அப்படி இருக்கட்டும். `மாஸ்டர் பீஸ்’ என்பதற்கு `தொடைக்கறி’ என்கிறார்கள். இந்தச் சொல் எனக்குச் சம்மதம் இல்லை. எழுதியதில் சிறந்தது என்று கேட்டால் `கோபல்ல கிராமம்’தான் என்று கேள்விப்படுகிறேன். ஆங்கிலத்தில் பெங்குவின் பதிப்பகமும், சாகித்ய அகாடமி உட்பட மூன்று மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. பிரெஞ்சு மொழியில் பிரெஞ்சு பெண்மணி ஒருவர் மொழிபெயர்த்தும் முடித்திருக்கிறார். தெலுங்கு மொழியில், நந்தியாலு நாராயண ரெட்டி `கோபல்ல’ என்று மொழிபெயர்த்து புத்தகமாக வெளிவந்துவிட்டது. மகத்தான வரவேற்பு. `கோபல்ல கிராமம்’ எழுதி முடித்து ஏழு ஆண்டுகள் என் மடியிலேயே அச்சுக்குப் போகாமல் கிடந்தது. நினைத்தபோதெல்லாம் படித்துப் படித்துத் திருத்திக்கொண்டே இருந்தேன். நான் விரும்பிய வாராந்திரிகள் எல்லாமே கதவைச் சாத்திக் கொண்டன. பத்திரிகைகளின் ஆசிரியர்களும் உதவி ஆசிரியர்களும்தான் படைப்பாளிகளின் முதல் வாசகர்கள். தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் மகள் லக்ஷ்மி அம்மைதான் புத்தகமாகக் கொண்டுவந்தார். எனது குறுநாவல் `கிடை’யையும் அவர்தான் கொண்டுவந்தார். அதன் பிறகுதான் இந்தப் பாவிப் புலையனை `யார்... யார் இவர்?’ என தமிழ் எழுத்துலகம் கேட்க ஆரம்பித்தது. இப்போது, இதோ உங்கள் முன்னால் இருக்கிறேன் கி.ரா என்கிற 93 வயசுக் கிழவன்!’’