Published:Updated:

சொல்லவந்ததை சொல்லியிருக்கலாமே... சொல்லிவிடவா விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
சொல்லவந்ததை சொல்லியிருக்கலாமே... சொல்லிவிடவா விமர்சனம்
சொல்லவந்ததை சொல்லியிருக்கலாமே... சொல்லிவிடவா விமர்சனம்

1999-ல் நடக்கும் கார்கில் போரை மக்களிடம்நேரடியாகக் கொண்டு சேர்க்க, களத்துக்கே செல்லும் ஜர்னலிஸ்ட் ஜோடிக்கு, போர்களம் காதல் களமாக மாற, அதை இறுதியில் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்களா என்பதே இந்த `சொல்லிவிடவா'.  

1999-ல் நடக்கும் கதை. `டிவி 6' சேனலில் நிருபராக வேலை பார்த்து வருபவர், சாந்தன் குமார் (சஞ்சய்). அந்த சேனலின் போட்டியாளரான `ஏ 3' சேனலில் நிருபராக வேலை செய்பவர், மது (ஐஷ்வர்யா அர்ஜூன்). சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்த மது, அவரது தாத்தா சீனு (K. விஸ்வநாத்) அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். அவருடைய அத்தை, சுஹாசினியின் மகன் ராகுலுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. கார்கில் போர் நிகழ்வுகளை நேரடியாகப் படம் பிடித்து, தங்கள் சேனல் முலமாக மக்களுக்குக் காட்ட வேண்டுமென சஞ்சய் அவரோடு வேலை பார்க்கும் சதீஷ், பாண்டி, 'ஏ 3' நியூஸ் சேனலில் இருக்கும் மது அவரோடு வேலை பார்க்கும் யோகி பாபு, போண்டா மணி ஆகியோரைக் கூட்டிக்கொண்டு, அவரவர் சேனல் சார்பாக கார்கில் கிளம்புகின்றனர். `நாம் கார்கில்தான் போகிறோம்' என்று தெரியாமல் சதீஷ், அங்கு நடப்பதைப் பார்த்துவிட்டு பதறிப்போய் `திரும்பவும் சென்னைக்கே போய்விடலாம்' என எஸ்கேப் ஆகிறார். இவரைப் பார்த்து மற்ற மூவரும் கிளம்பிவிடுகின்றனர். முயற்சியில் இருந்து பின்வாங்க மறுக்கும் சஞ்சய் மற்றும் மது இருவரும் போர்க்களத்தைப் படம் பிடிக்க புறப்படுகின்றனர். அங்கு இருவருக்கும் காதல் மலர, அதை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளத் தயங்குகின்றர். கார்கில் போர் முடிந்ததும் சென்னைக்குத் திரும்பும் மதுவிற்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றது. அந்தச் சூழலிலாவது தங்களது காதலைச் சொல்கிறார்களா, இல்லையா... என்பதை ஆக்‌ஷன் ப்ளஸ் காதல் கலந்து சொல்ல முயன்றிருக்கிறார், இயக்குநர் அர்ஜுன்.

அர்ஜுன் என்று சொன்னாலே முதலில் ஞாபகம் வருவது, `தேசப்பற்று'. அதை வழக்கமான ஆக்‌ஷனில் மட்டும் சொல்லாமல், `கார்கிலையும், காதலையும்' கலந்து சொல்ல முயற்சித்திற்காகவே இயக்குநர் அர்ஜுனுக்கு ஒரு வார்ம் வெல்கம். அறிமுக நடிகர் சாந்தன் குமாரின் நடிப்பு அருமை. முக்கியமாக, ஸ்டன்ட் காட்சிகளில் அதிக கவனம் பெறுகிறார். ஹீரோவின் ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடலமைப்பு என இரண்டையும் சரியாகப் பயன்பத்தியிருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர் கிக்காஸ் காளி. முக்கியமாக, ஹீரோவின் இன்ட்ரோவில் இடம்பெறும் சேஸிங் சீன் ஸ்டன்ட் காட்சிகள் `வாவ்' ரகம். போர்க்களத்தில் நேரும் இழப்புக்கு சிந்தும் கண்ணீராகட்டும், காதலைச் சொல்லமுடியாமல் வெளிக்காட்டும் தவிப்பாகட்டும், முக்கியமான இடங்களில் கச்சிதமான நடிப்பால் கவர்கிறார், ஹீரோயின் ஐஸ்வர்யா அர்ஜூன். அறிமுகக் காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் ஒரே டேக்கில் இவர் பேசும் நீண்....ட வசனம், பார்வையாளர்களையே பெரு மூச்சுவிட வைக்கிறது

`உங்க அம்மா பிராமின், ஆனா நான் விரால் மீன்' - இது போன்ற பன்ச் வசனங்கள், அடிக்கடி தனது மகனிடம் முத்தம் கேட்டு அடம்பிடிப்பது என `நான் கடவுள்' ராஜேந்திரனின் நடிப்பு சிரிக்க வைக்கிறதென்றால், கார்கில் போர்க்களத்தில் வரும் டீக்கடைக்காரர் 'ராம் கிருஷ்ணா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஹீரோ - ஹீரோயின், கொஞ்ச நேரமே வந்துபோகும் இவர்களது நடிப்பு மட்டும்தான் ஆறுதல். இவர்களைத் தவிர இடைவேளைக்கு முன்பு வரை வந்துபோகும் சதீஷ், யோகி பாபு, பாண்டி அகியோரின் காமெடிகள் `என்னால முடியல' என வடிவேலு ஸ்டைலில் குமுற வைக்கிறது. சதீஷின் காமெடிகள் இரட்டை அர்த்தம் என்றால், யோகி பாபு, பாண்டியின் காமெடிகளுக்குரிய வசனங்கள் இரண்டே வரிகள்தான். ஸோ, நோ கமென்ட்ஸ்.

ஹீரோ, ஹீரோயின்  மட்டும்தான் நடிக்கிறார்கள் என்பதற்காக சங்குச்சக்கரத்தைப் போல் அவர்களைச் சுற்றியே கதை நகர்வது பெரிய அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. `படத்தின் கதை 1999-ல் நடக்கிறது' என கார்கில் போரோடு, கீழே ஓடும் ஸ்க்ரோலிங்கும் சொல்கிறது. ஆனால், இதை சுஹாசினியும், ஐஸ்வர்யா அர்ஜுனும் பயன்படுத்தும் அலைபேசியில் மட்டும்தான் பதிய வைத்திருக்கிறார் இயக்குநர் அர்ஜுன். அதைத் தவிர, படத்தில் அனைவரின் காஸ்ட்யூம்கள், ஐஷ்வர்யா அணிந்திருக்கும் ஜிமிக்கி கம்மல், ஹீரோ, ஹீரோயின் வாழும் `ட்யூப்லெக்ஸ்' மாடல் வீடு... என எல்லாமே நம்மை 2050-க்கே கொண்டு செல்கிறது. 

 ஜெஸ்ஸி கிஃடின் இசையில்  படத்தில் இடம்பெற்ற பாடல், பின்னணியில் இசை என எல்லாமே வெவ்வேறு படங்களில் கேட்ட `ஆல்ரெடி கேம் ப்ரோ' ரகத்தில்தான் இடம்பெற்றிருந்தது, `போர்க்களத்தில் குண்டடி வாங்கியிருக்கும் ராணுவ வீரனைக் காப்பாற்றியதும் ஹீரோயினுக்குக் காதல் மலரந்தது' போன்ற பழைய டெக்னிக் திரைக்கதை  என இதுபோன்ற விஷயங்கள் மட்டுமே 1999-ஐ நினைவுபடுத்தியது. கார்கில் காட்சிகள் ஒட்டுமொத்தத்தையும் ஏதோ ஒரு குவாரியில்தான் படமாக்கியிருக்கிறார்கள், இந்தக் குறையைத் திரையில் தவிர்க்க குறைந்தபட்சம் படத்தின் 'டி.ஐ'க்காவது அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்.  சில போர்க்களக் காட்சிகள், பழைய கேபிள் டி-வியில் வரும் க்ரெயின்ஸைப் போல கரகரத்தது.

சொல்லவந்த களத்தை வேறு விதமாகச் சொல்லியிருந்தால், `சொல்லிவிடவா' திரைப்படம் சொல்லியடித்திருக்கும்.