Published:Updated:

பாடகர் மலேசியா வாசுதேவன் காலமானார்

Vikatan Correspondent

சென்னை, பிப்.21,2011

பாடகர் மலேசியா வாசுதேவன் காலமானார்

பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 70.

சில ஆண்டுகளுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார். அண்மைக்காலமாக உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு மரணமடைந்தார்.

மலேசியா வாசுதேவன் மறைவுக்கு தமிழ்த் திரையுலகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

அவருக்கு யுகேந்திரன் என்ற மகனும், பிரசாந்தினி என்ற மகளும் உள்ளனர். யுகேந்திரன் நடிகராகவும் பின்னணிப் பாடகராகவும் உள்ளார். பிரசாந்தினியும் இப்போது பின்னணி பாடகியாக உள்ளார்.

மலேசியா வாசுதேவன்...

மலேசியாவில் பிறந்த இவர், சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்தார். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் டெல்லி டு மெட்ராஸ் படத்துக்காக முதல் பாடல் பாடினார். ஆனாலும் அவருக்கு பெரிதாக அப்போது வாய்ப்புகள் இல்லை.

இளையராஜா இசையமைத்த பதினாறு வயதினிலே படத்தில்  மலேசியா வாசுதேவனை வைத்து கவியரசு கண்ணதாசனின் 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..' என்ற பாடலை பாட வாய்ப்பு வழங்கினார். அப்பாடலை தொடர்ந்து அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

ரஜினி - கமல் இருவரின் படங்களுக்கும் தொடர்ந்து பாடியவர் மலேசியா வாசுதேவன். குறிப்பாக ரஜினிக்கு இவர் குரல் பொருத்தமாக இருந்ததால், அவர் படங்களில் அருணாச்சலம் வரை தொடர்ந்து பாடி வந்தார்.

மேலும், 80-கும் மேற்பட்ட  திரைப்படங்களில் நடித்துள்ளார் மலேசியா வாசுதேவன். முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வரவேற்பை பெற்ற பல்வேறு படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர்.