Published:Updated:

ஜல்லிக்கட்டு 5 - 23, ஜனவரி 2017... 'மெரினா தைப்புரட்சி' சினிமாவின் ஐந்து சுவாரஸ்யங்கள்!

ஜல்லிக்கட்டு 5 - 23, ஜனவரி 2017... 'மெரினா தைப்புரட்சி' சினிமாவின் ஐந்து சுவாரஸ்யங்கள்!
ஜல்லிக்கட்டு 5 - 23, ஜனவரி 2017... 'மெரினா தைப்புரட்சி' சினிமாவின் ஐந்து சுவாரஸ்யங்கள்!

ஜல்லிக்கட்டு 5 - 23, ஜனவரி 2017... 'மெரினா தைப்புரட்சி' சினிமாவின் ஐந்து சுவாரஸ்யங்கள்!

தமிழ் சினிமாவில் உண்மையான நிகழ்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதற்குப் படைப்பாளிகள் வெவ்வேறு காரணங்கள் கூறினாலும், அந்தக் கதையில் சம்பந்தமுடையவர்கள் அப்படத்தை வெளியிட விட மாட்டார்கள் என்ற பயமும் ஒன்று. கடந்த வருடம் மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் பலரும் களத்தில் இறங்கினர். இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் மெள்ளப் பரவியது. அதைத் தொடர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவரவர் நாட்டில் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதன் பிறகு உலகெங்கும் ஜல்லிக்கட்டுப் பற்றி பெரிதும் அறியப்பட்டது. 

இந்த நிகழ்வில் இருந்த நபர்களை மட்டும் வைத்து 'ஜல்லிக்கட்டு  5 - 23 ஜனவரி 2017'' என்ற  படம்  இயக்கியுள்ளார், சந்தோஷ் கோபால். இப்படத்தைப் பற்றியும், வெவ்வேறு உலக நாடுகளில் வெளியாகும் இப்படத்தின் ஆறு பாடல்களின் பின்னணி குறித்தும் நம்மிடம் பேசியதாவது, "இங்கு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் சிறப்பு வாய்ந்தது என்று உலகுக்கே தெரியும். இதில் ஆரம்பத்தில் ஒரு பங்கேற்பாளனாகத்தான் இருந்தேன். அதன்பிறகுதான் இதைப் பதிவுசெய்ய விரும்பினோம். இன்று இது ஒரு படமாக உருவாகியிருக்கிறது."

இது நிஜத்தில் நடந்த ஒரு சம்பவம். எப்படிப் படமாக உருவாக்கினீர்கள்?

"சிறிய கூட்டமாக இந்தப் போராட்டம் ஆரம்பித்தது. சோஷியல் மீடியா மூலமாகச் செய்தி பரவி, பலர் ஒன்று சேர்ந்தனர். இது பெரும் திரளாகச் சேர்ந்தவுடன் ஓர் இரவு அங்கு இருந்த விளக்குகளை அணைத்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகும் பலர் கலையாமல் அங்கேயே இருந்தனர். அப்போதுதான் இந்த உணர்வின் ஆழம் எனக்குப் புரிந்தது. இவர்கள் எப்படி இங்கு வந்திருப்பார்கள் என யோசித்தேன், அதையே படமாக்க எண்ணினேன். அதற்காகத்தான் படத்தின் தலைப்பும்   'ஜல்லிக்கட்டு  5 - 23 ஜனவரி 2017' என்று வைத்துள்ளோம்.

போராட்டத்தில் கலந்துகொண்ட பலரில் கடைசிவரை களத்திலிருந்த சிலர், எப்படி இந்தப் போராட்டத்தில் இணைந்தார்கள், இந்தப் போராட்டத்தில் அவர்கள் யார் யாரைச் சந்தித்தார்கள், போராட்டத்தின் முடிவில் இவர்களுக்கு என்ன ஆனது, அதே சமயத்தில் உலக நாடுகளில் இது தொடர்பாக என்ன நடந்தது என்பதைப் பற்றிக் கூறும் படமாக இது இருக்கும்."

போராட்டத்தில் கலந்துகிட்ட நீங்க, இயக்குநர் ஆக இதுதான் காரணமா? 

அடிப்படையில் நான் சினிமாக்காரன். பி.சி.ஶ்ரீராம் சாரிடம் உதவியாளனாக என் சினிமாப் பயணத்தை ஆரம்பித்தேன். 'குருதிப்புனல்' படத்தில் அவருடன் வேலை செய்து வந்தேன். பிறகு, ஹாலிவுட்டில் வீஸ்மொன்ட் ஸிக்மண்ட் என்ற  ஒளிப்பதிவாளரிடம் பணிபுரிந்து வந்தேன். சென்னையில் 'சினிமா பாரடைஸோ' என்ற பெயரில் ஒரு டி.வி.டி லைப்ரரியை நிர்வகித்து வந்தேன். மறைந்த எழுத்தாளர் சுஜாதா உள்ளிட்ட பலரோடும் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஒன்றாகக் கலந்த உணர்விலேதான் இப்படத்தை எடுக்கத் தொடங்கினேன்.

படத்தில் யார் யார் நடித்துள்ளனர்? 

நிக்கில், சந்தியா, காயத்ரி, சூர்யா, காயத்ரி, திருநாவுக்கரசு, விக்ரம் கோட்டா, சீதாராமன், ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு எஸ்.கா.பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தைத் தயாரிக்க எனது நண்பர்கள் நிருபமா, ஜெயபால், குரு சரவணன், முருகேஷ் கணபதி உதவினார்கள். ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். மெரினாவில் நாங்கள் இருந்தபோது வடசென்னையிலிருந்து வந்தவர்கள் கானா பாடினார்கள், மதுரையிலிருந்து வந்தவர்கள் வில்லுப்பாட்டு பாடினார்கள், ஐ.ஐ.டியிலிருந்து வந்தவர்கள் 'ராக்' பாடல்களைப் பாடினார்கள். இந்த இசை அனுபவம் படத்திற்கும் வேணும் என்பதால், ஆறு பாடல்களை வேவ்வேறு இசையில் கொடுத்திருக்கிறோம். படத்தின் முதல் பாடலை தொன்மை வாய்ந்த கீழடியில் வெளியிட்டோம்.  

படத்தின் பாடல்களை உலகின் வெவ்வேறு இடங்களில் வெளியிடுவதன் காரணம் என்ன?

தமிழும், தமிழர் நாகரிகமும் உலகெல்லாம் இருக்கு. உலகெங்கும் உள்ள கண்டங்கள் அதாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என ஐந்து கண்டங்களில் உள்ள ஆறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் பாடல்களை வெளியிடத் திட்டமிட்டோம். அதன்படி சென்ற வாரம் கீழடி ஆகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடத்தில் முதல் பாடலை வெளியிட்டோம். கீழடியில் கிடைத்த ஒரு உலோக நாணயத்தில் ஒரு காளைமாடு கழுத்தில் ஒரு சல்லி கட்டியிருக்கும். அங்கு தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் கிடைத்துள்ளன. பிறகு ஹார்வார்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'நீதான் தமிழன்' என்ற பாடலை வெளியிட்டோம். தமிழ் இருக்கைக்காக உலகத் தமிழர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்தியாவிலேயே முதல்முறையாக 'ஜல்லிக்கட்டு' படத்தின் ஒரு சிறு பகுதியை ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எடுத்துள்ளோம். இதைத் தொடர்ந்து ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள விக்டரிஸ் சதுக்கம், தமிழை முதல்முதலில் ஆட்சி மொழியாக்கிய சிங்கப்பூர் அதைத்தொடர்ந்து, கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டில் உள்ள மசைமாரா என்ற இடத்தில் வாழும் மனிதர்களுக்கும் தமிழகத்தின் மதுரையைச் சுற்றி உள்ள சில மக்களுக்கும் டி.என்.ஏ ஒற்றுமை உண்டு எனச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.' இறுதியாக, பாரிஸில் உள்ள ஈஃபிள் டவர் இருக்கும் இடத்தில் வெளியிடுகிறோம். 

1967-ல் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு நடந்த பெரிய அளவுக்கு மக்கள் திரண்டது, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில்தான். ஒரு நாகரிக வளம் நிறைந்த இனத்தின்மீது எதையும் திணிக்க முடியாது. இங்கே வரலாறு மாற்றி எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும். அதுபோலத்தான் கீழடி. அங்கு தமிழ் நாகரிகத்தைப் பற்றி பல விஷயங்கள் கிடைக்கலாம். ஆனால், அரசிடம் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் நம்மை நசுக்க நசுக்க நமது உணர்வு மேலும் பெருக்கெடுக்கும் என்பதை அவர்கள் உணர்வில்லை. 

ஜல்லிக்கட்டுப் போராட்டம் கிட்டத்தட்ட 70 நாடுகளில் நடந்தது. இந்தப் படத்துக்காக அந்த வீடியோக்களையும் வாங்கினோம். ஆதிகாலத்தில் மனிதன் மாட்டைத்தான் முதன்முதலில் தனது வாழ்வில் ஓர் அங்கமான பிராணி ஆக்கினான். பின் அது நமது குடும்பங்களில் ஒன்றாய் ஆனது. 'எங்க வீட்டு மாடு உனக்கென்ன கேடு' என்று பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தை ஒரு பதிவாக உருவாக்கி, அவர்களுக்குக் கொடுப்பதில் பெருமை!" என்று முடிக்கிறார், இயக்குநர் சந்தோஷ் கோபால்.

அடுத்த கட்டுரைக்கு