Published:Updated:

``இந்த ஒரு டயலாக்கைச் சொல்ல ஒரு நாள் ஆச்சு'' - `லொள்ளு சபா' சேஷு கலாய்

தார்மிக் லீ
``இந்த ஒரு டயலாக்கைச் சொல்ல ஒரு நாள் ஆச்சு'' - `லொள்ளு சபா' சேஷு கலாய்
``இந்த ஒரு டயலாக்கைச் சொல்ல ஒரு நாள் ஆச்சு'' - `லொள்ளு சபா' சேஷு கலாய்

`மண்ணெண்ண, வேப்பெண்ண, வெளக்கெண்ண... பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன...' என்ற வைரல் வார்த்தைக்குச் சொந்தக்காரர் `லொள்ளு சபா' சேஷு. ஒருநாள் யதேச்சையாக பார்த்ததில் வேளச்சேரியில் உள்ள நூறடி ரோட்டில் நின்று ட்ராஃபிக்கை க்ளியர் செய்துகொண்டிருந்தார். அதோடு சேர்த்து அவர் அனுபவம் பற்றிய ஒரு ஜாலி டாக்!

``சினிமாவில் நுழையறது இப்போ சுலபமா இருந்தாலும், உங்க காலத்தில் ரொம்ப கஷ்டமா இருந்திருக்குமே?''

``அந்தக் காலத்துல சினிமா உள்ள வர்றதுக்கு நீங்க சொன்ன மாதிரி ரொம்பவே சிரமப்பட்டோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இயக்குநர், மேனர்னு பார்த்து போட்டோ கொடுத்துட்டு வருவோம். அந்த போட்டோ பின்னாடி செல் நம்பர், பேஜர் நம்பர், பக்கத்து வீட்டு மளிகைக் கடை நம்பர்னு எழுதிக் கொடுத்துட்டு, ஏதாவது ஒரு வாய்ப்பு வருமான்னு காத்துட்டு இருப்போம். எனக்கு `லூஸ்' மோகன் சாரை ரொம்பப் பிடிக்கும், `அதிர்ஷ்டம்ங்கிறது அது இஷ்டத்துக்குத்தான் வரும், அதுனாலதான் அதுக்குப் பெயர் அதிர்ஷ்டம்'னு அவர் சொன்னதையே நான் தாரக மந்திரமா எடுத்துக்கிட்டு, தொடர்ந்து முயற்சி பண்ணிகிட்டே இருந்தேன். இப்போ சினிமாத் துறையில ஒரு நல்ல இடத்துல இருக்கேன்னு நினைக்கிறேன்''  

``லொள்ளு சபாதான் உங்களுடைய அடையாளமே. அதைப் பற்றியும், அங்கு நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றியும் சொல்லுங்க?'' 

``முயற்சி பண்ற எல்லாருக்குமே அவன் ரொம்ப நேசிக்கிற ஒரு விஷயம் ஒருநாள் அவனுக்கு அங்கீகாரத்தைக் கொடுக்கும். அப்படி எனக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்து, வெறும் சேஷுவா இருந்த என்னை `லொள்ளு சபா' சேஷுனு கூப்பிட வெச்சது இந்த நிகழ்ச்சிதான். அதுக்கும் முன்னாடியும் நிறைய நிகழ்ச்சிகள், நிறைய படங்கள்னு நடிச்சிருக்கேன். ஆனா, என் பெயரைச் சொன்னவுடன் எல்லாருக்கும் நினைவுக்கு வர்றது இந்த லொள்ளு சபாதான். 

அதுல ஒரு எபிசோட், அமர்க்களம் படத்தை ஸ்பூஃப் பண்ணி, `அமக்களம்'னு பண்ணியிருந்தோம். அதுல ஜீவாதான் அஜித்தா நடிச்சிருப்பார். ஒரு சீன்ல நானும் மனோகரும் கதவைத் திறந்துட்டு, ஆக்ரோஷமா ஜீவாவைப் பார்த்து `வாசு...'னு கத்தணும். ஷாட் ரெடியாகி ராம் பாலா சார் ஆக்‌ஷன்னு சொன்னார். ரெண்டு பேரும் கதவைத் திறந்துட்டு உள்ளே போய் மனோகர் டயலாக்கை மறந்துட்டு `சே...ஷு'னு கத்திட்டார். நான் அப்படியே லுக்கு விட்டு `யோவ் என்னை எதுக்குயா இப்போ கூப்பிடுற'னு கேட்டேன். `ஸாரி இந்த பெயர் எனக்கு ரொம்ப சிக்கலா இருக்கு'னு பதில் சொன்னார். இப்படியே நிறைய டேக் போயிருச்சு. அப்புறம் ஒரு கட்டத்துல எனக்கு சிரிப்பு தாங்க முடியாம நானும் டயலாக்குளை மறக்க ஆரம்பிச்சேன். இப்படி ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கும் ரணகளமாவும், ரகளையாவும்தான் போகும்.

``சந்தானம் இப்போ ரொம்ப பிஸியான நடிகர்... அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?''

`` `நம்ம வாழ்க்கையில இவ்வளவு உயரத்துக்குப் போகப் போறோம்'னு அவரே நினைச்சுப் பார்த்திருக்க மாட்டார். வளரும்போது எல்லா மனிதர்களுக்குள்ளேயும் ஒரு ஆசை வரும். அது இருந்தா மட்டும்தான் வாழ்க்கையில வெற்றி பெற முடியும். சந்தானமும் அதைத்தான் செஞ்சிருக்கார். அதை கரெக்ட்டாவும் மெயின்டெய்ன் பண்றார். இது ஆரம்பகாலத்துல இருந்தே அவர்கிட்ட இருந்தது. தனிப்பட்ட முறையில எனக்கு அவர் நல்ல நண்பர். எங்க பார்த்தாலும், `நல்லா இருக்கீங்களா அண்ணா, வாழ்க்கைலாம் எப்படிப் போகுது'ன்னு கேட்பார். இவ்வளவு பெரிய இடத்துல இருக்கார்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.''

``ஒருநாள் யதேச்சையா நடுரோட்டில் நின்னு ட்ராஃபிக் கன்ட்ரோல் பண்றதைப் பார்த்தோம்?''

``சென்னையை வாட்டி வதைக்கிற விஷயம் ட்ராஃபிக். நிறைய வண்டிகள் வரிசையில நிற்கிறதைப் பார்க்கும்போது கஷ்டமா இருக்கு. அதைச் சரி பண்ண நினைச்சுதான்  கிடைக்கிற நேரங்கள்ல நானே ட்ராஃபிக் கன்ட்ரோல் பண்ணலாம்னு ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்துல இருந்தே சமூக சேவைகள்ல எனக்கு ஆர்வம் அதிகம். நேரம் கிடைக்கும்போது என்னால முடிஞ்சதைப் பண்ணுவேன். இதுக்கு அரசாங்கம்லாம் எதுவும் பண்ண வேண்டாம். நம்மளே ஏதாவது முயற்சி பண்ணி இதை சீர் செய்யலாம். இதை மாணவர்கள் மட்டுமில்லாம  அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி-ன்னு எந்தப் பாகுபாடும் பார்க்காம, ஒவ்வொரு கட்சில இருக்கிறவங்களும் பண்ணலாம்.  `உங்க கட்சிக்கொடியோட ஒரு பனியன் போட்டு வந்து ட்ராஃபிக் க்ளியர் பண்ணி உங்க கட்சிக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கலாமே'.''  

``இந்தக் கால அரசியலை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?''

``நான் அரசியலில் மிகப் பெரிய புலியெல்லாம் கிடையாது. நீங்க ஏதாவது கேட்டு, நான் ஏதாவது சொல்லி நடு ரோட்டுல நிற்கும்போது யாராவது லாரியை விட்டு ஏத்திக் கொல்றதுக்கு ப்ளான் பண்றீங்களா?! அரசியல் வேணும்னு சொல்ற நடிகர்களைக் கண்டிப்பாக நம்ம வரவேற்கலாம். கமல் சார்கூட சேர்ந்து இன்னும் சில நடிகர்கள் அரசியல் உள்ள வரலாம்னு நினைச்சுட்டு இருக்காங்க. நல்லது பண்றதுக்கு யார் வேணாலும் வரலாம். அதுக்கு கட்சி தேவையில்லை, மனசு இருந்தா போதும். இப்போ இருக்கிற அரசியல் கட்சிகளையே கூட எடுத்துக்கங்க. அவங்க ஆட்சியில இருந்தாதான் நல்லது பண்ணணும்னு இல்ல. நல்லது பண்றது பணத்தை வெச்சுதான் பண்ணணும்னு இல்ல.  சின்னச் சின்னப் பொது சேவைகள்ல ஈடுபட்டு நல்ல பெயரைத் தேடிக்கலாம். மக்கள் புதுசா ஒரு சேலை வேணும்னு கேட்கலை, கிழிஞ்சுருக்கிற சேலையை தைச்சுக் கொடுங்கன்னுதான் கேட்கிறாங்க. மொத்த வேலையைப் பார்க்கலேன்னாகூட ஒட்டு வேலையாவது பார்க்கலாம்.'' என்று சொல்லி பேட்டியை முடித்துக்கொண்டார்.