Published:Updated:

"வங்கிச் செய்தி பொய். ஒரு கோடி பணம் என்பது இயக்குநருக்குப் பெரிய தொகை அல்ல!" - கே.பியின் உதவியாளர் மோகன்.

"வங்கிச் செய்தி பொய். ஒரு கோடி பணம் என்பது இயக்குநருக்குப் பெரிய தொகை அல்ல!" - கே.பியின் உதவியாளர் மோகன்.
"வங்கிச் செய்தி பொய். ஒரு கோடி பணம் என்பது இயக்குநருக்குப் பெரிய தொகை அல்ல!" - கே.பியின் உதவியாளர் மோகன்.

"வங்கிச் செய்தி பொய். ஒரு கோடி பணம் என்பது இயக்குநருக்குப் பெரிய தொகை அல்ல!" - கே.பியின் உதவியாளர் மோகன்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் உதவியாளராக இருந்தவர் மோகன்.  சினிமா பிரபலங்கள் பலபேர்,  டைரக்டர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா, கோபமாக இருக்கிறாரா, அவருடைய  மைன்ட்செட் எப்படி  இருக்கிறது... இப்படியெல்லாம் மோகனிடம் கேட்டுத் தெளிந்தபிறகே கே.பாலசந்தரைச் சந்திப்பார்கள். 'கேபி-க்கு கிடைச்ச உதவியாளர் மோகன் மாதிரி, எனக்கு ஒருத்தன் கிடைக்கலியே...' என்று இயக்குநர் பாரதிராஜாவால் பாராட்டப்பட்டவர்  மோகன். கடந்த 12-ம் தேதி  ஆங்கில நாளேடு ஒன்றில், 'ஒரு கோடியே 36 லட்சம் பணத்தை செலுத்தாததால் கே.பாலசந்தருக்குச் சொந்தமான வீடும், அலுவலகமும் ஏலத்துக்கு வருகிறது.' எனத் தனியார் வங்கி ஒன்று அறிவித்த அதிர்ச்சியான செய்தி வெளியானது.  தமிழ்சினிமா உலகுக்கு ரஜினி, கமல் என்னும் இருதுருவங்களை அறிமுகம் செய்த கே.பாலசந்தரின் சொத்துகள் ஏலத்தில் வந்திருக்கும் செய்தி குறித்து மறைந்த கே.பாலசந்தருக்குக் கடைசிவரை நிழலாக இருந்த மோகனிடம் பேசினோம்.

''எங்கள் டைரக்டர் கே.பாலசந்தர் வாழ்ந்த வீடு, 'விநாயகா அபார்மென்ட்' ஆக மாறி நலமாக இருக்கிறது. மும்பையில் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்துவரும்  சிறியமகன் பிரசன்னா அங்கே குடும்பத்தோடு நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்காக அபார்மென்ட்டில் முதல்தளத்தைக் கொடுத்துள்ளனர். இரண்டாவது தளத்தில் கைலாசத்தின் குடும்பத்தார் இருந்து வருகின்றனர். மூன்றாவது மாடியில் டைரக்டரின் மனைவி வசித்து வருகிறார்கள். சென்னை அபிராமபுரத்தில் புஷ்பா மேடம் பெயரில் ஒரு அபார்ட்மென்டே இருக்கிறது. தினசரி டைரக்டர் வீட்டுக்குவந்து, தன் அம்மாவைப் பார்த்துவிட்டு மாலையில் தனது அபிராமபுரம் வீட்டுக்குச் சென்றுவிடுவார், புஷ்பாமேடம். தன் குடும்பத்தைச் சேர்ந்த எவரையும் பணத்துக்காக கஷ்டபடும்படியோ, யாரிடமும் கடன்வாங்கி வாழும்படியோ எங்கள் டைரக்டர் கஷ்டப்படவைத்துவிட்டுச் செல்லவில்லை. நான் உள்பட, எல்லோரையும் நன்றாகத்தான் வாழவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். 

சென்னை டி.டி.கே ரோட்டில் உள்ள மூகாம்பிகா வணிக வளாகத்தில் டைரக்டருக்குச் சொந்தமான இரண்டு ஃப்ளாட்கள் இருக்கின்றன அந்த இடத்தை  வாடகைக்கு விட்டுள்ளனர். அந்த ஃப்ளாட்டின் பெயரில் அரசுடமை வங்கியில் கடன் வாங்கியுள்ளனர். அதுதான், வெளியான விளம்பரத்தோடு தொடர்புடையது. அதற்கு எங்களுடைய டைரக்டர் பெயரை வங்கி அறிவித்திருக்கிறது. அந்த ஃப்ளாட் பெயரில் வாங்கியுள்ள கடன் தொகை தொடர்பாக  வங்கி ஒரு கணக்கு வைத்திருக்கிறது, டைரக்டர் வீட்டில் வேறு ஒரு கணக்கு வைத்து இருக்கிறார்கள். ஒன்றைரை கோடி பணம் கடன் என்பது டைரக்டர் வீட்டுக்குச் சாதாரண பணம். ஒரே செக்கில் கொடுத்து கடனை அடைத்துவிடும் அளவுக்கு வல்லமையையும், செல்வத்தையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார், டைரக்டர்.  உண்மையான கணக்கு எது எனக் கண்டுபிடிக்கும் முன்பாகவே திடீரென தினசரியில் டைரக்டர் பெயரைக் குறிப்பிட்டு இப்படி ஒரு விளம்பரம் கொடுத்துள்ளனர். பாலசந்தர் சாரோட இருந்த ஒருத்தரும் அவரைக் குறை சொல்கின்ற அளவுக்கு அவர் நடந்துகொண்டதே இல்லை. எங்க டைரக்டர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவரது பெயரைப் பயன்படுத்தி இப்படி ஒரு விளம்பரத்தை கொடுத்திருப்பார்களா, அவரும்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருப்பாரா?

எங்கள் இயக்குநர் எப்போதும் வொயிட் அண்ட் வொயிட்டில் காட்சியளிப்பவர். அவர் அணிந்திருக்கும் வெள்ளை ஆடையில் ஒரு துளி கறையைக்கூட காணமுடியாது. அதுபோலத்தான், வாழ்க்கையை வாழும் விதத்தில் களங்கங்கள் இல்லாமல் வாழ்ந்தவர். எங்க டைரக்டர் பணத்துக்காக இதுவரை எவரிடமும் கையேந்தியதே இல்லை. டைரக்டராக மட்டுமல்ல, கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்த காலகட்டத்திலும் ஒருநாளும் பண விஷயம் குறித்து யாரிடமும் பேசவும் மாட்டார், தலையிட்டதும் இல்லை. ஒரு படம் தயாரிக்க ஐந்து கோடி பட்ஜெட் போட்டால், மூன்று கோடியில் முடித்து விடுவார். பெப்சி அமைப்பின் தலைவராக இருந்தபோது சென்னை வடபழனி சாலையில்  உள்ள கட்டடம் கட்டுவதற்காக மட்டும்தான் பிறரிடம் பணம் வசூல்செய்து கட்டடத்தை கட்டி முடித்தார். அதுவும் பிறருக்காகத்தான். தனக்காகவும், தனது குடும்பத்தினருக்காகவும்  உதவிகேட்டு எவரிடமும் எதற்கும் போய் நின்றதே இல்லை. எங்க டைரக்டர் நேர்மையாக வாழ்ந்தவர் சினிமாவுலகில் தாதா சாகிப் பால்கே விருது வாங்கிற அளவுக்குப்  பிறருக்கு எடுத்துக்காடாக இருந்த ஒரு சகாப்தத்தின் பெயரை இதுபோல செய்தி வெளியிட்டு அவரை களங்கப்படுத்தலாமா? '' என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

"வங்கிச் செய்தி பொய். ஒரு கோடி பணம் என்பது இயக்குநருக்குப் பெரிய தொகை அல்ல!" - கே.பியின் உதவியாளர் மோகன்.

'கே.பாலசந்தரின் வீடும், அலுவலகமும் ஏலம்' செய்தி குறித்து கே.பி-யின் மகள் புஷ்பா கந்தசாமி,  'கவிதாலயா நிறுவனத்தின் கடன் பாக்கிக்காக மறைந்த திரு.கே.பாலசந்தரின் வீடு மற்றும் அலுவலகம் ஏலம் விடப்படுவதாக வெளிவந்திருக்கும் ஊடகச்செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கவிதாலயா டிவி தொடர் தயாரிப்புக்காக அரசுடமை வங்கி ஒன்றில் 2010 -ம் ஆண்டு குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான வேறு சொத்துகளை அடமானம் வைத்துக் கடன் வாங்கியது. 2015 -ம் ஆண்டு திரைப்பட, டிவி தயாரிப்புகளை நிறுத்திக்கொண்டு டிஜிட்டல் தயாரிப்புகளை மேற்கொள்வதற்கு முடிவுசெய்தது. முதலும், வட்டியும் சேர்த்து கணிசமான தொகையையும் செலுத்திவிட்டது. மீதமுள்ள கடன் பாக்கியைச் செலுத்துவதற்கு வங்கியுடன் 'ஒன்டைம் செட்டில்மென்ட்' பேச்சுவார்த்தை சட்டரீதியாக நடந்துவருகிறது. இந்தச் சமயத்தில் வங்கியின் விளம்பரத்தைப் பார்த்து சமூகஊடகங்கள் விழியாக 'கே.பியின் வீடும், அலவலகமும் ஏலத்துக்கு வந்துவிட்டது' என்கிற செய்தி பரவிவிட்டது. எங்கள் மேல் உண்மையான பாசமும், அன்பும் கொண்டு எங்களைத் தொடர்பு கொண்ட நல்ல இதயங்கள் அனைவரும் கலக்கமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்' என்று தனது அறிக்கையில் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு