வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (15/02/2018)

கடைசி தொடர்பு:16:36 (15/02/2018)

" 'யாஞ்சி' தமிழ் வார்த்தை மாதிரி இருக்கும். ஆனா...!?’’ - ’யாஞ்சி’ கதைக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்

'யாஞ்சி யாஞ்சி' என்ற ஒற்றைப் பாடல் போதும் இவர் பெருமையைச் சொல்ல. தற்போதைய நியூ ஜென் இசையமைப்பாளர். எப்போதைக்குமான காதல் பாடல்களை உலகுக்குக் கொடுத்தவர். "நான் சின்ன பையனா இருக்கும்போது என்னோட தாத்தா ஒரு ஆர்மோனியப் பெட்டி வெச்சிருந்தார். எல்லா பசங்களும் ஓடி ஆடி விளையாடிகிட்டு இருக்குற சமயத்துல எனக்கு கவனம் முழுக்க அந்த ஆர்மோனியப் பெட்டி மேலதான் இருந்துச்சு. என் மனைவி ஜானெட்டைப் பார்க்கும்வரை, காதல் பத்தி கேட்டா இந்த ஆர்மோனியப் பெட்டியைத்தான் சொல்லத் தோணும்"

சாம் சி எஸ்

"அப்பா கூட்டுறவு வங்கியில மேனேஜர். அம்மா ஸ்கூல் ஹெட் மாஸ்டர். வீட்ல எப்போ பார்த்தாலும் படி படினு சொல்லிகிட்டே இருப்பாங்க. நான் அதையெல்லாம் காதுலயே வாங்கிக்காம மியூசிக் போட சார்ச்க்குப் போயிடுவேன். எங்க ஊர் பேரைச் சொன்னாலே எல்லாருக்கும் அங்க போகணும்னு ஆசை வரும். அந்த அளவுக்கு அழகான ஊர். ஆனா, சினிமாவுக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஊர். சரியான தியேட்டர் கூட அங்க இல்லை. வேலைக்காக சென்னைக்கு வந்தாகணும்ங்கிற நிலைமை. அப்போ மியூசிக் போடணும்ன்ற எண்ணம் மட்டும்தான் இருந்ததே தவிர, சினிமாவுக்கு வரணும்னு துளிகூட நினைக்கலை. சென்னையில ஒரு ஐ.டி கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். சைட் பிசினஸ் மாதிரி நிறைய விளம்பரங்களுக்கு மியூசிக் கம்போஸ் பண்ணிக் கொடுத்துட்டு இருந்தேன். அம்மா, அப்பாவைப் பொறுத்தவரை அவங்க பையன் நல்ல ஒரு நிரந்தர வேலையில செட்டில் ஆகணும். 'தேவையில்லாம சினிமாவுக்குப் போய் 'வாழ்க்கையை தொலைச்சுடாதே'னு அட்வைஸ் பண்ணிட்டே இருப்பாங்க. அவங்க சொல்றதை நான் கேட்கவே இல்லை. 'இவன் தேற மாட்டான்'னு ஒருகட்டத்துல கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. 2010-ல கல்யாணம் ஆச்சு." என்று தனது ஃபிளாஷ் பேக்கை சொல்லி முடிக்க, "நமக்கு 2011-லதான் கல்யாணம் ஆச்சு" என்று தலையில் செல்லமாகத் தட்டினார் ஜானெட்.

"ஜானெட்டைக் கல்யாணம் பண்ணும்போது நான் ஒண்ணும் அவ்வளவு பெரிய மியூசிக் டைரக்டர் இல்ல. என்னை நம்பி எப்படி கல்யாணம் கட்டிக் கொடுத்தாங்கன்னே தெரியல. ஜானெட்டுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான்" என்று சாம் முடிக்கும் முன்னரே, "அதான் இப்போ நீ இருக்கியே சாம்" என்று தோளில் சாய்ந்து கொண்டார் ஜானெட்.

சாம் சி எஸ்

"நாங்க ரெண்டு பேரும் ஒரே சர்ச். ரெண்டு பேரோட வீட்டுலேயும் கலந்து பேசி இந்தக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க. நிச்சயதார்த்தம் முடிஞ்சதுக்கு அப்பறம் நாங்க பைக்ல சென்னையில சுத்தாத இடமே கிடையாது. எங்களோட பிரெண்ட்ஸ் எல்லாரும் எங்களை செமயா கிண்டல் பண்ணுவாங்க. இப்போ நிலைமை அப்படியே தலைகீழ். கொஞ்சம் கூட சாமுக்கு ஃபிரீ டைம் இல்ல. காலையில பையன் தூங்கி எழுந்த உடனே முதல்ல, "அப்பா வீட்டுக்கு வந்தாங்களா அம்மா"னுதான் கேட்பான். "வந்துட்டு திரும்பி போய்ட்டாங்கடா"னு ஒரே பதிலை தினமும் சொல்ல வேண்டியதா இருக்கு. நானும் என்னோட பையனும் இவரை ரொம்பவே மிஸ் பண்றோம்." என்றார் ஜானெட். 

"என்னோட முதல்படம் 'அம்புலி'. இதுல என்னோட சேர்ந்து, வெங்கட் பிரபு சங்கர், சதிஷ், மெர்வின் சாலமன் ஆகிய நாலு பேரும் இசை அமைத்திருப்போம். இந்தப் படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் ஐ.டி வேலையையே விட்டுட்டேன். பட வாய்ப்புகள் கிடைக்கிறது இந்தக் காலத்துல ரொம்ப கஷ்டம். சின்னச் சின்ன படங்களுக்குக் கூட ஈஸியா வாய்ப்பு கிடைச்சுடும். பெரிய படங்களுக்கான வாய்ப்பு என்பது குதிரைக் கொம்பு. அதுக்கான காத்திருப்பும் அதிகம். இந்தக் காத்திருப்பை எதிர்கொள்ள முடியாமத்தான் நிறைய பேர் சினிமாவை விட்டுப் போயிடுறாங்க. அதுக்கு இடையில நம்ம திறமையையும் வெளிக்காட்டிகிட்டே இருக்கணும். நம்மளோட பொருளாதாரத்தையும் சமாளிக்கணும். சமயத்துல வேற வேலைக்குப் போயிடலாமானுகூட தோணும். கல்யாணத்துக்கு அப்புறமும் ரெண்டு வருடமா வாய்ப்புக்காக காத்திக்கிட்டுத்தான் இருந்தேன். அப்போ ஜானெட் ரொம்ப உறுதுணையா இருந்தாங்க.

"ஒவ்வொரு ஆல்பம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி சாம் கூலாதான் இருப்பார். நான்தான் ரொம்ப டென்க்ஷனா இருப்பேன். 'விக்ரம் வேதா' ஹிட் அடிக்கும்னு எங்களுக்கு முன்னாடியே தெரியும். எனக்கு யாஞ்சி அவ்வளவு பிடிக்கும்." என்று ஜானெட் கூறிக்கொண்டிருக்கும் போது சாம் குறுக்கிட்டார். "நிறைய பேர் யாஞ்சி தமிழ் வார்த்தைனு நெனச்சுட்டு இருக்காங்க. இந்தமாதிரி ஒரு வார்த்தையே தமிழ்ல கிடையாது. சீனாவுல இருக்குற ஒரு ஆறோட பெயர் 'யாஞ்சி'. வேறு ஏதோ ஒரு மொழியில 'திரும்பத் திரும்ப'னு ஒரு அர்த்தம் இருந்துச்சு. ரொம்ப வித்தியாசமா இருக்கேனு இதை யூஸ் பண்ணிக்கிட்டோம்."என்று கூறி முடித்தார் சாம். 
 


டிரெண்டிங் @ விகடன்