Published:Updated:

`லைகா' ராஜூ மகாலிங்கம் என்ட்ரியும் கட்சியில் பா.ஜ.க. நிழலும்..?! - ரஜினி கட்சி அப்டேட்

`லைகா' ராஜூ மகாலிங்கம் என்ட்ரியும் கட்சியில் பா.ஜ.க. நிழலும்..?! - ரஜினி கட்சி அப்டேட்
`லைகா' ராஜூ மகாலிங்கம் என்ட்ரியும் கட்சியில் பா.ஜ.க. நிழலும்..?! - ரஜினி கட்சி அப்டேட்

`லைகா' ராஜூ மகாலிங்கம் என்ட்ரியும் கட்சியில் பா.ஜ.க. நிழலும்..?! - ரஜினி கட்சி அப்டேட்

'நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை என் எதிரியே தீர்மானிக்கிறான்' -  என்று வாசகம் ஒன்று உண்டு. அதுபோல கமலின் பரபரப்பான அரசியல் நகர்வுகள் ரஜினியையும் உசுப்பிவிட, மனிதர் உற்சாக அடுத்தகட்ட திட்டங்களை அமல்படுத்தத் தயாராகிவிட்டார். கடந்த 14-ம் தேதி உலகத்துக்கு எல்லாம் காதலர் தினம். ரஜினியோ, சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 'ரசிகர்கள் தினம்' கொண்டாடினர். ஏற்கெனவே பிப்ரவரி முதல் வாரத்தில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர்களை மட்டும் அறிவித்தனர். பிப்ரவரி 14-ம் தேதி  தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் நகரம், ஒன்றியப் பகுதியில் உள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்தனர். ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள பத்து, பத்து நிர்வாகிகளைத் தனித்தனியாக அழைத்து ராஜூ மகாலிங்கமும், சுதாகரும் தனியறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். 'மாவட்ட பொறுப்பாளர்களோடு எல்லோரும் ஒற்றுமையாக வேலை செய்யவேண்டும். ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களையும் ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்க்கவேண்டியது உங்களின் தலையாய கடமை. உங்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் தலைவர் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்' என்று ஆலோசனையும், அறிவுரையும் சொல்லி அனுப்பி உள்ளனர்.

திருநெல்வேலி, வேலூர் பகுதிகளுக்கும் மாவட்ட பொறுப்பாளர்களை மட்டுமே நியமித்துள்ளனர். அந்தந்த  மாவட்டதில் உள்ள நகரம், ஒன்றியத்தில் நியமிக்கப்படவிருக்கின்ற ரஜினி மன்ற நிர்வாகிகளை மட்டும் சென்னை ஶ்ரீராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, தூத்துக்குடி நிர்வாகிகளிடம் பேசிய பாணியில் பேசவிருக்கின்றனர். பிப்ரவரி 15-ம் தேதி தேனி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தில் இருப்பவர்களை சென்னைக்கு அழைத்து, அவர்களுக்குத் தரப்போகும் பொறுப்புகளை அறிவித்தனர். தேனி மாவட்டத்தில் 300 நிர்வாகிகளும், நீலகிரி மாவட்டத்தில் 300 நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜூ மகாலிங்கம் அறிவித்த பிறகு ரசிகர்களின் சந்திப்புக் கூட்டம் நடந்ததால், பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. தூத்துக்குடி போலவே பத்து பத்து நிர்வாகிகளைத் தனியறையில் அழைத்து விவாதம் செய்தனர். ஒவ்வொரு நிர்வாகிகளிடமும், அவர்களது மாவட்டம், நகரம், ஒன்றியப் பகுதிகளில் எப்படிச் செயல்பட வேண்டும், மாற்று அரசியல் கட்சியினரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்தெல்லாம் ராஜூ மகாலிங்கம் நீண்டநேரம் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

ரஜினியின் வீடு தேடிப்போய் நரேந்திரமோடி பார்க்கிற அளவுக்கு அவர்களின் நெருக்கம் நடந்த, தெரிந்த சங்கதி. ரஜினி பாபா முத்திரையுடன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தவுடன் பெரும்பாலானவர்கள் ரஜினியின் பின்புலத்தில் இருந்து இயக்குவதும், ரஜினி மன்றத்தைப் பின்புலத்தில் இருந்து இயக்குவதும் பா.ஜ.க என்கிற ஒரு செய்தியைப் பரப்பி வருகின்றனர். ரஜினி எப்போது 'ஆன்மிக அரசியல்' என்று அறிவித்தாரோ, அன்றுமுதல் இன்னும் தீவிரமாக ரஜினி மக்கள் மன்றத்தின் மேல் காவி சாயம் கனமாகப் பூசப்பட்டு வருகிறது.  'முதலில் நான் பி.ஜே.பி ஆள் இல்லை' என்று நிரூபிக்கும் வேலையில் களமிறங்குவதற்கு தனது மக்கள் மன்றப் பொறுப்பாளர்களுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்து இருக்கிறார், ரஜினி. குறிப்பாக, தன்னுடைய 'ரஜினி மக்கள் மன்றம்' அமைப்பினர் மீது எக்காரணம் கொண்டும் பி.ஜே.பி நிழல்கூட படக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறாராம். தன்மீது சுமத்தப்படும் பி.ஜே.பி தடயங்களை அடியோடு அழிப்பதற்கான வேலையிலும் ஆட்கள் களமிறங்கப்போவதாகச் சொல்கிறார்கள். பி.ஜே.பி ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தர தயாராகி வருகிறாராம் ரஜினி. அதற்காக தி.மு.க-வுக்கு நேசக்கரம் நீட்டுவதில்லை என்பதிலும் தெளிவாக இருக்கிறார்களாம்.        

முக்கியமாக, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் அவர்களை ரஜினியோ அல்லது ரஜினியை கெஜ்ரிவாலோ சந்திக்கும் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது என்கிறார்கள், ரஜினி மன்றத்தினர்.                   
 

                    
 

அடுத்த கட்டுரைக்கு