Published:Updated:

“வில்லனாக நடிக்கச் சொல்லி கேட்கிறார்கள்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“வில்லனாக நடிக்கச் சொல்லி கேட்கிறார்கள்!”
“வில்லனாக நடிக்கச் சொல்லி கேட்கிறார்கள்!”

தமிழ்மகன், வெய்யில், படங்கள்: பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி

ய்யய்யோ இது என்னானு பாருங்க!

எழுத்தாளர் சாரு நிவேதிதாவிடம் எக்கச்சக்க மாற்றங்கள். அதிரடி, அடாவடி செய்த சாரு அல்ல இவர். புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்து, அந்தப் புத்தகத்தைக் கிழித்து வீசிய ஆள் அல்ல. இவர் வேற மாதிரி. ஆன்மிகம் பேசுகிறார்; தியானம் செய்கிறார்; பேச்சில் நிதானம் கூடியிருக்கிறது. இளம் எழுத்தாளர்களைப் பாராட்டித் தள்ளுகிறார். அதிரடிகளுக்குப் பிரபலமான சாரு நிவேதிதா, இப்படி திடீரென மாற என்ன காரணம்?

‘`ஏழெட்டு வருடங்கள் இருக்கும். என் வாழ்க்கைப்பாதையில் அடிப்படையான ஒரு மாற்றம் நடந்தது. பெரியாரிஸ்ட்டாக இருந்த நான், அதில் இருந்து விலகி வேறு ஒரு இடத்துக்கு வந்தேன். கடவுள் நம்பிக்கையாளனாக மாறினேன். எதிர்மறையான எனது அணுகுமுறையில் இருந்து, `ஒரு விஷயத்தில் பாராட்டுவதற்கு என்ன இருக்கிறது?’ எனப் பார்க்கத் தொடங்கியிருக்
கிறேன். தஞ்சை ப்ரகாஷ் படைப்புகளை, எனது அறுபதாவது வயதில்தான் வாசிக்கிறேன். இது எனக்கு நானே இழைத்துக்கொண்ட அவமானம். இளம் வயதிலேயே அவர் படைப்புகளைப் படித்திருக்க வேண்டும். இந்த இலக்கிய அடிதடி பஞ்சாயத்துக்கள் எல்லாம் வேண்டாம் என நினைக்கிறேன்.''

``எப்போது இருந்து இந்த மாற்றம்?’’

‘`வயசான காலத்துல ‘கடவுள்... கடவுள்...'னு சொல்லிக்கிட்டு இருக்கக் கூடாதுனு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, தவறிப்போய் ஐம்பத்தைந்து வயசுல கடவுளைப் பத்தி நினைக்கும்படியா ஆகிடுச்சு. நான் கடவுளோடு ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தேன். ‘நீங்களாக என்னிடம் நிரூபணம் செய்தால்தான் நம்புவேன்' எனச் சொல்லியிருந்தேன். நிரூபணம் கொடுத்ததுக்கு அப்புறமும் `கடவுள் இல்லை’னு சொல்றது, என்னை நானே ஏமாத்திக்கிற மாதிரி. அந்த மாதிரி பித்தலாட்டம் எல்லாம் நான் பண்றது இல்லை.

“வில்லனாக நடிக்கச் சொல்லி கேட்கிறார்கள்!”

ரெண்டு சம்பவங்கள், எனக்கு கடவுளின் இருப்பை நிரூபணம் செய்தன. அதோடு, நான் ஒருவரை நம்பினேன். அவர் கொடுத்த நிரூபணங்கள் என் நம்பிக்கையை உறுதியாக்கின. அவர் பேரு வந்து... பேரை மறந்துட்டேன். அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘ஒரு யோகியின் சுயசரிதை'. அதைப் படிச்சிட்டிருக்கும்போதே எனக்கு சில presence கிடைச்சது. பலமுறை presence கிடைச்சதால்தான் கடவுளை நம்பினேன். ஷேக்ஸ்பியர் சொல்கிறார்... ‘இது இப்போது நடக்காது என நினைத்தால், நடக்கும். இப்போது நடக்கும் என நினைத்தால், நடக்காது. நடக்காமலும் போகலாம்' இப்படி அந்த வாக்கியம் மாறி மாறிப் போய் நடப்பது கடவுளின் சித்தம் என்பதாக முடியும். சென்னை மழைவெள்ளத்தின்போது கடவுளின் சித்தத்தை உணர்ந்தேன். அந்த நேரத்தில் நான் நாத்திகனாக இருந்திருந்தால், மாரடைப்பில் இறந்துபோயிருப்பேன். கடவுள் நம்பிக்கை என்பது, இந்தக் கொடூரமான வாழ்க்கையில் சந்தோஷத்தையும் தைரியத்தையும் கொடுக்கிறது. பகுத்தறிவிடம் இதற்கு மாற்றாக எதுவும் இல்லை.''

``உங்களுக்கு நிரூபணம் கொடுத்த கடவுளும், பெரும் கலவரங்களுக்கும் பிரிவினைகளுக்கும் காரணமாக, மூலமாக இருக்கிற கடவுளும் ஒருவர்தானா அல்லது வேறு வேறானவர்களா?’’

‘`நான் கடவுள் மறுப்பாளனாக இருந்ததுக்கே, இந்தக் கேள்விதான் காரணம். இந்த உலகத்துல பொன்னாலயோ மண்ணாலயோ அதிகமான பேர் சாகலை. ‘உன் கடவுள் பெருசா... என் கடவுள் பெருசா?' என்ற சண்டையிலதான் செத்திருக்காங்க. கடவுள் மீது ஒரு பிரச்னையும் இல்லை. அவரை டீல் பண்ற மனிதன் மீதுதான் பிரச்னை. ஒரு மனிதனிடம் ‘நீ குடிக்காதே... உடம்புக்கு நல்லது அல்ல' என அக்கறையாகச் சொல்வதே பாசிசம்தான். அது அவனுக்குத் தெரியும். அதை நீங்கள் சொல்ல வேண்டாம். டாஸ்மாக்கை மூடுவதைவிட முக்கியமானது கல்வித்துறைப் பிரச்னைகள்.

அது வியாபாரமயமாகிவிட்டதை ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?''

``ஆனால், என் கேள்விக்கு பதில் இது இல்லை. அந்த இரண்டு கடவுள்களும் ஒன்றுதானா?’’

‘`எனக்காக, என் நன்மைக்காகனு நீங்க சிந்திக்க ஆரம்பிச்சாலே, நீங்க ஒரு பாசிஸ்ட்தான். ‘உன் கடவுள் பெருசா... என் கடவுள் பெருசா?'னு சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்க. உதாரணமா, சிரியாவுல இருக்கிற மக்களைக் கொன்னுக்கிட்டு இருக்கிறது யாரு, எந்தக் கடவுளை நம்புறவங்க? இது கடவுள் சம்பந்தப்பட்ட விஷயமே இல்லைங்க. அதிகாரம் சம்பந்தப்பட்ட விஷயம். குடியையே எடுத்துக்குங்க... லட்சத்துல சம்பளம் வாங்குறவன் டாஸ்மாக்ல குடிக்கிறானா? நாசூக்கா ஒயினைக் குடிச்சிட்டுப் போயிடுறான்ல. அடிமட்டத்துல இருக்கிறவனின் சம்பளத்தை உயர்த்து. அதை விட்டுட்டு `டாஸ்மாக்கை ஒழிக்கிறேன்'னு அவன்கிட்ட இருக்கிற ஒரே என்டர்டெய்ன்மெட்டையும் ஒழிச்சு, அவனை சைக்கோவா ஆக்குறீங்க. என்ன நடக்குதுன்னா, நம்ம உடம்புல கேன்சர் இருக்கு. தலையில ஷாம்பு போட்டு குளிக்கிறோம். ஆனா, ஷாம்பு கேன்சருக்கான மருந்து அல்ல.

“வில்லனாக நடிக்கச் சொல்லி கேட்கிறார்கள்!”

``ம்... அடுத்த கேள்விக்குச் செல்வோம். உங்கள் சொந்த ஊர் நாகூர். அதுபோன்ற ஒரு சிறிய நகரத்தில் இருந்து, உங்களை இவ்வளவு தூரம் அழைத்துவந்தது எது?’’

‘`நாகூரை நகரம்னு சொல்ல முடியாது. அது ஒரு சிறிய ஊர். அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள சேரி, அந்தப் பகுதியின் பெயர் வேண்டாம். தீண்டத்தகாதவர் எனக் கருதப்படுகிற மக்கள் வாழும் அந்தப் பகுதியில்தான் நாங்கள் இருந்தோம். சமீபத்தில்கூட அங்கு போயிருந்தேன். முன்பைவிட மோசமாக இருக்கிறது. ஏழ்மை, சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள், மனிதக்கழிவுகள், மனிதக்கழிவுகளை அள்ளிச் சுமப்பவர்கள். எனது இருபது வயது வரைக்கும் அந்த மனிதக் கழிவுகளின் துர்நாற்றங்களுக்கு இடையேதான் வாழ்ந்துவந்தேன். இப்போதும்கூட அந்தப் பழைய சித்திரங்களும் சகிக்க முடியாத துர்நாற்றமும் கொடும் கனவுகளாக வருவது உண்டு. அருவருப்பான அந்த இடத்தைவிட்டு வெளியேறுவதற்கான ஒரே வழி, கல்விதான் என்பதை, நான் சிறுவயதிலேயே உணர்ந்து விட்டேன். அதனால்தான் இருபது வயதிலேயே அங்கு இருந்து கிளம்பிவிட்டேன்.''

``அங்கு இருந்து கிளம்பிய நீங்கள், அடைய விரும்பிய எல்லையை ஓரளவேனும் அடைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?’’

‘`ஓர் எழுத்தாளன் அப்படி நினைக்கவே முடியாது. எழுதாத விஷயங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. தேடல் முடிந்துவிட்டால், எழுதுவதை நிறுத்திவிடவேண்டியதுதான். எனக்கு அறுபத்து மூன்று வயது ஆகிறது. ஆனால், பதினெட்டு வயதுப் பையனின் மனநிலையோடு, `இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை' என்றுதான் உணர்கிறேன்.'' 
 
``எழுதும் நேரம், சூழல் எனப் பிரத்யேகமாக எதையேனும் வைத்திருக்கிறீர்களா?’’

‘`தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் அந்த அளவுக்குக் கொடுத்துவைத்தவர்கள் அல்ல. மேலைநாட்டு எழுத்தாளர்கள் ஒரு நாவலை எழுதி முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு தீவுக்குச் செல்வார்கள். அந்தத் தீவு, முந்தைய நாவலுக்குக் கிடைத்த ராயல்ட்டியில் வாங்கியதாக இருக்கும். இது இங்கே சூப்பர் ஹிட் தரும் தமிழ் சினிமா இயக்குநர் களுக்குத்தான் சாத்தியம். நமக்கு நேரம், சூழல் என ஒன்றும் கிடையாது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், குப்பைத்தொட்டி எல்லா இடங்களும் நமக்கு ஒன்றுதான். கையில் பேப்பர் இருந்தால், எங்கு வேண்டுமானாலும் எழுதுவேன்.''

“வில்லனாக நடிக்கச் சொல்லி கேட்கிறார்கள்!”

``ஜெயமோகன், பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்துவிட்டது குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?’’

‘‘ `என்னை எல்லோரும் அவதூறு செய்கிறார்கள். நான் இந்த விருதையும் வாங்கிவிட்டால், இன்னும் அவதூறு செய்வார்கள்' என அவர் சொல்லியிருக்கிறார். நான் அவரிடம் பேசினேன். `நீங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை, மற்றவர்களா தீர்மானிப்பது? இப்போது நீங்கள் அவர்களது அவதூறுகளுக்கு மதிப்பு அளித்தால், அவர்கள் ஜெயித்துவிட்டார்கள் என அர்த்தம் ஆகிவிடும்’ என்று சொன்னேன். நீங்கள் மற்றவர் களின் அவதூறுகளுக்குக் காது கொடுத்தால், உங்களது மனநிலையின் மீது மற்றவர்கள் ஆளுமை செலுத்துகிறார்கள் என்று பொருள். இதுதான் ஜெயமோகன் விஷயத்தில் நடந்திருக் கிறது. ஆனாலும் பணம், புகழ், மனைவி, குடும்பம், சுற்றம் பார்க்காமல் ஒருவர் எழுத்தை தவமாகக் கொள்வார் எனில், அவர்கள் எல்லோருமே எனக்கு ஞானிகள், ரமண மகரிஷிகள்தான்.''

``கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் நரேந்திர மோடியை ஆதரித்தீர்கள். இப்போதும் ஆதரிக்கிறீர்களா?’’

‘`இத்தனை ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் கல்வி, மருத்துவம், தொழில்துறை என எதிலுமே முன்னேற்றம் இல்லை. சரி... குஜராத்தில் இதை எல்லாம் மாற்ற முயற்சிசெய்தாரே, வெற்றிகரமான ஒரு முதலமைச்சர் ஆயிற்றே என ஒரு மாற்றத்துக்காக ஆதரித்தால்... அவர் மன்மோகன் சிங்கைவிட அதிர்ச்சி அளிக்கிறார்.''

``சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதுதானே?’’

‘`என்னை வில்லனாக நடிக்கச் சொல்லி, இயக்குநர்கள் தொடர்ந்து கேட்டுவருகிறார்கள். என் தோற்றம் ஒருவேளை வில்லன்போல இருக்கிறதோ என்னவோ! நமக்கும் நடிக்கப்
போனா பணக் கஷ்டம் தீர்ந்துவிடும். ஆனால், எழுத்தை முற்றிலும் விடவேண்டியிருக்கும் என்பதால்தான் தவிர்த்துவருகிறேன். ஏனென்றால், ‘அந்த' விரல் மட்டுமே காமிச்ச பாட்டுக்கே ஏழு இரவுகள் எடுத்தாங்க. மாலை ஏழு மணிக்கு ஷூட்டிங் போவேன். காலையில் ஏழு மணிக்குத்தான் திரும்புவேன். ஆனாலும் விரலை காமிச்சதுக்கே எனக்கு எழுபதாயிரம் ரூபாய் குடுத்தார் மிஷ்கின். வசனம் எழுதுவது போல் இல்லை நடிப்பு. முழுசா உள்ளே போக வேண்டியிருக்கும். எழுத்தை விட்டுட்டு என்னால வாழவே முடியாது.''

``தமிழில் மிகக் குறைவாகவே நல்ல படங்கள் வருகின்றன. இப்படியான சூழலில் `விசாரணை' படத்தை எதிர்மறையாக விமர்சித்து எழுதியிருக்கிறீர்களே?’’

``வெற்றி மாறனின் முந்தைய படங்களைச் சிலாகித்துப் பாராட்டியவன் நான். இந்தப் படத்தின் மீது ஏன் எதிர்மறை விமர்சனம் வைக்கிறேன் என்றால், மக்களிடம் இது பாமரத்தனமான ரசனையை உருவாக்குகிறது. பாலியல் படங்களைப் பார்க்கும்போது ஏற்படுகிற `பார்த்தல்வழி இன்பம்’தான் இதுபோன்ற வன்முறைக் காட்சிகள் நிறைந்த படங்களைப் பார்க்கிறபோதும் கிடைக்கிறது. `அப்படியானால் போலீஸின் வன்முறையை ஆதரிக்கிறாயா?' எனக் கேட்பீர்கள்.

சினிமா என்ற கலை வடிவத்தில் சமூகத்தின் வன்முறை எப்படி விவரிக்கப்பட வேண்டும் என்பதற்கு ‘கோர்ட்’ என்ற மராத்திய மொழி படத்தையும் ‘விசாரணை’யையும் எதிரெதிரே நிறுத்தி ‘கோர்ட்’ சரியான படம் எனச் சொல்கிறேன். `விசாரணை’யில் லாடம் கட்டப் பட்டவர்கள் சில மணி நேரங்களிலேயே எழுந்து நடப்பது, போலீஸ் கொடூரமாக அடிக்கும்போது கதாநாயகன் எழுந்து நிற்பது எல்லாம், அசலான விஜய் சினிமா. மேலும், போலீஸிடம் மட்டும் அல்ல... எல்லோரிடமும் வன்முறை பரவிக் கிடக்கிறது. தவறுசெய்யும் ஒருவன் பொது இடத்தில் நம் கையில் கிடைத்தால் என்ன செய்கிறோம்... நாம் எவ்வளவு பெரிய போலீஸாக மாறிவிடுகிறோம்? சாதிக் கலவரங்களில் நாம் போலீஸைவிடக் கொடூரமாக சக மனிதர்களைத் தாக்குகிறோமே... போலீஸ் மட்டும் வன்முறை யானது எனச் சொல்லி, தப்பிக்கப்பார்க்கிறோம் என்பத்தைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு