Published:Updated:

அந்த ஒரு விஷயம் ஓ.கே பாலா... ஆனா, மத்ததெல்லாம்...?! - நாச்சியார் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
அந்த ஒரு விஷயம் ஓ.கே பாலா... ஆனா, மத்ததெல்லாம்...?! - நாச்சியார் விமர்சனம்
அந்த ஒரு விஷயம் ஓ.கே பாலா... ஆனா, மத்ததெல்லாம்...?! - நாச்சியார் விமர்சனம்

வயது வந்தவர்களின் காதலே இங்கு பலரால் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டு மைனர்கள் காதல், அவர்களுக்கு நடக்கும் விபரீதம், அதன் விளைவுகளுக்குக் காரணமானவர்களுக்கான முடிவு... என்ற களத்தை நூறு நிமிடப் படமாகப் பேச முயல்கிறது, 'நாச்சியார்' திரைப்படம்.

நேர்மையான போலீஸ் அதிகாரி ஜோதிகாவிடம் (நாச்சியார்), மைனர் சிறுமியை ஒருவர் பலாத்காரம் செய்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஜி.வி.பிரகாஷை காவல்துறை வளைத்துப் பிடிக்கிறது. விசாரணைக்குப் பிறகு, ஜி.வி கூர்நோக்கு இல்லத்தில் அடைபட, கர்ப்பமாக இருக்கும் அந்தச் சிறுமியை ஜோதிகாவே தத்தெடுத்துப் பார்த்துக்கொள்கிறார். சில நாள்களில் அந்தச் சிறுமியின் குழந்தையும் பூமியைத் தொடுகிறது. 

என்ன இது... பாலா படம் மாதிரியே இல்லையே, என்கிறீர்களா? அதேதான்! முதல்பாதியில் எங்குமே படைப்பாளி பாலாவை நீங்கள் பார்க்கமுடியாது. இடைவேளையின்போது ஓர் உண்மை உடைய, இரண்டாம்பாதியில் அது பற்றிய விசாரணையில் களமிறங்குகிறார், ஜோதிகா. இந்த இரண்டு மைனர்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் யார் என்பது 'நாச்சியாரி'ன் மீதிக்கதை.

அசிஸ்டென்ட் கமிஷனர் நாச்சியாராக ஜோதிகா. வாயும், கையும் சேர்ந்தே 'பேசும்' உடல்மொழி. நடிப்பு, வசன உச்சரிப்பு என அனைத்திலும் மெனக்கெட்டிருக்கிறார். முதல் முறையாக சொந்தக்குரல் பொருந்திப்போகும் இந்தக் கேரக்டரில், பலமுறை பார்த்த துள்ளல் ஜோதிகாவாக இல்லாமல், யாரைத் திட்டலாம், யாரைப் போட்டு மிதிக்கலாம் எனப் பரபரவென்று சுற்றும் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருக்கிறார்.

ஒரே மாதிரியான கதைகளிலும் கேரக்டர்களிலும் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த 'நடிகர்' ஜி.வி பிரகாஷுக்கு இது நிச்சயம் வெரைட்டியான வேடம்தான். சில இடங்களில் நடிப்பு துருத்திக்கொண்டு தெரிந்தாலும், பாலா படத்தின் முக்கியக் கேரக்டர் என்னென்ன மேனரிஸங்களோடு இருக்குமோ அதையெல்லாம் 'காத்தவரயன்' கேரக்டரில் பக்காவாக செய்கிறார். நல்ல முன்னேற்றம் ஜி.வி!. மைனர் பெண் 'அரசி'யாக வரும் இவானா, கண்களாலேயே படத்தைத் தாங்குகிறார். சில இடங்களில் சிறுமியாகவும், 'அவன்மேல மட்டும் தப்பு இல்லை மேடம்; நானும்தான்!' என மெச்சூரிட்டியோடு சொல்லும் இடம்... எனப் பல காட்சிகளில் பார்வையால் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார். வெல்கம் குட்டிப்பெண்ணே!

முக்கியக் கதாபாத்திரங்களைத் தவிர, படத்தில் வரும் ‘இன்ஸ்பெக்டர் ஃபெரோஸ்கான்’ (ராக்லைன் வெங்கடேஷ்), டாக்டர் குரு, பாட்டி கொளப்புள்ளி லீலா, வழக்குரைஞரராக வரும் மை.பா.நாராயணன்... நடித்த பெரும்பாலான நடிகர்கள் கதாபாத்திரத்துடன் மிகச்சரியாக  பொருந்தியிருக்கிறார்கள்; தேவையான அளவு நடித்தும் இருக்கிறார்கள்.

'எளியவர்களைச் சுரண்டும் வலியவர்கள், இரு துருவங்களையும் சந்திக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் முடிவு' என்ற ஒன்லைனை அழுத்தமான கதையாகச் சொல்கிறார், இயக்குநர் பாலா. வழக்கமான பாலாவின் படங்களில் இருந்து இது வித்தியாசமான அனுபவம் தருகிறது. இரண்டாம் பாதியை த்ரில்லராக தரமுனைந்ததெல்லாம் சரிதான். ஆனால், அந்த இன்டர்வெல் ட்விஸ்ட்டை காலங்காலமாக கோலிவுட்டை கவனித்துவரும் ரசிகன் ஈஸியாக கணித்துவிடுவானே!. தவிர, பாலா படங்களின் பலமே அதிலுள்ள காட்சிகள் கோபம், வெறுப்பு, குரோதம், நகைச்சுவை... என ஏதேனும் ஓர் உணர்ச்சியையாவது ரசிகனுக்குக் கடத்துவது. அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங். படத்தின் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும் ஃப்ளாஷ்பேக் காட்சியில் அழுத்தம் இல்லை. காவல்துறையை நல்லவர்கள் புழங்கும் இடமாகவும் சென்னையின் பூர்வகுடிகளை சந்தேகக் கண்ணோட்டத்தோடும் அணுகும் படங்களை இன்னமும் எத்தனை காலத்திற்குப் பார்ப்பது? 

குற்றம் செய்தவனுக்கு சட்டத்தில் இருந்து விலகி, தானாகவே கொடூரமான தண்டனையைக் கொடுக்கும் நாச்சியாரை காவல்துறை 'ஜஸ்ட் லைக் தட்'டாக அணுகுவது, படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 'சென்னை மொழி', நீதிமன்றம், சமூக சீர்திருத்தப்பள்ளி தொடங்கி,கல்யாண வீடு, டெபுடி கமி​ஷனர்​ அருகில் இருந்துகொண்டு உதவி கமிஷனரை விரட்டும்​ போலீஸ் ஏட்டம்மா, மருத்துவமனை ஆயா வரை... இயல்பில் இருந்து விலகி நிற்கும் இடங்கள் அதிகம். முக்கியமாக, 'ஆணவக்கொலை நடக்கும் இடங்களுக்கு உன்னை ட்ரான்ஸ்ஃபர் செய்கிறேன்' என உயரதிகாரி நாச்சியாரிடம் சொல்வது, ஃபேஸ்புக் புரட்சியாக இருக்கிறது. தவிர, போலீஸ் 'விசாரணையை' நியாயப்படுத்துவது, மனித உரிமைகள் ஆணையத்தை நக்கலடிப்பது போன்றவையெல்லாம் இனியும் வேண்டாமே!. 

குப்பை மேடுகளின் புழுதியில் இருந்து எழும் ஈஸ்வரின் கேமரா குப்பங்களின் இண்டு இடுக்குகள் வழியே காவல் நிலையத்தின் இருட்டு லாக்கப்களுக்கும், அழுக்கு படிந்த கூர்நோக்கு இல்லத்திற்கும் அலுப்பே தட்டாமல் பயணிக்கிறது. இசை, இளையராஜா. பாடலோ பின்னணி இசையோ பெரிதாக ஈர்க்கவில்லை. நிறைய காட்சிகள் அந்தரத்தில் தொங்குவதுபோல இருக்கிறது. சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் ஓரளவுக்கு ஒத்துழைத்திருக்கிறது. 

இதையெல்லாம் மீறி, ‘ஏழைகளை சோதிப்பதே இந்தக் கடவுளுக்கு வேலையாப்போச்சு’ என்றதும், 'அவருக்கும் பொழுது போகணும்ல, விடு... நாம நமக்கேற்றபடி ஃப்ரெஷ்ஷா ஒரு கடவுள் பண்ணிப்போம்’, ' 'நீங்க எங்களைப் பிடிச்ச படைய்யா! கடைசிவரை உங்களை சொறிஞ்சிகிட்டேதான் இருக்கணும்!', ‘தோப்பனார் வடகலை, தாயார் தென்கலை’,  'அருள்தரும் அரபு நாட்டினிலே’ என்று பாடும்போது, 'போகவேண்டியதுதானே அங்கயே...' எனப் படத்தில் இருக்கும் பாலாவின் டிரேட் மார்க் பகடிகளுக்கு லைக்ஸ்! 

பாலா படத்தை பாசிட்டிவ் முடிவோடு பார்க்க விரும்புபவர்கள், இந்த நாச்சியாரோடு கைகுலுக்கிவிட்டு வரலாம்.