Published:Updated:

வன்முறையை கொண்டாடக் கூட செய்யலாம்... ஆனால்..!? - ‘வீரா’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
வன்முறையை கொண்டாடக் கூட செய்யலாம்... ஆனால்..!? - ‘வீரா’ விமர்சனம்
வன்முறையை கொண்டாடக் கூட செய்யலாம்... ஆனால்..!? - ‘வீரா’ விமர்சனம்

வன்முறையை கொண்டாடக் கூட செய்யலாம்... ஆனால்..!? - ‘வீரா’ விமர்சனம்

வடசென்னையில் முன்னொரு காலத்தில் சமூகநீதி  காக்க தொடங்கப்பட்ட மன்றங்கள், நாளடைவில் அதிகார வர்க்கங்களின் சூழ்ச்சியால் ரௌடிகளின் கூடாரமாக மாறுகின்றன. அப்படியொரு மன்றத்துக்கு தலைவராவதையே லட்சியமாகக் கொண்டிருக்கும் ஹீரோ, தலைவரானாரா, இல்லையா என்பதே 'வீரா' படத்தின் கதை.

வீரமுத்து (கிருஷ்ணா), பச்சமுத்து (கருணாகரன்) இருவரும், ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மனமகிழ் மன்ற’த்தில் முறைவாசல் செய்பவர்கள். மன்றத்தின் தலைவர் சுறா முருகனை (கண்ணா ரவி) போட்டுத்தள்ளிவிட்டு தலைவராக நினைக்கிறார்கள். ‘நீங்கள் கொலை செய்யும் அளவுக்கு வொர்த் இல்லை. அதனால் ஸ்கெட்ச் சேகரிடம் (ராதாரவி) போய் தொழில் கத்துக்கிட்டு வாங்க’ என்று அவர்களை  அனுப்பிவைக்கிறார் ஏழுமலை (தம்பி ராமையா). ஸ்கெட்சிடம் தொழில் கற்றவர்கள், சம்பவம் செய்தார்களா, மன்றத்தை கைப்பற்றினார்களா என்பதே மீதிக்கதை. 

கிருஷ்ணா, கருணாகரன், ராதாரவி, தம்பி ராமையா, ’ஆடுகளம்’ நரேன், யோகி பாபு, ’நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆர்.என்.ஆர்.மனோகர், ’லிவின்’ வெப்சீரிஸ் கண்ணா ரவி... இப்படி நாம் பார்த்துப் பழகிய முகங்களை தேர்வு செய்து, காஸ்டிங்கில் பலம் சேர்த்திருக்கிறார் இயக்குநர் ராஜாராமன். டைட்டில் கார்டில், ‘வடசென்னை, வன்முறை,  அரசியல், அதிகார வர்க்கம்...’ என பரபரப்பாய் பேசி ஆர்வம் தூண்டியிருக்கிறார். அந்த சுவாரஸ்யத்தை இறுதிவரை தக்க வைத்தார்களா...?! 

டி-ஷர்ட், டிராக் சகிதம் ஏரியாவுக்குள் துறுதுறுவென திரியும் வழக்கமான வடசென்னை இளைஞன் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா. வழக்கம்போல் ஒரு டோஸ் எக்ஸ்ட்ராவே நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அர்ப்பணிப்பு தெரிகிறது. வாழ்த்துகள் ப்ரோ.

ஹீரோயின் வரும்போதெல்லாம் ஒட்டுமொத்த படமும் ஸ்லோமோஷன் மோடுக்கு மாறிவிடுகிறது. நமக்கு, டிராஃபிக்கில் சிக்கிக்கொண்ட எஃபெக்ட். மிடில...

கருணாகரனுக்கு, படம் முழுவதும் ஹீரோவோடு பயணமாகும் கதாபாத்திரம். தன் வேலையை சரியாக செய்திருக்கிறார். யோகிபாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், தம்பி ராமையா என பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும், நகைச்சுவையைத் தேடவேண்டியிருப்பது வேதனை. 

லியோன் ஜேம்ஸ் இசையில் ’வெரட்டாம வெரட்டுறியே...’ பாடல் மட்டும் ரசிக்கும்படி இருக்கிறது. வீடு வீடாக தாவி ஓடும் 'பார்க்கர்' ஸ்டைல் சண்டைக் காட்சி தாருமாறு. ஆக்ஷன் காட்சிகள் மட்டும்தான் படத்தின் டைட்டிலுக்கு ஓரளவாவது நியாயம் செய்திருக்கின்றன. சில ஓவர் எக்ஸ்போஸர் ஷாட்களில் கவனிக்க வைக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் குமரன் - விக்னேஷ். சண்டைக் காட்சிகளில் டி.எஸ்.சுரேஷின் படத்தொகுப்பு பக்கா. 

எளிய மனிதர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி அதிகார வர்க்கம் செய்யும் மோசமான அரசியல், அதனால் சிதைந்துபோகும் மனிதர்களின் வாழ்க்கை என பல தலைமுறையாக நடந்தேறி வரும் இந்த அவலத்தை அழுத்திப் பேசியிருக்க வேண்டிய படம். ஆனால், '....தா' என்ற கெட்டவார்த்தையைதான் அழுத்தி பேசியிருக்கிறார்கள். ஒரு பக்கா த்ரில்லர் திரைப்படத்துக்கான களம், வலுவில்லாத திரைக்கதையில் சிக்கிக்கொண்டுவிட்டது. 

தொழில்நுட்ப ரீதியாக இது வலுவான படம். ஆனால், சீரியஸான கதையை க்ளைமாக்ஸ் வரை காமெடியாக அணுகியது, பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் சிரிக்கவைக்கத் தவறியது, ஆங்காங்கே இருக்கும் சில நல்ல காட்சிகள் படம் முழுக்க இல்லாதது... இந்த விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கலாமே.

வன்முறையைப் பற்றி படமெடுக்கலாம். ஆனால், அதற்கும் ஒரு தர்க்கம், அரசியல் வேண்டும். ஆனால், இது குழந்தையின் கையில் தரப்பட்ட கத்திபோல, வன்முறையை விளையாட்டுத்தனமாக அணுகி எடுக்கப்பட்ட படம் என்ற தோற்றத்தைத் தருகிறது. 

‘வடசென்னை என்றாலே வன்முறை, ரௌடியிசம்தானா?’ என்ற கேள்வி கேட்டு ஆரோக்கியமான விவாதங்கள் நடந்துவரும் இந்தச் சூழலில் இந்த ‘வீரா’ ஆரம்பித்த இடத்துக்கே நம்மை அழைத்துச்சென்றுவிடுவானோ என்று அச்சத்தைத் தருகிறது. 

கவனம் பாஸ்!

அடுத்த கட்டுரைக்கு