Published:Updated:

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர்! Season 3, episode 4

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர்! Season 3, episode 4

Published:Updated:
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

முதல் படம்... சூப்பர் ஹிட்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... நானும் என் தம்பியும்... ‘ஜெயம்’ ராஜா, ‘ஜெயம்’ ரவி அப்படினு மாறின கதை பேசலாம் இந்த இதழ்ல!

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல நான் படிப்பை முடிச்சது, 1999-ல். ரெண்டு வருஷம் அப்பாவோட ‘ஷேமங்கா வெள்ளி லாபங்கா ரண்டி’, ‘மனசெச்சிச்சூடு’ படங்களின் புரொடக்‌ஷன் வேலைகளைப் பார்த்துக்கிட்டேன். அந்த அனுபவத்தில்தான் எந்த இயக்குநர்கிட்டயும் உதவி இயக்குநரா வேலை பார்க்காமலேயே, டைரக்‌ஷனைக் கத்துக்கிட்டேன்.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்தினம் போன்ற இயக்குநர்கள் எல்லாம் எனக்கு இன்ஸ்பிரேஷன். குறிப்பா, ஒரு படம் `ஏ, பி, சி'னு எல்லா தரப்பு ஆடியன்ஸையும் திருப்திப்படுத்தணும்னு அப்பா அடிக்கடி சொல்லும் பாடத்தை, என்னை உணரவெச்ச படம்... பி.வாசு சாரோட ‘என் தங்கச்சி படிச்சவ’. கால மாற்றங்களை எனக்குப் புரியவெச்சதோட, டைரக்‌ஷனில்  பல பரிமாணங்களை எனக்குக் கத்துக்கொடுத்த படம், ‘ஜென்டில்மேன்’. போலந்து டைரக்டர் கிரிஸ்டோஃப் கைஸ்லோஸ்கியின் (Krzysztof Kieslowski) ‘புளூ’ படம் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

மலையாளத்துல ஹிட் ஆன ‘தென்காசிப்பட்டணம்’ படத்தை அப்பாவும், நானும் பார்த்தப்போ, ‘இந்தப் படம் சூப்பரா இருக்குப்பா’ன்னு சொன்னேன். அப்பாவுக்கும் அந்தப் படம் பிடிச்சிருந்ததால, அதோட ஆல் இந்தியா ரைட்ஸை வாங்கிட்டாரு. அந்த நேரம் என் காதல் அப்பாவுக்கு தெரிஞ்சிருந்தாலும் அதுபற்றி எங்கிட்ட கேட்காம நான் ஒரு இயக்குநரா வெற்றி அடைய ஆசைப்பட்டார். என்னோட 27 வயசுல மலையாள ‘தென்காசிப்பட்டணம்’ படத்தை தெலுங்கில் ‘அனுமன் ஜங்ஷன்’ என்ற பெயர்ல ரீமேக் செய்ததன் மூலமா, டைரக்டர் ஆனேன்.

பொதுவா, நான் ரீமேக் செய்யும் படங்களின் ஒரிஜினல் வெர்ஷனின் ஒவ்வொரு ஸீனையும் கட்டுரை மாதிரி எழுதுவேன். ரீமேக் செய்யும்போது, நான் எழுதின அந்தக் கட்டுரைகளை வெச்சுதான் அந்தப் படத்தை எடுப்பேன். அப்பா தயாரிச்ச ‘அனுமன் ஜங்ஷன்’ படத்துல மூணு ஹீரோக்கள். நாங்க அணுகின நடிகர்கள் பலரும் அதில் நடிக்கச் சம்மதிக்கல. அப்போ செலக்டிவ்வான தெலுங்குப் படங்களில் நடிச்சிட்டு இருந்த நம்ம அர்ஜுன் சார், தொடர் தோல்வி படங்களில் இருந்து மீண்டு வர போராடிட்டு இருந்த தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு சார், புதுமுகம் வேணு சார்னு மூணு பேரையும் ஃபிக்ஸ் செய்தோம். சினேகா, லயா ஹீரோயின்ஸ். ஒரு சுவாரஸ்யமான விஷயம்... நடிகை ஸ்ரீதிவ்யாவை நான் அந்தப் படத்துலதான் குழந்தை நட்சத்திரமா அறிமுகப்படுத்தினேன்.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

ஒருவேளை படம் சரியா போகலைன்னா, அப்பா அடுத்த பட வாய்ப்பை எனக்குக் கொடுக்க மாட்டார். முதல் படத்தோட ஒருநாள் ஷூட்டிங் அப்பாவுக்கு திருப்திப்படலைனா கூட என்னை தூக்கிட்டு வேற ஒரு டைரக்டரை போட்டுருவார். அப்பாவுக்கு எப்பவுமே தொழில் வேற... சொந்தம் வேற. அதனால முதல் படத்துக்கு உரிய படபடப்பு, பயம், அர்ப்பணிப்புனு வேலை பார்த்தேன். எங்கம்மா, ‘அஷ்ட லட்சுமியில எந்த லட்சுமி நம்மை விட்டுப் போனாலும் பரவாயில்ல; தைரிய லட்சுமி கூட இருந்தா போதும். தைரியமா வேலை பாரு’னு ஊக்கம் கொடுத்துட்டே இருப்பாங்க. அம்மாவோட வாழ்த்துப்படியே ‘அனுமன் ஜங்ஷன்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்! ஸ்கூல் டேஸ்ல மேடைனாலே தலைதெறிக்க ஓடின நான், ஒரு ஹிட் படம் கொடுத்தப்போ, ‘ஏதாச்சும் ஒரு போட்டியில பரிசு வாங்கிட மாட்டானா...’னு என்னை நினைச்சு ஏங்கின எங்கம்மா மனசெல்லாம் மத்தாப்பூதான்! தொடர்ந்து தமிழ்லயும் ‘தென்காசிப்பட்டிணம்’ என்ற பெயர்லயே அந்தப் படம் ரீமேக் ஆனது.  ‘அனுமன் ஜங்ஷன்’  ரிலீஸான ரெண்டே மாசத்துல என்னோட திருமணமும் கோலாகலமா முடிஞ்சது.

இப்போ நம்ம தம்பி எபிசோடு. சென்னையில விஸ்காம் முடிச்சுட்டு, மும்பை லலித்கபூர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல ஆறு மாச கோர்ஸ் படிச்சிட்டு, ஒரு நடிகனா ஃபார்ம் ஆகி வந்தான் ரவி. என் டைரக்‌ஷனில் ரவியை அறிமுகப்படுவது பற்றிப் பேசினோம். தமிழ்ல ரெண்டு பேருக்கும் அது முதல் வாய்ப்பு என்பதால, நிதானமா, நிறைய யோசிச்சோம். தெலுங்கு ஹிட் ‘ஜெயம்’ படம் பார்த்த நான், ‘ஒரு அறிமுக நடிகருக்கு நல்ல ஸ்கோப் இருக்கிற இந்தப் படத்தையே தமிழ்ல ரீமேக் செய்யலாமா?’னு அப்பா கேட்க, ‘ஜெயம்’ வேலைகள் ஜோரா ஆரம்பமானது. ரவி என்ற பெயர் சாதாரணமா இருக்கே, பெயரை மாத்தலாமான்னு யோசிச்சு, அப்புறம் அதுவே இருக்கட்டும்னு விட்டுட்டோம். தெலுங்கு ‘ஜெயம்’ ஹீரோயின் சதாவையே தமிழுக்கும் கமிட் செஞ்சோம்.

என்னோட ‘அனுமன் ஜங்ஷன்’ பக்கா ஃபேமிலி ஓரியன்டட் படம். ஆனா ‘ஜெயம்’ ஃபேமிலி வித் ஆக்‌ஷன் மூவி. ‘செந்தூரப்பூவே’ படத்துக்குப் பிறகு அதிகமான டிரெயின் சார்ந்த காட்சிகளை அதுல படமாக்கினோம். 20 நாட்களுக்கும் அதிகமா டிரெயின் ஸீன்ஸ் எடுத்தோம். குறிப்பா, க்ளைமாக்ஸ்ல டிரெயினைப் பிடிக்க ரவி ஓடிவரும் காட்சியில, தெலுங்கில் நடிச்ச நிதின் ரயில்வே டிராக்ல, கால்ல ஸ்டிக்கர் ஒட்டிட்டு ஓடுவார். ஆனா, ரவி ஸ்டிக்கர் இல்லாம கருங்கல்லுல ஓடினதால, கால் எல்லாம் பொத்துக்கிட்டு ரத்தம் கொட்டி, ஒரு வாரத்துக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டியதா போச்சு. அதேபோல ‘கவிதையே தெரியுமா’ பாட்டுல சதா வீட்டு ஓட்டைப் பிரிச்சு கயிறு கட்டித் தொங்கி, சதா மேல விழப்போற மாதிரி ஒரு ஸீன் இருக்கும். தொங்கும் நிலையில் உடம்பு, கால் பேலன்ஸ் ஆகவேண்டிய காரணங்களால 19-வது டேக்ல `ஓ.கே' ஆன ஸீன் அது. கழுத்து, வயிறுல எல்லாம் கயிறைக் கட்டிட்டு, அத்தனை டேக்ஸ்லயும் சிரிச்சிட்டேவும், பொறுமையாவும் இருந்தான் ரவி. என் தம்பிங்கிறதுக்காகச் சொல்லல. முதல் படத்துல அவன் கொடுத்த அந்த அர்ப்பணிப்பை இன்னிக்கு வரைக்கும் கொடுத்துட்டு வர்றதுதான் அவன் வளர்ச்சிக்குக் காரணம்.

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

அப்போ ‘ஜெயம்’ படத்தோட பட்ஜெட் 4 கோடி. அது அந்தக் காலகட்டத்துல, ஒரு அறிமுக நடிகருக்கு ரொம்பவே அதிகமான பட்ஜெட்தான். படத்தோட ப்ரிவியூ பார்த்த ரஜினி சார், ‘எப்படி இவ்வளவு செலவு பண்ணீங்க?’ன்னு கேட்டார். ‘ஒரு தயாரிப்பாளரா இல்லை, அப்பாவா என் பசங்களுக்காக நான் தயாரிச்ச படம் இது’னு அப்பா சொல்ல, ரஜினி சார் அப்பாவைப் பாராட்டினார்.

‘ஜெயம்’ படம் பெரிய ஹிட் ஆச்சு. ரவி, ராஜாவா இருந்த நானும் என் தம்பியும் ‘ஜெயம்’ ராஜா, ‘ஜெயம்’ ரவி ஆனோம். என்னதான் தெலுங்குல ஏற்கெனவே ஒரு ஹிட் கொடுத்திருந்தாலும், தமிழ்ல நான் கொடுத்த ஹிட்தான் என்னை அதிகமா சந்தோஷப்பட வெச்சது.

நான் இயக்கின மற்ற படங்கள், குறிப்பா விஜய் சாரை வைத்து இயக்கின ‘வேலாயுதம்’ படம் பத்தியும், ரவிக்கும் எனக்கும் கரியரில் பெரிய ஜம்ப் கொடுத்த ‘தனி ஒருவன்’ படம் பற்றியும்  அடுத்து வர்ற `அவள் 16'-ல ஷேர் பண்றேன்!

கு.ஆனந்தராஜ், படங்கள்: எம்.உசேன்